Published:Updated:

‘நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு யாரும் உதவல!’ - ‘தூறல் நின்னுபோச்சு’ சுலக்‌ஷனா #VikatanExclusive

வே.கிருஷ்ணவேணி
‘நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு யாரும் உதவல!’ - ‘தூறல் நின்னுபோச்சு’ சுலக்‌ஷனா #VikatanExclusive
‘நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு யாரும் உதவல!’ - ‘தூறல் நின்னுபோச்சு’ சுலக்‌ஷனா #VikatanExclusive

பாக்யராஜுடன் இணைந்து 'தூறல் நின்னுபோச்சு' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சுலக்‌ஷனா. முன்னணி கதாநாயகிகள் வரிசையில் இடம்பிடித்தவர். திருமணமானதும் நடிப்புத் துறைக்கு பிரேக் விட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2000-ம் ஆண்டு இயக்குநர் பாலசந்தரின் 'சஹானா' சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 2000-ம் ஆண்டு முதல் இப்போதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் எனக் கிட்டத்தட்ட 20 சீரியலுக்கும் அதிகமாக நடித்திருக்கிறார்.

விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் சூப்பர் மாமியாராக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். தற்போது, ஜி தமிழிலில் ஒளிபரப்பாகிவரும் 'லட்சுமி வந்தாச்சு' சீரியலில் வள்ளியம்மையாக வாழ்ந்துவருகிறார். அவரிடம் பேசினோம்..

'' 'தூறல் நின்னுபோச்சு' படத்துக்குப் பிறகு முன்னணியில் இருந்த நீங்கள் எப்படி சின்னத்திரைப் பக்கம் வந்தீர்கள்?'' 

''என்னுடைய 14-ம் வயதில் முதன் முதல்ல தெலுங்குப் படம் ஒன்றில்தான் அறிமுகமானேன். அதற்குப் பிறகு, கன்னடத்தில் ஒரு படத்தில் நடிச்சேன். இரண்டு படமுமே செம்ம ஹிட் படங்கள். அதைப் பார்த்துட்டுதான் பாக்யராஜ் சார் என்னை நடிக்கக் கூப்பிட்டார். ஆடிஷன், டெஸ்டிங் எல்லாம் முடிச்சு 'தூறல் நின்னுபோச்சு' படத்தில் நடிக்க வெச்சார். ஆனாலும், ஒரு சில இடங்களில் ரியலாகப் பண்ண வராததால அவர்கிட்ட திட்டு வாங்கியிருக்கேன். தூறல் நின்னுபோச்சுல நடிக்கிறப்ப, வாழ்க்கைப் பத்தின பயம் இருந்தது. இந்தப் படம் நல்லா ஓடுச்சுனா தொடர்ந்து நடிக்கலாம். இல்லைனா படிப்போ, கல்யாணமோ ஏதாவது ஒண்ணுல டிராவல் ஆகணும்னு பயந்துட்டு இருந்தேன். நல்லவேளை கடவுள் காப்பாத்தினார். 'தூறல் நின்னுபோச்சு' படம் நல்லாப் போச்சு. தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ஆனாலும் பிளஸ்டு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க''.

''பிளஸ் டூ முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்களா?'' 

''ஆமாம். இதே நடிப்புத் துறையில இருக்கிற கோபி கிருஷ்ணனுக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சு. கல்யாணம் ஆகும்போது என் வயசு 18. 22 வயசுல முதல் பையன் விஷ்ணு பிறந்தான். அதுக்கப்புறம் சில வருஷத்துல இரண்டாவது மகன் ஷியாம் பிறந்தான். இதற்கிடையில எனக்கும் கோபி கிருஷ்ணனுக்குமிடையே விவாகரத்து. அதுக்குப் பிறகு தனி மனுஷியா இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க ஆரம்பிச்சேன்''. 

''உங்கள் மகன்களை வளர்ப்பதற்காகத்தான் நடிப்புத் துறைக்கு பிரேக் விட்டிருந்தீர்களா?''

''நான் கஷ்டத்தில் இருக்கும் காலத்தில் எனக்கு யாரும் பெரிதாக உதவ முன் வரவில்லை. முன் பின் தெரியாதவர்கள் உதவின அளவுக்குக் கூட, நெருங்கிய சொந்தங்கள் உதவல. ஒரு சிங்கிள் பேரன்டா என் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழல். அவர்களுக்கு விவரம் தெரிந்து வளர்ற வரைக்கும் பக்கத்துலயே இருந்து பார்த்துக்கவேண்டியிருந்தது. மூத்த மகன் விஷ்ணு 10-ம் வகுப்புப் போகும்போதுதான் பாலசந்தர் சார்கிட்டேயிருந்து சீரியலுக்கான வாய்ப்பு வந்தது. என்னோட தங்கச்சி, அம்மா எல்லாம் என் பசங்களைப் பார்த்துக்க தயாரா இருந்தாங்க. என் பசங்களும், 'நீங்க போய் நடிங்கம்மா.. நாங்க பார்த்துக்கிறோம்'னு தைரியமா சொன்னாங்க. இத்தனை வருஷம் பிரேக் இருந்தாலும், நாம இருந்த துறைதானேன்னு தைரியமாக மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்''. 

''உங்கள் மகன்கள் இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?''

''பெரிய பையன் விஷ்ணு கப்பற்படையில கேப்டனாக இருக்கிறார். அவருக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆகுது. மருமகள் ஐ.டில வேலை பார்க்கிறாங்க. இரண்டாவது மகன் ஷியாம் ஏர்போர்ட்ல கஸ்டம்ஸ் ஆபீஸராக இருக்கிறார். நான் இத்தனை வருஷமா கஷ்டப்பட்டதுக்கு அவங்க நல்லா இருக்காங்கன்னா அதுவே பெரிய விஷயம்தானே... சிங்கிள் பேரன்டா இருந்தா, கண்டிப்பா பசங்க படிக்க மாட்டாங்கனு சொல்லிட்டே இருப்பாங்க. ஆனால், நான் அப்படியில்லாம என்னால முடிஞ்சளவுக்கு நல்ல படிப்பை என் பசங்களுக்குக் கொடுத்திருக்கேன்''. 

''சீரியலில் இருப்பது போலவே, வீட்டிலும் நல்ல மாமியாராகத்தான் இருக்கீங்களா?''

''என்னதான் நல்லபடியா நடந்துக்கிட்டாலும் மாமியார் என்கிற அந்தப் பதவி நம்மைக் கேள்வி கேட்க வைக்கும். ஆனால், உண்மையில் நான் அப்படி இல்லைங்க. ரொம்பத் தங்கமான மாமியார். தங்கம்னுகூட சொல்லக் கூடாது.. வைரமான மாமியார்னுதான் சொல்லணும். மழைக்குத் தகுந்த குடை பிடிக்கணும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நமக்கு நடந்துக்கத் தெரிஞ்சிருந்தா போதும். கூட்டுக் குடும்பமா வாழ்றது, நமக்கான விஷயங்களை விட்டுக்கொடுக்கிறது இதெல்லாம் எனக்கு செட் ஆகாது. கல்யாணம் பண்ணி வெச்சுட்டா, நம்ம பசங்க வாழ்க்கையில நாம தேவையில்லாம மூக்கை நுழைக்கக் கூடாது. அவங்களே குடும்பத்தைப் பார்த்துப்பாங்க. அவங்களே கத்துக்கிறதுக்கான அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்துடணும். என்ன பொருள் வாங்கணும், எப்படிக் குடும்பத்தைப் பார்த்துக்கணும் என்பதையெல்லாம் அவங்களையே கத்துக்கவிட்றணும். அப்படியில்லாம பலர் அவங்க பர்சனல் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறதாலதான் பிரச்னையே வெடிக்குது''. 

''ஒரு பெண்ணாக இந்தச் சமூகத்தில் நீங்கள் எதிர்கொண்டவை? ''

''எந்தத் துறையிலதான் கஷ்டம் இல்ல. பெண்களால முடியாதது என்ன இருக்கு சொல்லுங்க. நான் கஷ்டப்பட்ட நேரத்துல ஆறுதலா எனக்குப் பேசுறதுக்குக்கூட ஆள் இல்லாம இருந்தாங்க. பசங்க படிச்சப் பள்ளிக் கூடத்துல, நான் யார்னே தெரியாதப்போகூட கட்டணத்தைக் குறைச்சுக்கிட்டாங்க. இப்படி நான் எதிர்பார்க்காத பல விஷயங்களில் எனக்கு உதவி கிடைச்சிருக்கு. எனக்காகப் பரிதாபப்பட்டு நிறையப் பேர் உதவி செய்தாங்க. நான் இந்தத் துறையிலிருந்து விலகியிருந்தப்போ, ஸ்கூல்ல பசங்களைக் கொண்டு போய் விடுறதைப் பார்த்துட்டுதான் பாலசந்தர் சார் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிருக்கார். அந்த ஸ்கூல் பிரின்சிபல்தான் என்னை போன்ல கூப்பிட்டு, பாலசந்தர் சார் உங்களை ஆபீஸுக்கு வரச் சொல்றார்னு சொன்னாங்க. அப்படித்தான் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தேன். 'சிந்து பைரவி' படத்தைத்தான் பார்ட்- 2 வாக 'சஹானா' என்கிற பெயரில் பாலசந்தர் சார் இயக்கினார். ஜெயா டி.வி-யில் சுமார் மூன்று, நான்கு வருஷம் டெலிகாஸ்ட் ஆச்சு''. 

''உங்களின் அடுத்த சீரியல், படம் பற்றி?''

''உண்மையைச் சொல்லணும்னா.. 'லட்சுமி வந்தாச்சு' சீரியல் அநேகமாக இந்த வாரத்துக்குள்ள முடிவுக்கு வந்துடும். அடுத்து, நல்ல கதையாக இருந்தால், சீரியலில் கமிட் ஆகலாம்னு இருக்கேன். நல்ல பேரை வாங்கித்தருவதோடு, மூன்று, நான்கு வருஷமாவது டெலிகாஸ்ட் ஆனாதான்.. முழு மூச்சோடு நடிக்க முடியும்னு நினைக்கிறேன். அப்படியொரு வாய்ப்புக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்''.