Published:Updated:

“தீரன் மேக்கிங்ல வர்ற ‘கஃபே கஃபே’ என் குரல்தான்!” - பவித்ரா

“தீரன் மேக்கிங்ல வர்ற ‘கஃபே கஃபே’ என் குரல்தான்!” - பவித்ரா
“தீரன் மேக்கிங்ல வர்ற ‘கஃபே கஃபே’ என் குரல்தான்!” - பவித்ரா

“தீரன் மேக்கிங்ல வர்ற ‘கஃபே கஃபே’ என் குரல்தான்!” - பவித்ரா

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர், பவித்ரா. பிறகு அதே சேனலில் ஒளிபரப்பான 'ஜீனியர் சீனியர்' நிகழ்ச்சியிலும் தன் திறமையை நிரூபித்தவர். சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற 'ஜீ டான்ஸ் லீக்' நிகழ்ச்சியில், பவித்ரா மற்றும் ஶ்ரீதர் கூட்டணி டைட்டில் பட்டத்தைப் பெற்றது. தற்போது, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரபர பவித்ராவை ஒரு தேநீர் இடைவேளையில் சந்தித்தோம்... 

“ஹாய்... நான் பிறந்தது வளர்ந்தது சென்னையில். இப்போ, விவேகானந்தா வித்யாலயா ஸ்கூலில் எட்டாம் வகுப்புப் படிக்கிறேன். என் அண்ணன் சரண் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறான். கூட்டுக் குடும்பமா எங்க வீடு எப்பவும் கலகலனு இருக்கும். என் பாட்டி, 'உன்னால் முடியும். நீ இன்னும் நிறையப் பரிசு வாங்குவே'னு என்னை உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க. ஸ்கூலில் டிராமா, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி எது நடந்தாலும் மேடம்தான் நம்பர் ஒன். 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சி பற்றி சொன்னதோடு, 'நீ அவசியம் கலந்துக்கணும்'னு உற்சாகப்படுத்தினதே என் பிரின்ஸிபால் சுஜாதா மேம்தான். என் டீச்சர்ஸும் நிறைய ஹெல்ப் பண்ணாங்க. 'ஜீனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில் ரன்னர் பட்டத்தையும் ஒரு லட்சம் ரூபாயும் வாங்கினேன். என் ஃபேமிலியே ‘ஹாப்பி அண்ணாச்சி.’

என் ரோல் மாடலே, என் அண்ணன்தான். அவனுடைய எழுத்து ரொம்ப அழகா இருக்கும். ஆரம்பத்தில் என் எழுத்து நல்லாவே இருக்காது. அவனைப் பார்த்துத்தான் அழகா எழுதக் கத்துக்கிட்டேன். அவன் நிறைய அவார்டு வாங்கிருக்கான். அவனை மாதிரி நானும் வாங்க நினைச்சேன். இப்போ வீடு முழுக்க என் விருதுகளை அடுக்க தூண்டுகோல் அண்ணன்தான். நான் ஆறு வருஷமா பரதநாட்டியம் கத்துக்கிட்டிருக்கேன். டிராயிங், பாட்டு, சிலம்பம் என ஒண்ணு ஒண்ணா கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்'' என்ற பவித்ரா, 'ஜீ டான்ஸ் லீக்' அனுபவம் குறித்துப் பேசினார்.

''என்னை ஜீ தமிழில் நடனப் போட்டிக்குக் கூப்பிட்டப்போ பரதம் தவிர எந்த டான்ஸூம் தெரியாதேனு தயக்கமா இருந்துச்சு. கெளசிக் அண்ணாதான் 'உன்னால் முடியும். தைரியமா பண்ணு'னு உற்சாகப்படுத்தினார். 'உன்னால் வெஸ்டர்னும் ஆட முடியும்'னு சந்தோஷ் அண்ணா நம்பினார். அவங்க கொடுத்த ஊக்கத்தில், 'ஜீ டான்ஸ் லீக்'கில் டைட்டில் வின்னராக ஆனேன். ஜீ டான்ஸ் லீக்கில் என்னோடு ஆடின ஶ்ரீதர் அண்ணனும் நானும் ஜீனியர் சூப்பர் ஸ்டாரிலிருந்து ரொம்ப குளோஸ். என் சொந்த அண்ணன் மாதிரி என்னைப் பார்த்துப்பாங்க'' எனப் புன்னகையுடன் தொடர்ந்தார். 

''ஸ்கூல்ல என் பெஸ்ட்டி, மைத்ரேய். நான் ஸ்கூலுக்குப் போகாதப்போ டீச்சர் நடத்தின பாடங்களை என் நோட்டில் காப்பி பண்ணி, பொறுமையாச் சொல்லிக் கொடுப்பா. அவளால்தான் நான் படிப்பிலும் முதல் மார்க் எடுக்க முடிஞ்சது. எங்க ஃபேமிலியும் அவங்க ஃபேமிலியும் ரொம்ப குளோஸ். என் எல்லா நிகழ்ச்சியையும் பார்த்துப் பாராட்டுவா. அவளை மாதிரி ஒரு ஃப்ரண்ட் கிடைச்சது சந்தோஷம். ஐ லவ் யூ டியர்!

'ஜீனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியில் எங்களுக்குப் பயிற்சி கொடுத்த பிரவீன் அண்ணா, விஜி அக்கா மூலமாகத்தான் 'தீரன்' வாய்ப்பு கிடைச்சது. ஒரு பெரிய படத்தில் சின்ன ரோலாவது கிடைச்சிருக்கேனு சந்தோஷப்பட்டேன். போஸ் அங்கிள், 'ஜீ தமிழ் நிகழ்ச்சியில் இவங்க சூப்பரா நடிச்சிருப்பாங்க'னு கார்த்தி அங்கிள்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். 'நான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தில்லே. ஆனா, இயல்பாவே நீங்க நல்லா நடிக்கிறீங்க'னு கார்த்தி அங்கிள் பாராட்டினார். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். 'தீரன்' பட மேக்கிங் வீடியோவில் 'கஃபே கஃபே'னு வரும் பின்னணி மியூசிக், என் குரல்தான். டப்பிங்ல பேசும்போது அது தீம் மியூசிக் அளவுக்கு வரும்னு தெரியாது. ஆனா, மேக்கிங் வீடியோவில் என் குரல் வந்துருக்கிறது ரொம்பவே பெருமையா இருக்கு. இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஆசை'' என்கிற பவித்ராவுக்கு கலெக்டராகி, மக்கள் சேவை செய்வது கனவாம். 

கனவு மெய்படட்டும்!

அடுத்த கட்டுரைக்கு