Published:Updated:

'தீபிகா தலைக்கு விதிக்கப்பட்ட 5 கோடி பரிசுத்தொகைக்கு ஜி.எஸ்.டி உண்டா?' - கொதிக்கும் பிரகாஷ்ராஜ்!

'தீபிகா தலைக்கு விதிக்கப்பட்ட 5 கோடி பரிசுத்தொகைக்கு ஜி.எஸ்.டி உண்டா?' - கொதிக்கும் பிரகாஷ்ராஜ்!
'தீபிகா தலைக்கு விதிக்கப்பட்ட 5 கோடி பரிசுத்தொகைக்கு ஜி.எஸ்.டி உண்டா?' - கொதிக்கும் பிரகாஷ்ராஜ்!

'தீபிகா தலைக்கு விதிக்கப்பட்ட 5 கோடி பரிசுத்தொகைக்கு ஜி.எஸ்.டி உண்டா?' - கொதிக்கும் பிரகாஷ்ராஜ்!

டிசம்பர் 1-ம் தேதி திரைக்கு வரவிருந்த `பத்மாவதி' திரைப்படம் ராஜ்புத் கர்னி சேனா, ராஜஸ்தானின் ராஜ்புத் அமைப்புகள், வலதுசாரி அமைப்புகள், பா.ஜ.க எம்.பி-க்கள் ஆகியோரின் தொடர்ச்சியான நெருக்கடிகளால் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிராமணர்களைத் தவறாகச் சித்திரித்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடை கோரப்பட்ட `தஷாக்ரியா' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

`தீபிகா படுகோனேவை எரித்தால், ஒரு கோடி ரூபாய் பரிசு' என ஷத்ரிய மகாசபா அறிவித்திருக்கும் இதேநேரத்தில், மராத்தியத் திரையுலகில் கிர்வந்த் பிராமணச் சமூகத்தால் நடத்தப்படும் பொருளாதாரச் சுரண்டல் குறித்த திரைப்படம் வெளிவந்துள்ளது. இந்துக்களுக்கு இறுதி காரியங்களைச் செய்பவர்கள் கிர்வந்த் பிராமணர்கள். `பன்யா’ என்கிற சிறுவன் கதையின் மூலம், துக்கத்தில் இருக்கும் குடும்பங்களிடம் பணம் பறிக்கும் சமூகமாக அவர்கள் இருப்பது குறித்துப் பேசுகிறது, தேசிய விருது பெற்று, `U' சான்றிதழுடன் வெளிவந்திருக்கும் `தஷாக்ரியா'வின் கதைக்களம். அகில பாரதிய பிராமண் சபா மற்றும் இந்து ஜனஜக்ருதி சமிதி ஆகிய அமைப்புகள், `இந்தப் படத்தில் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களைத் தவறாகச் சித்திரித்திருக்கிறார்கள். அதனால் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர், அது தங்கள் உறுப்பினர்களுக்குத் திரையிடப்பட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து, பிராமண மற்றும் முடி திருத்தும் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் படத்துக்குத் தடை கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வலதுசாரி அமைப்புகளின் இத்தகையத் தடைகோரும் போராட்டங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் `தஷாக்ரியா' இயக்குநர் சந்தீப் பாட்டீல், ``எந்தக் குறிப்பிட்ட சாதியையோ குழுவையோ நான் தவறாகச் சித்திரிக்கவில்லை. வலதுசாரி அமைப்புகளுக்குத் தனியாகத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். பிறகு சென்சார் போர்டு எதற்கு. இப்படித் தெருவுக்குத் தெரு ஓர் அமைப்பு இறங்கி கலைப் படைப்புகளை முடக்கிவிட்டால், மொத்தத் திரையுலகின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறிவிடும். முன்னோர்களுக்கு இறுதிக் காரியங்களையும் மரியாதையையும் செய்வது எல்லாச் சமூகங்களிலும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. 22 வருடங்களுக்கு முன்னர், பாபா பந்த் எழுதியுள்ள நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் `தஷாக்ரியா'. குடும்பத்தில் ஒருவரின் இழப்பால் துயரில் இருப்பவர்களிடம் நடக்கும் சுரண்டலைப் பற்றிதான் இந்தப் படம் பேசுகிறது.

`பத்மாவதி', `நியூட்', `தஷாக்ரியா' போன்ற திரைப்படங்களைத் தடுக்க நினைக்கும் வலதுசாரி அமைப்புகளின் நோக்கம், அவர்களது சாதிய வெளிப்பாட்டையும் அரசியல் நோக்கங்களையுமே வெளிப்படுத்துவதுதான். இத்தகைய நடவடிக்கைகள் வன்மையான கண்டனத்துக்குரியது” என்றார்.

`பத்மாவதி' படத்துக்கான சர்ச்சை குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், ``ஒருவர், `தீபிகா,

சஞ்சய் லீலா பன்சாலி தலைகளுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை'’ என அறிவிக்கிறார். பா.ஜ.க-வைச் சேர்ந்த ஊடகத் தொடர்பாளர், `அதைச் செய்து முடிப்பவருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு' என அறிவிக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது பணமதிப்பிழப்புக்குப் பிறகு, நிறைய பணம் பரிசாக அளிக்கப்பட்டிருப்பது  தெரிகிறது. ஆனால், இவையெல்லாம் ஜி.எஸ்.டி-க்குள் அடங்காது” என்று கூறியிருக்கிறார். மேலும், ``தேர்தலுக்குப் பிறகாவது `பத்மாவதி' திரைப்படம் வெளியாகுமா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

``கலைப் படைப்புகளின் மீதான இத்தகைய ஒடுக்குதல், அவமானகரமானது'' என்று சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும், ``இத்தகைய நெருக்கடிநிலை கண்டிக்கத்தக்கது” என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தெரிவித்திருக்கிறார்கள்.  

சென்சார் போர்டின் அதிகாரம் கேள்விக்குள்ளாகிறதா, தடையைத் தாண்டி வருவாரா ராணி பத்மாவதி?

அடுத்த கட்டுரைக்கு