“பத்மாவதி படக்குழுவின் வேதனையை நானும் அனுபவித்தேன்!" கலங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

‘பத்மாவதி’ சர்ச்சை, ‘செக்ஸி துர்கா’வுக்குத் தடை... இப்படிப்பட்ட பரபரப்புகளுக்கு இடையே கோவாவில் தொடங்கியது 48 வது கோவா திரைப்பட விழா. கொண்டாட்டங்களுக்குப் பேர் எடுத்த கோவாவின் உச்சகட்ட கொண்டாட்டமாக நவம்பர் மாதங்களில் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டும் மிகுந்த பரபரப்புக்கிடையே நேற்று தொடங்கியது திரைப்பட விழா. வரும் 28 தேதி வரை நிகழும் இந்த விழாவில் கலந்துகொள்ள உலகெங்கும் இருந்து திரைப்பட படைப்பாளுமைகளும் ரசிகர்களும் குவிந்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான்

பத்மாவதி திரைப்படக்குழுவிற்கும் இந்து அமைப்புகளுக்கும் மோதல் நிகழ்ந்துவரும் வகையில் இந்த விழாவில் இது எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நினைத்ததுபோலவே ‘பத்மாவதி’ சர்ச்சை தொடக்க விழாவில் எதிரொலித்தது.

கோவா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிய விழாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இணை அமைச்சர் ராஜ்வர்தன் ரத்தோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவாவின் முதல்வர் மனோகர் பரிக்கர் ஒரு சாமனிய மனிதர்போல் விழா அரங்கில் நின்று அனைவரையும் வரவேற்றார். விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ராஜ்குமார் ராவ், ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட  காலஞ்சென்ற முன்னணி கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான்

விழாவில் பேசிய ஸ்மிதி இரானி, ‘கதை சொல்லிகளுக்குப் பேர் பெற்றது நமது இந்தியா. இந்த மண்ணில் கதை சொல்ல உலக கதைசொல்லிகளை அழைக்கும் ஒரு பெருவிழா இது’ என்றார். ஷாருக்கான் பேசும்பொழுது, ‘கதை கேட்பவர்கள், கதை சொல்பவர்கள் இருவரும் கலந்துகொள்ளும் பெருவிழா’ என்று பெருமிதம் கொண்டார்.

இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘பத்மாவதி’ பட சர்ச்சையைக் குறிப்பிட்டுப் பேசினார்.  ‘சகிப்புத்தன்மை கொண்ட நம் பாரத மண்ணில் படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் ஏற்படும் இடர்பாடுகள் புதிதல்ல. இன்று ‘பத்மாவதி’ படக்குழுவினருக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எனக்கும்  ஃப்ரா கானுக்கும் ஏற்பட்டது. எங்கள் இருவருக்குமே “ஃப்த்வா” கூறப்பட்டது’ என்று நினைவு கூர்ந்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகக் கருதப்படும் இவ்விழா குறித்து இந்தியத் திரைப்பட விழாக்களின் இயக்குநரும் கோவா திரைப்பட விழாவின் பொறுப்பாளருமான தமிழர் செந்தில் ராஜனிடம் பேசினோம். 

ஏ.ஆர்.ரஹ்மான்

கோவா திரைப்பட விழாவில் சுமார் 82 நாடுகளிலிருந்து 195 திரைப்படங்கள் பங்கேற்கின்றன. பிரபல இரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜித் அவர்கள் இயக்கிய “Beyond the Clouds” திரைப்படத்துடன் தொடங்கும் விழா 28 ஆம் தேதி பிரபல இந்தோ அர்ஜென்டினா திரைப்பட இயக்குநரின் “ Think of Him”  திரைப்படத்துடன் நிறைவடைகிறது. இந்த திங்க் ஆப் ஹிம்மின் சிறப்பம்சம் இது, கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியன் பனோரமாவில் சுமார் 26 படங்கள் திரையிடப்பட உள்ளன. போட்டிக்கு வந்த 153 திரைப்படங்களில் மிகவும் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை இவை. இதில் நம் ஊர் அம்ஷன்குமார் அவர்கள் இயக்கிய “மனுஷங்கடா” திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்திய பனோரமாவிற்கான திரைப்பட தொடக்கவிழாவை ஸ்ரீதேவி தொடங்கிவைத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய அரசு சார்பில் சர்வதேசப்படங்களுக்கு வழக்கப்படும் உயரிய விருதான தங்கமயில் விருதுக்கான போட்டியில் சுமார் பதினைந்து படங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச படைப்பாளிகளுடன் நம்ம ஊர் படங்களான மராத்தியின் ‘கச்சா லிம்பு’, மலையாளத்தின் ‘டேக் ஆஃப்’, அசாமிய மொழிப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த விருதை பிரபல இரானிய திரைப்பட இயக்குநர் ரெஸா மிர்கர்மி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புக்குரிய விழாவில் சில சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. 2015 ஆண்டில் மலையாளத்தில் வெளியாகிய “ஒழிவு தேசத்துக்களி” படம் மூலம் உலக அரங்கில் பரபரக்கப்பட்ட சனல் குமார் சசிதரனின் ‘செக்ஸிதுர்கா’ திரைப்படம் இவ்விழாவில் திரையிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு அந்தப் படத்தில் இடம்பெறும் சில சர்ச்சைக்குரிய காட்சிகளின் அடிப்படையில் அது திரையிடப்படாது என்று மறுக்கப்பட்டுள்ளது. இது இங்கு குவிந்துள்ள படைப்பாளிகள் இடையே சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான்

இந்த விழாவில் தென்னிந்திய கலைஞர்களுக்கு ‘பாகுபலி’ தவிர யாருக்கும் முன்னுரிமை தரப்படவில்லை. கோவாவிற்கு வேறு விஷயமாக வந்திருக்கும் மணிரத்னம் இவ்விழாவிற்கு வருகை தரவில்லை. பின்னர் நிகழ்ந்த நேர்காணலில் பிரபல பாலிவுட் இயக்குநர் சுபாஷ் கய் ‘content தான் கிங்’ என்று குறிப்பிட்டார். அப்பொழுது குறுக்கிட்டு ‘செக்ஸி துர்காவின் இயக்குநர் ‘கன்டன்ட் கிங்தான். அவரின் முந்தையபடம் ‘ஒழிந்த திவசத்து களி’ உலக அரங்கில் பல விருதுகளைக் குவித்துள்ளது. அவர் படத்திற்கு ஏன் தடை’ என்றபொழுது சுபாஷ் கய் சாமர்த்தியமாக நழுவிக்கொண்டார்.

பத்திரிகையாளர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படாததால் பிற மாநிலப் பத்திரிகையாளர்கள் முதல் நாள் அலைக்கழிக்கப்பட்டனர். எது எப்படியிருந்தாலும் ரசிகர்களும் திரைப்படப் படைப்பாளிகளும் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!