Published:Updated:

“கெளதம் கார்த்திக்கா... டார்ச்சர் பண்ணிருவாரேன்னாங்க!” - கலாபிரபு

“கெளதம் கார்த்திக்கா... டார்ச்சர் பண்ணிருவாரேன்னாங்க!” - கலாபிரபு
“கெளதம் கார்த்திக்கா... டார்ச்சர் பண்ணிருவாரேன்னாங்க!” - கலாபிரபு

கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனுவை நடிகராக 'சக்கரக்கட்டி’ படத்தில் அறிமுகம் செய்து இயக்கினார் டைரக்டர் கலாபிரபு. அடுத்து இப்போது கார்த்திக்கின் வாரிசு கெளதம் கார்த்திக்கை ‘இந்திரஜித்’ படத்தில் நடிக்க வைத்து இயக்கியிருக்கிறார். பிரமாண்ட தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணுவின் மூத்தமகன் பரந்தாமன் இணைதயாரிப்பளராக இருக்கிறார். இளையமகன்  கலாபிரபு  இயக்கியிருக்கும் ‘இந்திரஜித்’ படம் குறித்து அவரிடம் பேசினோம்.  

“ ‘இந்திரஜித்’ திரைப்படம் எப்படி உருவாகியிருக்கிறது?”

“பொதுவாக மக்கள் அவரவர் வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். சினிமா தியேட்டருக்குப் போனால் 2 மணிநேரம் நம் கவலையை மறந்து ரிலாக்ஸாக இருக்கலாம் என்கிற நம்பிக்கையோடு வருகிறார்கள். ‘இந்திரஜித்’ சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூரணமாகப் பூர்த்தி செய்கின்ற பொழுதுபோக்குத் திரைப்படம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் ஒரு டைரக்டராக காட்சிகளைப் படமாக்குவது மட்டும் என் வேலையல்ல, ஒரு ரசிகனாக அதில் லாஜிக்  சரியாக இருக்கிறதா என்று என்னை நானே எடை போட்டுப் பார்த்துக்கொண்டேன்.

வெள்ளித்திரையில் டைட்டில் கார்டு போட்டு முடித்தவுடன் தொடங்கும் முதல்காட்சியிலிருந்தே ஆக்‌ஷன் ப்ளஸ் அட்வெஞ்சர் கலந்து இருக்கும் கதை, திரைக்கதையில் பார்வையாளர்கள் பயணம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். க்ளைமாக்ஸ்வரை ஆடியன்ஸ் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்டிப்பாய் நடப்பார்கள். 'இந்திரஜித்' படத்தில் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் காட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக காட்டுப்பகுதியில் ஹீரோ சென்றால் அங்கே புரியாத பாஷை பேசும்  ஆதிவாசி கும்பலிடம் மாட்டிக்கொள்ள, காமெடிக் காட்சிகள் அரங்கேறும். அதுபோன்ற மாமுலான காட்சிகள் இடம்பெறக்கூடாது என்பதால் கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். ஒவ்வொரு காட்சிக்குமான பின்னணி, காரண காரியங்கள் சரியாக வைக்கப்பட்டிருக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் பிரமிப்பான சேஸிங் காட்சி நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும். எங்கள் வேலைகளை உண்மையாகவும், நேர்த்தியாகவும் 'இந்திரஜித்' படத்தில் செய்திருக்கிறோம் என்கிற திருப்தி எங்களுக்கு இருக்கிறது."

“கார்த்திக் பிரமாதமான நடிகர். ஆனால், அவரால் ஷூட்டிங் தாமதம் ஆகும் என்று சொல்வார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் மகன் கெளதம் கார்த்திக் எப்படி?” 

“முதலில் கெளதம் கார்த்திக்கை ஒப்பந்தம் செய்து முடித்தவுடன் என்னிடம் எல்லோரும் வலியவந்து சொன்ன, போன் செய்து சொன்ன ஒரேவார்த்தை 'பிரபு இப்போதான் ரெண்டாவது படம் ஆரம்பிச்சிருக்கீங்க, எதுக்கு கெளதம் கார்த்திக்கை புக் பண்ணுனீங்க. அந்தப் பையன் அவங்க அப்பா மாதிரி சொன்ன நேரத்துக்கு கரெக்டா ஷூட்டிங் வரமாட்டான், பயங்கரமாக டார்ச்சர் பண்ணுவான் எப்படி சமாளிக்கப்போறீங்க' என்று ஆளாளுக்கு என்னை பயமுறுத்தினார்கள். உண்மையில் அவர்கள் என்னிடம் கெளதம் கேரக்டர் குறித்துச் சொன்னது மாதிரி அவர் நடந்துகொள்ளவே இல்லை. என் தம்பி மாதிரி எப்பவுமே என்கூடவே இருந்தார். நான் எந்தமாதிரி நடிக்கச் சொன்னேனோ, அதுமாதிரியே கேமரா முன்பு நடித்தார்.

நாங்கள் படப்பிடிப்புத் தளத்துக்கு வரச்சொன்ன நேரத்துக்கு சரியாக வந்துவிட்டார். அன்றைக்கு எடுக்க வேண்டிய காட்சி ஜாலியானது என்றால், எங்கள் யூனிட் ஆட்களோடு சகஜமாக கலகலப்பாகப் பேசிக்கொண்டிருப்பார். ஏதோ முக்கியமான, சீரியஸான காட்சியைப் படம்பிடிக்கப் போகிறோம் என்று முன்கூட்டியே தெரிந்துவிட்டால் அன்றைக்கு யாரிடமும் முகம்கொடுத்துப் பேசமாட்டார். கேமரா முன் நடிக்கப் போவது, டயலாக் பேசும் மாடுலேஷன் குறித்தே யோசித்துக்கொண்டிருப்பார். 'இந்திரஜித்' படப்பிடிப்பு ஆரம்பித்தது முதல் கடைசிநாள் ஷூட்டிங்வரை ரொம்ப நல்லவிதமாக கெளதம் நடித்து ஒத்துழைப்பு கொடுத்ததை என்னால் மறக்க முடியாது. 'இந்திரஜித்' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு கெளதம் கார்த்திக் ஆக்‌ஷன் ஹீரோவாக உயரப்போவது நிச்சயம்."

"ரஜினியின் '2.0' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் சுதன்சு பாண்டே, உங்கள் படத்தின் வில்லன் என்கிறார்களே?"

"கெளதம் கார்த்திக்குடன் மோதும் கதாபாத்திரத்தில் சுதன்சு பாண்டே ரஜினி சாருடன் '2.0' படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி எனக்குத் தெரியாது. ஒருநாள் படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருந்தபோது '2.0' படத்தில் இடம்பெறும் அவருடைய கேரக்டர் குறித்து என்னிடம் மகிழ்ச்சியாகச் சொன்னார் அப்போதே அவருக்கு வாழ்த்துகள் சொன்னேன். ஷங்கர் சார் இயக்கத்தில் ரஜினி சாருடன் நடிக்கும் சுதன்சு பாண்டே 'இந்திரஜித்' படத்தில் வில்லனாக நடிப்பது எங்களுக்குப் பெருமையான, சந்தோஷமான விஷயம்." 

" 'கலைப்புலி' தாணு 'இந்திரஜித்' படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார்?"

" 'இந்திரஜித்' படத்தை ஷூட் பண்ணிய பிறகோ, எடிட்டிங் செய்த பிறகோ ஒரு காட்சியைக்கூட அப்பாவிடம் திரையிட்டுக் காட்டவில்லை. முழுவதுமாகத் தயாரானபிறகு டபுள் பாஸிட்டிவ் அப்பாவுக்குத் திரையிட்டுக் காட்டினேன். 'இந்திரஜித்' படத்தை முழுவதும் பார்த்துவிட்டு வெளியில் வந்த அப்பா என்னிடம் கேட்ட ஒரே ஒரு வார்த்தை  'ஏண்டா இத்தனைநாள் என்கிட்ட படத்தைக் காட்டவே இல்லை!’ அவரோட அந்த ஆர்வமான வார்த்தையைக் கேட்டதே சந்தோஷம்!"