Published:Updated:

“ரஜினிக்கு டூப்பா... பேய் ஊரில் ஷூட்டிங்..!” - 'காலா', 'தீரன்' அனுபவம் சொல்லும் திலீப் சுப்பராயன்

“ரஜினிக்கு டூப்பா... பேய் ஊரில் ஷூட்டிங்..!” - 'காலா', 'தீரன்' அனுபவம் சொல்லும் திலீப் சுப்பராயன்
“ரஜினிக்கு டூப்பா... பேய் ஊரில் ஷூட்டிங்..!” - 'காலா', 'தீரன்' அனுபவம் சொல்லும் திலீப் சுப்பராயன்

'சதுரங்க வேட்டை' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வினோத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல காவல்துறை அதிகாரிகளும் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகிறார்கள். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள்  பலரால் பெரிதும் பாராட்டப்பட்டன. இதனைப் பற்றித் தெரிந்துகொள்ள சண்டைப் பயிற்சி இயக்குநர் திலீப் சுப்பராயனிடம் பேசினோம். 

தீரன் படத்திற்குள் எப்படி கமிட்டானீங்க? இந்தப் படத்துக்கு எப்படி உங்களைத் தயார்ப்படுத்திக்கிட்டீங்க?

''ஏற்கெனவே 'கொம்பன்' படம் பண்ணதுனால ட்ரீம் வாரியர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சைட்ல இருந்துதான் கூப்பிட்டாங்க. அதுமட்டுமில்லாம, நான் ஃபைட்டரா இருக்கும்போது வினோத் உதவி இயக்குநரா இருந்தார். அப்பவே எங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்துச்சு. படம் ஆரம்பிக்கிறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடியே ஸ்க்ரிப்டைப் படிச்சுட்டேன். ஆக்‌ஷன் சீக்வென்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி கதை இருந்துச்சு. கதையைப் படிக்கப் படிக்க இன்னும் ஆர்வம் அதிகமாகிட்டே இருந்துச்சு. இந்தப் படத்துல வர்ற எந்த ஆக்‌ஷன் சீனும் இதுவரை வேற எங்கேயும் பார்த்த மாதிரி இருக்கக்கூடாதுனு கவனமா இருந்தோம். சில காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு விதமான பயம் வரணும்னு ப்ளான் பண்ணிதான் ஷூட் பண்ணோம். அது சரியான இடத்துல வொர்க் அவுட்டும் ஆச்சு. இந்தக் கதையே என்னை இன்னும் வித்தியாசமா யோசிக்கத் தூண்டுச்சுன்னே சொல்லலாம். கதைதான் எல்லாத்துக்கும் காரணம்.''

கார்த்தியை எப்படியெல்லாம் வேலை வாங்குனீங்க?  

''கார்த்தி அந்த கேரக்டராவே மாறிட்டார். அந்தளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தோட ஒன்றிப்போயிட்டார். அவர் இந்தளவு பண்ணும்போது, நமக்கும் சொல்லிக்கொடுக்க சுலபமா போயிடும். கார்த்தி ரொம்பவே சப்போர்ட் பண்ணார். இந்தப் படத்துக்காக அவரை நிறைய ஓடவிட்டோம். பல கிலோமீட்டர்கள் ஓடியிருப்பார். அதும் வெயில்ல ஓடுறதுனா எப்படி இருக்கும்னு நீங்களே நினைச்சுப் பார்த்துக்கோங்க. மண்ணுக்குள்ள புதைஞ்சிருந்து வெளிய வர்ற சீன்தான் படத்தோட ஃபர்ஸ்ட் ஷாட். ஐம்பது நொடி மண்ணுக்குள்ளயே மூச்சை அடக்கி இருக்கணும். கேமரா தூரத்துல இருந்து வந்து வாக்கி டாக்கியைப் காண்பிச்சு அப்புறம் கார்த்தி இருக்கிற இடத்தைக் காட்டும்போதுதான் அவர் எழுந்து ஓடணும். மண்ணுக்கடியில ஒரு வாக்கி டாக்கி வெச்சு கமெண்ட் சொன்ன பிறகுதான் எழணும். அந்த ஷாட் எல்லாம் ரொம்ப ரிஸ்க் எடுத்துப் பண்ணினார்.  'கொம்பன்' படத்துல நம்ம ஊர் கதை. அதுல, கோரியோ பண்றதுக்கும் ஒரு போலீஸ் கதையில கோரியோ பண்றதுக்கும் நல்லாவே வித்தியாசம் இருக்கு. மனுஷன் எத்தனை முறை சொன்னாலும் சலிக்காம ஓடுவார்.  அதே போல, டைரக்டர் வினோத் இதுதான் வேணும்னு கரெக்டா சொல்லிடுவார். கதைக்குத் தேவையில்லாத ஒரு சின்ன விசயத்தைக்கூடப் பண்ணமாட்டார். அவர் ஒரு படம் பண்ணா அந்தப் படத்துக்குன்னு ஒரு ஸ்டைல் வெச்சுப்பார். அதுலயேதான் படம் முழுக்க ட்ராவல் ஆகும்.''

படம் ஷூட் பண்ணும்போது என்ன மாதிரியான சவால்களைச் சந்திச்சீங்க? 

''வெயில்ல ஷூட் பண்றதுதான் பெரிய சவாலா இருந்துச்சு. தினமும் போக வர நூறு கிலோமீட்டர் ட்ராவல் பண்ணுவோம். காலையிலே நாலு மணிக்கு கிளம்புனா மிட் நைட்தான் திரும்ப வருவோம். நானும் டைரக்டரும் லொகேஷன் பார்க்கப் போகும்போது ரொம்பக் குளிரா இருந்துச்சு. இப்போ பட ஷூட்டிங்க்குப் போனா, வெயில் வாட்டி வதக்கிடுச்சு. ராஜஸ்தான்ல குல்தாரானு ஒரு கிராமத்துலதான் ஷூட் பண்ணோம். அந்த இடத்துக்கு எல்லாம் யாருமே வரமாட்டாங்களாம். அதுக்கு ஒரு பேய்க் கதைகூடச் சொன்னாங்க. நைட் அந்த இடத்துல ஷூட் பண்ணும்போது ஒரு மாதிரி பயமாவே இருக்கும். ஏன்னா, சுத்தி ஐம்பது கிலோமீட்டருக்கு ஆளே இருக்கமாட்டாங்க. ஏதாவது ஒண்ணு வேணும்னாகூட ஐம்பது கி.மீ போகணும். வெயிலும் ட்ராவலிங்கும் தான் ரொம்பவே சவாலா இருந்துச்சு.''

'தீரன்' பட ஷூட்ல நடந்த சுவாரசியமான அனுபவங்கள் பத்தி சொல்லுங்க...

''உண்மையாவே வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. அந்த பஸ்ல நடக்குற ஃபைட் சீனுக்கு மூணு நாளுக்கு முன்னாடியே பஸ் வேணும்னு கேட்டிருந்தேன். அதை எல்லாம் நமக்குத் தகுந்த மாதிரி ரெடி பண்ணிட்டு ஷாட் போலாம்னு நினைச்சேன். ஆனா, காலையில அந்த ஷாட் எடுக்கப்போறோம்னா முதல் நாள் நைட் தான் பஸ் வந்துச்சு. அதுக்குள்ள அந்த பஸ்சை ரெடி பண்ணி ப்ளான் பண்ண மாதிரி ஷெட்யூல் நடந்துச்சு. எல்லா சீனுக்கும் ரிகர்சல் பார்ப்போம். இந்த ஷாட்டுக்கு ரிகர்சல்கூட பண்ணலை. ரெண்டு பஸ்ஸுமே ஒரே மாதிரி போகணும். ஒண்ணு வேகமா ஒண்ணு மெதுவா போனாலோ சிரமம்தான். அந்த நேரத்துல ஃபைட்டர்ஸும் டெக்னீஷியன்ஷும் தான் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. கார்த்தி சாரும் ரொம்ப தைரியமா ரிகர்சலே பார்க்காம சூப்பரா நடிச்சு அசத்திட்டார்.  ஐம்பது நாள் ராஜஸ்தான்ல ஷூட் பண்ணோம். பொதுவா, ஒரு படம் பண்ணும்போது, ஃபைட், சீன், சாங்னு மாத்தி மாத்தி தான் ஷெட்யூல் பண்ணுவாங்க. ஆனா, இங்கே, ஐம்பது நாலும் ஃபைட் தான். எல்லாரும் ரனகளமாகிட்டாங்க. கேமராமேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர்னு எல்லாருமே முழு வீச்சுல உழைச்சாங்க. அதுக்குக் கிடைச்ச பரிசுதான் 'தீரன்' படத்துக்கான பாராட்டுனு நான் நினைக்கிறேன்.''

சண்டைக் காட்சிகள்ல உங்களைத் தனிச்சுக் காட்ட என்ன பண்ணுவீங்க?

''நான் எப்போதும் கதையைப் படிச்சுட்டு லொகேஷனுக்குப் போயிடுவேன். அங்க இருக்கிறதை வெச்சு ப்ளான் பண்றதுதான். ஃபைட் இப்போல்லாம் ரியலிஸ்டிக்கா இருந்தாதான் மக்கள் விரும்புறாங்க. சும்மா ஹீரோ அடிச்சவுடனே பத்துப் பேர் பறக்குற மாதிரியெல்லாம் இருந்தா, 'இதெல்லாம் எப்படிங்க? இது சாத்தியமா?'னு கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுறாங்க. ஃபைட் எதார்த்தமா நம்பகத்தன்மையோட இருக்கணும். அதுக்கு என்ன ஹார்டு வொர்க் பண்ணணுமோ  அதுல தெளிவா இருப்பேன். நான் உதவி இயக்குநரா இருந்தனால, எனக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன தேவை என்ன தேவையில்லைனு  புரிஞ்சுக்க முடியும். ஒரு லொகேஷன்ல என்ன ஆயுதம் இருக்குமோ அதுக்குத் தகுந்த மாதிரி அதை வெச்சு ஷாட் எடுக்கணும். இதைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன். இந்தப் படத்துல அடிக்கும்போது லென்ஸைப் பக்கத்துல போய் வெச்சு எடுத்தோம். அப்போ இன்னும் ரியலிஸ்டிக்கா இருந்துச்சு. கார்த்தி பெரிய அளவுல சப்போர்ட் பண்ணார். ஆரண்ய காண்டம் படத்துக்குப் பிறகு இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைச்சிருக்கு. அதுக்கு 'தீரன்' டீமுக்கு தான் நன்றி சொல்லணும்.''

சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்', கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஒரே நேரத்துல. எப்படி இருந்துச்சு? யாருக்கு கோரியோ பண்ண ஈஸியா இருந்துச்சு? 

''ரெண்டு பேருமே வேற லெவல். பாண்டியன் மாஸ்டர்கிட்ட நிறைய விசயங்கள் கத்துக்கிட்டு வந்திருக்காங்க. என்ன ஷாட் கொடுத்தாலும் ஈஸியா பண்ணுவாங்க. எனக்கு இது வராது அது வராதுனு சொல்லவே மாட்டாங்க. இவங்கனு இல்லை, இப்போ எல்லா ஹீரோக்களுமே நல்ல பயிற்சி எடுத்துட்டுதான் உள்ளேயே வர்றாங்க. இப்போ டூப் போடுறதே குறைஞ்சுடுச்சு. அவங்களே அந்த ரிஸ்க் எல்லாம் எடுக்கும்போது சொல்லிக்கொடுக்க நமக்கும் ஆர்வம் அதிகமாகிடுது.''

'காலா' படத்துல ரஜினிக்கு கோரியோ பண்றீங்க. எப்படி இருந்தது அந்த அனுபவம்?

''உண்மையிலே ரொம்ப சந்தோசமா இருக்கு. ரஜினி சார்  ஒரு குழந்தை மாதிரிங்க. அவருக்கு ஒரு ஷாட் திருப்தியாகலைனா அவரே ஒன் மோர் போலாம்னு கேப்பார். இல்லை சார் பரவாயில்லை, பாத்துக்கலாம்னு சொன்னாக்கூட விட மாட்டார். அவ்ளோ டெடிகேஷனா இருக்கார். 'காலா' படத்துல 95 சதவீதம் ரஜினி சாரே தான் ஃபைட் சீக்வென்ச் எல்லாம் பண்ணினார். டூப்பே போடலை. ஒரு முறை அந்த ஷாட்டை பண்ணிக் காண்பிச்சுட்டா அதை அப்டியே அவருக்கே உரிய ஸ்டைல்ல மாத்தி அசத்திடுவார். அவ்ளோ எனர்ஜியோட இருக்கார். ரொம்ப அழகா பண்ணிருக்கார். அவர் மாஸ்க்கு என்ன பண்ணினாலும் பயங்கர ரெஸ்பான்ஸ் வரும். ஆனா, அவர் ஒவ்வொன்றையும் இப்படித்தான் பண்ணணும்னு முறையா பண்ணுவார். அடிக்கடி அப்பா பத்தி கேட்டு விசாரிப்பார். அவரைப் பாத்தாலே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும் பாருங்க. சான்ஸே இல்லைங்க.''

பின் செல்ல