Published:Updated:

யார் இந்த அன்புச்செழியன்... பின்னணி என்ன...? #VikatanExclusive

யார் இந்த அன்புச்செழியன்... பின்னணி என்ன...?  #VikatanExclusive
யார் இந்த அன்புச்செழியன்... பின்னணி என்ன...? #VikatanExclusive

யார் இந்த அன்புச்செழியன்... பின்னணி என்ன...? #VikatanExclusive

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் 'கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். 'சுப்ரமணியபுரம்', 'பசங்க', 'ஈசன்', 'போராளி', 'சுந்தரபாண்டியன்', 'தலைமுறைகள்', 'தாரை தப்பட்டை', 'கிடாரி', 'பலே வெள்ளையத்தேவா', 'கொடிவீரன்' ஆகிய படங்களை இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்தை முழுவதுமாக கவனித்துவந்த சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன் அவர் எழுதிய வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாக்குமூலத்தில் பணத் தேவைக்காக மதுரையில் உள்ள பிரபல ஃபைனான்ஸியர் அன்புச்செழியனிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்ததாகவும், அதனைத் திருப்பித்தரக்கோரி கடந்த ஆறுமாத காலமாக குடைச்சல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர் குடும்பப் பெண்களையும் பெரியவர்களையும் தூக்கிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய அசோக்குமார் அவரது வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். மேலும், அந்தக் கடிதத்தில் சசிகுமாருக்கும் இவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை உணரும்படி உருக்கமாக எழுதியுள்ளார். 

யார் அந்த அன்புச்செழியன்?

அன்புச்செழியன் (எ) மதுரை அன்பு என்பவர் பிரபல ஃபைனான்ஸியர். பண பலம், அரசியல் பின்னணி, மாவட்டச் செயலாளர்களைக் கைக்குள் வைத்திருப்பது என எல்லா வேலைகளையும் சைலன்ட்டாக இருந்து மூவ் பண்ணுவதில் கில்லாடி. படம் தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் இவரிடம்தான் பணம் வாங்குவார்கள். ஆனால், படத்தின் பூஜைகள், இசை வெளியீட்டு விழாக்கள், வெற்றி விழாக்கள் என எதிலும் தலைகாட்டாமல் வலம் வருபவர். ஒருவருக்குப் பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் வீடு தேடி பணம் வரும். 'உங்களுக்குப் பணத் தேவை இருப்பது எனக்குத் தெரியும். இந்தப் பணத்தை எடுத்துக்கோங்க. முடியும்போது திருப்பிக் கொடுங்க' என்று தானாகவே முன்வந்து அவரது வலைக்குள் சிக்கவைப்பது இவரது யுக்தி. ஒருவர் இவரிடம் பணம் வாங்கினால் சொன்ன தேதியில் திருப்பித்தர வேண்டும். அப்படித் தராவிட்டால், தொடர்ந்து நூற்றுக்கணக்கான போன் கால்கள் வரும். அதைத் தவிர்த்தால் மிரட்டல்கள், வீட்டில் உள்ள பெண்களை, பெரியவர்களை, குழந்தைகளைத் தூக்கிச்சென்று பணத்தைக் கொடுத்துட்டு கூட்டிக்கிட்டு போ என்ற நிபந்தனை வைப்பார். இவரின் மிரட்டல்களுக்கு ஆளானவர்கள் தமிழ்சினிமாவில் ஏராளம். பல முன்னணி நடிகைகள்கூட இதில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'மெளனராகம்', 'நாயகன்' போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் ஜி.வியும் இவர் கொடுத்த மன உளைச்சலினால்தான் தற்கொலை செய்துகொண்டார். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வட்டிக்குத் தரக்கூடிய அளவுக்கு எந்நேரமும் இவரிடம் பணப் புழக்கம் இருந்துகொண்டேதான் இருக்கும். இவர் மதுரையில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தற்கொலைகுறித்து, சசிகுமாரிடம் நெருங்கிய தொடர்புடைய ஒருவரைத் தொடர்புகொண்டபோது...

''அசோக்கிற்கும் அன்புச்செழியனுக்கும் கடந்த ஏழு வருடங்களாக வரவு- செலவு கணக்கு இருந்துவந்தது. சசிகுமாருக்குத் தனது தயாரிப்பு நிறுவனத்தைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லாமே அசோக்தான் பார்த்துக்கொள்வார். கடன் வாங்கி வட்டிக்கு மேல் வட்டி வந்துவிட்டது. 'தாரை தப்பட்டை' படத்தில் கடன் அதிகமாகிவிட்டது. அடுத்து வந்த 'பலே வெள்ளையத்தேவா' நினைத்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இதுவரை சசிகுமார் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும். ஆனா, 'கொடிவீரன்' பட ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. தீபாவளி நேரத்தில் வெளியாகவேண்டிய படம், இந்த வட்டிப் பிரச்னையால்தான் தாமதமானது. அன்புச்செழியனை பொறுத்தவரை, ஒரு படத்துக்காகப் பணம் வாங்கினால் அதைச் சொன்ன தேதியில் திருப்பிக்கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் குடைச்சல் கொடுக்கும் நபர். அந்தக் குடைச்சலில்தான் அசோக் மாட்டிக்கொண்டார். அசோக்கை தனது ஆபீஸுக்கு அழைத்து, அவருக்கு மதிப்பு கொடுக்காமல் அசிங்கப்படுத்துவது, மிரட்டுவது போன்ற வேலைகளில் அன்புச்செழியன் ஈடுபட்டிருந்தார். சசிகுமாருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது என்பதற்காக இயக்குநர் சசிகுமார் காதுக்கு எந்தப் பிரச்னையையும் கொண்டுபோகமாட்டார் அசோக். அதுபோலவே, இந்தப் பிரச்னையையும் அசோக், சசிகுமாரிடம் தெளிவாகவோ விளக்கமாகவோ சொல்லவில்லை. நேற்று அன்புச்செழியனுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்க சசிகுமார் அசோக்கை தொடர்புகொண்டபோது, போன் எடுக்கவில்லை. எனக்கு அவர் இறந்த நாளன்று காலை 9 மணிக்கு அசோக்கிடமிருந்து போன் வந்தது. நான் குளித்துக்கொண்டிருப்பதாக என் மனைவி சொல்ல, 'சும்மாதான் பேசணும்னு கூப்பிட்டேன். பொறுமையாவே கூப்பிடச் சொல்லுங்க' என்று வைத்துவிட்டார். நான் திரும்ப அவருக்கு போன் செய்யவில்லை. அந்த நேரத்தில், 'சசி ஒரு குழந்தை மாதிரி. அவனுக்கு நல்லது மட்டும்தான் செய்யத்தெரியும். அவனைப் பார்த்துக்கோங்க, விட்டுடாதீங்க' என்ற மெசேஜ் அசோக்கிடமிருந்து வந்தது. திரும்பிக் கூப்பிட்டால் எடுக்கவில்லை. எதோ பிரச்னை என நினைத்து, என் நண்பர் ஒருவரிடம் சொல்லி வளசரவாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் பார்க்கச் சொன்னேன். கதவு உள்ளே பூட்டியிருந்தது. அதை உடைத்துக்கொண்டு சென்றபோது, வீட்டினுள் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறார். இந்தச் செய்தியைக் கேட்டு சசிகுமார் எனக்கு போன் செய்து கதறினார்.

உடனே, நான் போலீஸுக்குத் தகவல் கொடுத்துவிட்டு அசோக் வீட்டுக்குச் சென்றேன். அங்கு உள்ள சாமி படத்துக்குப் பக்கத்தில் அந்த வாக்குமூலம் இருந்தது. சசியும் அசோக்கும் அவ்வளவு நெருக்கம். சுருக்கமாகச் சொன்னா, சசிகுமாருக்கு எல்லாமே அசோக்தான். யாரேனும் பிரச்னை என்று சொன்னால், 'பிரச்னையைச் சந்திக்கிறவன்தான் மனுஷன். அதற்குத்தான் நாம் இருக்கோம்' என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் அசோக்குமார். எப்போதும் ஜாலியாகவும் எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக எதிர்த்து நிற்கக்கூடிய நபர். ஆனால், அவரையே இந்த நிலைமைக்குத் தள்ளிவிட்டார்கள் என்று நினைக்கும்போதுதான் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தச் சம்பவம் தெரிந்தவுடனே, அமீர், சேரன், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி என அனைவரும் வந்துவிட்டனர். கடந்த வருடம் சசிகுமாரின் மேனேஜர் உதயகுமார் இறந்தபோது, சசிகுமார் தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்த அசோக், 'இவன் குடும்பத்தைச் சேர்ந்தவங்ககூட இவ்வளவு வருத்தப்படுவாங்களானு தெரியலை. இவனை இப்படி அழவைக்க உதய்க்கு எப்படி மனசு வந்துச்சு' என சசி அழுவதைப் பார்த்துச் சொன்னார் அசோக். இன்று அசோக்குமாரே சசிக்குமாரை தன் இறப்பினால் ஆழ்ந்த சோகத்திலும் வருத்தத்திலும் தள்ளிவிட்டாரே!'' என்று உடையும் குரலில் பேசினார் அவர். அசோக் குமாரின் மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் மதுரை மாவட்டம் புதுதாமரைப்பட்டியில் இருக்கிறார்கள். அவர் எழுதிய வாக்குமூலத்தில் அடிப்படையில் அன்புச்செழியன்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக செக்‌ஷன் 306-ன் படி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. 

இதுபோன்ற சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று அமீர், விஷால் ஆகியோர் தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். ஆனால், உண்மையில், பணத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஒருங்கே கொண்டுள்ள இதுபோன்ற சமூகத்தைத் தாக்கும் சக்திகள் அடுத்த சில நாள்களிலேயே ஏன் சில மணி நேரங்களிலேயே காலரைத் தூக்கிவிட்டு காரில் பறப்பது சகஜம்தானே. ஒரு வேளை சட்டத்துக்கு முன் பாதிக்கப்பட்டவரின் சத்தம் கேட்காதோ? 

அடுத்த கட்டுரைக்கு