Published:Updated:

எம்.ஜி.ஆரின் கேமரா ஞானம் குறித்துத் தனிப் புத்தகமே எழுதலாம்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-23

எம்.ஜி.ஆரின் கேமரா ஞானம் குறித்துத் தனிப் புத்தகமே எழுதலாம்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-23
எம்.ஜி.ஆரின் கேமரா ஞானம் குறித்துத் தனிப் புத்தகமே எழுதலாம்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-23

எம்.ஜி.ஆரும் கேமராவும்

எம்.ஜி.ஆரின் வெற்றியில் சினிமா தொழில்நுட்பம் பற்றிய அவரது அறிவு முக்கியப் பங்கு வகித்தது. அவர் தன் படங்களில் கேமரா கோணம், உடை, ஒப்பனை, படத்தொகுப்பு, படம் வெளியிடும் நாள், வெளியிடும் திரையரங்கு, பட விநியோகம், ரசிகர் மன்ற செயல்பாடுகள் என அனைத்து விஷயங்களும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்படி கவனித்தார். 

எம்.ஜி.ஆர் திரையில் தன்னை அழகாகக் காட்ட வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். அதற்காக டிஃப்யூஸ் போன்ற சில விசேஷ தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தினார். வித விதமான தொப்பிகள் வைத்து நடிக்கும் எம்.ஜி.ஆர் ஒரு காட்சியில் கூட தன் முகத்தில் தொப்பியின் நிழல் விழாதபடி கவனமாக இருப்பார். லைட்டிங் சரியாக இருக்கும்படி அவர் கவனித்ததால் இன்றும் அவரது படங்களைச் சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் தெளிவாக உள்ளன. இவ்வாறு மற்ற பழைய படங்கள் இருப்பதில்லை அவை ஒரே இருட்டும் வெளிச்சமுமாக இருக்கிறதே தவிர நடிப்பவரின் முகபாவனை சரியாகத் தெரிவதில்லை. 

டிரான்சிஸ்டரை பிரித்து சேர்த்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் தொழில் நுட்ப அறிவு சினிமாவோடு மட்டும் நின்றுவிடவில்லை மற்ற விஷயங்களிலும் அவருக்கு இதே அறிவும் ஆர்வமும் இருந்தது. முன்னாள் சபாநாயகர் பி.ஹெச் பாண்டியன் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரை பற்றி பேசும்போது. அவர் ஒரு டிரான்சிஸ்டரை பிரித்து திரும்பவும் அசெம்பிள் செய்ததை நான் பார்த்தேன் என்றார். ஒரு கேமரா புதிதாக அறிமுகமானவுடன் எம்.ஜி.ஆர் அதை வாங்கி அது எப்படிச் செயல்படுகிறது அதன் விசேஷ அமைப்புகள் என்னென்ன என்பதை அவர் அறிந்துகொள்வார். பின்பு ஒரு புகைப்படக்காரரை அழைத்து அவரிடம் காண்பித்து மற்ற விஷயங்களைக் கேட்டறிவார். அவரிடம் இந்த இடத்தில் நின்று இந்தக் கோணத்தில் என்னைப் படம் எடு என்பார் அந்தப் படங்கள் அற்புதமாக வந்திருக்கும். 

கேமராக்காரர்கள் எழுதிய நூல்கள் 

புகைப்படக்காரர் எஸ்.எஸ் ராமகிருஷ்ணன் எம்.ஜி.ஆர் பற்றிய எழுதிய நூலில் எம்.ஜி.ஆரின் கேமரா அறிவு குறித்து விரிவாகத் தெரிவித்துள்ளார். சங்கர் ராவ் என்ற ஸ்டில் போட்டோகிராபரும் எம்.ஜி.ஆரின் குணம், மனம் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவரைப் பற்றி விரிவாகத் தெரிவித்துள்ளார்.

மூத்தவர் ஆர் என் நாகராஜ ராவ்

எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதும் அவரது அழைப்பைப் பெற்று தலைமைச் செயலகத்தில் வைத்து அவரை முதல் படம் எடுத்தவர் சீனியர் போட்டோகிராபர் ஆர்.என் நாகராஜ ராவ். இவர் நாடோடி மன்னன் காலம் முதல் எம்.ஜி.ஆரின் ஸ்டில் போட்டோகிராபராக இருந்து வந்தார். இவர் ஒரு பேட்டியில் ‘’ நான் எம்.ஜி.ஆருக்கு எந்த யோசனையும் சொன்னதில்லை. அவருக்கே போட்டோவுக்கு எந்த கலர் சரியாக இருக்கும் என்பது தெரியும். அவர் அதன்படி செய்வார். அவரை வைத்து போட்டோ எடுப்பதில் எனக்குச் சிரமமேயில்லை’’ என்று கூறியிருப்பது எம்.ஜி.ஆரின் கேமரா ஞானத்தைக் காட்டுகிறது. 

எம்.ஜி.ஆர் தன் படங்களில் அறிமுகமாகும் மணிமாலா, பாரதி போன்ற புதுமுகங்களை போட்டோ எடுத்து டெஸ்ட் பார்ப்பதற்காக ஆர். என் நாகராஜ ராவின் ஸ்டுடியோவுக்கு அழைத்து வருவார். அப்போது  டெஸ்ட் முடிய நான்கு மணி நேரமானாலும் எம்.ஜி.ஆர் பொறுமையாக வெளியே அமர்ந்திருப்பார். தன்னுடன் நடிக்கும் நடிகையரும் திரையில் சரியாகத் தெரிய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

எம்.ஜி.ஆரின் நினைவாற்றல்

வெற்றியாளருக்குரிய முக்கியத் தகுதிகளுள் ஒன்று நினைவாற்றல் ஆகும். எம்.ஜி.ஆரின் நினைவாற்றல் சிறப்பு குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். எம்.ஜி.ஆர் தன்னை எடுக்கும் படங்களையும் காட்சிகளையும் மறக்கவே மாட்டார். அவர் முதல்வராகி பத்து நாள்கள் கழித்து  ‘’1947இல் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி எடுத்த போட்டாவில் பத்து காப்பி எம்.ஜி.ஆர் வாங்கிவரச் சொன்னார்’’ என்று ஆர்.என் நாகராஜ ராவிடம் அவர் அனுப்பிவைத்த ஆள் ஒருவர் வந்து கேட்டார். இவருக்கு வியப்பாக இருந்தது. முப்பது வருடங்களுக்கு முன்பு எடுத்த படத்தை எம்.ஜி.ஆர் தன் நினைவில் வைத்திருந்து இப்போது கேட்டு அனுப்புகிறார்.

ஒரு முறை ஒரு படத்தின் எடிட்டிங்கின் போது ‘’நான் கையை மடக்கி குத்துவது போன்ற ஒரு காட்சி இருக்கும் அதைக் கொண்டு வா. இந்த இடத்தில் சேர்க்க வேண்டும்’’ என்றார். எடிட்டர் அப்படி ஒரு காட்சி எதுவும் ஃபிலிமில் இல்லையே என்றார். ‘’படத்தில் நடித்த எனக்குத் தெரியாதா, போய் நன்றாகத் தேடிப் பார்’’ என்று கேட்டு எம்.ஜி.ஆர். வாங்கினார். 

எம்.ஜி.ஆரின் முடிவே இறுதியானது

எல்லாப் படத்துக்கும் இயக்குநர் ஒளிப்பதிவாளர் என்று ஆட்கள் தனித்தனியாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் தன் படங்களின் ஒவ்வொரு பதிவையும் குறிப்பாகத் தன் காட்சிகளை தானே முடிவு செய்வார். கேமரா வழியாக தான் பார்த்து திருப்தியான பின்பு தனது காட்சிகளை எடுக்க அனுமதிப்பார். ஒரு முறை அவர் தனிப்பிறவி படப்பிடிப்பில் கேமரா கோணம் பார்த்துக்கொண்டிருந்த போது கேமராவுக்கு முன்னால் ஓடியபடி ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஜெயலலிதா விளையாட்டாக வசனத்தைச் சொல்லவும் எம்.ஜி.ஆருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் கோபத்தைப் பார்த்து செட் அமைதியாகிவிட்டது. ஓடிக்கொண்டிருந்த ஜெயலலிதா சட்டென்று திரும்பிப்பார்த்தார். இறுகிய முகத்துடன் இருந்த எம்.ஜி.ஆர் ‘’விளையாட்டு முடிந்துவிட்டதா வேலை பார்ப்போமா’’ என்றார். ஜெயலலிதாவுக்கு முகம் வாடிவிட்டது. சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் அவரை அழைத்து ‘’பாவம் நீ என்ன செய்வாய் கல்லூரியில் படிக்க வேண்டிய பெண் நீ. இப்போது இங்கு வந்து நடிக்கிறாய்’’ என்று கூறி தேற்றினார். அத்துடன் ‘’செய்யும் தொழிலை சிரத்தையுடன் செய்ய வேண்டும். வேலை செய்யுமிடத்தில் விளையாடக் கூடாது’’ என்று புத்திமதி கூறினார்.

லோ ஆங்கில்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் லோ ஆங்கிளை பயன்படுத்துவதை தவிர்ப்பார். ஆனால், ஸ்ரீதர் படத்தில் கேமரா கோணம் அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து ஒளிப்பதிவாளரிட்ம் அது குறித்து விசாரித்தார். அதனால் அவர் எம்.ஜி.ஆரிடம் ‘’நீங்கள் பாருங்கள் இக்காட்சி அருமையாக இருக்கும்’’ எனறு விளக்கிக் கூறினார். அவர் லோ ஆங்கிள் அமைப்பதில் கை தேர்ந்தவர் என்பதால் எம்.ஜி.ஆர் அவர் விளக்கத்தை ஒப்புக்கொண்டார். அந்தப் படம்தான் எம்.ஜி.ஆர் உரிமைக்குரல் படத்தில் ரேக்ளா வண்டியிலிருந்து குதிப்பது போன்ற படம். இந்த ஸ்டில் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடையே  மிகவும் புகழ் பெற்ற ஸ்டில் ஆகும். படத்தில் அக் காட்சியைப் பார்க்கும்போது  ரசிகர்களின் விசிலடித்து கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தனர்.

சென்னை ஸ்ரீதரின் கண்காட்சி 

எம்.ஜி.ஆர் வித விதமான கேமராக்களை வாங்கி அவற்றை கொண்டு படம் பிடிப்பதை ஸ்டில் போட்டோக்காரர்கள் அவ்வப்போது படம் எடுப்பது வழக்கம். அந்தப் படங்களைச் சேகரித்து சென்னை ஸ்ரீதர் ஒரு எம்.ஜி.ஆரும் கேமராவும் என்ற படக் கண்காட்சியை நடத்தினார். அந்தக் கண்காட்சியில் அந்தக் காலத்து கேமரா வரலாறும் இணைந்திருந்தது. ரகசிய போலீஸ் படத்தில் சிறிய அளவிலான ஒரு கேமரா கொண்டு எம்.ஜி.ஆர் படம் பிடிப்பார். அந்த ஸ்டில் படத்தின் போஸ்டரிலும் இடம்பெற்றது. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின் வந்த இதயக்கனி படத்தில் டப்பா கேமரா எனப்படும் பழைய கேமராவை வைத்து ராதா சலூஜாவை வித விதமாகப் படம் பிடிக்கும் காட்சியும் ‘’ஒன்றும் அறியாத பெண்ணோ, உண்மை மறைக்காத பெண்ணோ’’ என்ற பாட்டும் இடம்பெற்றது. 

தொண்டர் மத்தியிலும் கேமரா மீது கவனம்

தேர்தல் கூட்டங்களில் பல தொண்டர்கள் வந்து எம்.ஜி.ஆருடம் படம் எடுப்பர். அவர் முதல்வரான பின்பு சில வேளைகளில் தனது காரிலேயே புகைப்படக்காரர்களை அழைத்துப் போவதும் உண்டு. நல்ல படங்கள் எடுத்தால் அவர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டுவார். அவர் திமுகவில் இருந்தபோது தேர்தல் நிதிக்காக தொண்டர்கள் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் எனப் பணம் கொடுத்து எம்.ஜி.ஆரோடு படம் எடுக்கும் முறையும் இருந்தது, தொண்டர்கள் அதிகம் பேர் இருப்பதால் அப்போது கேமராக்காரர் அவசரமாகப் படம் எடுப்பார். ஆனால், அந்த அவசரத்திலும் எம்.ஜி.ஆர் கேமரா சரியாக இயக்கப்படுகிறதா என்பதை கவனிப்பார். ஒரு நாள் ஒருமுறை போட்டோ எடுத்த பிறகு இன்னொரு முறை எடு என்றார். போட்டோகிராபருக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் எடுக்கப் போனார் எதற்கும் ஒரு முறை கேமராவை சரி பார்த்துக்கொள்வோம் என்று சரிபார்த்தார். அதன் முன்பகுதியில் அப்பெர்ச்சர் மூடியிருந்தது. எம்.ஜி.ஆர் லென்ஸ் மூடியிருப்பதை கவனித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். இரண்டாவது எடுத்த படம்தான் சரியாக வந்திருந்தது.

படப்பிடிப்பின் போதும் அரசியல் கூட்டங்களிலும் எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் எம்.ஜி.ஆர் தான் இருக்கும் சுற்றுப்புறத்தின் மீது ஒரு கண் வைத்தபடி கவனமாக இருப்பார். இந்த alertness அவரது வெற்றி ரகசியங்களில் ஒன்றாகும்.

ஒருவருக்கே மூன்று கேமரா பரிசு

ஆர்.என் நாகராஜ ராவின் மருமகனான சங்கர் ராவுக்கு எம்.ஜி.ஆர் இரண்டு புதுவகையான கேமராக்களை வாங்கிக் கொடுத்தார். இவர் திறமையின் மீது எம்.ஜி.ஆருக்கு நம்பிக்கை இருந்ததால் இவர் எம்.ஜி.ஆரோடு பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.. இளைஞரான இவர் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த பாசமும் அக்கறையும் இருந்தது. ஒரு முறை இவர் சட்டை கிழிந்திருந்ததை பார்த்த எம்.ஜி.ஆர் இவருக்கே தெரியாமல் உடனே ஆறு செட் டிரஸ் எடுத்து பரிசளித்தார். சங்கர் தயங்கியதை பார்த்த எம்.ஜி.ஆர் ‘’நானும் உன் அண்ணன் தானே’’ என்று கூறி அவரை மறுக்காமல் பெற்றுக் கொள்ளும்படி செய்தார். எம்.ஜி.ஆர் மூன்றாவது முறை முதல்வரானதும் புதிதாக அறிமுகமான நவீன கேமரா பற்றி எம்.ஜி.ஆரிடம் சங்கர் தெரிவித்தார். அதன் விலையைக் கேட்ட எம்.ஜி.ஆர் அதனை சங்கர் வாங்குவதற்கு 15,000 ரூபாய் கொடுத்தார்.

ஹாங்காங்கில் கேமரா பரிசளித்த எம்.ஜி.ஆர்

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்குத் தன் குழுவினருடன் ஹாங்காங் போன எம்.ஜி.ஆர் அங்கு ஐந்து கேமராக்களை வாங்கினார். அசோகனுக்கும் சங்கர் ராவுக்கும் இயக்குநர் ப. நீலகண்டனுக்கும் ஆளுக்கொன்றாக வழங்கினார் மற்ற இரண்டையும் ‘’எனக்கு ஒன்று என் அண்ணனுக்கு ஒன்று’’ என்றார். அப்போது தன்னருகில் நின்றுகொண்டிருந்த ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தியைப் பார்த்ததும் ‘’இவரும் என் அண்ணன்தான்’’என்று அவருக்கு ஒரு கேமராவைக் கொடுத்துவிட்டார். அந்த இடத்தில் ராமமூர்த்தி இருக்கும்போது அவருக்குக் கொடுக்காமல் இருக்க எம்.ஜி.ஆருக்கு மனமில்லை. எனவே பெருந்தன்மையுடன்  எம்.ஜி.ஆர் கொடுத்துவிட்டார்.

வெளியூர் படப்பிடிப்பில் பல கேமரா

ஜெய்ப்பூரில் அடிமைப்பெண் படப்பிடிப்பு நடந்த போது ஆர்.எஸ் மனோகர் நிறைய ஒட்டகங்களோடு வந்து வேங்கையனைப் பிடிக்கும் பாலைவனக்காட்சியில் எம்.ஜி.ஆர் ஒரே சமயம் ஆறு கேமராவைப் பயன்படுத்தினார். ஒரு கேமரா அடுத்த கேமரா எடுக்கும் காட்சியில் தெரியாத வகையில் இக்காட்சியைப் படமாக்கினார். அதன் பிறகு பலர் இவ்வாறு பல கேமராக்களைப் பயன்படுத்தினாலும் அதற்கு முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர் தான்.

மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்துக்காக எடுக்கப்பட்ட போர்க்களக் காட்சியிலும் எம்.ஜி.ஆர் பல கேமராக்களைப் பயன்படுத்தினார். இரண்டு படங்களுக்கும் அவரே இயக்குநர். அவர் இயக்கிய படங்களில் ஒளிப்பதிவாளர் யாராக இருந்தாலும் கேமராவை இயக்குவதில் அவருக்குக் கூடுதல் சுதந்திரம் இருந்தது. 

அரச கட்டளை படத்தை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி இயக்கினார். அவர் பகல் முழுக்க  படம் எடுத்துவிட்டுப் போன பிறகு மாலையில் எம்.ஜி.ஆர் அனைத்தையும் மாற்றி திரும்ப எடுப்பார். அவருக்குத் திருப்தி ஏற்படும்வரை அண்ணன் எடுத்த காட்சியாகவே இருந்தாலும் மாற்றி எடுக்காமல் விடமாட்டார்.

செட் அமைப்பும் கேமராவும்

எம்.ஜி.ஆர் படத்துக்குக் கலை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றியவர் அங்கமுத்து. எம்.ஜி.ஆர் முதல்வரானதும் இவரை குடிசை மாற்று வாரியத்தின் தலைவர் ஆக்கி கௌரவித்தர். இவர் எம்.ஜி.ஆரின் கனவுக் காட்சிகள் மற்றும் தத்துவப் பாட்டு காட்சிகளுக்குப் பெரிய அளவில் செட் அமைப்பார். அதற்கு செட் வரைபடத்தை (ஸ்கெட்ச்) எம்.ஜி.ஆரிடம் காட்டி அவரது அனுமதியைப் பெறுவார். அப்போது தரைக்கான திட்டத்தைம்.(கிரவுண்ட் ப்ளான்) சேர்த்துக் கொண்டு போய் காட்ட வேண்டும். இந்த ஸ்கெட்சை பார்த்ததுமே அதைச் சரி செய்து கொடுக்கும் எம்.ஜி.ஆர் எங்கெங்கு கேமரா வைக்க வேண்டும் தான் எங்கு நிற்க வேண்டும் என்பதையும் அப்போதே  முடிவு செய்துவிடுவார். செட் தயாரானதும் ஒரு முறை வந்து பார்த்து உறுதி செய்வார். 
நினைத்ததை முடிப்பவன் படத்தில் ‘’கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’’பாட்டுக்கான செட் தயாரானதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்தார். பாட்டு வரிகள் மற்றும் தன் காஸ்டியூம் பற்றி கேட்டறிந்தார். சிவப்பு நிற பேண்ட் மாஸ்டர் உடை என்று தெரிந்ததும் செட்டின் சுவர்ப்பகுதியை நோக்கினார் அதுவும் சிவப்பு நிறத்தில் இருந்தது. உடையும் பின்னணி நிறமும் ஒன்றாக இருக்க வேண்டாம் என்பதால் தனது காஸ்டியூம் பளிச் என்று தெரியும் வகையில் சுவரின் நிறத்தை வேறு லைட் கலருக்கு மாற்றிவிடும்படி கூறினார். இப்போது அந்தப் பாட்டில் சுவரின் வெளிறிய நிறம் நீல நிறமாக இருக்கும். 

எம்.ஜி.ஆர் பெரிய செட்கள் அமைக்கும்போது அதன் அழகு முழுமையாகத் தெரியும்படி ஒளிப்பதிவாளரிடம் லாங் ஷாட் வைக்கும்படி நினைவுறுத்துவார். லாங் ஷாட்டில் செட்டின் அழகை காணும் ரசிகர்கள் கலை இயக்குநரின் திறமையையும் கலைஉணர்வையும் ரசித்துப் பாராட்டுவர். அவருக்கும் தன் படம் மூலமாக திரையுலகில் உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வார். 

மற்றவரின் திறமையை மதிக்கும் எம்.ஜி.ஆர்

வேதாகமத்தில் தேவனுக்குரியதை தேவனுக்கும் ராயருக்குரியதை ராயருக்கும் கொடுங்கள் என்று கூறியதை போல எம்.ஜி.ஆர் ஒளிப்பதிவாளருக்கு உரிய அங்கீகாரத்தை அவருக்கும் கலை இயக்குநருக்குரிய அங்கீகாரத்தை இவருக்கும் அளிக்க தயங்கியதே இல்லை. எம்.ஜி.ஆர் தானும் புகழ் பெற வேண்டும் அதே வேளையில் தன்னுடன் இருக்கும் தன் தொழில்நுட்பக் கலைஞரும் புகழ் பெற வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்பட்டார். அவர்களின் உழைப்பையும் திறமையையும் எம்.ஜி.ஆர் ஒருபோதும் இருட்டடிப்பு செய்ததில்லை. அவர் படத்தில் பணமும் அதிகமாகக் கிடைக்கும் புகழும் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் அவருடன் பணியாற்ற பலரும் ஆர்வமாக முன்வந்தனர். (எம்.ஜி.ஆரின் கேமரா ஞானம் குறித்து தனிப் புத்தகமே எழுதலாம்)