Published:Updated:

’பாட்ஷா’வில் மம்மூட்டி, அஜித் ஆட்டோகிராப், இயக்குநர் ஷங்கரின் சேட்டை! - சரண்ராஜ் நாஸ்டால்ஜி நினைவுகள் #VikatanExclusive

’பாட்ஷா’வில் மம்மூட்டி, அஜித் ஆட்டோகிராப், இயக்குநர் ஷங்கரின் சேட்டை! - சரண்ராஜ் நாஸ்டால்ஜி நினைவுகள் #VikatanExclusive
’பாட்ஷா’வில் மம்மூட்டி, அஜித் ஆட்டோகிராப், இயக்குநர் ஷங்கரின் சேட்டை! - சரண்ராஜ் நாஸ்டால்ஜி நினைவுகள் #VikatanExclusive

''என் உண்மையான பெயரைச் சொன்னாலே எல்லோரும் சிரிப்பார்கள். சினிமாவில் நான் காட்டிய வில்லத்தனத்துக்கும் என் உண்மையான பெயருக்கும் சம்பந்தமே இருக்காது. அதனால் என் முதல் படத்திலேயே பிரமானந்தா என்ற பெயரை சரண்ராஜ் என்று மாற்றி விட்டேன்’’ என்று பேச ஆரம்பிக்கிறார் 'பணக்காரன்', 'தர்மதுரை', 'வேடன்', 'பாட்ஷா' உள்ளிட்ட படங்களில் நடித்த 'சரண்ராஜ்'. 

சினிமாவில் பார்த்தது போல் ரொம்ப வில்லத்தனம் செய்யாமல் ரியல் லைஃப் ஹீரோவாக நம்மை வரவேற்றார். தமிழில் 'வேல்' படத்துக்குப் பிறகு எங்கே சார் ஆளையே காணோம் என்றால், ’’கொஞ்சம் பெர்சனல் வேலைகளில் பிஸியாகி விட்டேன். முக்கியமாக என் மூத்த பையன் தேஜ் சரண் 'லாலி' என்கிற படம் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். அவருக்காக இந்தப் படத்தின் கதையை நான்தான் செலக்ட் செய்து கொடுத்தேன். அதனால் கதை விவாதம் முதல் படம் ரிலீஸ் வரை வேலைகள் அதிகமாக இருந்தால் எனக்கான படங்களைத் தேர்வு செய்யவில்லை. 'லாலி' வித்தியாசமான ஒரு கதை. கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் கேரக்டரில் தேஜ் நடித்திருக்கிறார். அம்மா, பையனுக்கான கதைதான் 'லாலி'.  கண்டிப்பாக 'லாலி' படத்தை எல்லோரும் திரையில் பார்க்க வேண்டும்’’ என்றவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். 

எதிர்காலத்தில் பையனுடன் சேர்ந்து நடிப்பீர்களா?

’’கண்டிப்பாக நடிப்பேன். பட், அதற்கு ஏற்ற மாதிரி ஸ்க்ரிப்ட் வேணும். சும்மா அப்பா, பையன் ஸ்க்ரிப்ட் மாதிரி எல்லாம்  இருந்தால் நடிக்க மாட்டேன். வித்தியாசமான கதையாக இருந்தால் பண்ணுவேன். தேஜ் சினிமாவுக்கு வரவேண்டுமென்று அவன் ஸ்கூல் படிக்கும் போதே ஆசைப்பட்டேன். அதை அவன்கிட்ட சொன்னா, ‘’எப்படிப்பா உங்ககூட சேர்ந்து கேமரா முன்னால் நடிக்க முடியும்’’னு சொல்வான். அதற்கு,''டேய் நான் இல்லைனா வேற யாராவது அந்த இடத்தில் இருப்பாங்க. அவரை நான் என்று  நினைச்சிக்கோ, என்னை மறந்துவிடு. ஒரு கேரக்டருக்குள் போயிட்டால் கேரக்டராகதான் வாழணும்''னு சொல்வேன். இப்போ அவன் என்கூட மட்டுமில்லை யாராக இருந்தாலும் நடிக்க தயார்.’’

ரஜினியுடன் பைட் சீன்ஸ் எப்படி இருக்கும்?

’’ரஜினி மீது நிறைய மரியாதை இருக்கு. அவருடைய நிறையப் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். அவருடன் 'பணக்காரன்' படத்தில் நடிக்கும் போது என்னை கட்டிபிடித்து ஜோக் அடிப்பார். நல்ல நட்பு எப்போதும் ரஜினியுடன் இருக்கும். பைட்டுக்கு முன்னாடி நிறைய ஒத்திகை பார்ப்போம். அவர் பைட் சீனைக் கூட ஸ்டைலாகத்தான் பண்ணுவார். என்னுடன் பைட் பண்ணுவது ரஜினிக்குப் பிடிக்கும். அதை நிறைய இடத்தில் சொல்லியிருக்கிறார். நானும் ரஜினியும் பைட் பண்ணுற சீன் உண்மையாகவே பைட் பண்ணுற மாதிரி இருக்கும். ஆனால், ஒரு சின்ன அடிகூட எங்கள் இரண்டு பேர் மேலும் படாது. அந்த அளவுக்கு டைமிங் இருக்கும். 'பணக்காரன்' படத்தில் ரஜினியைப் புடைவையில் பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டேன். அவர் உட்கார்ந்து இருக்கும் போது அவருக்குப் பின்னாடி போய், 'அண்ணா, உங்களை அப்படியே தூக்கிட்டு போகணும் போல இருக்கு’னு சொன்னேன். 'அடி படவா ராஸ்கல்'னு ஓடவிட்டு அடித்தார். 

பாட்ஷா படத்துக்கான வாய்ப்பு உங்களுக்கு எப்படி வந்தது?

’’பாட்ஷா படத்தில் எனக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது ரஜினி சார்தான். 'பாட்ஷா' படத்தில் என் கேரக்டருக்கு முதலில் மம்மூட்டி சாரை பண்ண வைக்கலாம்னுதான் இருந்தார்களாம். பட், அதற்கு முன்னாடியே இரண்டு பேரும் 'தளபதி' படத்தில் நடித்துவிட்டதால், ரஜினி சார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம், '' இல்லை, இல்லை. சரண்ராஜ், அன்வர் பாட்ஷா கேரக்டர் பண்ணுனா நல்லாயிருக்கும்''னு சொல்லியிருக்கார். அந்த நேரத்தில் என்னைக் கூப்பிட்டு தாடி எல்லாம் வைத்து டெஸ்ட் எடுத்தார்கள். அப்புறம்தான் மேனேஜர் கூப்பிட்டு என்னை 'பாட்ஷா' படத்துக்காக புக் பண்ணினார். 100 சதவீதம் அந்தப் படத்தில் நடிக்க முதல் காரணம் ரஜினி சார் மற்றும் டைரக்டர்தான். அந்தப் படத்தில் நான் சுபாஷ் சந்திர போஸ் மாதிரி. ரஜினிகாந்தி மாதிரி. நானும் ரஜினியும் டேக் போவதற்கு முன்னாடி எங்க இரண்டு பேர் டயலாக்ஸையும் பேசி ப்ராக்டிஸ் பண்ணுவோம். அப்போது நாங்க ரெண்டு பேரும் டயலாக் பேப்பரில் இல்லாத வார்த்தைகளையும் பேசுவோம். கேமரா முன்னால் போனபிறகு ஆன் தி ஸ்பாட் டயலாக்ஸ் நிறையப் பேசினோம்.’’

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பற்றி சொல்லுங்க? 

‘’சுரேஷ் கிருஷ்ணா டைரக்‌ஷனில் நிறையப் படங்கள் பண்ணியிருக்கிறேன். நல்ல கேரக்டராக எனக்குக் கொடுப்பார். அவர் இந்தி நல்லா பேசுவார். ஒரு நாள் நைட் எனக்கு போன் பண்ணினார். ''எங்க இருக்கீங்க பையா''னு கேட்டார். ’’சார் வீட்டில்தான் இருக்கேன்''னு சொன்னேன். கொஞ்சம் மீட் பண்ணணும்னு சொல்லி காலையில் வரச் சொன்னார். போய் பார்த்தால் சரத்குமார் அங்கு இருந்தார். அப்போது சரத்திடம் சொன்னார்.'' பாருங்க வேடன் வரான்''னு. 'வேடம்' படத்தில் என் காஸ்ட்டியூம், கேரக்டர் எல்லாம் மாஸாக செய்திருப்பார். சரத் டைரக்டரிடம் கேட்பார். 'படத்தில் யார் ஹீரோ, நானா இல்லை சரண்ராஜா''னு.என் வாழ்க்கையில் மறக்க முடியாத டைரக்டர் அவர்.’’

பாட்ஷா 2 சாத்தியமா?

’’பாட்ஷா 2 எடுக்க முடியாது. ஏன்னா, பத்து பாட்ஷாவில் வர வேண்டிய படம் ஒரே பாட்ஷாவில் வந்துருச்சு. இனிமேல் நீங்க என்ன எடுத்தாலும் ஆடியன்ஸ் பார்க்க மாட்டார்கள். அப்போது ரஜினி சாரும் பத்து படத்தில் என்ன நடிக்கணுமோ அதே ஒரே படத்தில் நடித்துவிட்டார். அவர் மட்டுமில்லை. ரகுவரன், விஜயகுமார், நான் எல்லோரும். 'பாட்ஷா' படத்துக்குச் செய்து வைத்த பொம்மைகள்தான் நாங்க எல்லாம். திரும்பவும் 'பாட்ஷா' படம் எடுக்க முடியாது. ரஜினி தவிர வேறு யாரும் நடித்திருந்தாலும் 'பாட்ஷா' படம் ஒரு ஷோகூட ஓடாது. இந்தப் படத்தில் வந்த ஒரு சீன் எல்லா மொழி படத்திலும் காப்பி ஆச்சு. தங்கச்சி அழும் போது ரஜினி போய் பேசுற அந்த சீன். இப்போ வரைக்கும் அந்த சீன் மாஸ் ஹிட்.’’

ரஜினி,கமல் அரசியல் பயணம் பற்றி?

’’இதைப் பற்றி பேச எனக்குத் தகுதி கிடையாது. ரஜினி, கமல் ரொம்ப வருஷம் தமிழ் மக்களுக்காகப் படம் பண்ணி இருக்காங்க. நல்ல படத்தை கொடுத்து இருக்காங்க. மக்கள் மனதில் கடவுள் மாதிரி இருக்காங்க. அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் தமிழ் மக்கள் வரவேற்பார்கள். வந்தாலும் தமிழ் நாட்டு மக்களையும் நல்லா பார்த்துக் கொள்வார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கு.’’ 

'லாலி' படத்தின் ஆடியோ சி.டியை ரஜினியிடம் கொடுத்தீர்களா?

’’என் பையன் தேஜூக்கு ரஜினி என்றால் பிடிக்கும். இத்தனை வருடத்தில் என்னிடம் கேட்ட ஒரு விஷயம் 'ரஜினி சாரை பார்க்க வேண்டும்' என்பது. நான் சொன்னேன், ''டேய் இதுவரைக்கும் நான் ரஜினி, கமல் என யார் வீட்டுக்கும் போனதில்லை. தேவையில்லாமல் தொந்தரவு பண்ணியதில்லை'னு. பட், பையன் முதல் முறையாகக் கேட்கிறான் என்பதால், ரஜினி சாரை போய் மகனுடன் பார்த்தேன். அப்போதுதான் ரஜினி சார் வீட்டுக்கே முதன்முறையாகப் போனேன். பையனை அறிமுகப்படுத்தினேன். 'லாலி' படத்தின் கதையைக் கேட்டார். ''என்ன டா பையனின் முதல் படமே கணமான கதையாய் எடுத்து இருக்கீயே''னு சொன்னார். பையனுக்கு அறிவுரை சொன்னார். 'என்ன உதவி வேண்டுமென்றாலும் வா டா'' னு சொன்னார்.’’

இயக்குநர் ஷங்கரின் முதல் படத்தில் நடித்த அனுபவம்?

’’ஷங்கர், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராய் இருந்தார். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் பத்துப் படங்களில் நான் நடித்திருந்தேன். ஷங்கர் ஒரு குரங்கு மாதிரி. அதாவது வாலு கொஞ்சம் அதிகம். எஸ்.ஏ.சி சார் சீன்ஸ் எல்லாம் சீரியஸாக எடுத்திருப்பார். அப்போது நானும் ரொம்ப சீரியஸாகக் கவனித்துக்கொண்டிருப்பேன். ஷங்கர் அப்போது பக்கத்தில் காமெடியாக ஏதாவது செய்துவிட்டுப் போயிருவார். அப்போது ஷங்கரிடம் சொல்வேன். ''டேய் ஷங்கர் நீ டைரக்டரானால் அந்தப் படத்துக்குச் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன்''னு. அதற்குப் பிறகு 'ஜென்டில்மேன்' படம் எடுக்கப் போனார். அப்போது எனக்கு போன் பண்ணி ’’உங்களை மீட் பண்ணணும் சார்''னு சொன்னார். வந்து பார்த்தார். ’’நான் ஒரு படம் பண்ணுறேன் நீங்க அதில் நடிக்கணும். படத்துக்காக மொட்டை அடிக்கணும்''னு சொன்னார்.  நான், 'மொட்டை எல்லாம் அடிக்க மாட்டேனு'' சொல்லிட்டேன்.

அப்போது படத்தின் முழுகதையைச் சொன்னார். 'ஓகே, ஷங்கர் மொட்டை அடிக்கிறேன்’னு சொல்லிட்டேன். 'ஜென்டில் மேன் ' படத்தில் நல்ல பெயர். அதற்கு அப்புறம் ஷங்கர் ஐந்து ஆறு படம் பண்ணிட்டார். அப்போது எல்லோரும் என்னிடம் கேட்டார்கள், '' ஏன், ஷங்கர் அடுத்து உங்களைப் படங்களில் நடிக்க வைக்கவில்லை'' என்று. ஒரு நாள் ஷங்கர் வீட்டுப் பக்கம் போகும் போது, ’ஷங்கர் இந்த வீட்டில்தான் இருக்கார்’னு ஷங்கர் வீட்டைக் காட்டினார்கள். பார்த்து ரொம்ப நாள் ஆச்சேனு பார்க்கப் போனேன். வீட்டில் ஷங்கர் மனைவி இருந்தார். அவர் இல்லை. அவருடைய மனைவி உபசரித்து நல்லா பேசுனாங்க. அப்போது ஷங்கருக்கு போன் போட்டுக் கொடுத்தாங்க. ஷங்கர்," எப்படி சார் இருக்கீங்கனு'' கேட்டார். 'நல்லா இருக்கேன். ஷங்கர், இப்போ ப்ரீயா ஒரு இரண்டு நிமிஷம் பேசலாமா'னு கேட்டேன். பேசுங்க சார்னு சொன்னார். ''ஷங்கர், கோலிவுட்ல எல்லோரும் பேசிக்கிறாங்க, 'ஜென்டில்மேன்' படத்துக்குப் பிறகு ஷங்கர் படத்தில் சரண் நடிக்கவே இல்லை''னு. ஷங்கர் உடனே, ''சார் 'ஜென்டில்மேன்' படத்துக்கு அப்புறம் என்னுடைய எல்லாப் படங்களையும் எடுத்துப் பாருங்க. இந்த கேரக்டர் நான் நடித்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்னு நீங்க நினைத்தால் சொல்லுங்க. அந்தப் படத்தை நான் ரீ ஷூட்டே பண்ணுறேன். உங்க கெப்பாசிட்டி எனக்குத் தெரியும் சார். 'ஜென்டில்மேன்' படத்தில் அவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்திருக்கேன். உங்களைக் கூப்பிட்டால் பெரிய கேரக்டருக்குதான் கூப்பிடுவேன்''னு சொன்னார். பெரிய வார்த்தை இது. ஷங்கர் பெரிய உழைப்பாளி. 

அஜித்துக்கு வில்லனாக நடித்திருக்கீங்க, அவர் என்ன சொன்னார்?

’’அஜித்திடம் ரொம்ப பிடித்த விஷயம், அவர் ரொம்ப அமைதியான மனிதர். யாரை பற்றியும் அதிகமாகப் பேசமாட்டார். 'ஜீ' படத்தின் ஷூட்டிங்கின் போது என் பசங்க மூன்று பேரும் அஜித் சாரின் ஆட்டோகிராப் கேட்டார்கள். அஜித்திடம் சொன்னேன். ஒரு நோட் முழுக்க போட்டு கொடுத்தார். ஒரு நாள் இரவு என் பையன் தேஜூம், நானும் ஐஸ்கீரீம் சாப்பிட அடையார் வரைக்கும் போனோம். அங்கே அஜித் சார் உட்கார்ந்து இருந்தார். அப்போது என்னை அஜித் பார்த்துவிட்டு அவரே எழுந்து வந்து கட்டிப்பிடித்தார். '' வாங்க சார் சாப்பிடலாம்'னு' சொன்னார். பையனைப் பார்த்து நன்றாகப் பேசினார். நல்ல மனிதர் அஜித்.

பிடித்த வில்லன் யார்?

’’கிஷோர் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் 'தனி ஒருவன்' படத்தில் அர்விந்த் சாமி பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அவருடைய 'பம்பாய்' படம் பார்த்து அசந்திருக்கிறேன்.’’

சரண்ராஜின் செகண்ட் இன்னிங்ஸை எப்போது எதிர்பார்க்கலாம்?

’’கூடிய சீக்கிரமே வரேன். தேனாண்டாள் பிலிம்ஸ் படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறேன். இதுதவிர ஜெயம்ரவி படத்திலும் கமிட் ஆகியிருக்கிறேன். இதற்கு எல்லாத்துக்குமேல் டைரக்‌ஷன் வேறு பண்ணப் போறேன். ரொம்ப எனர்ஜியா திரும்பி வருவேன்’’ என்று  சொல்லி தம்ஸ்அப் காட்டுகிறார் நடிகர் சரண்ராஜ்.