Published:Updated:

''பரவாயில்லையே... எனக்கு பேனரெல்லாம் வச்சிருக்காங்க..!’’ - ‘ரிச்சி’ பட விழாவில் நிவின்பாலியின் ப்ளாஷ்பேக்

''பரவாயில்லையே... எனக்கு பேனரெல்லாம் வச்சிருக்காங்க..!’’ - ‘ரிச்சி’ பட விழாவில் நிவின்பாலியின் ப்ளாஷ்பேக்
''பரவாயில்லையே... எனக்கு பேனரெல்லாம் வச்சிருக்காங்க..!’’ - ‘ரிச்சி’ பட விழாவில் நிவின்பாலியின் ப்ளாஷ்பேக்

'நேரம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் நிவின் பாலி. மலையாள நடிகரான இவருக்குத் தமிழ் நாட்டில் ரசிகர்கள் அதிகம். இவர் நடித்த 'பிரேமம் ' படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இவரை அனைவரும் ரசிக்கும் படி செய்தது. இந்நிலையில் தற்போது நிவின், இயக்குநர் கெளதம் ராமசந்திரன் எடுத்திருக்கும் 'ரிச்சி' படத்தில் நடித்திருக்கிறார். நிவினின் நேரடி தமிழ்ப் படமான இதன் ஆடியோ ரிலீஸ் இன்று நடைபெற்றது. 

''ரிச்சி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் படம். ஏன்னா, தமிழில் இந்தப் படத்துக்காகத்தான் முதலில் ஆடிஸனில் கலந்து கொண்டேன்.  இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கேரக்டர். படம் முடிந்து ஒரு வருடத்திற்கு அப்புறம் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. கெளதம் சாருக்கு என் நன்றி. நிவின் பாலிக்கு ரொம்ப நன்றி'' என ஒரு சில வார்த்தைகள் சொல்லி விடைப்பெற்றார் ஷர்த்தா ஶ்ரீநாத். 

அடுத்தாக இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கும் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பேசும் போது,'' ரிச்சி படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த கெளதம் சாருக்கு நன்றி. இளைய பட்டாளம் கூட வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்கள் எல்லோரையும் விடவும் நான்தான் மிகவும் இளையவன். என்னுடைய ஃபேவரைட் ஹீரோ நிவின் பாலிதான். அவருடைய ஆக்டிங் எனக்குப் பிடிக்கும். 

இந்தப் படத்துகான வாய்ப்பு என்னை எப்படித் தேடி வந்தது என்றால், 'பிசாசு' படத்தின் கன்னட ரீமேக்கில் ராதாரவி கேரக்டர் நான்தான் பண்ணினேன். அதை பார்த்துவிட்டுதான் இந்த வாய்ப்பை எனக்கு இயக்குநர் கொடுத்தார். நிறைய பாதைகளைக் கடந்து வந்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிப்பதற்காக விஷாலிடம் முதலில் அனுமதி கேட்டப்போது,''ஓகே, டாடி நடிங்க. எதுவும் பிரச்னையில்லை'' என்று சொல்லிவிட்டான். நிறைய இளைஞர்களிடம் வேலை பார்ப்பது பிடித்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் சாதிக்கத் துடிக்கிறார்கள். மறைந்த அசோக் குமாருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்துக்கு சூப்பரான இசையை அஜனீஸ் லோக்நாத் கொடுத்திருக்கிறார்'' என்று சொல்லி ஒரு சில ஹெல்த் டிப்ஸ் கொடுத்து விடைபெற்றார். 

அடுத்தாக லட்சுமி குறும்படத்தின் மூலம் ஃபேமஸாகிய லட்சுமி பிரியா பேசும்போது, ''இங்கே இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஒரு முக்கியமான ரோல் டைரக்டர் எனக்குக் கொடுத்திருக்கிறார். எனக்காகவே ஒரு பாடல் இருக்கு. ரொம்ப என்ஜாய் பண்ணி என்னோட ரோலை பண்ணினேன். அழகான ரோல் கொடுத்திருக்காங்க. கடைசி மூணு வாரமா மீடியா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்கீங்க. அந்த சப்போர்ட்டை மீடியா எனக்குத் தொடர்ந்து கொடுக்கணும்'' என்றார்.

பாடலாசிரியர் வேல் முருகன் பேசும்போது, '' ரிச்சி படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். நான் எழுதிய பாடல்களை நா.முத்துக்குமார் அண்ணாவுக்கும், கந்துவட்டிக் கொடுமையால் இறந்து போன இசக்கிமுத்து குடும்பத்துக்கும், இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராய் வேலை பார்த்த கணேஷ் குமார் தந்தை இறந்துவிட்டார் அவருக்கும் சமர்ப்பிக்கிறேன். 

'நேரம்' படத்தில் நிவின் பாலி அண்ணாவுக்கு 'காதல் என்னுள்ளே' பாடல் எழுதியிருந்தேன். அப்போது அந்தப் படம் சென்னையில் ரிலீஸ் ஆன போது நானும், நிவின் அண்ணாவும் வடபழனியில் ஒரு டீ கடையில்  காலையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது நிவின் பாலிக்கு அங்கே சாலையோரத்தில் ஒரு பேனர் இருந்தது. அப்போது அதைப் பார்த்துவிட்டு நிவின் என்னிடம் கேட்டார், ''பரவாயில்லையே... எனக்கு பேனரெல்லாம் வெச்சிருக்காங்க'' என்று. அப்போது நான், ''இதை விட பெரிய கட் அவுட் உங்களுக்குச் சென்னையில் வைக்கக்கூடிய காலம் வரும்''னு சொன்னேன். சொல்லி மூன்று வருஷம் கூட ஆகவில்லை. இப்போது பெரிய நடிகராய் இருக்கிறார். இந்தியாவின் முகமாய் நிவின் வருவதற்கு வாழ்த்துகள்'' என்றார். 

படத்தின் இசையமைப்பாளர் அஜனீஸ் லோகநாத், ''ரிச்சி மூன்று வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு திருப்பம் தந்த படம். இந்த வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி. டைரக்டர் கெளதம் என் நண்பர். கெளதம் என்னிடம் ''இப்படி ஒரு படம் பண்ணப் போறேன். என் சைடிலிருந்து உங்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும்''னு சொன்னார். நிவினின் நேரடித் தமிழ் படத்துக்கு மியூசிக் பண்ணுவது மகிழ்ச்சியாக இருக்கு’' என்றார். 

படத்தின் நாயகன் நிவின் பாலி பேசும் போது, ''இது ஒரு ஸ்பெஷலான டே. சினிமாவுக்கு வந்த நாளிலிருந்து தமிழில் ஒரு படம் பண்ணணும்னு ஒரு ஆசை இருந்தது. 'நேரம்' படம் இருமொழிகளில் ரிலீஸான படம். நேரடியாகத் தமிழில் ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். இந்தப் படத்தின் டீசருக்கு சப்போர்ட் பண்ணிய எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நேத்துதான் 'ரிச்சி' முழுப்படத்தை பார்த்தேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்கிறார் இசையமைப்பாளர் அஜனீஸ். ரொம்ப நல்ல ஆக்டர், ஆக்டர்ஸ் உடன் இந்தப் படத்தில் வேலை செய்திருக்கிறேன். எல்லோருடனும் நல்ல நட்பாகிவிட்டேன். ரொம்ப சந்தோஷம்’’ என்று முழுவதும் தமிழில் பேசி விடைபெற்றார் நிவின். அவரைத் தொடர்ந்து பேசவந்தார் படத்தின் இயக்குநர் கெளதம்.

''ரிச்சி படத்தைப் பற்றி ஆடியோ லான்ஜில் சொல்வதற்கு எதுவும் இல்லை. நிறைய உழைப்பு போட்டு இந்தப் படம் எடுத்திருக்கோம். இரண்டு வருஷம் ஆகப்போகுது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி. நிவினும் நானும் நாலு வருஷமாய் ஃப்ரெண்ட்ஸ். ஒரு படம் பண்ணணும்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். 'ரிச்சி'படம் பண்ணிட்டோம். 

படம் டிசம்பர் 8 ரிலீஸ். இது ஒரு வித்தியாசமான படம் அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். ஆனால், நல்லா எடுத்திருக்கோம். நேத்துதான் ஷோ பார்த்தோம். நீங்கப் பார்த்துவிட்டு  எப்படி இருக்குனு சொல்லுங்க'' என்று விடைப் பெற்றார் இயக்குநர் கெளதம்.