Published:Updated:

சுறா, சிட்டிசன், அலெக்ஸ் பாண்டியன் - மீண்டும் நடக்க கூடாத 'சம்பவங்கள்'!

சுறா, சிட்டிசன், அலெக்ஸ் பாண்டியன் - மீண்டும் நடக்க கூடாத 'சம்பவங்கள்'!
சுறா, சிட்டிசன், அலெக்ஸ் பாண்டியன் - மீண்டும் நடக்க கூடாத 'சம்பவங்கள்'!

சில இயக்குநர்கள் முன்னணி நடிகர்களோடு இரண்டாவது முறை இணையும்போது 'வாவ், செம்ம! சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் பாரு' என ஆழ்மனதின் பட்சி ஹைடெசிபலில் கத்தும். அதே சமயம், சில இயக்குநர்கள் இரண்டாவது முறையாக முன்னணி நடிகர்களோடு இணைந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே திகில் கிளப்பும். அப்படி அல்லு சில்லு செதறவிடும் சில மரண காம்போக்கள் பற்றிய ரீவைண்ட் இது!

விஜய் - எஸ்.பி.ராஜ்குமார்:

இளைய தளபதி 'சுறா' என்ற பெயரில் டால்பின் அவதாரம் எடுத்து என்ட்ரியான படம். இன்று வரை விஜயை கலாய்க்க நினைப்பவர்கள் மீம் டெம்ப்ளேட்டுக்காக சென்று நிற்கும் முதல் இடம் இந்தப் படம்தான். ஹீரோயின் எப்போது காதலில் விழுகிறார்? ஹீரோ எப்போது வில்லனோடு மோதலில் விழுகிறார் என எந்த டீட்டெயிலும் இருக்காது. ஆனால் படம் பாட்டுக்கு ஒரு பக்கம் ஓடிக்கொண்டே இருக்கும். சோதனையாக விஜயின் 50-வது படம் என்ற பில்டப் வேறு. இதே ஜோடி அடுத்த முறை இணைந்தால்...? கொஞ்சகாலமாக நல்ல ட்ராக் ரெக்கார்டில் இருக்கும் விஜய்க்கு ரிவர்ஸ் கியர்தான்.

அஜித் - சரவண சுப்பையா:

'இது கதையல்ல, கறுப்பு சரித்திரம்' - 'சிட்டிசன்' படத்தில் வரும் இந்த வசனம் ரிலீஸுக்குப் பின்னான ரிசல்ட்டுக்கும் பொருந்தும். தசாவதாரத்துக்கு முன்பாகவே தல பல வேடங்கள் பூண்டிருப்பார். அதுவும் 'நிழல்கள்' ரவியைப் போலவே அஜித் வேஷம் கட்டும் இடம் - வாவ்டா! அஜித் வட இந்தியாவிலிருந்து வந்த பாடகர்போல கொஞ்சு தமிழில் வசனங்கள் பேசுவது இந்தப் படத்தின் ஸ்பெஷல். கூடவே 'கிருட்டு கிருட்டு; என காற்றில் பறக்கும் சண்டைக்காட்சிகளும். அதற்குப் பின் இயக்குநரும் முழுநேர நடிகரானதில் இருக்கிறது சிட்டிசனின் வெற்றி. இப்போதைக்கு அஜித்தை சிவா விடுவதற்கான அறிகுறி இல்லையென்பதால் ஹைப்போதெட்டிக்கல் ஐடியாதான் இது.

கார்த்தி - சுராஜ்:

'நான் மகான் அல்ல', 'சிறுத்தை' என ஹிட்டடித்துக்கொண்டிருந்த கார்த்திக்கு அலெக்ஸ் பாண்டியனில் ஆரம்பித்தது சறுக்கல். ஒரு ஹீரோயின், இரண்டு காமெடியன்கள், மூன்று துணை ஹீரோயின்கள், நான்கு வில்லன்கள் என கூட்டத்துக்கு பஞ்சமே கிடையாது. கதைதான் கூட்டத்துக்கு நடுவே காணாமல் போய்விட்டது. அருவாளை வைத்து டாடா சுமோவை சாய்ப்பது, காரை பனைமர உச்சியில் பார்க் செய்வது என ஸ்டன்ட் காட்சிகளுக்காக 'பெரிதாக' பேசப்பட்ட படம். கார்த்தியே இப்போது, 'நாமளா இதுல நடிச்சோம்?' என நினைத்துப் பார்த்து சிரித்துக்கொள்வார். 

விஜய் சேதுபதி - ரத்னசிவா:

2016 முழுக்கவே விஜய் சேதுபதியின் ஆண்டு. படத்திற்கு ஒரு வேஷம் என வெரைட்டி விருந்து வைத்துக்கொண்டிருந்தார். 'அதெப்படி எல்லாம் சரியா இருக்கலாம்?' என அவரை தெருவுக்கு இழுத்துவிட்ட காவியம். இரண்டு ரவுடிகள், அவர்களுக்கு நடுவே ஹீரோ என்ற ப்ளாக் அண்ட் ஒயிட் கால கதையின் ஒரே ஆறுதல் மாலா டீச்சர் மட்டும்தான். வில்லனின் நூற்றுக்கணக்கான அடியாட்களை நடக்க வைத்தே பாத யாத்திரை செல்லும் காட்சி எல்லாம் தமிழ்சினிமா பார்த்திராதது. ஆனால், 2019-லிம் விஜய்சேதுபதி கால்ஷீட் நிறைந்துகிடப்பதால் மீண்டும் இந்த ஜோடி இணைய வாய்ப்பில்லை.

சிம்பு - ஆதிக் ரவிசந்திரன்:

படத்தில் இருந்து மீம் டெம்ப்ளேட்கள் எடுக்கலாம். படத்தையே மீம் டெம்ப்ளேட் போல எடுத்தால்...? அதுதான் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. பேரு பெத்தப் பேருதான். படம்தான் பப்படமாகிவிட்டது. சிம்புவை விட அவரின் ரசிகர்கள்தான் பாவம். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை சிலாகித்தவர்கள் எல்லாம் 'ஏஏஏ'விற்கும் முட்டுக் கொடுக்க நேர்ந்தது காலத்தின் கோலம். இதில் க்ளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கு லீட் வேறு கொடுப்பார்கள். அய்யோ வேணாம்ங்க! மத்தது மாதிரி இதை நினைச்சுக்கூட பார்க்க முடியலை. ப்ளீஸ்! 

அடுத்த கட்டுரைக்கு