Published:Updated:

’’போலீஸ் அவ்வளவு நல்லவர்களா.... பவாரியாக்கள் அவ்வளவு மோசமானவர்களா...?!’’ ‘தீரன்’ கதை பின்னணி சொல்கிறார் இயக்குநர் வினோத்

’’போலீஸ் அவ்வளவு நல்லவர்களா.... பவாரியாக்கள் அவ்வளவு மோசமானவர்களா...?!’’ ‘தீரன்’ கதை பின்னணி சொல்கிறார் இயக்குநர் வினோத்
’’போலீஸ் அவ்வளவு நல்லவர்களா.... பவாரியாக்கள் அவ்வளவு மோசமானவர்களா...?!’’ ‘தீரன்’ கதை பின்னணி சொல்கிறார் இயக்குநர் வினோத்

"செம்ம படம்ல்ல மச்சான்... அப்டியே பரபரன்னு போயிடுச்சு. கண்டிப்பா மாஸ் ஹிட்டு..."

"இது ஒரிஜினல் ஸ்டோரி மச்சி. யப்பா...யார்றா இந்த ஹவாரியா. அவனுங்களா சத்தியமா மனுசனுங்களே இல்ல... காட்டுவாசிப் பயலுங்க"

"அவனுங்க ஊர்ல பொழைக்க வழியில்லன்னா இங்க வந்து இப்படியா திருடுவானுங்க. அதுவும் கொடூரமா கொலை செய்யுறானுங்க.. அதான் படத்துலேயே சொல்லியிருக்காங்களே... மிருகத்தை வேட்டையாடியவனுங்க. அப்படியே மனுஷனுங்கள வேட்டையாடுறானுங்க..."

"டேஞ்சர் மச்சான் இவனுங்க...நம்ம ஊர் பூரா வேற எங்க பார்த்தாலும் பரவிக் கிடக்குறானுங்க. பானிபூரி கடையில தொடங்கி எங்கப் பார்த்தாலும் அவனுங்கதான்..."

"இன்னொரு முறை படத்த வந்து பார்க்கணும். அதுவும் அந்த பஸ்ல ஒரு சேஸிங் வருதே... அது செம மாஸ்..." 

  ’தீரன் அதிகாரம் ஒன்று’ படம் முடிந்து தியேட்டரில் கூட்டம் கலையட்டும் என்று சீட்டிலேயே உட்கார்ந்திருந்தேன். அப்போது என்னைக் கடக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷார்ட்ஸ் இளைஞர்கள் சிலர் இப்படிப் பேசிக் கடந்தனர். 

தீரன்:அதிகாரம் ஒன்று... இப்படியான பல உரையாடல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உரையாடல்களின் பின்னிருக்கும் அரசியல், பல விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது. 

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு வழக்கை தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து, இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து, சில கொலையாளிகளை என்கவுன்டர் செய்து, கூட்டத்தின் தலைவனைப் பிடிக்க முயற்சி செய்கிறார். இடையில் என்னன்னவோ நடக்க இறுதியில் ஒரு மர டேபிளில், உடைந்து போன மர நாற்காலியில் உட்காரும் வேலையைத் தவிர வேறெந்த அங்கீகாரமும் அவருக்குக் கிடைத்துவிடவில்லை. 18 உயிர்களை பலிவாங்கிய அந்தக் கொள்ளை கும்பலைப் பிடிக்க, ஒரு எம்.எல்.ஏ இறந்ததற்குப் பிறகுதான் அரசு முழுக்கவனம் கொடுக்கிறது. பொதுமக்கள் சாகும் வரை அது மெத்தனத்தையே கடைப் பிடிக்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி..."இது டிபார்ட்மென்டோட தப்பா. அதை வழி நடத்துற அதிகாரத்தோட தப்பா. அதிகாரத்துக்குக் கொண்டு வந்த மக்களோட தப்பா என்பது கேள்விகள் நிறைந்த பெரும் விவாதம். அந்தக் கேள்விகளுக்கு விடை காணும் வரை அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து செத்துக்கொண்டே தானிருப்பார்கள்..." என்பதுடன் படம் முடிகிறது. 

வழக்கமான தமிழ் சினிமாவின் போலீஸ் கதைதானே... இதில் என்ன புது விவாதங்கள் என்ற கேள்வி எழலாம். இது வழக்கமான தமிழ் சினிமாவாக இருக்கும் வரை இந்தப் பிரச்னைகள் இல்லை...  ஆனால், "இது ஒரு உண்மைச் சம்பவம்", "உண்மையான ஒரு வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது" என்பதிலிருந்து தொடங்குகிறது தீரன் குறித்த விவாதங்கள். 

1995-2005 வரையிலான காலகட்டங்களில் இந்தியா முழுக்க தொடர் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடக்கின்றன. இந்தக் குற்றம் வடக்கிலிருந்து தொடங்கி தமிழ்நாட்டை அடையும்போது, அன்றைய டி.ஜி.பி. அலெக்ஸாண்டர், எஸ்.ஆர். ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்தார். ஒரு துப்பாக்கி ரவை, ஒரு ஜோடி செருப்பு...இதை மட்டுமே துப்புகளாகக் கொண்டு அந்தப் பெரும் கொள்ளைக் கூட்டத்தை அந்தத் தனிப்படை பிடித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. முக்கியமாக, இந்தக் குழு என்பது ராஜஸ்தானைச் சேர்ந்த "பவாரியா" எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தது. வேட்டைக்காரச் சமூகமாக இருந்த அவர்கள், இன்று திருட்டையும், கொலையையும், கொள்ளையையும் பிரதான தொழிலாகக் கொண்டிருக்கின்றனர் என்று அறிக்கை கொடுக்கிறது. 

இந்த வழக்கை முதன்மையாகக் கொண்டுதான் இந்தத் தீரன் உருவாக்கப்பட்டிருக்கிறது. "பவாரியா"வை "ஹவாரியா" என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். ராஜபுத்திரர்களின் வம்சாவளியில் இருக்கும் "பவாரியா"க்கள் மூர்க்கமான கொரில்லா போர் வீரர்கள் ஆவர். 1527யில் நடக்கும் "கன்வாஹ் போரில்", மொகலாயர்களுக்கு எதிராக ராஜபுத்திரர்கள் தோற்றுப்போகிறார்கள். அதற்குக் காரணம் பவாரியாக்கள்தான் என்று கோபம் கொண்டு அவர்களைக் காட்டுக்கு விரட்டுகிறார் மேவார் ராஜா "ராணா சங்கா". அன்று முதல் ஆரவல்லி மலைத்தொடர்களில் வேட்டைச்சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள். அதன் பின் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரையாகப் பட்டியலிடப்பட்டார்கள். 1972-ல் வேட்டைத் தடுப்புச் சட்டம் வந்ததும் வேட்டைத் தொழிலும் பறி போக, பிழைப்பு தேடி பல்வேறு தொழில்களுக்கு இடம் மாறுகிறார்கள். "அதில் சிலர் தங்கள் பழைய வேட்டைக்கே மீண்டும் திரும்புகிறார்கள். அதில் பலர் வேட்டையாடுவது மனிதர்களை" என்று படத்தில் சொல்லப்படுகிறது. 

ஒரு இனத்தில் ஒரு சிலர் செய்த தவறுக்காக,  ஒட்டு மொத்த இனத்தையே குற்றவாளிகளாகச் சித்தரிப்பது சரியா என்கிற அடிப்படைக் கேள்வியிலிருந்து படம் பல கேள்விகளை எழுப்புகிறது. அதில் சிலவற்றை இயக்குநர் வினோத்திடம் முன்வைத்தோம்...

’’போலீஸை அதீதமாகப் புனிதப்படுத்துவது போல இருக்கிறதே தீரன். போலீஸின் கோணத்திலிருந்து இந்தப் படத்தை எடுக்க என்ன காரணம்?’’

"முதலில் நான் தெளிவாக்க வேண்டியது.. .இது போலீஸை நியாயப்படுத்தும் படம் கிடையாது. போலீஸ் எல்லாருமே நல்லவங்கன்னு நான் சொல்லலை. போலீஸ்ல சில நல்லவங்களும் இருக்காங்கன்னு சொல்ற படம்தான் இது. ஒரு போலீஸ் எப்படி உருவாகுறான், ஒரு திருடன் எப்படி உருவாகுறான் என்பதைத்தான் படத்தில் அதுஅதுக்கான காரண காரியங்களோடு சொல்லியிருக்கிறேன்!"

’’இந்தக் கேள்வி ஏன் வருகிறது என்றால்... படத்தில் ஒரு காட்சி 'பவாரியாக்களுக்குத் தமிழ்நாடு போலீஸ் மீது பயம் வர வேண்டும். அதற்கு அதில் சிலரை நாம் என்கவுன்டர் செய்ய வேண்டும்' என்று ஹீரோ சொல்லவும், மக்கள் முன்னிலையில் வைத்து குற்றவாளிகளாகக் காட்டப்படுகிறவர்கள் என்கவுன்டர் செய்யப்படுகிறார்கள். இந்தக் காட்சி வாச்சாத்தியிலும், வீரப்பன் தேடுதல் வேட்டையிலும் போலீஸ் செய்தது சரிதான் என்பது போல் நியாயப்படுத்துகிறதே?’’

"அடிப்படையில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்னிக்கு போலீஸ் எண்ணிக்கையில ரொம்பக் குறைவாகத்தான் இருக்காங்க. குற்றங்களை அவங்க தடுக்கணும்ன்னா, மக்களுக்கு அவங்க மேல கண்டிப்பா பயம் இருக்கணும். அதுக்காக சில சமயங்களில் அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு போலீஸின் வேலை இந்தக் குற்றத்தை யார் செய்தது... எப்படிச் செய்தார்கள் என்று விசாரிப்பது மட்டும்தான். அதை அந்தக் குற்றவாளி ஏன் செய்தான் என்பதை அவர்கள் தேடத் தேவையில்லை. சம்பளத்துக்கு வேலை செய்பவன் போலீஸ். மேலிடம் சொல்வதைச் செய்பவர்கள். இதனால்தான் நான் சொல்கிறேன்... போலீஸை குறை சொல்லாதீர்கள். அவனை வழிநடத்தும் அரசை குறை சொல்லுங்கள். இதைத்தான் படத்தின் க்ளைமாக்ஸ் வசனமாகவும் வைத்திருப்பேன்!"

’’போலீஸ்ல நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க சரி... அப்போ பவாரியாக்கள்ல நல்லவங்களே இல்லையா... போலீஸ் ஊருக்குள்ள போகும்போது ஒட்டுமொத்த ஊரே அவங்களை அடித்துத் துரத்துற மாதிரி காட்சிகள் இருக்கே!’’

"வட இந்தியாவில் பல கிராமங்களில் இப்படி நடப்பது உண்டு. மதம், சாதி போன்ற காரணங்களைக் கொண்டு சில ஆதிக்க சக்திகள் போலீஸை இன்றளவும் தங்கள் கிராமங்களுக்குள் வர விடுவதில்லை. இந்தக் காட்சியை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். மொத்த ஊரும் குற்றவாளிகள் என்று நான் எங்குமே சொல்லவில்லை. அதேபோல், நீங்கள் பவாரியாக்கள் பற்றி இன்றும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். வேட்டைச் சமூகமாகவே வாழ்ந்து வந்தவர்கள் என்பதால், சாமான்யர்களால் முடியாத சில நுட்பங்களை அவர்கள் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள். அதன் மூலம் தேவைப்படும் சமயம் தாக்குதல் அல்லது தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்!’’ 

’’படம் பார்த்து வெளிவரும்போது ஒருவித பயம் ஏற்படுகிறது. ஒரு பானிபூரி விற்பவனை கூட இயல்பாகக் கடக்கமுடியவில்லை. இது இப்படியான உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்துமென்று தெரிந்தேதான் திரைக்கதை அமைத்தீர்களா?’’

"நீங்கள் அதை ஒரு பய உணர்வாகப் பார்க்கிறீர்கள்... நான் அதை ஒரு எச்சரிக்கை உணர்வாக, விழிப்புஉணர்வாகப் பார்க்கிறேன். இன்றைக்கு மாநிலங்கள் தாண்டிய குற்றம் (Inter State Crime) என்பது பூதாகரமாக வளர்ந்திருக்கிறது. கழுத்துச் சங்கிலியைப் பறித்துச் செல்லும் செயின் ஸ்னாட்ச்சிங் (Chain Snatching) குற்றத்தை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால், அது ஒரு பெரிய க்ரைம். வடமாநிலத்துலருந்து விமானத்தில் வந்து, OLX போன்ற தளங்கள் மூலம் ஒரு பழைய வண்டி வாங்கிக்கொண்டு, ஒரு வாரத்தில் 40 செயின் பறிக்கிறார்கள். வண்டியை அப்படியே விட்டுட்டு திரும்ப விமானம் ஏறிப் பறந்துடுறாங்க. பார்க்குற எல்லாரையும் சந்தேகப்படுங்கனு சொல்லலை. ஆனா, நம்மைச் சுற்றி ஏதோ புது ஆட்கள் நடமாட்டம், புது விஷயங்கள் நடக்குதுன்னா அதுகுறித்து கொஞ்சம் கவனமா இருக்கணும். வருமுன் காப்பது நல்லதுதானே. நூறு வயசு வரை வாழனும்னுதான் நினைக்கிறோம். ஆசைப்படுறோம்... உடற்பயிற்சி, டயட்னு ஆரோக்கியமாத்தான் இருக்கோம். ஆனாலும், ஒரு முன்னெச்சரிக்கையா இன்ஸ்யூரன்ஸ் எடுத்து வெச்சுக்குறோம்ல... அந்த மாதிரிதான்!’’ 

’’இந்த வழக்கை விசாரித்த அதிகாரி ஜாங்கிட் மீதே நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுத்திருப்பது சரியா?’’

"நான் ஜாங்கிட் சார் சொன்னதை மட்டுமே வைத்து இந்தப் படத்தை எடுத்துவிடவில்லை. அந்த ஆபரேஷனில் இருந்த பல அதிகாரிகளிடம் பேசினேன். பல இடங்களுக்கு நேரடியாகப் பயணித்து தகவல்களைச் சேகரித்தேன். நிறைய புத்தகங்களை வாசித்து தகவல்களைத் திரட்டினேன். இந்த எல்லா அனுபவமும் சேர்ந்துதான் திரைக்கதையைப் பின்னினேன். ஏன்னா, மிகப்பெரிய ஊடகமான சினிமாத்துறையில் இயக்குநரா இருக்கும் எனக்குனு ஒரு சமூகப்பொறுப்பு இருக்கு. அதை உணர்ந்துதான் இந்தப் படத்தை நான் எடுத்துள்ளேன்..!"

’’இந்த இடத்தில் என் அனுபவம் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். பெங்களூரைச் சேர்ந்த பியூஷ் கோஸ்வாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் வேலையைத் துறந்துவிட்டு தன் தோழி அக்‌ஷதா ஷெட்டியோடு இந்தியா முழுக்கப் பயணித்து, பல பூர்வகுடி இனங்கள் குறித்த பதிவுகளைச் செய்து வருகிறார். இவர் "பவாரியா" இனத்தோடு பல மாதங்கள் தங்கியிருந்து, அவர்கள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். அவரிடம் பேசியபோது பவாரியாக்கள் குறித்து இப்படிச் சொன்னார்... ‘பவாரியாக்கள் குற்றப்பரம்பரையில் இருந்து வந்தவர்கள் என்பது வரை வரலாறு சரிதான். ஆனால், அவர்கள் இன்றும் கொலை, கொள்ளை தொழிலில் மட்டுமே செய்து வருகிறார்கள் என்று சொல்வதெல்லாம் அபத்தம். அவர்கள் மிகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும், ஒடுக்கப்பட்டவர்களாகவும்தான் இன்றும் இருக்கிறார்கள். இவர்கள் நாடோடிகளாகத் திரிவதை நிறுத்தி ஓரிடமாக தங்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், மக்கள் இவர்களை ஏற்க மறுக்கிறார்கள். உதாரணமாக, உசிலம்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது என்றால், இவர்கள் அந்தக் கிராமத்திற்குள் போக முடியாது. அதையொட்டிய வெளிப்பகுதிகளில் தங்கலாம். இவர்கள் தங்கும் இடத்தை "தண்டா" என்று சொல்லுவார்கள். உசிலம்பட்டி அருகில் தங்கினால், அது "உசிலம்பட்டி தண்டா". இப்படியாக, இவர்கள் ஒரு இடத்தில் தங்குவதற்குக் கூட இத்தனை பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

அவர்களின் உடை குறித்து கிண்டல் செய்வது, நாற்றம் அடிப்பவர்கள், அழுக்கானவர்கள் என்று வெளிப்படையாகவே அவர்களைக் கிண்டல் செய்வார்கள். அதெல்லாம் அவர்களுக்குப் பெரிய வலியாக இருக்கும். இதனாலேயே பவாரியா இன பெண்கள் அவர்களின் பாரம்பர்ய உடைகளை, வளையல்களை அணிவதற்குக் கூட தயங்குகிறார்கள். ஆனால், இத்தனை புறக்கணிப்புகளையும் கடந்து அந்த இனத்திலிருந்து பலர் படித்து முன்னேறியிருக்கிறார்கள். ஒருசிலர் அரசு அதிகாரிகளாகி இருக்கிறார்கள். குற்றச் செயல்களைப் பொறுத்தவரை அனைத்து இனக்குழுக்களிலும் இருப்பது போல் நல்லவர்களும், குற்றவாளிகளும் பவாரியா குழுவிலும் இருக்கலாம். அதற்காக மொத்த இனத்தையும் அப்படி அடையாளப்படுத்திப் புறக்கணிப்பது பெரும் பிழை. நினைத்துப் பாருங்கள் பவாரியாக்களோடு பல மாதங்கள், பல இடங்களில் நான் என் பெண் தோழியோடு தங்கியுள்ளேன். அடர்ந்த காடுகளில் கூட அவர்களோடு நாங்கள் தங்கியுள்ளோம். ஆனால், ஒரு நாளும் அவர்கள் எங்களிடம் எந்த வகையிலும் தவறாக நடந்துகொண்டதில்லை...!’ பியூஷ் கோஸ்வாமியின் இந்தப் புரிதல் பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ 

"பியூஷ் சொல்லியிருப்பது 100% உண்மை. பவாரியாக்கள் பற்றி ஆவணப்படுத்திய பியூஷிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அந்த இனத்தில் எல்லோரும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று படத்தில் எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. சமூக ரீதியில் பவாரியாக்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள், எந்த மாதிரியான புறக்கணிப்புகளைச் சந்திக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அதை படத்திலும் ஒரு இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். இன்று பவாரியாக்கள் பலர் படித்து, நல்ல வேலைகளில் இருக்கிறார்கள் என்பதையும் நான் மறுக்கவில்லை. படத்திலேயே கூட, பவாரியாக்களில் சிலர் இந்தத் தொழிலைச் செய்கிறார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறோம். அதே சமயம்  இந்தக் கதை நடப்பது பத்தாண்டுகளுக்கு முன்னர். இந்தப் பத்தாண்டுகளில் அந்தச் சமூகம் நிச்சயம் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் பவாரியாக்கள் குறித்த விவாதம் எழுவதை நான் ஆரோக்கியமாகப் பார்க்கிறேன். அரசு அவர்கள் மீது இன்னும் அதிகக் கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

தீரன் படம் மூலம் என் கோரிக்கை ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் நாம் போலீஸை குறை சொல்வதால் பயனில்லை. நாம் கேள்வி கேட்க வேண்டியது அரசைத்தான். போலீஸ்காரர்கள் தொப்பையோடு இருக்கிறார்கள் என்று விமர்சிக்கிறோம். ஆனால், ஒரு போலீஸாவது சரியான நேரத்திற்கு இங்கு சாப்பிட முடியுமா. அவர்கள் உடல்நலன்மீது அவர்களால் அக்கறை செலுத்திட முடிகிறதா. என் படம் விவாதத்துக்கு முன்வைக்கும் பல விஷயங்களில் முக்கியமான ஒன்று அரசைக் கேள்வி கேளுங்கள் என்பதுதான். அதைக் கேட்கத் தொடங்குவோம்!’’