Published:Updated:

“இனி ‘தீரன்’ மாதிரியான கதையைத் தொடவேமாட்டேன்..!” - இயக்குநர் வினோத் #VikatanExclusive

“இனி ‘தீரன்’ மாதிரியான கதையைத் தொடவேமாட்டேன்..!” - இயக்குநர் வினோத் #VikatanExclusive
“இனி ‘தீரன்’ மாதிரியான கதையைத் தொடவேமாட்டேன்..!” - இயக்குநர் வினோத் #VikatanExclusive

உண்மைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யத்துக்கு ஆயுள் அதிகம். 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தின் மூலம், ஒரு உண்மைச் சம்பவத்தை அடர்த்தி குறையாமல் காட்சிப் படுத்தியிருந்தார் இயக்குநர் ஹெச்.வினோத். இந்தியாவையே திணறடித்த ஒரு கொள்ளைக்கூட்டம், அதைத் துரத்திப் பிடித்த தமிழக போலீஸ் அதிகாரிகள்... இந்த அதிரடி சேஸிங்கிற்குப் பின்னால், 'தீரனு'க்குக் கலை வடிவம் கொடுத்த ஹெச்.வினோத்தின் உழைப்பும், பயணமும் எப்படி இருந்தது? இயக்குநர் ஹெச்.வினோத்தே விவரிக்கிறார்...

முதல் புள்ளி : 

“பார்சல் சாப்பாடு வாங்குன பேப்பர்ல இருந்த செய்தியில தொடங்குனது 'தீரன் அதிகாரம் ஒன்று'க்கான டிராவல். அதுக்கு முன்னாடியே ஒரு நாளிதழ்ல தொடரா வந்த அந்த செய்தியை நான் கட் பண்ணி வெச்சு, அதை அடிப்படையா வெச்சு ஒரு ஃபிக்‌ஷன் கதை ரெடி பண்ணி வெச்சிருந்தேன். சாப்பாடு வாங்குன பேப்பர்ல இருந்த அந்த செய்தி, அதைப் பத்தி இன்னும் அதிகமா தெரிஞ்சுக்கணும்ங்கிற ஆவலைக் கொடுத்தது. நண்பர்கள் மூலமா சில காவல்துறை அதிகாரிகளைச் சந்திச்சுப் பேசுனேன். நான் எழுதி வெச்சிருந்த கதையைவிட, அவங்க சொன்ன சில சம்பவங்களே எனக்கு அதிர்ச்சியா இருந்தது. பிறகு மூணுமாசம் அந்தக் கதையைப் பத்தி எனக்கு எழுந்த கேள்விகளையெல்லாம் எழுதிவெச்சேன். கிட்டத்தட்ட 45 கேள்விகளுக்கான பதிலைத் தேடி மறுபடியும் காவல்துறை அதிகாரிகளைச் சந்திச்சுப் பேசுனேன். 'பவாரியா ஆபரேஷன்'ல இருந்த சில போலீஸ் அதிகாரிகளைப் பார்த்தேன். அவங்க சொன்ன சம்பவங்கள் எல்லாம் எனக்குப் பயங்கர சர்பிரைஸ் கொடுத்தது. ஏன்னா, அதுக்குப் பின்னாடி பெரிய வரலாறே இருந்தது. சுதந்திரத்துக்காகப் போராடுன மக்களை ஆங்கிலேயர்கள் எப்படி ஒடுக்குனாங்க, மக்களோட நிலங்கள் எப்படி அபகரிக்கப்பட்டது, பழங்குடிகள் ஏன் கொள்ளைக்காரர்கள் ஆனங்க... இப்படிப் பல வரலாறுகளைக் கதைக்காகத் தேடவேண்டி இருந்தது. முடிவே இல்லாம தொடர்ந்துக்கிட்டு இருந்த இந்தக் கேள்விகள்தான், எனக்கு திரைக்கதை வடிவத்தைக் கொடுத்துச்சு.”

திரைக்கதை வடிவம் :

“விக்கிபீடியாவுல ஒரு விஷயத்தைப் படிக்கும்போது, அது தொடர்பான தகவல்களை அதுலேயே 'கிளிக்' பண்ணித் தெரிஞ்சுக்கலாம். அதுமாதிரியே இந்தப் படத்துக்கும் திரைக்கதை அமைக்கலாம்னு முடிவு பண்ணேன். ஏன்னா, இந்தத் தலைமுறைக்கு பழசு தெரியாது. வாட்ஸ்அப்ல வர்ற பார்வேர்டு மெசேஜ்கள் எல்லாமே உண்மைனு நம்புற தலைமுறைக்கு, நாம ஒரு விஷயத்தை முழுமையா சொல்லணும்னு முடிவு எடுத்தேன். நிறைய விஷயங்களைப் படிச்சு, விக்கிபீடியாவுல இருக்கிற 'கிளிக்' ஆப்ஷன் மாதிரி நிறைய குட்டிக் குட்டி கதைகளைப் படத்துல பயன்படுத்தினேன்."

சில எழுத்தாளர்கள், பல புத்தகங்கள்:

“எழுத்தாளர் முருகன், மொழிபெயர்ப்பு நூலான ‘வழிப்பறிக்கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலாசிரியர் போப்பு... இருவரையும் சந்திச்சேன். போப்பு, பழங்குடிகளைப் பற்றி ஆராய்ச்சி பண்ற ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தினார். படத்துல ‘கிரிமினல் ரைட்ஸ்’ பத்திப் பேசுறவர், அவர்தான். பிறகு, கைரேகை ஆய்வு பண்ற சிலரைச் சந்திச்சேன். இந்தியாவிலேயே காவல்துறை தொடர்பான நிறைய புத்தகங்களை எழுதிய வீ.சித்தண்ணன் சாரை சந்திச்சேன். விசாரணைக்கான அடிப்படையை அவர் எழுதிய புத்தகத்துல இருந்து எடுத்துப் படத்துல சேர்த்தேன்."

திரைக்கதை குழப்பம்:

“திரைக்கதைக்கு எவ்வளவு காலம் ஆனதுனு எனக்கு சரியா தெரியலை. ஆனா, தகவல்களுக்காக பலரையும் சந்திச்சேன். பிரச்னை என்னன்னா, ஒவ்வொருத்தரையும் சந்திச்சுட்டு வரும்போது, ஏற்கெனவே இந்தப் படத்துக்காக நாம எழுதியிருக்கிற திரைக்கதையோட வடிவத்தை மாத்திக்கிட்டே இருக்கவேண்டிய கட்டாயம் இருந்துச்சு. 'முடிஞ்ச அளவு உண்மைத் தகவல்களை மட்டும்தான் சேர்க்கணும்'ங்கிறதுல உறுதியா இருந்ததுனால, திரைக்கதை மாறிக்கிட்டே இருந்தது எனக்குக் கவலையைக் கொடுக்கலை. போலீஸ்ல நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க. பழங்குடிகள் மக்கள் சுதந்திரத்துக்காகப் போராடியிருக்காங்க, அவங்களோட நிலங்களை இழந்திருக்காங்க, அதுல சில மக்கள் கொள்ளைக்காரர்களாவும் இருந்திருக்காங்க. இது எல்லாத்தையும் என் கதையில பதிவு பண்ணும், அதேசமயம் 'பவாரியா ஆபரேஷன்'தான் முக்கியக் கதையா இருக்கணும். இதுல நான் தெளிவா இருந்தேன். அதனால, கடைசிநாள் ஷூட்டிங் வரை... ஸ்கிரிப்ட்ல நிறைய மாற்றங்கள் பண்ணிக்கிட்டேதான் இருந்தேன்.”

புனைவும், உண்மையும் :

"படத்துல வர்ற ஆக்ஷன், காதல் காட்சிகள் எல்லாம் புனைவுதான். தவிர, அந்தக் கொள்ளைக்காரங்களோட வன்முறையை அப்படியே படத்துல பதிவு பண்ணமுடியாது. அதுக்காக, வன்முறைக் காட்சிகளோட நிறங்களையும், வீரியத்தையும் குறைச்சேன். தவிர, 2005-ல இருந்த நிலப்பரப்பு இப்போ இல்லை. குறிப்பா, சாலையோட தனிவீடுகள் எல்லாம் இப்போ தனித் தனி ஊர்களா மாறிடுச்சு. அதுக்காகக் கொஞ்சம் சிரமப்பட்டோம்."

லொக்கேஷன்கள் :

''சம்பவங்கள் உண்மையிலேயே நடந்த இடங்களிலேயே ஷூட்டிங் நடத்தணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனா, அந்த லொக்கேஷன்கள் எல்லாம் நான் நினைக்கிற மாதிரி இல்லை. ரொம்ப மாறியிருந்தது. இத்தனைக்கும் இந்த வழக்கின் ஜட்ஜ்மென்ட் காப்பியில குறிப்பிடப்பட்ட இடங்கள், நாளிதழ்களில் வந்திருந்த கைதானவர்களுடைய படங்கள்... இதையெல்லாம் சேகரிச்சு, நானும் கேமராமேனும் அந்தந்த இடங்களுக்கே நேரடியா போய்ப் பார்த்தோம். எல்லா லொக்கேஷன்களும் மாறியிருந்தது. ஆனா, அதுக்குத் தொடர்புடைய, அதேமாதியான லொக்கேஷன்கள் சிலவற்றைப் பிடிச்சோம். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானானு சில மாநிலங்களுக்குப் பயணிச்சோம். உதய்பூர்ல இருக்கிற ஆரவல்லி மலைத்தொடர்கள், அங்கே இருந்த வீடுகள் எல்லாம் இந்தப் படத்துக்கான நேட்டிவிட்டியைக் கொடுக்கும்னு தோணுச்சு. பிறகு, ஜெய்சல்மர் போனோம். ஒரு எரிமலை வெடிச்சு உருவான ஊர் அது. சில பகுதிகள் கறுப்பா, சில பகுதிகள் கலரா இருக்கும் அழகான ஊர். தவிர, பாகிஸ்தான் பார்டர்ல இருக்கிறதுனால டெவலப் ஆகாத சிட்டியா இருந்தது. அந்த லொக்கேஷனும் இந்தக் கதைக்குக் கச்சிதமா பொருந்தும்னு தோணுச்சு. இப்படிக் கிட்டத்தட்ட 80 லொக்கேஷன்களைத் தேடிப்பிடிச்சோம். தமிழ்நாடு தவிர்த்து, வெளிமாநிலங்கள்ல இந்தப் படத்துக்கான ஷூட்டிங் நடந்தது."

எதிர்மறை விமர்சனங்கள் :

“சீரியஸா, ரொம்ப நேர்மையான நோக்கத்தோடதான் இந்தப் படத்தை நான் அணுகியிருக்கேன்னு நம்புறேன். ஏன்னா, பலபேர் கேட்குறாங்க, 'போலீஸ் அதிகாரிகளைப்பத்தி படம் எடுக்குறீங்க. அவங்கமேல நிறைய பிரச்னைகள் இருக்கு தெரியுமா?'னு கேட்குறாங்க. திரும்பத் திரும்ப சொல்றேன்... நான் போலீஸ் அதிகாரிகளைப் பாராட்டவோ, போலீஸ் அதிகாரிகளுக்காகவோ இந்தப் படத்தை நான் எடுக்கலை. 'ஒரு வழக்கு, அதுக்கான பின்புலம், போலீஸ் அதிகாரிகளோட செயல்பாடு, வழக்கோட இறுதி நிலை' இதுதான் நான் சொல்ல நினைச்ச விஷயம். 'பவாரியா ஆபரேஷன்'ல என்ன நடந்ததோ, அதை நான் பதிவு பண்ணியிருக்கேன். இது காவல்துறை அதிகாரிகளோட கதை இல்லை, அந்த வழக்கோட கதை மட்டும்தான். இன்னும் சிலர், பழங்குடிகளை அவமதிச்சு எடுத்திருக்கிறதா பதிவு பண்ணியிருக்காங்க. அது ஏன்னு எனக்குப் புரியவே இல்லை. நான் பழங்குடிகள் எல்லோரும் குற்றவாளிகள்னு எங்கேயும் சொல்லலை. பழங்குடிகள் போர்வீரர்களா இருந்தாங்க, வரலாறு அவங்களுக்கு இழைத்த துரோகம் இது, அவங்க ஏன் குற்றவாளிகள் ஆனாங்கனு எல்லாமும்தான் சொல்லியிருப்பேன். முக்கியமா, 'ஒரு குற்றவாளி எப்படி குற்றவாளி ஆக்கப்படுகிறார்?'ங்கிற கேள்வியைப் படத்தோட முடிவுல வைக்கிறேன். அரசாங்கத்திடம் இருந்து ஒரு தவறு தொடங்குனா, நாம கேள்வி கேட்கவேண்டியது அரசாங்கத்தைத்தான். ஆனா, நாம யாரும் அரசாங்கத்தைக் கேள்வி கேட்குறதில்லை, நல்ல அரசாங்கத்தையும் தேர்ந்தெடுக்கிறதில்லை. இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கிறவரை, அப்பாவி மக்கள் செத்துக்கிட்டுதான் இருப்பாங்கனு சொல்லித்தான் படத்தை முடிச்சிருக்கேன். அதனால, விமர்சகர்களோட எல்லாக் கேள்விக்கும் படத்துல பதில் இருக்கு. சந்தேகம் இருந்தா, இன்னொரு முறை படத்தைப் பாருங்க. மீண்டும் சந்தேகம் வந்தா, திரும்பத் திரும்ப படத்தைப் பாருங்க. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்!.”

உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவதற்கான காரணம்:

“ஆடியன்ஸ் ஈஸியா கனெக்ட் பண்ணிப்பாங்க. பெரும்பாலான தமிழ்சினிமாவுக்கு சில பிரச்னைகள் இருக்கு. ஒரு கதையை எழுதினா, அதை தயாரிப்பாளர்கிட்ட சொல்லும்போது வியாபாரத்துக்குத் தகுந்தமாதிரி சில விஷயங்களை வைக்கணும்னு சொல்வார். விநியோகஸ்தர்கள் இன்னும் சில விஷயங்களைப் படத்துல எதிர்பார்ப்பாங்க. அதையெல்லாம் உள்வாங்கிக்கிட்டு, கதையில சேர்க்கணும். அந்தப் படத்துல இருக்கிற தவறுகளை ஆடியன்ஸ் ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க. ஆனா, உண்மைச் சம்பவங்களைப் படமாக்கும்போது இந்தப் பிரச்னைகள்ல இருந்து ஓரளவுக்குத் தப்பிக்கலாம். உண்மைச் சம்பவத்தைத் தெரிஞ்சுக்கிற ஆர்வத்துல, நாம பண்ற சில குறைகளைக் கண்டுக்கமாட்டங்க. அதனாலேயே உண்மைச் சம்பவங்கள் மேல எனக்கு ஆர்வம் அதிகம்.”

அடுத்து:

“நிச்சயம் உண்மைக் கதைதான். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு வந்த விமர்சனங்களால நான் கொஞ்சம் வருத்தத்துல இருக்கேன். நான் நேர்மையா அணுகின விஷயத்தை தப்பான புரிதலோட பார்த்த விளைவு அது. அதனால, 'தீரன் அதிகாரம் ஒன்று' மாதிரியான சென்சிட்டிவ் கதைகளை இனிமே தொடவேணாம்னு  நினைக்கிறேன்.”