Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"கோபி அண்ணனுக்கு என் வாழ்த்துகள்!" -சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பா.ரஞ்சித்

சென்னை, தி.நகரிலுள்ள சர் பிட்டி.தியாகராய ஹாலில் `அறம்', `விழித்திரு', `ஜோக்கர்' படங்களின் இயக்குநர்கள் கோபி நயினார், மீரா கதிரவன், ராஜூமுருகன் ஆகியோருக்கு, நேற்று மாலை (24.11.2017)  விடுதலை கலை இலக்கிய பேரவை மற்றும் மருதம் கலைக்கூடம் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், பாடலாசிரியர் உமாதேவி, சி.பி.ஐ வீரபாண்டியன் ஆகியோரோடு இயக்குநர் பா.ரஞ்சித்தும் அந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

`அறம்' இயக்குநர் கோபி நயினாருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த இயக்குநர் ரஞ்சித், “மெட்ராஸ் படத்துக்கு `ஏ' சர்ட்டிஃபிகேட் கொடுத்தாங்க. ஏன்னு கேட்டத்துக்கு ரவுடிங்களைப் பத்தின படம்னு காரணம் சொன்னாங்க. இதுவரைக்கும் ஹவுசிங் போர்டு, ஸ்லம் போர்டு, சேரி, மீனவர் குப்பத்துல வசிக்கிற மக்கள்னா ரவுடின்னு கட்டியமைச்ச பொது புத்திதானே இதுக்கு காரணம். `அட்டகத்தி' படம் பண்ணப்போ வாழ்க்கைய பதிவு பண்ண ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருந்துச்சு. ஆனா, காலம் அப்படியே இல்ல. சாதி கூடாதுன்னு சேரிலயே பிரசாரம் பண்றதை விட்டுட்டு ஊர்த்தெருவுல நின்னு இன்னும் வீரியமா பிரசாரம் பண்ணினாதான் மாற்றம் வரும். அப்போதான் சமத்துவ சமுதாயம் பிறக்கும்" என்றார்.

ரஞ்சித்

தொடர்ந்து, "தோழர் ராஜுமுருகன் மாதிரியான இயக்குநர்கள் சமூகத்தை நெருக்கமா பார்த்து அவ்ளோ அழகா எழுதுறாங்க, படைப்பாக்குறாங்க. அவருடைய பார்வையில இந்த சமூகம் ஏன் சமத்துவமில்லாம இருக்குது, ஏன் இவ்வளவு பிரிவுகள்னு நிறைய கோபம். அவருக்குள்ள இருக்கிற கோபங்கள்தான் அவரோட படைப்பா வருது. ஆள்றவங்க, இந்த சமுகம் பிரிஞ்சே இருக்கணும், தலித், தலித் அல்லாதவங்கனு இருக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா, சாதி இருக்கணும்னு சொல்றவங்க ஒரு பக்கமும் கூடாதுனு சொல்றவங்க ஒரு பக்கமுமாதான் இந்த சமூகம் பிரிஞ்சிருக்கு. இந்தப் பிரிவினை கண்டிப்பா ஒழியணும். மீரா கதிரவன் அண்ணன் பல குறியீடுகளோட அற்புதமான படமா, `விழித்திரு' படத்த உருவாக்கியிருந்தார். படம் எடுக்கிறது கஷ்டம்னா, அதை வெளியிடுறது ரொம்ப கஷ்டம், கஷ்டப்பட்டுதான் இந்தப் படத்தை வெளிய கொண்டு வந்திருக்கார். இப்பவரைக்கும் அது கொடுத்த துன்பங்கள்லயிருந்து மீளல. அவர் அடுத்தடுத்து இன்னும் நிறைய சிறந்த படங்களை கொடுக்கணும்னு கேட்டுக்குறேன்.

அண்ணன் கோபி நயினாரோட `அறம.' பல முக்கியமான பிரச்னையைத் தொட்டுப் பேசுது. இந்த மாதிரியான படங்கள் சமூகத்துக்கு ரொம்ப அவசியம். பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வராதப்போ நயன்தாரா இந்தப் படத்தைப் பண்ண முன்வந்தது ரொம்ப பாராட்டப்பட வேண்டிய ஒண்ணு. அதனால்தான் அதில் சொல்லப்பட்ட கருத்துகள் பரவலா போய் சேர்ந்திருக்கு, விவாதமாகியிருக்கு. அப்படி விவாதமாகுறது ரொம்ப முக்கியம். கோபி அண்ணன் இதே மாதிரியான படங்களைத் தொடர்ந்து பண்ணனும். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இது தவிர, ஒரு சின்ன விளக்கம் தர வேண்டியிருக்கு. இப்ப சமூக வலைதளங்கள்ல நான் கோபி நயினார் அண்ணன் கிட்டே வேலை பார்த்ததாகவும் அவருடைய கதை டிஸ்கஷன்ல ஈடுபட்டதாகவும் பேசிக்கிட்டுருக்காங்க.  அதில் துளியும் உண்மை இல்லை. கோபி அண்ணன் என்னோட காலேஜ் சீனியர். அந்த வகையிலதான் அவரை எனக்குத் தெரியும். `மெட்ராஸ்' படம் திரைக்கு வர்றதுக்கு முன்னாடி, `கருப்பர் நகரம்' படம் மாதிரியே இருக்குன்னு ஒரு வழக்கு போட்டாங்க, நான் என் படத்தினுடைய டிவிடி, ஸ்கிரிப்ட் எல்லாம் சமர்ப்பிச்சு, `அந்தப் படம் வேற, `மெட்ராஸ்' வேற'னு கோர்ட்லயே நிரூபிச்சதுக்கு அப்புறம்தான் `மெட்ராஸ்' ரிலீஸ் ஆச்சு. இதைப் பத்தி அப்பவே கோபி நயினார் அண்ணன்கிட்ட பேசினேன். அந்தப் பிரச்னை அப்பவே முடிஞ்சு போச்சு. ஆனா, இப்போ சிலர் வேணும்னே கதைத் திருட்டு, அது இதுன்னு ஆதாரமில்லாமல் பொய் பிரசாரம் பண்றாங்க. எங்களுக்கு நடுவுல பிரச்னை உண்டுப்பண்ண பாக்குறாங்க. அவங்களுடைய முயற்சி பலிக்காது.

இங்கே வந்திருக்கும் இயக்குநர்கள், இயக்குநர் பிரம்மா நாங்க எல்லோரும் சேர்ந்து சமூக மாற்றத்துக்கான படைப்புகளைத் தொடர்ந்து கொடுப்போம். என்னுடைய தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ங்கிற படம் வருது. அது ரொம்ப முக்கியமான படைப்பா இருக்கும். அந்த படம் வந்தாலும் திட்டுவாங்க. திட்டட்டும் இன்னும் உற்சாகமா வேலை பார்ப்போம்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்