Published:Updated:

'கணவன் - மனைவி பத்தி வெப் சீரிஸ் பண்றது நாங்கதான்!' - 'கால்கட்டு' டீம்!

'கணவன் - மனைவி பத்தி வெப் சீரிஸ் பண்றது நாங்கதான்!' - 'கால்கட்டு' டீம்!
'கணவன் - மனைவி பத்தி வெப் சீரிஸ் பண்றது நாங்கதான்!' - 'கால்கட்டு' டீம்!

யூ - டியூபில் கொட்டிக்கிடக்கும் வெப் சீரிஸ்களிலிருந்து கொஞ்சம் தனித்து நிற்கிறது 'கால்கட்டு' வெப்சீரிஸ். கணவன் - மனைவி என வெறும் இரண்டே கதாபாத்திரங்கள்தான். அவர்களுக்கு இடையேயான காதல், மோதல், ஊடல் என ஜென் இஸட் ஜெனரேஷனின் உறவை, காதலை எந்த வெளிப்பூச்சும் பூசாமல் அப்படியே பறிமாறுகின்றனர். மழைத்தூரல் நின்ற ஒரு வெயில் நாளில் அந்த வெப்சீரிஸின் நாயகன், நாயகி, இயக்குநரோடு நடந்த சந்திப்பு.

“ஆரம்பத்துல 'கால்கட்டு' வெப்சீரீஸ் ஐடியாவை நண்பர்கள்கிட்ட சொன்னப்போ, 'ஏன் கணவன் மனைவி பத்தி பேசுறீங்க? வேற ட்ரை பண்ணலாமே'ன்னு சொன்னாங்க. ஆனா யோசிச்சுப்பார்த்தா இங்க பேச்சுலர் வாழ்க்கையை பதிவு பண்ணுன சீரிஸ்கள் நிறைய இருந்தது, இல்லைன்னா லிவிங் டுகெதர், ஆஃபீஸ் வாழ்க்கைன்னு காமிக்கிற சீரிஸ்கள் நிறைய இருந்தது. ஆனா கணவன் மனைவிக்கு இடையிலான உறவை, ஊடலை யாரும் பதிவு பண்ணுன மாதிரி தெரியல, அதனால இதையே பண்ணலாம்னு உறுதியா இருந்தேன். சீரிஸுக்கு கிடைச்ச வரவேற்பை பார்க்குறப்போ நாம சரியாத்தான் வந்துருக்கோம்னு ஒரு திருப்தி இருக்கு'' என ஆரம்பிக்கிறார் கால்கட்டு வெப்சீரிஸ் இயக்குநர் வெற்றி. 'ப்ளாக் பசங்க'ன்னு பேரு வச்சுட்டு வெள்ளையா ஹீரோயின் புடிக்கிறோமேன்னு விமர்சனம் வருமான்னு யோசிச்சேன். ஆனா, சத்யாவை யாரும் அப்படி பார்க்கலை!' என சத்யாவுக்கு லீட் கொடுக்க சத்யா தொடர்கிறார்.

''என் பேரு சத்யா. சொந்த ஊரு கரூர். இப்போ சென்னையில சாஃப்ட்வேர் இஞ்சினியரா வேலை பார்க்குறேன். எனக்கு டைரக்டர் வெற்றியை இந்த சீரிஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே தெரியும். அவரோட ஏற்கெனவே ஒரு குறும்படத்துல ஒர்க் பண்ணியிருக்கேன். முதல் எபிசோடு வந்தப்போ, ஆபிஸ்ல எல்லாரும் 'நடிப்பே வரல உனக்கு''னு கிண்டல் பண்ணாங்க' என சத்யா சொல்ல,  'இதுவரை 12 எபிஸோட் முடிஞ்சுருச்சு இப்போ மட்டும் நடிப்பு வந்துருச்சா?' என நடுவே புகுந்து கலாய்க்கிறார் ஹீரோ பிரதீப்.

'ஷூட் பண்ற ஒவ்வொரு நாளுமே செம்ம காமெடியா இருக்கும். இயல்பிலே யாராவது என்னைத் திட்டுனாக் கூட சிரிச்சுக்கிட்டே நிக்கிற பொண்ணு நான். பாவம் இந்த கேரக்டர்ல பிரதீப்பை கோபத்தோட திட்டுறமாதிரி தான் பெரும்பாலும் இருக்கும். இந்த உலகத்துலேயே சிரிப்பை கன்ட்ரோல் பண்ணிகிட்டு கோபப்பட்ட ஒரே ஆள் நானாத்தான் இருக்கும்' என சொல்ல, 'என்ன இருந்தாலும் யூ-டியூப்ல வர்ற பெரும்பான்மையான கமென்ட்டுகள் சத்யாவைப் பத்திதான் இருக்கு' என இடைமறிக்கிறார் இயக்குநர் வெற்றி.

'சொல்லுங்க வெற்றி! உலகத்துல எவ்வளவோ நடிகர்கள் இருக்கும்போது நீங்க ஏன் பிரதீப்பை இந்த சீரிஸுக்கு ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க?' என சத்யா வெற்றியை கேட்க... 'பிரதீப்பை நான் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்த காலத்துல இருந்தே தெரியும். ஐடில வேலை, நல்ல சம்பளம்னு இருந்த பையன், சினிமாவுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு தன்னோட கனவுகள் நோக்கி ஓடிக்கிட்டு இருக்கார். சீக்கிரமே அவருக்கான இடத்தையும் பிடிப்பார்னு நம்புறேன்' என லைட்டாக சென்டிமென்ட் ஏரியாவுக்குச் செல்கிறார்.

'சரி ஜி ரொம்ப பீல் பண்ணாதீங்க' என அவரை கூல் செய்யும் பிரதீப் தன் கதையை சொல்லத் தொடங்குகிறார். 'நமக்கு சொந்த ஊரு மதுரை. கலை மீதுள்ள ஆர்வம் சின்ன வயசுல இருந்தே இருக்கிறதுதான். ஐடில வேலை. சென்னை வந்த பிறகு சினிமா வாய்ப்புக்காக ஓட ஆரம்பிச்சேன். வேலை, சினிமா ரெண்டையும் ஒரே நேரத்துல பேலன்ஸ் பண்ண கஷ்டமா இருந்துச்சு, வேலையை விட்டுட்டு கூத்துப்பட்டறையில சேர்ந்தேன். அங்கே இருந்து நிறைய  குறும்படங்கள் பண்ணேன். அப்படித்தான் வெற்றியோட அறிமுகமும் கிடைச்சது' என முடிக்கிறார்.

சரி, இயக்குநர்கிட்ட ஒரு கேள்வி! மொத்தமா இந்த வெப்சீரிஸ் அனுபவம் எப்படி இருந்தது?

டிஜிட்டல் மீடியாவைப் பொறுத்தவரை நம்ம கன்டென்ட் ஸ்ட்ராங்கா இருந்தாப் போதும். எங்க டீம்ல கேமராமேன், எடிட்டர் எல்லாரும் சிறந்த அவுட்புட் கொடுக்கணும்னு நினைக்கிற ஆளுங்க. அதனால ரிசல்ட்டும் சிறப்பா வந்திருக்கு. எங்க எல்லாருக்குமே சினிமாதா அல்டிமேட் இலக்கு. அதை நோக்கித்தான் ஓடிகிட்டு இருக்கோம். இந்த சீரிஸுக்கான கதையையே சினிமா ஸ்க்ரிப்ட்டா மாத்துற முயற்சில இருக்கேன் இப்போ! அது தவிர வேற ரெண்டு ஸ்க்ரிப்ட்டும் ரெடியா இருக்கு! அதுலயும் சத்யா, பிரதீப் இருப்பாங்க. ஏன்னா நாங்க எல்லாரும் ஒரே குடும்பமாச்சே!' என க்ரூப்பாக போஸ் தருகிறார் வெற்றி. 
 

அடுத்த கட்டுரைக்கு