Published:Updated:

‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-25

‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-25
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-25

நிஜத்திலும் நடிகையரின் காவலர் எம்.ஜி.ஆர்

‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது. 

எம்.ஜி.ஆரை நம்பினோர் கைவிடப்படார்

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.

நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய  சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது. 

உடம்பை பார்த்துக்கொள்

சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு குட்டிச்சாக்கில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர்  எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.

திருமணம் செய்துகொள்

ஒரு முறை லட்சுமி வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமையில் இருந்த லட்சுமிக்குத் தொல்லைகள் ஏராளம் சூழ்ந்தன. எம்.ஜி.ஆரிடம் வந்து தன் பிரச்னையைக் கூறினார். எம்.ஜி.ஆர், நீ பொது வாழ்க்கைக்கு வா அல்லது குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு என்று ஆலோசனை தெரிவித்தார். லட்சுமியிடம் அரசியலுக்கு வருகிறாயா என்று கேட்டார். ‘அது தன்னால் முடியாது’ என்றார் லட்சுமி. ‘எந்தச் சாமி எந்தப் பட்டணம் போனாலும் நான் பத்து மணிக்கு தூங்கப் போய்விடுவேன். எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவது இயலாத காரியம்’ என்றார் லட்சுமி. ‘அப்படியென்றால் திரும்பவும் திருமணம் செய்துகொள். ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து வா. உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். பாதுகாப்பாகவும் உணர்வாய்’ என்றார் எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார் லட்சுமி. இன்றைக்குக் கணவர் குழந்தை என லட்சுமி நிம்மதியாக வாழ்கிறார். 

தெலுங்கு கத்துக்கலாம்

‘கொக்கு சைவ கொக்கு’ பாட்டில் ரஜினியுடனும் ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா’ என்ற  பாட்டில் விக்ரமுடனும் ஆடிய ஜோதிலட்சுமி ஆடல் பாடல் கலைகளில் கை தேர்ந்தவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அவர் பாட்டி தமயந்தியும் அம்மா தனலட்சுமியும் நடிகையராய் இருந்தவர்கள். எம்.ஜி.ஆருக்கு இவர்கள் நல்ல பரிச்சயம் ஆனவர்கள்.
 
ஒரு நாள் ஜோதிலட்சுமியின் தாயார் எம்.ஜி.ஆரிடம் பேசும்போது ‘இப்போது தமிழில் ஜோதிக்கு அதிக வாய்ப்பில்லை. தெலுங்கில் அழைப்பு வருகிறது, ஆனால் இவள் நடிக்க மறுக்கிறாள்’ என்று குறைபட்டுக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர் ஜோதிலட்சுமியிடம் ‘ஏன் உனக்குத் தெலுங்கில் நடிச்சா கசக்குதா’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிலட்சுமி ‘இல்லண்ணே தெலுங்கு பாஷை தெரியாது. என்ன பேசுறாங்கன்னே எனக்குப் புரியாது’ என்றார். ‘அதெல்லாம் புரியும் புரியும். போய் நடி அப்படியே தெலுங்கு கத்துக்கலாம்’ என்று தைரியம் கொடுத்தார். அதன்பிறகு சண்டை காட்சி நிறைந்த படங்களில் ஜோதிலட்சுமி ஒரு ரவுண்ட் வந்தார். ‘நடிகைக்கு ஃபீல்டில் இருந்தால்தான் மதிப்பு. ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டால் யாரும் அவரை தேடப் போவதில்லை’ என்பதால் கிடைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையைக் கேட்டதால் அவர் சாகும்வரை நடித்தார். விவேக்குடன் நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்து பேர் வாங்கினார்.

நடிகையும் குடும்பப் பெண்தான்

எம்.ஜி.ஆர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது மாதந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். நடிகர் சங்க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளரின் கேள்விகளுக்குப் பதில் கூறினர். ஒரு நிருபர் எம்.என்.ராஜத்திடம் ஏன் குடும்பப்பெண்கள் நடிக்க வருவதில்லை என்றார். இதற்கு பதிலளிக்க ராஜம் தடுமாறினார். உடனே எம்.ஜி.ஆர் எழுந்து ‘ஏன் வருவதில்லை. இப்போது ராஜம் வந்திருக்கிறாரே. இவரும் குடும்பப் பெண்தானே. இவருக்கும் குடும்பம் இருக்கிறது. கணவர் குழந்தைகள் இருக்கின்றனர்’ என்றார். 

நடிகை எப்படி இருக்க வேண்டும்?

நடிப்பு என்பது நடிகையருக்கு வாழ்வாதாரம் தரும் ஒரு தொழில் என்பதை எம்.ஜி.ஆர் அடிக்கடி மற்றவர்களுக்கு நினைவுபடுத்தினார். நாடக நடிகையர் நாடகம் முடிந்ததும் மறுநாள் ஊரைச் சுற்றிப் பார்க்க போகக் கூடாது. ஜவுளி எடுக்க வேண்டும் என்றால். வீட்டுக்கு கொண்டுவரச் சொல்லி சேலை துணிமணிகளை எடுக்க வேண்டும். அனாவசியமாக வெளியே போய் ரசிகர்களின் மத்தியில் தொல்லைக்கு ஆளாகக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்ததை ஜி.சகுந்தலாவின் பேட்டி வாயிலாக அறிகிறோம்.

வீண் அரட்டை கூடாது 

சினிமாவிலும் தன் செட்டில் இருக்கும் நடிகையரும் பெண்ணின் பெருமை காப்பவராக இருக்கவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாகவும் இருந்தார். பெண்கள் யாரோடும் பேசி சிரித்து அரட்டை அடிப்பது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது. நடிக்க வந்தால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நடிகையரிடம் யாரும் கதையளந்தால் அவருக்கு அடி விழும்; நடிகையருக்கும் திட்டு விழும். 

இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்க

நடிகையர் ஆண்களை வெட்டி அதிகாரம் செய்வது தகாது என்றும் எம்.ஜி.ஆர் கருதினார். ஒரு முறை சரோஜாதேவி ஷாட் முடிந்ததும் ‘ஏ ஃபேனை போடுப்பா’ என்று ஆயாசமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘உன்னால் செய்யக்கூடிய வேலையை ஏன் அடுத்தவருக்கு ஏவுகிறாய்’ என்று கடிந்து கொண்டார். லட்சுமி ஒரு நாள் மதிய இடைவேளையின் போது உறங்கிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ன உறக்கம் என்று எழுப்பிக் கேட்டதற்கு, ‘நேற்று வீட்டில் கரன்ட் இல்லை ஃபேன் ஓடவில்லை’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே வீட்டில் இருக்கும் வசதியைக் கொண்டு இருக்க பழகிகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ஒருமுறை ஏ.வி.எம் சரவணனிடமும் இது போன்ற ஓர் அறிவுரையைக் கூறினார். ‘வசதியாக வாழலாம் ஆனால் ஆடம்பரம் கூடாது’ என்பார். எனவே நடிகைகள் கண்ணியமாக வாழ வேண்டும். மற்றவர்களும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது.

குடும்ப உறவை மதித்த எம்.ஜி.ஆர்

நடிகையும் குடும்பப் பெண்தான் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்ட எம்.ஜி.ஆர் திருமணமான பெண்களுடன் ஜோடி சேர்வதை தவிர்த்தார். ஈ.வி.சரோஜாவின் சொந்தத் தயாரிப்பான கொடுத்து வைத்தவளில் நடித்தபோது காதல் காட்சிகளை மட்டும் ப.நீலகண்டன் இயக்கட்டும். சரோஜாவின் கணவர் இயக்க வேண்டாம். அது சரோஜாவுக்கு அசௌகரியமாக இருக்கும் என்று ராமண்ணாவை தவிர்த்துவிட்டார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் திருமண உறவை மதித்தார். 

முழங்காலுக்கு மேல் ஏறிய பாவாடை

சர்வாதிகாரி படப்பிடிப்பில் அஞ்சலிதேவி ஒரு சுற்று சுற்றி கீழே விழும் காட்சியில்  நடித்தபோது எம்.ஜி.ஆர் ரீடேக் எடுக்கும்படி கூறினார். இயக்குனரும் அஞ்சலி தேவியும் ஏன் சரியாகத்தானே இருந்தது என்றனர். எம்.ஜி.ஆர் இயக்குனரிடம் அஞ்சலி சுற்றி வந்து கீழே விழுந்தபோது அவர் பாவாடை முட்டிக்கு மேலேறிவிட்டது என்றார். சட்டென்று அதிர்ந்து போனார் அஞ்சலிதேவி. தனது மானத்தை காப்பாற்றிய எம் ஜி ஆருக்கு நன்றி கூறினார்.

முற்காலத்தில்  உயர் குடிப்பெண்கள் மட்டுமே முட்டியை மறைத்து உடை அணியும் அதிகாரம் பெற்றிருந்தனர். சினிமாவில் கதாநாயகிகளும் முழங்காலை மறைத்து தான் உடை அணிவர்.  எனவே முட்டி தெரிவது ஆபாசம் என்பதால் எம் ஜி ஆரை ஆபத்பாந்தவனாக அஞ்சலி கருதினார். உடனே ரீடேக் எடுக்கப்பட்டது. கதாநாயகியின் நடை உடையில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்பதை எம் ஜி ஆர் விரும்பினார். நடிகை என்றாலும் அவளும் பெண் தானே? அவருக்கும் மானம் மரியாதை உண்டல்லவா? என்று எம் ஜி ஆர் கருதியதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறார் அஞ்சலிதேவி.

அவர் குணச்சித்திர நடிகை

பணம் படைத்தவன் படத்திற்காக ‘’கண் போன போக்கிலே கால் போகலாமா’’ என்ற பாட்டுக்கான படப்பிடிப்பு நடந்த போது அந்தப் பாட்டு ஒரு கிளப் டான்ஸ் என்பதால் சௌகார் ஜானகிக்கு கால்கள் தெரியும்படியான குட்டை பாவாடை தரப்பட்டது. செட்டுக்கு வந்த எம் ஜி ஆர் சௌகார் ஜானகியின் உடையை பார்த்துவிட்டு காஸ்டியூமரை அழைத்தார். ‘’அவர் கவர்ச்சி நடிகை அல்ல. குணச்சித்திர நடிகை. அவருக்கு பெண் குழந்தைகள் உண்டு. இந்த டிரஸ் வேண்டாம் உடம்பை மூடியிருக்கும்  உடை கொடுங்கள்’’ என்றார். பின்பு கணுக்கால் வரை தொங்கும் நீண்ட பாவாடையும் மேல் சட்டையும் அணிந்து சௌகார் ஜானகி நடித்தார். பாட்டு இன்றும் எம் ஜி ஆரின் புகழுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

என் மகன் விவரம் தெரிந்தவன்

திருமணமான நடிகைகளின் திருமண வாழ்க்கை மற்ற பெண்களை போல சிறப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு குடும்பங்களில் கணவர் பிள்ளைகள் போன்றவரால் எந்த நெருக்கடியும் ஏற்பட தான் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நாடோடி மன்னன் படத்தில் கத்திகுத்து பட்டு தண்ணீரில் விழுந்துகிடக்கும் பானுமதியை எம் ஜி ஆர் தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடிக்க பானுமதி மறுத்துவிட்டார். என் மகன் பரணி விவரம் தெரிந்தவன் அவன் என்னை ஒரு ஆண் தூக்கிக்கொண்டு போவதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே அவர்களுக்குள் சற்று உரசல் இருந்து வந்ததால்ல் எம் ஜி ஆர் முழு பணத்துக்கான காசோலையைக் கொடுத்து இனி தன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார். பானுமதியோ ஜானகி எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அந்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்.

திருமணமான நடிகைகளுக்கு இருக்கும் நெருக்கடியை புரிந்துகொண்ட எம் ஜி ஆர் அதன்பிறகு திருமணமான நடிகைகளோடு நடிப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார். அதே படத்தில் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார். அவர் திருமணம் செய்துகொண்ட பின்பு ஜெயலலிதா அதன் பிறகு லதா என தன் கதாநாயகிகளை அவர் தெரிவு செய்தார்.

தம்பி மனைவியோடு டூயட்டா?

அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆருக்கு  விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று  கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே  மதித்தார். எனவே விஜயகுமாரி கணவன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார். [எஸ் எஸ் ஆரோடு ஒரு மோதிரமோ மாலையோ கூட மாற்றிக்கொள்ளாமல் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த விஜயகுமாரி அவர் தன் சினிமா வாய்ப்புகளை கெடுப்பதைக் கண்டு மனம் வெதும்பி பிரிந்துவிட்டார். பின்பு பராசக்தி படத்தை தயாரித்த பெருமாள் முதலியாரை முறையாகத் திருமணம் செய்துகொண்டார்]

வெளியூர்களில் நடிகையர்களுக்கு பாதுகாப்பு

நாடகத்தில் நடிக்க நடிகையரை வெளி ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். அவர்கள் வெளியில் வரக் கூடாது ரசிகர்களால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார். எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் தன் பெயரில் நாடக மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக ஜி சகுந்தலா நடிப்பார். அப்போது நடிகையர் கோவிலுக்கு போகவோ ஷாப்பிங் போகவோ எம் ஜி ஆர் அனுமதிக்க மாட்டார்.. அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பிறகே எம் ஜி ஆர் தன் காரை எடுக்க சொல்வார்.

சினிமாவிலும் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும் போது யாராவது தன் குழுவில் உள்ள பெண்களை கேலி செய்தால் அடித்து உதைத்து அந்த இட்த்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடுவார். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்பதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

காஷ்மீரில்

எம்.ஜி.ஆர் லட்சுமி மஞ்சுளாவுடன் காஷ்மீர் நகர் வீதியில் இதயவீணைக்காகப் படப்பிடிப்பு நடத்தியபோது பொதுமக்கள் படப்பிடிப்புக்குப் பகுதிக்குள் வராமல் இருக்க கயிறு கட்டியிருந்தனர். அதையும் மீறி சில இளைஞர்கள் உள்ளே புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்தனர். எம்.ஜி.ஆர் உடனே நடிகைகளை அருகில் இருந்த கடைக்குள் தள்ளி விட்டு ஷட்டரை இழுத்துவிட்டார். அவர்கள் உள்ளே இருந்த ஒரு கண்ணாடி வழியாக வெளியே பார்த்தனர். அங்கே எம்.ஜி.ஆர் அந்தக் காலிப் பசங்களோடு மூர்க்கமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ‘எம்.ஜி.ஆர் படத்தில் வருவதைப் போலவே  இந்த நிஜ சண்டை இருந்தது’ என்கிறார் லட்சுமி.

மைசூரில் 

கங்கா கெளரி படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது சிலர் அங்கிருந்த ஜெயலலிதாவிடம் வந்து நீங்கள் கர்நாடகாவில் தானே பிறந்தீர்கள் அதனால் ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஜெயலலிதா தமிழ் ஒழிக என்று சொல்ல மறுத்துவிட்டார். கூட இருந்த படப்பிடிப்புக் குழுவினர் வற்புறுத்தியும் ஜெயலலிதா சொல்லவில்லை. கன்னடர்கள் படப்பிடிப்பு நடத்தவிடமாட்டோம் என்று கலாட்டா செய்தனர். இந்த விஷயம் தெரிந்து அருகில் வேறு ஊரில் ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட்டார். இப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம்.ஜி.ஆர் இங்குதான் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினர். ஜெயலலிதாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து  வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட்  நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்.

ஜப்பானில் 

வெளியூர் வெளிமாநிலம் என்றில்லை வெளி நாடாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிகையரிடம் சில்மிஷம் செய்பவர்களை அடித்து உதைக்க தயங்கியதே இல்லை. ஜப்பானில் எஃஸ்போ 70-ல் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த போது அங்கு ஒருவர் சந்திரகலாவை கேலி செய்தார். ‘அவரை தன் கறுப்புக் கண்ணாடி வழியாக தூரத்திலிருந்து கவனித்துவந்த எம்.ஜி.ஆர் அருகில் வந்து பட்டென்று அடித்தார். அடி வாங்கியவர் அங்கிருந்து ஓடிப் போய்விட்டார். இது வெளிநாடாயிற்றே, சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அநியாயத்தைக் கண்டவுடன் வழக்கம் போல எம்.ஜி.ஆர் பொங்கிவிட்டார். அவர் நல்ல குணத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை மாறாக அடி வாங்கியவர் தன் தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்புக் கேட்டார். இதனால்தான் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது நாங்கள் பயமின்றி பாதுகாப்பாக உணர்வோம்’ என்கிறார் ஜி.சகுந்தலா.

யாராக இருந்தாலும் கண்டித்தார்

நடிகைகளுக்குத் துன்பம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்க தயங்கியதே இல்லை. ஓர் அமைச்சரால் தனக்குத் தொல்லை என்று முறையிட்ட ஓர் இளம் நடிகைக்கு ஆதரவாக அந்த அமைச்சரை அழைத்துக் கண்டித்தார். 

நடிகைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், நடிகர்கள் பெண்களிடம் தவறு செய்த போது அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ‘கல்லூரிப் பெண்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் சுமன்’ மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை கிடைக்கச் செய்தார். சுமனும் நடிகர்தானே என்று எம்.ஜி.ஆர் அவருக்கு இரக்கம் காட்டவில்லை வாழ்க்கை வீணாகப் போன இளம் பெண்களுக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார்.. நடிகன் என்றால் இளம் பெண்களை மயக்கி அவர்கள் வாழ்வைச் சீரழிக்கலாம் என்பதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. நடிகருக்குக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

ஆயிரம் ரூபாய் பந்தயம்

ஒரு பட தயாரிப்பு நிறுவனம் எம்.ஜி.ஆரை, தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது மூத்த தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசன் ஒரு தகவலை தெரிவித்தார். ‘இந்த நிறுவனம் அழகான சாகசமான பெண்களைக் காட்டி கதாநாயக நடிகர்களைக் கவிழ்த்துவிடும். உங்களையும் கவிழ்த்துவிட திட்டமிடுவார்கள்’ என்றார். அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர், ‘என்னை யாரும் அப்படிக் கவிழ்க்க முடியாது. எவ்வளவு பந்தயம்’ என்றார். முக்தாவும் ‘ஆயிரம் ரூபாய்’ என்றார். இது நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு மேடையில் முக்தா இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘எம்.ஜி.ஆர் மிகுந்த கட்டுப்பாடு உடையவர் அவரை யாரும் கவிழ்க்க முடியாது’ என்றார். எம்.ஜி.ஆர் உடனே அவரை ஆழமாக பார்த்தார். முக்தா, ‘என்னண்ணே’ என்றார். ‘அந்த ஆயிரம் ரூபாய் எங்கே’ என்றார் எம்.ஜி.ஆர். கூட்டம் வெடித்துச் சிரித்தது. 

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த திரையுலகில் நடிகையரின் கண்ணியத்தைக் காப்பதை தன் கடமையாகக் கருதினார். அவர்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை தன்னால் முடிந்தவரை தீர்த்துவைத்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர் படத்திலும் நிஜ வாழ்விலும் பெண்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டதால் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்தபோது மக்கள் அதை நம்பி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசுப் பணியாளர் முதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரை பெண்களைத் தாய்க்குலம் என்றே அழைத்தனர், மதித்தனர். காவல் நிலையத்திலும் பெண்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டன. நடிகையருக்கும் சரி சாதாரணப் பெண்களுக்கும் சரி எங்கெங்கு அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கே நான் வந்து இரட்சிப்பேன் என்று கூறிய கண்ண பரமாத்மாவாக எம்.ஜி.ஆரைக் கருதியதில் வியப்பொன்றும் இல்லை.