Published:Updated:

‘‘சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம்..!’’ - கலைப்புலி தாணு

சனா
‘‘சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம்..!’’ - கலைப்புலி தாணு
‘‘சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம்..!’’ - கலைப்புலி தாணு

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடன் பிரச்னையின் காரணமாக சில நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலைக்குக் காரணம் ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் என்று எழுதி வைத்துள்ளார். இந்தச் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்புச் செழியனை உடனே கைது செய்ய வேண்டுமென்று அவருக்கு எதிராக சசிகுமார், அமீர், சுசீந்திரன், விஷால் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அன்புச் செழியனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ, மந்திரி என யார் வந்தாலும் விடமாட்டோம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இந்நிலையில் ஃபைனான்ஸியர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சினிமா வட்டராத்தில் தனது முதல் ஆதரவை ட்விட்டரில் பதிவு செய்தார் இயக்குநர் சீனு ராமசாமி. அதில் அவர், ‘எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்புச் செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாகச் சித்திரிக்கப்படுவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே’ என்று ட்விட் தட்டியிருந்தார். இவரது இந்த ட்விட் சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், இவருக்குப் பின்னர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சினிமாவைச் சேர்ந்த பலரும் பேச ஆரம்பித்தனர்.

தயாரிப்பாளர் டி.சிவா அன்புச் செழியனுக்கு ஆதரவாகப் பேசும் போது, ''தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே கிடையாது. திரையுலகினர் கந்து வட்டி இருப்பதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது. ஒரு கம்பெனி ஆரம்பிக்க ஆறு மாத காலம், பேங்குக்கு அலைந்தால்கூட பணம் கிடைப்பதில்லை. ஆனால், லெட்டர் பேட்டில் எழுதி கொடுத்தால் ஃபைனான்ஸியரிடமிருந்து உடனே பணம் கிடைத்துவிடும். ஒரு குறிப்பிட்ட பத்து ஃபைனான்ஸியர் இல்லை என்றால் தமிழ் சினிமாவில் படம் எடுக்கவே முடியாது'' என்றார். ‘

இயக்குநர் சுந்தர்.சி  பேசும் போது, ''அசோக் குமார் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய மரணத்துக்கு ஃபைனான்ஸியரை மட்டும் குறைசொல்வது எந்த விதத்தில் நியாயம். சினிமா என்பது சரியான திட்டமிடல். நான் 12 வருடமாக ஃபைனான்ஸ் வாங்கி வருகிறேன். ஃபைனான்ஸியரும் டைரக்டர், மியூசிக் டைரக்டர் மாதிரி அவருடைய தொழிலை செய்து கொண்டிருக்கிறார். ஃபைனான்ஸியர் கொடுத்த பணத்தைக் கேட்பது, எந்த விதத்தில் தப்பு என்பது எனக்குத் தெரியவில்லை. கடன் கொடுத்தவர் கேட்கத்தான் செய்வார். அதை எப்படித் தப்பு என்று சொல்லலாம். கடந்த எட்டு வருடமாய் என் படங்களின் தயாரிப்புக்கு அன்பு அண்ணனிடம்தான் ஃபைனான்ஸ் வாங்கிக் கொண்டிருக்கிறேன். வருகின்ற நியூஸ் எல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. மத்தவங்க சொல்கிற மாதிரி அன்பு அண்ணன் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டார் என்பதெல்லாம் சுத்தப் பொய். நானே போன் பண்ணி பணம் கொடுக்க கொஞ்சம் லேட் ஆகுது அண்ணன்னு சொன்னாத்தான் உண்டு. அவராக போன் பண்ணிக்கூட கேட்டதில்லை. அன்பு அண்ணன் எப்போதும் நெருக்கடி கொடுத்ததே இல்லை'' என்று கூறியுள்ளார். 

விஜய் ஆண்டனி,  ஃபைனான்ஸியர் அன்புவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அன்புச் செழியனுக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது அவர், “அசோக் குமாரின் தற்கொலை எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அன்புச் செழியனை எனக்கு ஆறு வருடங்களாகத் தெரியும். என்னுடைய முதல் தயாரிப்புப் படமான 'நான்' படத்துக்கு அன்புச் செழியன் சார்தான் கடன் கொடுத்தார். அப்போது என்னிடம் படம் தயாரிக்க வேண்டாமென்று அறிவுரை வழங்கினார். அவர் நல்ல மனிதர். எளிமையான மனிதர், கடின உழைப்பாளி. ஐம்பது ரூபாய் கூட அவருக்குச் செலவு செய்யத் தெரியாது. கந்துவட்டிக்கு அன்புச் செழியன் பணம் கொடுத்ததே இல்லை. அவரை கந்துவட்டிக்காரர் என்று சொல்வது வருத்தமளிக்கிறது'' என்று கூறியுள்ளார். 

நடிகை தேவயானி அன்புச் செழியன் பற்றி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர், ''நானும், என் கணவரும் அன்புச் செழியனை ஜென்டில் மேனாகத்தான் பார்த்திருக்கிறோம். 'காதலுடன்' படத்தின் வேலைகள் முடிந்த பிறகுதான் அன்புச் செழியன் சாரை நேரில் பார்த்தேன். என்னைப் பார்க்காமல், சந்திக்காமலே நம்பிக்கையின் காரணமாக கடனாகப் பணம் கொடுத்தார். எப்போதும் மரியாதையாக நடந்து கொள்வார். அவரைப் பற்றி வரக்கூடிய செய்திகள் எல்லாம் பொய்'' என்றார். 

இயக்குநரும், தயாரிப்பாளருமான மனோ பாலா பேசும் போது, ''நான் ‘சதுரங்க வேட்டை' படத்தை எடுக்கக் காரணம் அன்புச் செழியன். அவர் இல்லை என்றால் நானில்லை. ஒரு படம் எடுக்கணும்ணேனு போனில் சொன்னேன். உடனே ஆபீஸ் வரச் சொன்னார். ஆபீஸ் போய் பார்த்த மூன்று மணி நேரத்துக்குள் பணம் வந்துவிட்டது. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்கிறேன்'' என்றார். 

தயாரிப்பாளர் தாணு பேசும் போது, ''அன்புச் செழியன் எங்களுக்குப் பணம் தரவில்லை என்றால் எங்களால் படம் எடுத்திருக்கவே முடியாது. சிவகார்த்தியேகன் நடித்த 'ரஜினி முருகன்' படம் வெளியான நேரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் தனது பணத்தை விட்டுக்கொடுத்தவர் அன்புச் செழியன். 'உத்தமவில்லன்' ரிலீஸ் ஆனபோது பண உதவி செய்தார். 'கபாலி' படம் ரிலீஸாகி இரண்டு நாள்கள் கழித்துதான் அன்பு தம்பிக்குப் பணமே கொடுத்தேன். எந்த நேரத்தில் போனாலும், ''என்ன வேண்டும், நான் என்ன செய்யணும்'' என்றுதான் கேட்பார். சசிகுமார் நினைச்சிருந்தா இந்தப் பிரச்னையை ஈஸியா முடிச்சிருக்கலாம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் சங்கம் என எல்லாவற்றிலும் உறுப்பினராக இருக்கிறார் சசிகுமார். சங்கத்திடம் வந்திருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும். அன்புச் செழியன் ரொம்ப தங்கமான நபர்’’ என்று கூறினார். 

அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டப்போது அன்புச் செழியனுக்கு எதிராக பலர் அறிக்கை விட்ட நிலையில், தற்போது அன்பிற்கு ஆதரவு அலைகளும் பெருகி வருகின்றன.