Published:Updated:

``எங்கள் குழந்தைகளுக்குச் சிறகுகளையும் வேரையும் கொடுத்திருக்கோம்!” ‘தலைவாசல்’ விஜய் #VikatanExclusive

``எங்கள் குழந்தைகளுக்குச் சிறகுகளையும் வேரையும் கொடுத்திருக்கோம்!”  ‘தலைவாசல்’ விஜய் #VikatanExclusive
``எங்கள் குழந்தைகளுக்குச் சிறகுகளையும் வேரையும் கொடுத்திருக்கோம்!” ‘தலைவாசல்’ விஜய் #VikatanExclusive


“ஆக்டிங் ஃபீல்டுக்கு வந்து 25 வருஷத்துக்கும் மேலாகுது. நூற்றுக்கணக்கான படங்களில் நடிச்சுட்டேன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட ரோல். ஆனா, பல வருஷங்களுக்குப் பிறகு 'அழகு' சீரியல்மூலம் மறுபடியும் சீரியலில் மனசுக்கு நிறைவான ரோலில் நடிக்கிறேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் 'தலைவாசல்' விஜய். சன் டிவி 'அழகு' சீரியலில் பழனிச்சாமி வாத்தியாராக நடிப்பவர். 

" 'அழகு' சீரியலில் எப்படி கமிட்டானீங்க?" 

"வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் பாசிட்டிவா அணுகும், ஒத்த அலைவரிசையில் வாழும் தம்பதி. சிக்கலான சூழலில் கரம் பிடிச்ச ரெண்டு பேரும், அன்பால் குடும்பத்தை கொண்டுபோறாங்க. குழந்தைகள் அஞ்சு பேரையும் பொறுப்பா வளர்த்து, அவங்களை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துப்போகும் யதார்த்தமான குடும்பப் பின்னணிச் சூழல். இந்தக் கதையை கேட்க நல்லா இருந்துச்சு. ஆனா, 'நமக்குச் சரிவருமா'னு சின்ன தயக்கம். 'நல்ல கதை. நாம ரெண்டு பேரும் நடிக்கலாம். மக்களால் ரசிக்கப்படும்னு நம்பிக்கையிருக்கு'னு நடிகை ரேவதி சொன்னாங்க. ஒரு தம்பதி எப்படி இருக்கணும்; குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்பதை மையப்படுத்தியும், கோபம் எந்த வகையிலும் உதவாது என்பதை உணர்த்தும் வகையிலும், 'அழகு' சீரியலில் கமிட்டாகி நடிக்கிறோம்.'' 

"நிறைய வருஷம் கழிச்சு சீரியல் பயணம்... இந்த அனுபவம் எப்படி இருக்கு?" 

"ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சுட்டு, தூர்தர்ஷன்ல ஒளிபரப்பான 'நீலாமாலா' மலையாள சீரியல்மூலம் என் நடிப்புப் பயணம் ஆரம்பிச்சது. அப்புறம்தான் பல மொழிப் படங்களில் நடிச்சேன். சினிமா, சீரியல், விளம்பரம், டாக்குமென்ட்ரி என எதுவா இருந்தாலும், என் ஆக்டிங் சிறப்பா இருக்கணும் அவ்வளவுதான். நல்ல கதையில் நடிச்சா எப்படியும் மக்கள் மனசில் இடம்பிடிக்கலாம். சீரியல், சினிமா பாகுபாடெல்லாம் பார்க்கிறதில்லை." 

"ரேவதி உடன் இணைந்து நடிக்கும் அனுபவம்..." 

"வொண்டர்ஃபுல் நடிகை அவங்க. அவங்களும் நானும் பல படங்களில் நடிச்சிருந்தாலும், ஜோடியாக நடிச்சதில்லை. இந்த சீரியலில் அழகம்மை ரோலில் என் மனைவியா நடிக்கிறாங்க. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரின் பேச்சை இன்னொருத்தர் வேத வாக்கா எடுத்துட்டு நடக்கிற மாதிரி கதை. அதனால என்னை 'பொண்டாட்டி தாசன்'னும், ரேவதியை 'புருஷன் தாசன்'னும் பலரும் சொல்வாங்க. நாங்க ஏன் இன்னொருத்தர் பேச்சை மீறாம நடந்துக்கிறோம் என்பதற்கான காரணம் போகப்போக ஆடியன்ஸூக்குத் தெரியவரும். நம்ம பிரச்னையை நாமதான் எதிர்கொண்டாகணும். எந்தச் சூழலிலும் நேர்மையா செயல்படணும் என்பதை நோக்கிப் பயணிக்கும் தம்பதி. எங்க சீன்ஸைப் பற்றி ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி நடிப்போம். நடுவுல சினிமா பற்றியும் பேசுவோம்." 

" 'அழகு' சீரியலில் உங்க ஆக்டிங் பற்றி மனைவி என்ன சொன்னாங்க?" 

"நல்லா இருக்குனு சொன்னாங்க. 'இதுக்கு முன்னாடி பல ரூபங்களில் உங்களைப் பாத்திருக்கிறோம். இந்த 'அழகு' சீரியல்ல ஓர் ஆசிரியரா, வித்தியாசமான ரோல். பல வருஷத்துக்கு மக்கள் மனசுல இடம்பிடிக்கும் ரோல்'னு தெரிஞ்சவங்க பலரும் சொன்னதில் சந்தோஷம்." 

"உங்க பிள்ளைங்க என்ன பண்றாங்க?" 

"ஸ்போர்ட்ஸ் பிளேயரான என் பையன், மாஸ்டர்ஸ் இன் சைக்காலஜி முடிச்சுட்டு, பிரைவேட் கம்பெனியில் வொர்க் பண்றான். பொண்ணு ஜெயவீணா, செகண்ட் இயர் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் படிச்சுட்டிருக்காங்க. நேஷனல் லெவல் நீச்சல் வீராங்கனை. கடந்த செப்டம்பரில் நடந்த சீனியர் காம்படீஷனில், 'இந்தியாவின் அதிவேகப் பெண் நீச்சல் வீராங்கனையாகத் தேர்வாகியிருக்காங்க. தொடர்ந்து தன் துறையில் உயரணும்னு பயிற்சி எடுத்துட்டிருக்காங்க." 

"சீரியல்ல அன்பான அப்பா. நீங்க நிஜ லைஃப்ல எப்படியானவர்?" 

"ஆக்டர் என்ற பிம்பத்தைவிட, ரெண்டு குழந்தைகளுக்கு அப்பா என்பதுதான் எனக்குப் பிடிச்ச விஷயம். 'குழந்தைகள், நம் மூலமாக இந்தப் பூமிக்கு ஆண்டவனால் அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்குச் சிறகுகளையும் நல்ல வேரையும் கொடுக்கவேண்டியது நம் கடமை. அதுக்கு மேல நமக்கு எந்தக் கடமையும் இல்லை' என்பது கலீல் ஜிப்ரானின் வரிகள். இறக்கையும் வேரும் என்பது, குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது, நல்லது கெட்டதை எடுத்துச்சொல்றது, பிரச்னைகளுக்கு நல்ல சொல்யூஷன் கொடுக்கிறது, அவங்களை அன்பான மனநிலையில் வளரவைப்பது. அதை நானும் என் மனைவியும் சிறப்பா செய்றோம். என்ன வேலை இருந்தாலும், தினமும் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கிப் பேசறோம். அவங்களைப் பேசவிட்டு, அதுக்கு மதிப்பு கொடுக்கிறோம். அதனால், பிள்ளைகளும் எந்தப் பிரச்னைனாலும் எங்ககிட்ட ஓபனா சொல்றாங்க. அதனால், நிஜ அப்பாதான் சீரியலிலும் பிரதிபலிக்கிறான்." 

"அப் கம்மிங் படங்கள் என்னென்ன?" 

"தமிழில் 'செய்', 'கேணி', 'கடல் குதிரை', 'நூறு பர்சன்ட் காதல்'. மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடிச்சுட்டிருக்கேன்."