Published:Updated:

ஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..!

ஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..!
ஒரே வருடத்தில் ரஜினி, தனுஷ், விஷாலுக்கு ரெண்டு படங்கள்... 2018 தமிழ் மூவிஸ் லிஸ்ட்..!

பல புதுமுகங்களுக்கான அடையாளம், சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி என ஓரளவு ஆரோக்கியமானதாக அமைந்தது இந்த வருட தமிழ் சினிமா. மேலும் ரிச்சி, வேலைக்காரன், அருவி, பலூன் என இந்த வருடம் வெளியாகும் படங்களே வெயிட்டிங்கில் இருக்க, அடுத்த வருடத்துக்கான ப்ளே லிஸ்ட் தயாராகிவிட்டது. 2018ல் வெளியாக இருக்கும் அதிக எதிர்பார்ப்புள்ள படங்களின் பட்டியல் இதோ...

இமைக்கா நொடிகள்:

ஹாரர் பட வரிசையில் நல்ல வரவேற்பைப் பெற்றது  `டிமாண்டி காலனி'. இயக்குநர் அஜய் ஞானமுத்து மேலும் கவனம் குவிய அவரின் அடுத்த படமான `இமைக்கா நொடிகளி'ல் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா என இணைந்த கூட்டணியால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. கூடவே படத்தின் டீசர் வெளியான பின்பு சி.பி.ஐ அதிகாரி நயன்தாரா, ஆன் ஏரில் கொலை மிரட்டல் விடும் வில்லன், கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி என இன்னும் பரபரப்பு அதிகரிக்க படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

இறவாக்காலம்:

'There are no rewards or punishments, only consequences' படத்தின் டீசர் டிஸ்க்ரிப்ஷனில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாக்கியம் கவனிக்க வேண்டியது. கூடவே இயக்குநர் அஸ்வின் சரவணனின் முந்தைய படமான `மாயா' நியோ நாயார் திரைக்கதையில் வெளியாகி அலரவிட்டதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. `இறவாக்காலம்' கண்டிப்பாக ஒரு த்ரில்லர், டீசரின் துவக்கத்தில் வரும் அன்று, முதல் பாதி கொண்டாட்டமாகவும், பின்பு அழுகையும் சோகமாகவும் மாறுவது என நிறைய கீ பாயின்ட்ஸ் மட்டும் கொடுத்திருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கபி என நடிகர்களும் சரி, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, ரான் ஈதன் யோகனின் இசை என டெக்னிக்கல் டீமும் சரி டீசரிலேயே நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருப்பதால், பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி. 

மெர்குரி:

பல வருடங்கள் கழித்து வசனமே இல்லாமல் வர இருக்கும் படம் என்பது `மெர்குரி'யின் பெரிய ஸ்பெஷல். கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், ஆனால், தன் படத்தில் வழக்கமாக நடிக்கும் யாரையும் பயன்படுத்தாது பிரபுதேவா, சனத், இந்துஜா எனப் புது டீம் பிடித்திருப்பதும் ஃப்ரெஷ் பீல் கொடுக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பீட்சாவுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படம் இது. கூடவே திரு ஒளிப்பதிவு என டெக்னிக்கலி ஸ்ட்ராங்கான கூட்டணியும் அமைந்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

நரகாசூரன்:

`துருவங்கள் பதினாறு' படத்துக்கு பலத்த வரவேற்பு, `நரகாசூரன்' படத்துக்கான எதிர்பார்பையும் தூண்டியிருக்கிறது. `துருவங்கள் பதினாறு' ட்ரையாலஜியில் நரகாசூரன் செகண்ட் இன்ஸ்டால்மென்ட் எனவும் குறிப்பிட்டிருந்தது, படத்தின் டீசர் பார்த்தும் படத்தைப் பற்றி எந்த ஐடியாவும் கிடைக்காதது ரசிகர்களிடம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.  தீவிர வெயிட்டிங். அர்விந்த் சுவாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா சரண், ஆத்மிகா நடித்திருக்கும் இந்தப் படம் 2018ன் துவக்கத்திலேயே வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்கள்.

நாச்சியார்:

டீசரில் வந்த ஒரே வார்த்தை மூலம் டாக் ஷோவே வைக்கும் அளவுக்கு டாப்பிகல் சினிமாவாகியது பாலா இயக்கியிருக்கும் நாச்சியார். டீசர் பார்த்துவிட்டு படத்தில் இரண்டு ஜோதிகாவா, என்ன மாதிரியான கதைக் களம், வழக்கமான பாலா சினிமாவாக இருக்குமா? என சில கேள்விகள் எழுந்திருக்கிறது. எல்லாம் தெரிந்து கொள்ள பட ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டும்.

இரும்புத்திரை, சண்டக்கோழி 2:

அறிமுக இயக்குநர் மித்ரன் சரவணன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் `இரும்புத்திரை'. விஷால், அர்ஜூன், சமந்தா இணைந்திருக்கும் படத்தின் மோஷன் போஸ்டரும், சில ஸ்டில்ஸ் மட்டும் வெளியாகியிருக்கிறது. அவற்றிலிருந்து, விர்சுவல் மீடியம் சார்ந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் எனத் தெரிகிறது. படம் பொங்கல் ரிலீஸாக வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து விஷால் நடித்துக் கொண்டிருக்கும் படம் `சண்டக் கோழி 2'. இயக்குநர் லிங்குசாமிக்கு இது கம்பேக் படமாக இருக்கும் என நம்பலாம். 

ஜுங்கா:

`இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் `ஜுங்கா' படத்தில் இணைந்திருக்கிறது கோகுல் - விஜய் சேதுபதி கூட்டணி. விஜய் சேதுபதியே தயாரிக்கும் இந்தப் படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு ஃப்ரான்ஸில் நடந்துள்ளது. படத்தில் அவரின் கெட்டப் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியான வேகத்தில் வைரலானது. காமெடி, ஆக்‌ஷன், லவ் என சரிசமமாக கலந்துகட்டி உருவாகிவருகிறது என சொல்லப்படுகிறது. சயீஷா, ப்ரியா பவானி ஷங்கர், யோகி பாபு ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். கோகுல் - விஜய் சேதுபதி கூட்டணி என்பதால் படத்திற்கு ரசிகர்களிடம் வேற லெவல் எதிர்பார்ப்பு உள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை:

செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஹாரர் படம் என்பதாலேயே `நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உண்டு. கூடவே, பத்து வருடங்கள் கழித்து இணைந்த செல்வா - யுவன் கூட்டணி, படத்தின் டீசர், டிரெய்லர்களின் மூலம் உருவான பரபரப்பு போன்றவை படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. ஜூன் 30ம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டும் சில சிக்கல்கள் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் தொடர்கிறது. டிசம்பர் மாதம் வெளியாவதற்கான எந்த தகவலும் இல்லை என்றாலும், படத்துக்கான எதிர்பார்ப்பு அப்படியே இருக்கிறது. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க ஜி!

தானா சேர்ந்த கூட்டம்:

பொங்கலுக்கு ரிலீஸாக ரெடியாகி வருகிறது `தானா சேர்ந்த கூட்டம்'. படம் `ஸ்பெஷல் 26' படத்தைத் தழுவி உருவாகி இருப்பதாக சொல்லப்பட்டாலும் படக்குழுவினர் தரப்பிலிருந்து எந்த உறுதியான தகவலும் வரவில்லை. சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், செந்தில், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கெனவே சொடக்கு, நானா தானா ஆகிய பாடல்கள் வெளியாகி ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எனை நோக்கிப் பாயும் தோட்டா, துருவநட்சத்திரம்:

`அச்சம் என்பது மடமையடா' படம் வெளியாகும் முன்பே, தனுஷை வைத்து கௌதம் மேனன் துவங்கிய படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக்காக வெளியான மறுவார்த்தை பேசாதே எல்லாம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்க இந்தப் படம் வெளியாகும் முன் அடுத்த படமான `துருவநட்சத்திரம்' பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கௌதம். இன்னும் 10 - 15 நாட்கள் மட்டும் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது, அது முடிந்துவிட்டால், அடுத்த வருடம் முதலில் `எனை நோக்கிப் பாயும் தோட்டா' வெளியாக அதற்கு மூன்று வாரம் கழித்து `துருவநட்சத்திரம்' படம் வெளியிடும் திட்டமிருக்கிறது என்கிறார் கௌதம் மேனன். படம் மூணு பாகங்களாக வெளியிடும் திட்டமும் இருக்கிறதாம். 

வட சென்னை:

பொல்லாதவன், ஆடுகளம் தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் ட்ரையாலஜி இந்த வட சென்னை. முதலில் மூன்று பாகங்களாக இயக்க முடிவு செய்யப்பட்டு பின்பு ஒரே பாகமாக உருவாகிவருகிறது. ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி என பலத்த கூட்டணி இணைந்திருக்கிறது. வடசென்னையை சேர்ந்த ஒரு தாதா பற்றி கதைக்களம் கொண்ட இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. 

விஜய் 62 - விஸ்வாசம்:

விஜய் - முருகதாஸ் கூட்டணி `விஜய்62' மூலம் மூன்றாவது முறையாக இணைகிறது. `அங்கமாலி டைரீஸ்' பட ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரன் மட்டும் இந்தக் குழுவில் உறுதியாகியுள்ளார். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஹீரோயினாக நயன்தாரா என சொல்லப்பட்டாலும் இன்னும் படக்குழுவினர் தரப்பிலிருந்து இது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. துப்பாக்கி, கத்தி போன்று இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் - சிவா காமினேஷனில், வி சீரிஸின் நான்காவது படமாக தயாராகிறது `விஸ்வாசம்'. வழக்கமாக படம் முடித்துவிட்டு டைட்டில் வெளியிடும் இந்த டீம், இம்முறை தலைப்பை வெளியிட்டு, ஜனவரியிலிருந்து ஷூட்டிங் செல்ல உள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், குழுவினர் பற்றி எந்த தகவலும் வெளிவராத நிலையில், தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்று மட்டும் கூறியிருக்கிறார்கள். ஒருவேளை இரண்டு படங்களும் தீபாவளி வெளியீடாக வந்தால் தல - தளபதி பட்டாசுதான்!

2.0:

2010ல் வெளியான எந்திரன் படத்தின் சீக்குவலாக உருவானாலும் 2.0 வேறு கதை, வேற களம் என்கிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன், ரஹ்மான் இசை, நிரவ் ஷா ஒளிப்பதிவு, ரசூல் பூக்குட்டி ஒலிக்கலவை என பிரமாண்ட டீம் இணைந்து பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறது. நிறைய 3டி படங்கள் 2டியில் எடுத்து 3டிக்கு கன்வர்ட் செய்யப்படும். ஆனால், 2.0 எடுத்திருப்பதே 3டியில்தான் என்பதால், ஆடியன்ஸுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 தீபாவளி வெளியடாக எதிர்பார்க்கப்பட்ட படம், தள்ளிப் போய் 2018 ஜனவரி 26ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

காலா:

`2.0'வுக்குப் பிறகு வெளியாக இருக்கும் படம், ரஜினி - ரஞ்சித் இணைந்திருக்கும் `காலா'. `கபாலி'யில் மலேஷியா போல இந்த முறை மும்பை பின்னணியில் உருவாகியிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசை, முரளி ஒளிப்பதிவு என ஒரு சிலர் மட்டும் அதே கபாலி டீமில் இருந்து வந்துள்ளனர். ஹூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டில், சயாஜி ஷிண்டே எனப் பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.