Published:Updated:

அரவிந்த், ஸ்வேத்சா, ரேணு மற்றும் நிறைய குழப்பங்கள்! - `மென்டல் மதிலோ’ படம் எப்படி?

அரவிந்த், ஸ்வேத்சா, ரேணு மற்றும் நிறைய குழப்பங்கள்! - `மென்டல் மதிலோ’ படம் எப்படி?
அரவிந்த், ஸ்வேத்சா, ரேணு மற்றும் நிறைய குழப்பங்கள்! - `மென்டல் மதிலோ’ படம் எப்படி?

அரவிந்த், ஸ்வேத்சா, ரேணு மற்றும் நிறைய குழப்பங்கள்! - `மென்டல் மதிலோ’ படம் எப்படி?

அரவிந்த் கிருஷ்ணாவுக்கு சின்னப் பிரச்னை உண்டு, கொஞ்சம் தீவிரமான பிரச்னை. உதாரணமாக "மஞ்ச கலரு உனக்குப் பிடிக்கும்தானே?" எனக் கேட்டால், "ஆமா, ரொம்பப் பிடிக்கும்" என உறுதியாகச் சொல்வான். ஆனால், "மஞ்ச கலரு, சிவப்பு கலரு ரெண்டில் எது பிடிக்கும்?" எனக் கேட்டால், சொல்ல முடியாமல் திணறிவிடுவான். ஆப்ஷன்கள் என்றால் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் அவனுக்கு. இந்தக் குழப்படி ஹீரோவுக்கு வரும் காதல்கள், அதில் வரும் சிக்கல்கள்தான் `மென்டல் மதிலோ' (Inside a Crazy Heart)

ஒரு ஹீரோ இரண்டு ஹீரோயின் என்ற டைப்பில் நிறைய காதல் கதைகள் பார்த்திருந்தாலும், படத்தில் பேசியிருக்கும் எளிய விஷயம், அழகாகப் பதிவு செய்திருந்த விதத்தால் தனித்துத் தெரிகிறது `மென்டல் மதிலோ'. படத்தின் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் மூலம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. 

முதலில் அரவிந்த், பெண்களிடம் பேசக்கூட கூச்சப்பட்டு சிதறி ஓடும் ரகம் (அதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது). பெண் பார்க்கச் சென்ற இடத்தில், கூச்சத்தில் நெளிந்துகொண்டு "இந்த வீடு சொந்த வீடுங்களா, பஸ்பாஸ் ரெனிவல் பண்ணீட்டீங்களா" ரேஞ்சில் பேசிக் கொண்டிருப்பார். தேர்ந்தெடுப்பது என்றால் பெரிய வெறுப்பு. காரணம் தேர்ந்தெடுப்பது தப்பாகிவிடுமோ என்கிற மனநிலை. இதற்கு அப்படியே நேரெதிர் கதாபாத்திரம் ஸ்வேத்சா (நிவேதா பெத்துராஜ்). உறுதியான மனநிலை, சுதந்திரமான முடிவுகள் என மிக சகஜமான, முதல் சந்திப்பிலேயே நட்புகொள்ளும் ரகம். மூன்றாவது கேரக்டர் ரேணு (அம்ருதா ஸ்ரீனிவாசன்), மிக மர்மமான பெண். திடீரெனச் சந்தித்து, திடீரென மறைந்து போய் மறுபடி வரும்படியானவள். இந்த மூவரைச் சுற்றி நிகழும் கதை இதுதான். பெண்கள் என்றாலே கூச்சப்படும் அரவிந்துக்குப் பெண் கிடைப்பதில் பெரிய சிக்கல். அப்படியே கிடைத்தாலும் முதலில் சரி எனச் சொல்லிவிட்டு பின்பு தன் முடிவு தப்பாக இருக்குமோ என்று நினைத்து 'வேண்டாம்' எனச் சொல்லிவிடுகிறார் அரவிந்த். கடைசியாக ஸ்வேத்சா - அரவிந்த் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்தச் சமயத்தில், திடீரென ஒருநாள் "இந்தக் கல்யாணம் வேணாம் ஸ்வேத்சா, சாரி" எனச் சொல்லி போனைக் கட் செய்கிறார் அரவிந்த். பிறகு என்ன, ரேணு யார் போன்ற லீட்களைக்கொண்டு நகர்கிறது படம். 

மிக இயல்பாக அதாவது, சாதாரணமாக மார்கெட்டில் இருந்து காய்கறி வாங்கிக்கொண்டு இன்ட்ரோ சீனில் தோன்றுவார் ஹீரோயின். திடீரெனப் பேருந்துப் பயணத்தில் பழக்கமாவார் இன்னொரு ஹீரோயின். படம் மிக அழுத்தமாக இருக்கக் கூடாது என சேர்க்கப்பட்டிருக்கும் நகைச்சுவைகள் தவிர மற்ற எல்லாம் இயல்பாகவே இருப்பது பெரிய ப்ளஸ். கூச்சத்தில் நெளிந்து, திணறித் திணறிப் பேசும் அரவிந்தாக, ஸ்ரீ விஷ்ணு. முதலில் அரவிந்தின் குழந்தைத் தனங்களை ரசிப்பதும், பின்பு கோபம் காட்டும் ஸ்வேத்சாவாக, நிவேதா பெத்துராஜ் (வெல்கம் டூ தெலுங்கு சினிமா). குறும்பும், மர்மமாக வரும் ரேணுவாக, அம்ருதா ஸ்ரீனிவாசன். மூவரின் நடிப்பும் கதையோடு மிகவும் பொருந்திப் போகிறது. 

"இப்போ நான் லேசா சிரிச்சேன், ஏன்னு கேட்டியா? அது மாதிரிதான் அழுததும். எனக்கு அழணும்னு தோணுச்சு அழுதேன்."

"நீ ஸ்வேத்சாவ லவ் பண்றேன்னா, ரேணு பொய்... ரேணுவ லவ் பண்ணா, ஸ்வேத்சா பொய். இதில் ரெண்டும் உண்மையா இருக்கலாம், ஆனா, ரெண்டு பொய் இருக்கவே முடியாது."

"நான் உன்ன லவ் பண்றேன். நீ என்ன லவ் பண்றியானு எனக்குத் தெரிஞ்சுக்க வேணாம். இதைச் சொல்லாமயே இருந்துட்டோமேனு நான் ஃபீல் பண்ணக் கூடாதுல அதுக்குதான் சொன்னேன்."

"நாம எடுக்கும் முடிவுக்கான மதிப்பு, என்ன கிடைக்குதுங்கிறதை வெச்சு இல்ல, எதை இழக்கறோம்ங்கிறதை வெச்சுதான்" என அநாவசியங்கள் தவிர்த்துவிட்டு படத்துக்குத் தேவையான வசனங்களை மிக அழகாக எழுதியிருந்த விதம் சூப்பர். ஸ்ரீவிஷ்ணுவின் அப்பாவாக வரும் சிவாஜி ராஜா, நண்பர்களாக வரும் க்ரீத்தி தமராஜு, கேஷவ் தீபக் படத்தில் தேவையான இடங்களில் தரும் காமெடியும், குழப்பமும் படத்திற்கு வலு சேர்க்கிறது. திருமணத்தை நிறுத்தலாம் என்கிற அரவிந்தின் போன் கால் வரை சுறுசுறுப்பாகச் செல்லும் கதை, அதன்பிறகு கொஞ்சம் மெதுவாகப் பயணிக்க ஆரம்பிப்பது மட்டும் கொஞ்சம் சோர்வைத் தருகிறது. லைவ்லியான உணர்வைக் கொடுக்கிறது வேதாராமன் ஒளிப்பதிவு. பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலும் கவர்கிறார் பிரசாந்த் ஆர்.விஹாரி. 

பெல்லி சூப்புலு, ஃபிதா, நின்னு கோரி, மென்டல் மதிலோ எனத் தெலுங்கு சினிமாவும் காதல் படங்களில் வெரைட்டி காட்ட ஆரம்பித்திருப்பது நிச்சயம் ஆரோக்கியமான விஷயம். மிக எளிமையாக, அழகாக ஒரு படம் பார்க்க விரும்புபவர்கள் குழப்பமே இல்லாமல் `மென்டல் மதிலோ'வை தேர்ந்தெடுக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு