Published:Updated:

குலேபகாவலி முதல் ஆசைமுகம் வரை... முதியவர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தப் படங்கள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-26

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
குலேபகாவலி முதல் ஆசைமுகம் வரை... முதியவர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தப் படங்கள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-26
குலேபகாவலி முதல் ஆசைமுகம் வரை... முதியவர் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தப் படங்கள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-26

முதியவர் வேடத்தில் எம்.ஜி.ஆர்

நாற்பது வயதுக்கு மேல் கதாநாயகன் வாய்ப்புப் பெற்ற எம்.ஜி.ஆர் புகழ் அடைய தொடங்கிய நாள் முதலே முதியவர் என்று அவருக்கு வேண்டாதவர்களால் அழைக்கப்பட்டார். இதனால் இயற்கையை மீறி அவர் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வயோதிகத்தின் சாயல் தெரியாமல் அவர் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. முகத்தில் சுருக்கம் இல்லாமலும் புறங்கையில் நரம்பு தெரியாமலும் அவர் தன் தோற்றத்தைப் பாதுகாத்து வந்தார்.

நடிப்பு என்றால் என்ன?

ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரிடம் ஒரு நிருபர் ‘நீங்கள் நூறு வயது வரை வாழுங்கள் ஆனால் அதுவரை இப்படித்தான் இளைஞராக நடிப்பீர்களா? உங்கள் வயதுக்கேற்ற கதாபத்திரங்களை ஏற்று நடித்தால் என்ன?’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ஒரு கடை இலாபமாக நடக்கும்போது யாராவது வியாபாரத்தை நிறுத்துவார்களா என்றார். தன் படம் வசூலை அள்ளிக்கொட்டும்போது தான் ஏன் இளைஞனாக நடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர் கூற விரும்பிய கருத்து. மேலும் அவர் நடிப்பு என்றால் என்ன? இருபது வயதுக்காரர் 80 வயது முதியவராக நடிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? அது சிறப்பான நடிப்பு என்றால் அதைப்போல நான் இருபது வயது இளைஞனை போல நடிப்பதும் சிறப்பான நடிப்பு தானே  என்று அவர்களுக்குப் புரியும்படி எடுத்துக்கூறினார். 

நடிப்பில் வயது வித்தியாசம் இருப்பது குறித்து விளக்க அப்போது மேலும் ஓர் உதாரணத்தையும் எடுத்துரைத்தார். நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் தன் முதிர்ந்த வயதில் மனோகரா நாடகத்தில் நடிக்கும்போது தர்பாருக்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரை இழுத்து வரும் காட்சியில் இந்தப் பதினாறு வயது பாலகனை என்று தன்னைக் குறிப்பிட்டபடி ஒரு நீண்ட வசனம் பேசுவார். அப்போது அந்நாடகத்தைப் பார்த்த அனைவருக்கும் அவர் வயது 60 என்பது தெரியும். இருந்தும் அந்நாடகம் வெற்றி பெற்றது. ஏன் தெரியுமா? பார்ப்போர் நடிப்பைப் பார்த்து ரசிக்கிறார்களே தவிர நடிப்பவரின் வயதைக் கருதுவதில்லை. அதனால்தான் இன்னும் என் படங்கள் நல்ல வசூலைப் பெறுகின்றன என்றார்.

முதியவர் வேடம் ஏன்?

தமிழ் பாரம்பர்யத்தில் வள்ளி திருமணம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. அதில் முருகனாக நடிப்பவர் வேலன் [இளைஞன்] விருத்தன் [முதியவர்] என்று இரு வேடம் போடுவார். யானையைக் கண்டு அஞ்சி ஓடும் வள்ளியை முதியவர் வேடத்தில் வந்து முருகன் காப்பாற்றி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி சத்தியம் வாங்குவார். எனவே, மாறு வேடங்களில் முதியவர் வேடம் என்பது தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பார்த்து ரசித்து ஏற்றுக்கொண்ட ஒரு வேடம் ஆகும். முதியவராக வரும்போது ரசிகர்களிடையே ஒரு ‘சிம்பதி’ கிடைக்கும். எனவே எம்.ஜி.ஆர் பாரம்பர்ய வெற்றி ஃபார்முலாவான முதியவர் வேடத்தை தன் பல படங்களில் பயன்படுத்திக் கொண்டார்.

எம்.ஜி.ஆர் தன் படங்களில் ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்ததால் பிற வேடங்களில் நடிக்க வாய்ப்பில்லை. எனவே அவர் போலீஸாக வரும்போதும் அவர்மீது தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு தப்பிக்கும் போதும் கதாநாயகியை வேற்றுருவில் வந்து காதலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் மாறு வேடங்களைத் தெரிவு செய்தார். முதியவர் வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் வெவ்வேறு வகையான முதியவர் வேடங்கள். அவற்றை இப்போது விரிவாகக் காண்போம்.

வேடப் பொருத்தம்

முதியவர் வேடத்துக்குரிய நரைத்த தலை, தளர்ந்த உடல், சுருங்கிய கண்கள், ஒளியிழந்த முகம், நடுங்கும் குரல் என மேக்கப், காஸ்டியூம், நடிப்பு என அனைத்திலும் எம்.ஜி.ஆர் கவனம் செலுத்தியிருப்பார். குலேபகாவலி, மலைக்கள்ளன், மகாதேவி, பாக்தாத் திருடன், படகோட்டி, தேடி வந்த மாப்பிள்ளை போன்ற சில படங்களில் முதியவராக மாறு வேடமிட்டு வந்து சில முக்கியக் காட்சிகளில் நடித்திருப்பார்.

குலேபகாவலியில் முதியவர் வேடத்தில் வந்து லக்பேஷ்வாக நடிக்கும் டி.ஆர் ராஜகுமாரியை பகடையில் ஜெயிக்கும் ரகசியத்தை அறிந்து அவரை வெல்வார். மலைக்கள்ளன் படத்தில் முதியவராக வந்து பி.பானுமதியைக் காப்பாற்றுவார் பின்னர் அவரை ரகசியமாகச் சந்திக்க இரவில் வந்த போது கூட முதியவரைப் போல நடுங்கும் குரலில் பேசி தன்னை வெளிப்படுத்துவார்

சக்கரவர்த்தி திருமகள் படத்தில் சாக்ரட்டீஸ் போன்ற தோற்றத்தில் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவர் பாடிய மனுசன் பொறக்கும்போது பொறந்த புத்தி போகபோக மாறுது என்ற பாடலில் வரும் ‘கணக்குத் தெரியாம சிலது கம்பையும் கொம்பையும் ஆட்டுது. ஆனால் காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக் காட்டுது’ என்ற வரிகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தவை ஆகும். இந்தப் பாட்டு வரிகள் சிலர் தம் செல்வாக்கு நிரந்தரமானது என நினைத்து ஆடும் ஆட்டங்களின் நிலையாமையை விளக்குவதால் அவருக்கு மிகவும் பிடித்தன. அவர் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த இடம் தெரியாமல் போனதை நேரில் கண்டவர் என்பதால் நிலையாமை தத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார். இந்தப்படம் திமுகவின் முதல் வெற்றி வாய்ப்புக்கு வழிகோலிய படமும் ஆகும்

உதய சூரியன் என்ற பெயரில் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்த எம்.ஜி.ஆர் திமுகவின் முதல் தேர்தல் பிரவேசத்தை முன்னிட்டு சாக்ரட்டீஸ் முதியவர் வேடத்தில் வந்து பாட்டிலேயே பகுத்தறிவு பிரசாரமும் செய்தார். ‘உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் -- அதை ஒப்புக்கொள்ளும் வீரருக்கு முன்னால --  நாம் கத்தி என்ன கதறி என்ன -- ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா’ என்று பாடுவார்.

பாக்தாத் திருடனில் வைஜயந்திமாலாவை ஏலத்தில் வாங்கும் அருவருப்பான முதியவராக வருவார். அவருக்குக் கூரிய ஒட்டு மூக்கும் பெரிய தொந்தியும் இருப்பதால ஆள் அடையாளமே தெரியாது. அவரிடமிருந்து தப்பிக்க நினைக்கும் வைஜெயந்திமாலாவின் காலில் சுருக்குப் போட்டு ‘’சூத்திரக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு – உன் பாச்சா ஒன்னும் பலிக்காது இங்கே செல்லு ‘’ என்று அவரை மீண்டும் குகைக்குள்ளே அனுப்பிவிடுவார். இந்த வேஷத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

படகோட்டியில் இரண்டு குப்பத்தையும் ஒற்றுமைப்படுத்த முதியவர் வேஷம் போட்டிருப்பார். சரோஜாதேவியைக் குழந்தே குழந்தே என்று கூப்பிடுவார். அதற்கு அவர் ‘’சதா குழந்தே குழந்தேன்னுட்டு விலைக்கு வாங்குன சனியன் மாதிரி’’ என்று திட்டுவார். ‘’நானொரு குழந்தை நீயொரு குழந்தை – ஒருவர் மடியிலே ஒருவரடி’’ என்ற பாட்டு இந்தத் தாத்தா வேடத்துடன் தொடங்கும் பிறகு அந்த வேடம் கலைந்து மாணிக்கமாக காட்சியளிப்பார்.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவுக்கு இங்கிலீஷ் மியூசிக் கற்றுத்தரும் வாத்தியாராக வருவார். இவரது தோற்றம் தலையில் தொப்பியும் செம்பட்டை தாடியும் வட்டக் கறுப்புக் கண்ணாடியும் பார்க்க சற்று அருவருப்பாக இருக்கும். ஆனால் ஆறுமுகம் இது யாரு முகம் – தாடியை வச்சா வேறு முகம் --  தாடியை எடுத்தா தங்க முகம்’’ என்ற பாட்டு தாத்தா வேடத்துடன் தொடங்கும்.

தாய் சொல்லை தட்டாதே படத்தில் சந்தையில் சுற்றித் திரியும் ஒரு நாடோடி முதியவராக மாறு வேடம் போட்டு வழக்கம் போல குற்றவாளிகளைப் பிடிக்க வருவார். அதில் வேடம் போட்டவர் எம்.ஜி.ஆர் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தோற்றம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். உச்சியில் வழுக்கை நரைத்த முடி மீசை தாடி, கிழிந்து ஒட்டுப் போட்ட பழைய நைந்த கோட், தோளில் ஒரு பச்சைக்கிளி கை மடக்கில் உட்கார்ந்திருக்கும் ஒரு குரங்கு, கக்கத்தில் இடுக்கிய ஒரு குடை, கையில் ஒரு தடியோடு தளர்ந்து தடுமாறும் நடை, சில சமயம் அந்தக் குரங்கு சங்கிலியைப் பிடித்த படியும் நடப்பார், கூடவே அந்தக் குரங்கு ஓடி வரும். சந்தையில் பிக்பாக்கெட் அடித்தல்,  பெண்களை, ஃபாலோ செய்தல், அவர்களோடு நடந்து வந்தபடி விசிலடித்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையில் நாக்கை துருத்தி முறைத்துப் பார்த்து குற்றவாளிகளை அதட்டுவார். கூடவே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியைப் படைத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே’’ என்று பாட்டும் பாடுவதாக அக்காட்சி அமைந்திருக்கும். காவல் நிலையத்துக்கு வந்து வேடத்தைக் கலைக்கும்போது எம்.ஜி.ஆர் என்பது தெரிய வரும். முதல் முறை இப்படம் பார்ப்போருக்கு எம்.ஜி.ஆர் என்று தெரியாது. 

ஆசைமுகம் படம் தமிழில் அந்த முதல் ப்லாஸ்டிக் சர்ஜரி பற்றிய படம் ஆகும். எம்.ஜி.ஆர் வஜ்ரவேல் என்ற ராம்தாஸ் தன்னைப் போல முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து தன் வீட்டில் புகுந்துவிட்டதை அறிந்து தன் அப்பாவின் சித்தப்பாவைப் போல ஒரு கோட் சூட் போட்ட வெளிநாட்டு முதியவர் போல மாறு வேடத்துடன் வந்து தன் வீட்டிலேயே தங்குவார். அப்போது ராம்தாசை கேலி செய்து பாடுவதாக ஒரு பாடலை எம்.ஜி.ஆர் பாடுவார் அதுதான் 'எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு' என்ற பாடல். இப்பாடல் காட்சியில் நாகேஷும் சரோஜாதேவியும் மாறு வேடமிட்ட எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவார்கள் ராம்தாசுக்கு இது கோபத்தை ஏற்படுத்தும். இந்த வேடத்தில் எம்.ஜி.ஆர் ஒரு காலை சாய்த்து சாய்த்து ஒரு கைத்தடியை ஆதரவாகக் கொண்டு நடப்பார். இதில் தலைமுடி கறுப்பும் வெளுப்புமாகக் காணப்படும் தாடி இருக்கும் கண்ணில் கூலிங்க் கிளாஸ் போட்டிருப்பார். ஒரு ஸ்டைலான கோட் சூட் போட்ட தாத்தாவாக வெளிநாட்டிலிருந்து வந்தவராகத் தோன்றுவார். இந்த மேக்கப் காஸ்டியூம் அனைத்தும் நவீன காலத்து தாத்தா போல இருக்கும்.

எம்.ஜி.ஆர் முதியவர் வேடத்தில் தோற்றம் உடை, குரல் மற்றும் வசனம் நடிப்பு முக பாவனை கை கால் அசைவு என அனைத்திலும் கவனம் செலுத்தியதோடு அந்த வேடத்திலேயே பல படங்களில் சமூக சிந்தனையுள்ள பாட்டும் பாடியிருக்கிறார். மற்ற மாறு வேடங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.