Published:Updated:

விஸ்வாசம், கில்லி, அசல், குஷி - டைட்டில் சென்டிமென்ட் தகராறுகள்!

விஸ்வாசம், கில்லி, அசல், குஷி - டைட்டில் சென்டிமென்ட் தகராறுகள்!
விஸ்வாசம், கில்லி, அசல், குஷி - டைட்டில் சென்டிமென்ட் தகராறுகள்!

விஸ்வாசம், கில்லி, அசல், குஷி - டைட்டில் சென்டிமென்ட் தகராறுகள்!

இந்த உலகமே எதிர்த்தாலும் `V'யில் ஆரம்பித்து `M'ல் முடியும் பதத்தைதான் படத்துக்கு டைட்டிலாக வைப்பேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அஜித்தும் சிவாவும். `வீரம்', `வேதாளம்', `விவேகம்', `விஸ்வாசம்' வரிசையில் அடுத்ததாக `வில்லிவாக்கம்', `விருகம்பாக்கம்' எனப் பெயர் வைத்தாலும் வைப்பார்கள் என அரண்டுபோய் கிடக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். ஆனால், இதற்கு முன்பே `டைட்டில் சென்டிமென்ட்' அட்ராசிட்டிகள் தமிழ் சினிமாவில் வகைதொகையில்லாமல் அரங்கேறியிருக்கிறது. எப்போ, எப்படி என விட்டத்தைப் பார்த்து கொசுவர்த்தியைச் சுத்துவோம்...

ரெண்டே ரெண்டு :

இது எஸ்.ஜே.சூர்யாவின் சென்டிமென்ட். முதல் படம் `வாலி' ஹிட்டாகியதும், அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய எல்லாப் படங்களுக்குமே இரண்டு எழுத்துகளில்தான் பெயர் வைத்தார். `வாலி', `குஷி', `நியூ', `இசை' என எல்லாப் படங்களுக்குமே பெயர் இரண்டு எழுத்துகளில்தான். `அன்பே ஆரூயிரே'னு ஒரு படம் வந்ததே' என நீங்கள் கேட்கலாம். அதையும் சுருக்கி `அஆ' என வைத்து ஆட்டையை முடித்தார் எஸ்.ஜே.எஸ்.

சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம் :

மதுரை மாட்டுத்தாவணி... ( மன்னித்துவிடுமய்யா ) மதுரை எம்.ஜி.ஆர் நிலையத்திற்குள் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, படித்த ஊர் பெயர்களை எல்லாம் பேப்பரில் குறித்துவைத்து டைட்டிலாகவும் வைத்தார் பேரரசு. `திருப்பாச்சி', `சிவகாசி', `திருப்பதி', என டாப் கியரில் பறந்த பேருந்து, `பழனி', `திருத்தணி' எனப் புளியமரத்தில் பாய்ந்தது. `இத்தோட இந்த சென்டிமென்டுக்கு வந்தது எண்டு' என நினைத்து பெருமூச்சு விடுவதற்குள் `திஹார்' எனப் பெயர்வைத்து பகீர் கிளப்பினார்.

அப்பவே அப்படி :

அஜித்-சிவா காம்பினேஷக்கு முன்பாகவே, தலைப்பு விசயத்தில் நின்னு விளையாடியது அஜித் - சரண் காம்பினேஷன். இந்த காம்பினேஷனின் முதல்படம் `காதல் மன்னன்'. ஆனாலும், அடுத்தடுத்த படங்களுக்குத் தமிழ்மொழியின் முதல் எழுத்தாம் `அ'வில் பெயர் பிடிக்க ஆரம்பித்தனர். அதன் விளைவுதான் `அமர்க்களம்', `அட்டகாசம்' மற்றும் `அசல்'. அடுத்ததாக `ஆ'எனும் எழுத்துக்கு மாறி `ஆயிரத்தில் இருவர்' எனும் படம் எடுத்தார். அந்தப் படம் எப்படியிருக்குமென தெரிந்துகொள்ள நீலக்கலர் வார்த்தையை க்ளிக்குங்க.

பாலும் பழமும் :

`டைட்டில் சென்டிமென்ட்'டுக்கு சிவாஜி கணேசன் - பீம்சிங் காம்போதான் முன்னோடி, முன்னாடி, பின்னாடி எல்லாமே. தமிழ் அகராதியின் பக்கங்களைப் புரட்டி `ப' வரிசையில் பல டைட்டில்களை அள்ளி எடுத்துவந்தார் பீம்சிங். `பராசக்தி'யில் அறிமுகமான சிவாஜி, இவர் இயக்கத்தில் `பதி பக்தி' எனும் திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து `பாசமலர்', `பாவ மன்னிப்பு', `பாலும் பழமும்', `பாகப் பிரிவினை ', `பாலாடை', `படிக்காத மேதை' என `ப' வரிசையில் படங்கள் கொடுத்து பாக்ஸ் ஆஃபீஸை அதிரவைத்தார்கள். ப்பா...

அல்லு, சில்லு, செதரு :

`தெறி', `மெர்சல்' என கலோக்கியல் வார்த்தைகளை டைட்டிலாக வைப்பதில் அட்லீயின் ஆரம்பகால வெர்ஷன், தரணி. `தில்', `தூள்', `கில்லி', `குருவி', `ஒஸ்தி' என எல்லாமே மாஸ், பக்கா மாஸ் தலைப்புகள்.

மாந்தோப்பில் நின்றிருந்தேன் :

பாட்டுப் புத்தகங்களைப் புரட்டியே படத்திற்கு டைட்டில் தேத்துவார் கௌதம் மேனன். ஆரம்பத்தில் `காக்க காக்க' என பக்திபாடல்கள் புத்தகத்தைப் புரட்டி தலைப்பை தேத்தியவர், தொடர்ந்து `வேட்டையாடு விளையாடு', `பச்சைக்கிளி முத்துச்சரம்' என எம்.ஜி.ஆர் ஏரியாவுக்குள் புகுந்தார். அங்கிருந்து `விண்ணைத்தாண்டி வருவாயா', `நீதானே என் பொன்வசந்தம்' என வெளியே ஒரு ரவுண்டு அடித்துவிட்டு மீண்டும் `என்னை அறிந்தால்', `அச்சம் என்பது மடமையடா' என மறுபடியும் எம்.ஜி.ஆர் ஏரியாவுக்குள் ஐக்கியமானார். அடுத்ததாக `மாந்தோப்பில் நின்றிருந்தேன்', `சிக்கு மங்கு செச்ச பாப்பா' போன்ற டைட்டில்களை எதிர்பார்க்கலாம்.

பாட்டுக்காரன் ட்ரையாலஜி :

கங்கை அமரன், ராமராஜன் எனும் வெறித்தன காம்பினேஷனில் உருவான முதல் திரைப்படம் `எங்க ஊரு பாட்டுக்காரன்'. அதைத் தொடர்ந்து `கரகாட்டக்காரன்'. கொஞ்சம் கேப் விட்டு மறுபடியும் பாட்டுக்காரனை இடையில் செருகி, `வில்லுப்பாட்டுக்காரன்', `தெம்மாங்குப்பாட்டுக்காரன்' எனும் படங்களைத் தந்து `பாட்டுக்காரன் ட்ரையாலஜி'யை தமிழ் சினிமாவுக்குத் தந்தார்கள். அதாண்னே  இது...

இதேபோன்று, கார்த்திக் சுப்பராஜும் `பீட்சா', `ஜிகர்தண்டா' என சாப்பாடு அயிட்டங்களின் பெயரையே டைட்டிலாக வைத்துவர, `இறைவி' என்ற பெயரும் என் காதில் `கிரேவி' என்றுதான் விழுந்தது. பகவானே...

அடுத்த கட்டுரைக்கு