Published:Updated:

சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! `ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’ தொடர்-1

சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! `ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’ தொடர்-1
சிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை..! `ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை!’ தொடர்-1

’நமக்கு மன ரீதியாகப் பல பிரச்னைகள் இருந்தாலும் கலக்கப்போவது யாரு ஷோ பார்க்கும் போது அது எல்லாமே மறந்து போயிடுது...’ என நம்மில் பலர் இதைச் சொல்லியிருப்போம். இல்லை, பிறர் சொல்லக் கேட்டிருப்போம். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மட்டுமல்ல, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், அது இது எது என விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் எல்லாமே அதே ரகம்தான். இந்த நிகழ்ச்சிகள் எவ்வளவு ஹிட்டடித்ததோ அதே அளவிற்கு அதில் காமெடி செய்தவர்களும் பிரபலமாகியிருக்கிறார்கள்.

அப்படி பிரபலமானவர்கள், இந்த ஷோவிற்குள் எப்படி வந்தார்கள், வரும் போது எப்படி இருந்தார்கள் என்பதில் தொடங்கி இன்று வரை அவர்களுடனான ட்ராவலைப் பற்றி பேசயிருக்கிறார் தாம்ஸன். கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், அது இது எது என இந்த மூன்று நிகழ்ச்சிகளுக்கும் இவர்தான் இயக்குநர்.

இந்த நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்க்கும் பலருக்கும் யார் இந்த தாம்ஸன் என்பதே தெரிந்திருக்காது. அதனால், இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தை அவரிடமிருந்தே தொடங்குகிறார் தாம்ஸன்.

’’லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சிட்டு என்ன பண்றதுன்னே தெரியாம ஒரு வருஷம் சும்மா சுத்திட்டு இருந்தேன். அப்போ என்னோட ஃப்ரெண்ட் உதயன் விஜய் டிவியில எடிட்டரா வேலைப் பார்த்துட்டு இருந்தான். அவன்தான் என்னை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநரா சேர்த்துவிட்டான். இப்போதும் அவன்தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் எடிட்டர். இந்த ஷோவுல சேரும்போது எனக்கு ஒன்னுமே தெரியாது. என்னை நான் ஸ்டெடி பண்ணிக்கவே ரொம்ப நாள் ஆச்சு.

2005ல முதல் சீசன் ஆரம்பிச்சாங்க. முதல் இரண்டு சீசன்களுக்கு ராஜ்குமார்தான் இயக்குநர். அந்த ரெண்டு சீசனிலும் எனக்குப் போட்டியாளர்களின் மேக்கப், காஸ்ட்யூம்ஸ் சரியா இருக்கிறதா என்பதைப் பார்ப்பதுதான் வேலை. சில சமயம் ஆடியன்ஸோடு ஆடியன்ஸா உக்கார்ந்துட்டு காமெடிக்குக் கைத்தட்டி, சிரிக்கணும். முதல் சீசன் செம ஹிட்டாச்சு. உடனே இரண்டாவது சீசன் ஆரம்பிச்சனால அந்த சீசன் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. முதல் இரண்டு சீசன் பண்ணுன டீம் அப்படியே வேற சேனலுக்குப் போயிட்டாங்க. அப்போ கலக்கப்போவது யாரு சீசன் 3யை பண்றதுக்கு வெங்கடேஷ் பாபு எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அப்படித்தான் நான் கலக்கப்போவது யாரு சீசன் 3க்கு இயக்குநரானேன். மூணாவது சீசனுக்குதான் மதுரை, கோயம்புத்தூர்னு சில ஊருக்கு மட்டும் ஆடிஷன் வச்சு போட்டியாளர்களைத் தேர்வு செய்தோம். ஷோ செம ஹிட்டாச்சு. நாலாவது சீசன் உடனே ஆரம்பிச்சோம். அந்த சீசன் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. அதுக்கு அப்பறம் பெரிய இடைவெளி விட்டுட்டோம். அந்த கேப்லதான் ’அது இது எது’னு காமெடி கேம் ஷோவை ஆரம்பிச்சோம். அந்த வாய்ப்பை இக்னேஷியஸ்தான் எனக்குக் கொடுத்தார். 159 எபிசோடு வரை சிவகார்த்திகேயன் பண்ணினார். அதுக்கப்பறம் 160ல் இருந்து 400 எபிசோடு வரை மா.கா.பா தொகுத்து வழங்கினார். அது இது எது நிகழ்ச்சியோட முதல் சீசன் முடியும் போதுதான் கலக்கப்போவது யாரு சீசன் 5 ஆரம்பிச்சோம்.

பெரிய இடைவெளி விட்டு ஆரம்பிச்சனால நிறைய எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. இதுவரைக்கும் எந்த ஷோவுக்கும் கிடைக்காத வரவேற்பு  கலக்கப்போவது யாரு சீசன் 5க்குக் கிடைச்சது. அந்த ஒரு சீசன்ல மட்டுமே பழனி, அறந்தாங்கி நிஷா, முல்லை, கோதண்டம், குரேஷி, சரத், தினா, நவீன், சதீஷ்னு நிறைய பேர் பிரபலமானாங்க. மறுபடியும் சீசன் 6 உடனே ஆரம்பிச்சனால அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. அந்த கேப்லதான் கலக்கப்போவது சாம்பியன்ஸ் ஆரம்பிச்சோம். சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு சீசன் 5, 6னு தனி தனி டீமா வச்சு பண்ணிட்டு இருக்கோம். சாம்பியன்ஸ் போயிட்டு இருக்கும் போதே இப்போ கலக்கப்போவது யாரு சீசன் 7 ஆரம்பிச்சுட்டோம்.

இப்படியேதான் என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. நான் இதுக்காக மட்டும்தான் உழைச்சிட்டு இருக்கேன். நீங்க பார்க்குற காமெடி எல்லாம் ஒரு நாளிலோ அல்லது அந்த ஒரு காமெடியனின் உழைப்பிலோ வந்தது இல்லை. பல நாள்கள் ப்ராக்டிஸ், ரிகர்ஷல் எல்லாம் செய்து, நானும் என்னோட டீமும் உக்கார்ந்து ஸ்கிரிப்ட் வொர்க் செய்துதான் ஃபைனலா ஷோவுக்குப் போவோம். இன்னைக்குக் காலையில ஒரு ஷோவோட ஷூட்டிங் ஆரம்பிச்சா அதை முடிச்சிட்டு நான் வீட்டுக்குப் போக அடுத்த நாள் காலை 4.30 ஆகும். எனக்கு 2 வயசுல ஒரு பொண்ணு இருக்கா. அவ காலை 7.30க்கு எழுந்திருச்சிருவா. 4.30 டூ 7.30தான் நான் ஓய்வு எடுக்குற நேரம். 7.30க்கு மேல என் பொண்ணை சிரிக்க வைக்கணும். அதுதான் எனக்கான டாஸ்க். நான் பண்ற ஷோ மூலமா பல பேரை சிரிக்க வச்சாலும் என் குழந்தையைச் சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ்.

நான் காலேஜ் படிச்ச சமயத்தில் என் அப்பா எனக்கு செலவுக்கு நிறைய காசு கொடுப்பார். இன்னைக்கும் நான் ஷோ முடிச்சிட்டு காலை 4.30க்கு போகும் போதெல்லாம், ’நீ வாத்தியார் வேலைக்குப் போயிருந்தா இப்படிக் கண்ட நேரத்துக்கெல்லாம் வந்திருப்பியா’னு கேட்பார். அதே மாதிரி நான் ஒவ்வொரு நாளும் வொர்க் முடிச்சிட்டு வீட்டுக்குப் போய் கதவைத் தட்டும் போது என் மனைவி எவ்வளவு கோவமா வந்து கதவை திறக்கப்போறாங்களோனு பயப்படுவேன். ஆனா அவங்க என்னைக்குமே அப்படி முகம் காட்டினதே இல்லை. அதுதான் நான் அடுத்த நாள் பார்க்கப்போற வேலைக்கான எனர்ஜி. ஞாயிறு ஒரு நாள்தான் வீட்டில் இருப்பேன். மத்த நாள் எல்லாம் ஷோ முடிச்சிட்டு லேட்டாதான் வீட்டுக்கு வருவேன். அவங்களோட சப்போர்ட் இல்லைன்னா என்னால இவ்வளவு தூரம் ஓட முடியாது. சப்போர்ட் பண்றதுல மட்டும் இல்ல என்னை கலாய்க்கவும் செய்வாங்க. ஞாயிற்றுக்கிழமையில நான் வீட்டில் இருக்கும் போது கலக்கப்போவது யாரு பார்த்து சிரிச்சிட்டு இருப்பேன். ‘நீங்க பண்ற ஷோவைப் பார்த்து எங்களுக்குச் சிரிப்பு வரணும். நீங்களே சிரிச்சுக்கிட்டா எப்படி’னு சத்தமே இல்லாம கவுன்ட்டர் கொடுப்பாங்க.

நான் அதிக நேரம் உழைச்சாலும் எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் ஒரு டைரக்டரா இருக்கிறதைவிட க்ரியேட்டரா இருக்கத்தான் ஆசைப்படுறேன். பல பேர் இந்த ஷோவுல இருந்து பெரிய ஆள வந்திருக்காங்க. இது எல்லாமே எங்க சேனலுக்குப் பெருமை தானே. அதுக்காக இன்னும் எவ்வளவு வேணாலும் உழைக்கலாம். 

நாம என்னதான் நேரம் காலம் பார்க்காம உழைச்சாலும் நம்மளோட வேலையைக் குறை சொல்றதுக்குப் பல பேர் இருப்பாங்க. அதுனாலேயே நான் ஃபேஸ்புக் பக்கமெல்லாம் அடிக்கடி போறது இல்லை. ஒரு நாள் ஒரு பெண் பட்டிமன்ற பேச்சாளர் எனக்கு போன் பண்ணினாங்க. ‘உங்க ஷோவுல அதிகமா டபுள் மீனிங் டயலாக்ஸ் வருது. அதை பார்த்துட்டு என் பையன் புரியாம எங்ககிட்ட கேட்குறான். நாங்க என்ன பதில் சொல்ல’னு என்கிட்ட கேட்டாங்க. ‘நான் சாரிங்க’னு சொல்லிட்டு போனை வச்சிட்டேன். ஸ்டேஜ்ல ஒரு டீம் பெர்ஃபார்ம் பண்ணும்போது ஆடியன்ஸ் கை தட்டுற உற்சாகத்துல சில டபுள் மீனிங் டயலாக்கை பேசிடுவாங்க. முடிஞ்ச அளவுக்கு அதை எடிட் பண்ணப் பார்ப்போம். சில சமயங்களில் பீப் போட்டு சமாளிப்போம். ரொம்ப வல்கரா இல்லைனா அப்படியே விட்ருவோம்.

நான் ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுக்காக எந்தப் புத்தகமும் படிக்கிறது இல்லை, வேற மொழி ஷோஸ் பார்க்கிறது இல்லை. சாதாரண மக்கள் சந்திக்கிற பிரச்னைகள், அவங்க எப்படி ரியாக்ட் பண்றாங்கனு அவங்ககிட்ட இருந்துதான் ஒன் லைன் எடுக்குறேன். என்கிட்ட 10 பசங்க உதவி இயக்குநரா இருக்காங்க. அவங்க அந்த ஒன் லைனை ஸ்கிரிப்ட்டா ரெடி பண்ணுவாங்க. ஃபைனலா நான் பார்த்துட்டு அதுல சில மாற்றங்கள் செய்வேன். இப்படித்தான் எல்லா ஷோவுக்கும் வொர்க் பண்றோம்.

இந்த இடத்துல நான் சிலருக்கு நன்றி சொல்லியே ஆகணும். விஜய் டிவியோட ப்ரோகிராம் ஹெட் ப்ரதீப் சார், கலக்கப்போவது யாரு சீசன் 1 ப்ரொடியூசர் ஆண்ட்ரூஸ், அது இது எது ஷோவோட ப்ரொடியூசர் ராஜ் வி குமார், சீனியர் ப்ரொடியூசர் ராமச்சந்திரன், கலக்கப்போவது யாரு சீசன் 5,6,7னோட ப்ரொடியூசர்ஸ் இளங்கோ, ஜெகன், சீனியர் ப்ரொடியூசர் விவேக் அப்பறம் என்னோட பிள்ளைகளாகவும், பில்லராகவும் இருக்கிற என்னோட உதவி இயக்குநர்களுக்கு என் நன்றியை இந்த இடத்தில் நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கேன்.

இதுதான் நான். இதுதான் என் வேலை. கலக்கப்போவது யாரு சீசன் 1 டூ 7, அது இது எது ஷோவோட இரண்டு சீசனிலும் என்னோட ட்ராவல் பண்ணுன ஸ்டார்ஸைப் பற்றிதான் இந்தத் தொடரில் நான் பேசப்போறேன். உங்களுக்குப் பிடிச்ச பிரபலங்கள், காமெடியன்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத பல தகவல்கள் ஆன் தி வே ப்ரோஸ்!’’

இன்னும் சிரிப்போம்...