Published:Updated:

“எந்த ஒரு தனி நபருக்காகவும் சினிமா நிற்காது..!” - தயாரிப்பாளர் சி.வி.குமார்

“எந்த ஒரு தனி நபருக்காகவும் சினிமா நிற்காது..!” - தயாரிப்பாளர் சி.வி.குமார்
“எந்த ஒரு தனி நபருக்காகவும் சினிமா நிற்காது..!” - தயாரிப்பாளர் சி.வி.குமார்

“எந்த ஒரு தனி நபருக்காகவும் சினிமா நிற்காது..!” - தயாரிப்பாளர் சி.வி.குமார்

“சினிமாவில் தயாரிப்பாளர்கள், ஃபைனான்ஸியர்கள் இரு தரப்புக்குமே வியாபாரம்தான் பிரதானம். இந்த இருதரப்புக்குமே ஒருவர் மற்றவருக்கு 'கிளைன்ட்' என்ற நல்லுறவு வேண்டும். அந்த நல்லுறவு நீடித்தால் இரு தரப்புமே நிலைத்து நிற்கும். இல்லையென்றால் வெவ்வேறு க்ளையன்ட்ஸ் வந்துகொண்டே இருப்பார்கள். எந்தத் தொழிலும், கலையும் யார் வந்தாலும் சென்றாலும் இங்கு நடந்துகொண்டேதான் இருக்கும். எந்த ஒரு தனி நபருக்காகவும் அது நிற்காது” தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சி.வி.குமார் அவ்வளவு நிதானமாகப் பேசுகிறார். தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘மாயவன்’ படத்தை ரிலீஸ் செய்யும் பரபரப்பில் இருந்தார். தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஃபைனான்ஸியர் அன்புச்செழியனை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர்மீது ஏற்கெனவே புகார் கொடுத்து பிறகு அதை வாபஸ் பெற்றுள்ள சி.வி.குமாரைச் சந்தித்தேன்.   

“உங்களின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 10க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ள நிலையில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளீர்கள். இந்த அனுபவம் எப்படி உள்ளது?”

“தயாரிப்பு என்பது முழுக்க முழுக்க படம் சம்பந்தப்பட்ட பொருளாதாரம், அதைச்சார்ந்த பிசினஸ். இயக்கம் என்பது நமது படைப்பாற்றல், கற்பனை சார்ந்த விஷயம். இயக்குநராக இருக்கும்பொழுது ஒரு தயாரிப்பாளர் மாதிரி என்னால் யோசிக்க முடியவில்லை. அதனால் எனது தயாரிப்பு மேற்பார்வையாளர்களையே தயாரிப்பு வேலைகளைப் பார்க்கச்சொல்லிவிட்டேன். இரண்டையும் ஒருசேர பார்க்கக் கூடாது என நினைக்கிறேன். ‘இயக்குநர் சி.வி.குமார்கிட்ட ஒர்க் பண்றது உங்களுக்கு ஈசியா இருக்கு. நீங்கல்லாம் ப்ரொடியூசர் சி.வி.குமார்கிட்ட வேலை செஞ்சு பாக்கணும், அப்போதெரியும்’ என்று எனது உதவி இயக்குநர்களிடமும் விளையாட்டாய் கூறுவது உண்டு. ஏனெனில் ஒரு பெரிய கூட்டத்தின் வேலையை ஒன்றிணைத்து ஒரு பேக்கேஜாக பண்ணும் தயாரிப்பும் ஒரு கடினமான கலைதான்.”

“நீங்கள் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘மாயவன்’ திரைப்படத்தில் என்ன ஸ்பெஷல்?”

“ ‘மாயவன்" ஒரு 'எட்ஜ் ஆஃப் தி சீட் த்ரில்லர்' திரைப்படம். சந்தீப் கிஷன், லாவண்யா த்ரிபாதி, ஜாக்கி ஷராஃப் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஒரு காம்ப்லெக்ஸான  கதாபாத்திரம். யாரை நடிக்கவைக்கலாம் என்று வெகுநாள் யோசனைக்குப்பிறகும் பல துரத்தல்களுக்குப் பிறகும் பிடித்தவர்தான் ஜாக்கி ஷெராப். அவரது  கதாபாத்திரம் தன்னை மாற்றிக்கொண்டே செல்லும். ஒரு ஆண்மை பொருந்திய ஒரு கதாபாத்திரம் என்று சொல்லலாம். நான் சொல்வதைவிட நீங்கள் திரையில் பார்த்தால் நன்றாக இருக்கும். இதில் இயக்குநர் நலன், திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். கதை, கூடுதல் வசனங்களை நான் எழுதியுள்ளேன். நலனிடம் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கையே ஒரு படிப்பினைதானே?”

“ஒரு ஃபைனான்ஸியருக்கும் தயாரிப்பாளருக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?”

“இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த பிசினஸில் மாறுதல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை அட்ஜெஸ்ட் செய்துகொண்டு முன்னேற வேண்டும். ஃபைனான்ஸ் என்பது சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லாத்துறைகளிலும் உள்ளது. இந்தியாவில் இப்படியான அமைப்புசாரா தொழில்கள் மூலம்தான் 50 சதவிகித வருமானம் வருகிறது. பெருமளவு வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் இங்கேதான் கிடைக்கின்றன. இருந்தும் இந்தத் துறைகளின் பெருமளவு முதலீடு பிரைவேட் ஃபைனான்ஸிங் மூலம்தான் கிடைக்கப்பெறுகிறது. வங்கி, சொசைட்டி மூலம் கடன்பெறும் அளவுக்கு இந்தத் தொழில்கள் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது கஷ்டமாகத்தான் உள்ளது.”

“அன்புச்செழியன் என்ற ஒரு ஃபைனான்ஸியர்தான் 90 சதவிகித தமிழ் சினிமாவைத் தன் பணத்தால் ஆட்டுவிக்கிறார் என்கிறார்களே?”

“எந்தவொரு தனி நபரையும் சார்ந்து எந்தத் தொழிலுமே இயங்காது. தவிர நான் யாரையும் குறிப்பிட்டுப் பேசவும் விரும்பவில்லை. நாம் செய்யும் பிசினஸில் நமக்கு உறுதுணையாய் இருக்கும் மற்றொரு அங்கம்தான் பைனான்ஸியர்கள். ஃபைனான்ஸ் நிறுவனம்-தயாரிப்பு நிறுவனம் இவையிரண்டும் சினிமாவில் ஒன்றை வைத்தே மற்றொன்று எனும் 'கோ-எக்சிஸ்டிங்' கோட்பாடை கொண்ட விஷயம். கணக்கு வழக்குகளைச் சரியாகக் கவனித்துக்கொண்டாலே மற்றவை மிகச்சரியாக நடக்கும்.”

அடுத்த கட்டுரைக்கு