Published:Updated:

‘நான் நினைச்சபடி நடக்கணும்; எனக்காக மட்டும் இருக்கணும்..!’ - காதலியின் மனநிலை சொல்லும் மதன் கார்க்கி

'நாரதன்' படத்திற்குப் பிறகு நடிகர் நகுல் நடித்து வெளியாகவிருக்கும் படம் 'செய்'. 'செஸ்', 'கங்காரு' போன்ற மலையாளப் படங்களை இயக்கிய  ராஜ் பாபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நகுலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் முஞ்சால் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, பிரகாஷ்ராஜ், நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

அந்த விழாவில் பேசிய, படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, 'நான் மலையாளத்தில ஐந்து படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா, எனக்குத் தமிழ்ல படம் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை. இந்தப் படத்தோட கதாசிரியரைத் தவிர, எனக்கு இங்கே யாரையும் தெரியாது. எப்படி சப்போர்ட் பண்ணுவாங்க, படம் எப்படி வரும்னு ரொம்ப பயமாவும் இருந்துச்சு. ஆனா, எல்லாரும் நான் நினைச்சதைவிட அதிகமாகவே எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. மத்தபடி, நீங்கதான் படத்தை பார்த்துட்டு சொல்லணும்' என்று கூறி விடைப்பெற்றார்.

அடுத்ததாக பேசிய ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன், 'இந்தப் படத்தின் கதையைச் சொல்லும்போது, தமிழ்ல சொல்றேன்னு முழுக்க முழுக்க மலையாளத்துலதான் டைரக்டர் சொன்னார். இந்தப் படத்துக்கு மிகச்சரியான ஒரு கதாநாயகனை தேர்ந்தெடுத்து இருக்காங்க. ஒரு சேஸிங் சீன்னு சொன்னாப் போதும், அதுல ஓடுறது, தாவுறது, உருண்டு பிறண்டு மறுபடி ஓடுறதுனு துறுதுறுனே இருப்பார் நகுல். அவரை ஷூட் பண்ண ஒரு கேமரா பத்தாது. ஹீரோயினுக்குத் தமிழ்ல முதல் படம். மொழி தெரியலைனாலும் ரொம்ப அழகா மேட்ச் பண்ணி நடிச்சிடுறாங்க' என்று வாழ்த்தினார்.

'வளர்ந்து வரும் நடிகர்களை நம்பி படம் பண்ண புதுப்புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாக்குள் வந்துட்டே இருக்காங்க. ஆனா, அவங்க படங்கள் சரியானபடி விற்பதில்லை, லாபம் கிடைக்குறதில்லை. வெவ்வேறு தொழிகள்ல ஜெயிச்சவங்க தமிழ் சினிமாவை நம்பி பணம் போடுறாங்க. ஒரு படம் தயாராகி தியேட்டரைப்போய் சேருதாங்கிறது மிகப்பெரிய சவால். பெரிய நடிகர்கள் படங்களைக்கூட மிகவும் சொற்பமான நபர்களே உட்கார்ந்து பார்க்குறாங்க. இப்போ எத்தனை ஸ்கிரீன்ல நம்ம படம் ஓடுதுனு ஒரு மாயபிம்பம் இருந்திட்டு இருக்கு. அதிகபடியான ஸ்கிரீன்ல ஒரு படத்தை போடுறதுனால ஆடியன்ஸுக்குச் சரியான தியேட்டர் அனுபவம் கிடைக்குறதில்லை. ஒவ்வொரு வாரமும் பல கோடிகள் தமிழ் சினிமாவை நோக்கி கொட்டிட்டு இருக்கு. அவங்களுக்கு லாபம் பாக்குறதைவிட வெற்றி பெற்றோம்ங்கிற மனநிறைவுதான் இந்தத் துறையை சுபிக்‌ஷமாக்கும். அது சார்ந்த தொழில் தளங்கள் வளரும்' என்று சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் கூறினார். 

அடுத்ததாக மேடை ஏறிய மதன் கார்க்கி, 'இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் ஒரு புதுவரவு. ஆனால், அவருடைய இசையில் ஒரு முதிர்ச்சி இருக்கு. யுகபாரதி எழுதிய பாடலுக்கு ரொம்ப அழகா இசையமைச்சிருந்தார். நான் 'நடிகா நடிகா'னு ஒரு பாடல் எழுதியிருக்கேன். ஒரு காதலன், காதலிக்கு இடையில ஒரு இயக்குநர் நடிகர் உறவு இருந்திட்டே இருக்கும். காதலிக்கு தான் இயக்குற மாதிரிதான் காதலன் நடக்கணும், எல்லாரும் அவனைப் பார்த்து ரசிக்கணும், ஆனால், அவன் எனக்காக மட்டும் இருக்கணும்னு நினைப்பாங்க. அதை வெச்சுதான் இந்தப் பாடல்  எழுதினேன். நகுல் நல்ல கதைகளா தேர்ந்தெடுத்து பண்ணிட்டு இருக்கார். மொழி தெரியாம ஒரு அகராதியை வெச்சுகிட்டு கதை எழுதி வசனம் எழுதி இருக்கார் இயக்குநர். அவருக்கு என் பாராட்டுகள்' என்று விடைப்பெற்றார்.

இறுதியாக வந்த கதாநாயகன் நகுல், 'நிக்ஸ் ரொம்ப அழகா இசையமைச்சிருக்கார். இன்னும் அவர் போக வேண்டிய பயணங்கள் நிறையவே இருக்கு. தினேஷ் மாஸ்டர் என்னை நல்லா வேலை வாங்கினார். படத்தோட ஷூட் ரொம்ப சவாலா இருந்துச்சு. ஒட்டுமொத்த படக்குழுவுக்கு என் நன்றி' என்று கூறினார். படத்தின் இசையை ஜாஸ் சினிமா கண்ணன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகிய மூவரும் வெளியிட படக்குழு அதனைப் பெற்றுக்கொண்டது. 

பின் செல்ல