Published:Updated:

``நாங்க இப்ப தாத்தா - ஆத்தா ஆகிட்டோம்..!” - வெள்ளந்தி அந்தோணிதாசன் தம்பதி

சுஜிதா சென்

"எங்க வீட்ல உள்ள எல்லாருமே கரகாட்டக் கலைஞர்கள். இந்தக் கலையை முழுநேர வேலையா எடுத்துக்கிட்டவங்க. அப்படி ஒருநாள் கரகாட்டம் ஆட நான் வெளியூர் போயிருக்கும்போது இவரைச் சந்திச்சேன். பிடிச்சிருந்துச்சு. வாழ்க்கை முழுக்க கூடவே வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. எங்க காதலை வீட்ல தெரியப்படுத்தினோம். அவங்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கலை. அப்படி எங்களுக்குக் கல்யாணம் நடந்தப்ப அவருக்கு 16 வயசு, எனக்கு 15 வயசு. இப்போ எங்களுக்கு மூணு குழந்தைகள். பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டோம். பேரனும் பிறந்துட்டான். ஆனாலும் இவரு இளவட்டம் மாதிரி சுத்திட்டு இருக்கார். நாங்க தாத்தா - பாட்டி  ஆகிட்டோம்னு சொல்லிக்கிறதுல பெருமைப்படுறேன்...” கலகலவென பேசும் ரீட்டாவிடம், ‘அதைச் சொல்லியே ஆகணுமா புள்ள...” என்றபடி சிரிக்கிறார் அந்தோணிதாசன். இந்த வெள்ளந்தி கலைத்தம்பதிதான் இன்றைய சினிமாவில் உள்ள நாட்டுக் குரல்கள். இவர்கள் பாடிய அனைத்துப் பாடல்களுமே எல்லா சென்டர்களிலுமே ட்ரெண்டிங்கில் உள்ளன. 

அதுவும், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் ‘சொடக்குமேல சொடக்கு’, ‘மேயாத மான்’ பட ‘தங்கச்சி பாடல்’, ‘பவர் பாண்டி’யில் ஷியான் ரோல்டனுடன் சேர்ந்து பாடிய ‘வீசும் காத்தோடத்தான்’, ‘கிடாரி’யில் ‘வண்டியில நெல்லு வரும்’ இப்படியான தன் பாடல்கள் மூலம் குரலில் கிராமத்தைச் சுமந்து வரும் அந்தோணி இன்று பயங்கர பிஸி. இந்த இசை இணையரை ஒரு காலைப் பொழுதில் சந்தித்தேன். 

அந்தோணியே ஆரம்பிக்கிறார். "என் சின்ன வயசுல நாங்க இருந்த வீட்டுக்கு எதிர்ல ஒரு சர்ச். அங்க ஒவ்வொரு சண்டேவும் என் பாட்டு கச்சேரி இருக்கும். சினிமா பாடலோட வரிகளை மாத்தி எழுதி அதே டியூன்ல பாடுவேன். சமயங்கள்ல அப்பா-அம்மாகிட்ட நடிச்சும் காட்டுவேன். அது நல்லா இருந்தா திருவிழா நேரங்கள்ல மேடையில ஆடியும் பாடுறது உணடு. அப்பா நாதஸ்வரக் கலைஞர். அதனால சங்கீத ஞானம் அவர் மூலமா வந்திருக்கும்னு நினைக்கிறேன். இருந்தாலும் கவனம் முழுக்க கரகாட்டத்துலதான் இருந்துச்சு. வீதி வீதியா நாடகங்கள் போட ஆரம்பிச்சேன். 

சில கிராமங்களுக்கு நாடகம் போடப் போகும்போது நம்மகிட்ட சில கோரிக்கைகள் வைப்பாங்க. அந்த ஊர் குலதெய்வம், தலைவர்கள் பற்றியும் சாதி ஒழிப்பு பற்றியும் பாடச் சொல்வாங்க. அதுல நம்மால் முடிஞ்ச சில கோரிக்கைகளை நிறைவேத்தி வைப்போம். அந்தச் சமயங்கள்லதான், 'நாம ஏன் சொந்தமா பாட்டெழுதி, பாடி ஆடியோ வெளியிடக்கூடாது’னு என் மனசுக்குத் தோணும். பிறகு அதுக்கான வேலைகளை உடனடியா ஆரம்பிச்சேன். இருந்தாலும் நாடகங்கள்ல நடிக்கிறதையும் நான் நிறுத்தலை. அப்படி என் பாடல்களை வெளியிட்ட பிறகுதான் 'அந்தோணி தாஸ்' என்ற ஒரு பாடகர் இருக்கேன் என்பதே இந்த உலகத்துக்குத் தெரிய ஆரம்பிச்சது. 

சினிமாவில் கிராமியப் பாடல்கள் பாடுற சின்னப் பொண்ணு அக்கா என் தூரத்து உறவினர். அவங்க உதவி மூலமா 2006ல் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியில் பாட வாய்ப்பு கிடைச்சுது. அப்ப அறிமுகமானவர்தான் கருணாஸ் சார். பிறகு ‘திண்டுக்கல் சாரதி’ படத்துல ஆடிப் பாட அவர்மூலமா வாய்ப்பு கிடைச்சது. 'ஆடி காத்துலயும் ஆடுதடி ஓடுதடி' பாட்டை நான் பாட, படத்தில் என் மனைவியுடன் சேர்ந்து ஆடினேன்" என்கிற அந்தோணியைத் தொடர்ந்த ரீட்டா, “நாங்க காதலிச்ச காலத்துலகூட இந்த மாதிரி ஒண்ணா சேர்ந்து ஆடியிருக்கோம்" என்று வெட்கப்பட்டுச் சிரிக்கிறார். 

"அதெல்லாம் மலரும் நினைவுகள்" என்கிற அந்தோணி, "நாடகங்கள்ல குறவன் கதாபாத்திரத்துல நடிச்சது மிகச்சிறந்த அனுபவம். திருமணத்துக்குப் பிறகும் நாங்க குறவன்-குறத்தியா நடிச்சிருக்கோம். அந்த இரண்டு கேரக்டர்களுக்கு'நாங்கதான் கில்லாடி'னு பேரும் வாங்கினோம். ஆனா, எல்லாமே கேள்வி ஞானம்தான்” என்கிறவருக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட வேண்டும் என்பதுதான் கனவு. 

"இந்தக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கத்துத்தரவேண்டிய நாமளே கிராமிய கலைகளுக்கு முதல் எதிரியா இருக்கோம். கரகாட்டம் கத்துகிறதையும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுறதையும் கேவலமா நினைக்கிறோம். நாங்க சினிமாவுல பங்கெடுத்தாலும், கிராமத்துக் கலைகளை மேம்படுத்தணும் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டு. எங்களை சினிமா கைவிட்டாலும், கச்சேரிகள் செய்து பிழைச்சுப்போம். எங்க கிராமியக் கலைகள் என்னைக்கும் எங்களைக் கைவிடாது” என்கிற ரீட்டாவின் குரலில் அவ்வளவு நம்பிக்கை.