கெட்ட கெட்டவன், நல்ல கெட்டவன், பயக்கோழி தோழி... என்ன நடக்கிறது - திருட்டுப்பயலே-2 விமர்சனம்

போலீஸிலிருக்கும் திருடனுக்கும், ஃபேஸ்புக்கிலிருக்கும் திருடனுக்கும் இடையே நடக்கும் திருடன் - திருடன் விளையாட்டுதான் `திருட்டுப்பயலே 2'

திருட்டுபயலே

அகல் (அமலா பால்) - செல்வம் (பாபி சிம்ஹா) மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் ஜோடி. உயர் அதிகாரியுடைய உத்தரவின் பேரில், சிலரது செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதுதான் பாபி சிம்ஹாவின் வேலை. கூடவே தனது லாபத்துக்காகவும் இந்த வேலையைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர் கேட்கும் ஓர் அழைப்பினால் `ஹேக்கிங் கில்லாடி' பாலகிருஷ்ணன் என்ற பால்கியை (பிரசன்னா) எதிர்க்க நேரிடுகிறது. அது என்ன பிரச்னை, இருவருக்குமான போட்டியில் வெல்வது யார், இதில் யார்  பெரிய திருட்டுப்பையன் என்பதை பரபரப்பாக சொல்கிறது படம். `திருட்டுப் பயலே' முதல் பாகம் வெளியாகி பதினொரு வருடங்கள் ஆகிவிட்டன. அதன், இரண்டாம் பாகம் எடுக்கும் போது அதை எப்படி உயிர்ப்போடு கொடுப்பது என ஸ்கெட்ச் போட்டு வேலை செய்திருக்கிறார் இயக்குநர் சுசிகணேசன். ஹீரோ, வில்லன், இருவருக்கும் பிரச்னை என்ற  வழக்கமான  திரைக்கதை, இறுதியில் வெல்லப்போவது யார் என்று படத்தை நகர்த்தாமல் எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் திருட்டுத்தனத்தை எடுத்துக்கொண்டு, அந்த முரணை வைத்து கதை செய்திருந்ததும், விறுவிறுப்பான திரைக்கதைக்குள், சின்னச் சின்ன பின் கதைகளை இணைத்திருந்த விதமும் படத்தை சுவாரஸ்யப்படுத்துகின்றன.

Prasanna

ஒரு பெரிய இடைவேளைக்குப் பின் பாபி சிம்ஹாவிற்கு முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை நிறைந்திருக்கும் பொருத்தமான கதைக்களம் அமைந்திருக்கிறது. விரைப்பாகத் திரிவதிலும், மனைவியிடம் ரொமான்ஸ் செய்யத் தெரியாமல் திணருவதிலும் ஓகே. ஆனால், இது ஸ்கோர் செய்ய வேண்டிய மேட்ச் இல்லையா சார்?  `வேலையில்லா பட்டதாரி 2'வில் சண்டக்கோழியாக வந்த அமலா பாலுக்கு இதில் பயந்து நடுங்கும் கோழிக்குஞ்சு கதாபாத்திரம். போன் அடித்தாலே பயந்து நடுங்குவது, தனது பிரச்னையை கணவரிடம் சொல்ல முடியாமல் தவிப்பது எனக் கச்சிதம். அமலா இஸ் பேக்தான்! மூன்றாவதாக வரும் பிரசன்னாவின் கதாபாத்திரம் படத்திற்கான பெரிய பலம். `துப்பறிவாளனி'ல் பெயருக்கு வந்துபோனவருக்கு இதில் மிரட்டல் வேடம். கண் முன்னால் நிகழும் மரணத்தை இமைகொட்டாமல் பார்த்தபடி பீட்சா சுவைப்பது, காலில் விழுந்து கெஞ்சும் அப்பாவை 'போய்த் தொல சனியனே' என விரட்டுவதுமாக கிலியாக்குகிறார். என்ன, வடிவேலு போல படம் முழுவதும் அடிவாங்கிக்கொண்டேயிருக்கிறார். ஆனாலும் அநியாய வில்லத்தனம் ஜி. `திருட்டுப்பயலே 2'வின் மேன் ஆஃப் த மேட்ச் இவர்தான். நடுநடுவே எட்டிப்பார்க்கும் அந்த 'பைவ் ஸ்டார்' பிரபுவை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். பின்னணி கதாபாத்திரங்களாக நடித்திருந்த, எம்.எஸ்.பாஸ்கர், `பினாமி சேட்ஜி' பிரதீப் கே விஜயன், முத்துராமன் மூவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது. 

பிரதானமான மூன்று கதாபாத்திரங்களின் டீட்டெய்லிங்கை படத்துடன் இணைத்திருந்த விதமும், பாபி - பிரசன்னா இருவரின் பிரச்னை எப்படி முடியப் போகிறது என என்கேஜிங்காகவே வைத்ததும் சிறப்பு. "எல்லா தனி மனிதனும் கரப்ட்டா இருக்க ஆசைப்படறான், சொசைட்டி மட்டும் எப்படி க்ளீனா இருக்கும்?", "ரகசியம் மாட்டிகிட்டா, வாய் வீராப்பு பேசும்... மனசு ஐயோ அம்மானு அலறும்", "ஒவ்வொருத்தனுடைய ரகசியத்தையும் வெளியவிட்டா, இங்க நல்லவன்னு எவனும் இருக்கமாட்டான், சில ரகசியம், ரகசியமாவே இருக்கறதுதான் நல்லது" என பலமான வசனங்களில் ஈர்க்கிறார் சுரேந்திரநாத். அதே நேரம் "உன்னோட பலம், உன் கால் பூட்ஸு, என்னோட பலம் கீபேட்ஸு" என சில இடங்களில் ராங் டைமிங்கில் வரும் ரைமிங் சோதிக்கவும் செய்கிறது. 

Simha

சிம்ஹா - அமலா - பிரசன்னா மூவரும் சந்திக்கும் இடம் போல படத்தில் இன்னும் சில சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருக்கலாம். ஆனால், பல இடங்களில் ஹேக்கிங் வைத்தே பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இன்னும் ஹேக் செய்யப்படாத இடம் 'அப்போலோ ஆஸ்பத்திரி'தான் போல. இதில் பாபி சிம்ஹாவும் பிரசன்னாவும் மாறி மாறி ஹேக் செய்துகொள்கிறார்கள். . திரைக்கதையில் தொய்வோ அல்லது அடுத்து என்ன என்ற குழப்பமோ ஏற்படும்போதெல்லாம், ஒரு ஹேக்கிங் சீனை பார்சல் கட்டும் பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள் இயக்குநர்களே. கதையைச் சுடுவதைப் போல அத்தனை எளிதல்ல ஹேக்கிங். 

 

 

ஃபேஸ்புக் நட்பை வீடு வரை வரவைப்பதன் ஆபத்தைப் பேசியிருப்பதற்கு ஒரு ஷொட்டு. ஆனால், ஃபேஸ்புக்கில் இருப்பதே ஆபத்து என்ற ரீதியில் அதைக் காட்சிப்படுத்தியதற்கு ஒரு குட்டு. நீண்டகாலத்துக்குப் பிறகு வித்யாசாகர். ஆனால், பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி பெரிதாக ஈர்க்கவில்லை. ராஜா முகமதுவின் எடிட்டிங், திரைக்கதைக்குத் தேவையான பரபரப்பை சரியாக வழங்குகிறது. படத்தில் கலை இயக்குநர் ஆர்.கே.நாகுராஜுக்கு நிறையவே வேலை. அதை கண்களை உறுத்தாத வகையில் சிறப்பாகச் செய்திருக்கிறார். நீங்க ஃபேஸ்புக்ல இருக்கீங்களா பாஸ்?

முதல் பாகத்திலிருந்து வித்தியாசமான கதைக் களம், கதாபாத்திரங்கள் பிடித்தவர், டிடெக்டிவ் கதாபாத்திரத்தை அப்படியே வைத்ததோடு நிறுத்தியிருக்கலாம். அவரே நடித்து ஷெர்லாக் லெவல் ஃபீல் கொடுக்கிறார்... நமக்குதான் பக்கென்று இருக்கிறது. கதை முடிந்தபின்னும் அந்த தாய்லாந்து எபிசோடு எதற்கு? ஏன் டிரெயிலரில் அமலா பாலை வைத்து அப்படி ஓர் ஆபாச தூண்டில்? கதைக்கு அது தேவையும்படவில்லை; படத்தில் அவ்வளவு ஆபாசமுமில்லை. 

வழக்கத்தை மீறிய கெட்டவன் - கெட்டவன் ஆட்டத்தில் நம்மையும் அறியாமல் ஒன்றச் செய்வதில் இருக்கிறது இயக்குநர் சுசிகணேசன் வெற்றி. இரண்டாம் பாகம் என்பது கோடம்பாக்கத்துக்கு எப்போதும் ராசியில்லாத ஒன்று. `அப்படியெல்லாம் ஒன்றுமில்லை' எனச் சொல்லியடிக்கிறது திருட்டுப்பயலே 2.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!