Published:Updated:

``திருந்திட்டேன், மொட்ட அடிச்சுட்டேன், பாட்டில்களை உடைச்சுட்டேன்..!'' சிம்பு - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பின்னணி சொல்லும் தயாரிப்பாளர் #VIkatanExclusive

``திருந்திட்டேன், மொட்ட அடிச்சுட்டேன், பாட்டில்களை உடைச்சுட்டேன்..!'' சிம்பு - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பின்னணி சொல்லும் தயாரிப்பாளர் #VIkatanExclusive
``திருந்திட்டேன், மொட்ட அடிச்சுட்டேன், பாட்டில்களை உடைச்சுட்டேன்..!'' சிம்பு - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பின்னணி சொல்லும் தயாரிப்பாளர் #VIkatanExclusive

``திருந்திட்டேன், மொட்ட அடிச்சுட்டேன், பாட்டில்களை உடைச்சுட்டேன்..!'' சிம்பு - 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' பின்னணி சொல்லும் தயாரிப்பாளர் #VIkatanExclusive

சிம்பு நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வெளிவந்த படம், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்தப் படத்தை தன் க்ளோபல் இன்ஃபோடேய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். மிகப்பெரிய அளவில் எதிர் விமர்சனங்களைச் சந்தித்த இந்தத் திரைப்படம் பெரிய தோல்வியடைந்தது. படப்பிடிப்பில் இருக்கும்போதே சிம்பு சரியாகப் படப்பிடிப்புக்கு வருவது இல்லை என்று அவருக்கும் தயாரிப்பாளார் மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை இருந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தப்படம் தோல்வியடைந்ததும் அந்தப் பிரச்னை இன்னும் பெரிதானது. 

இதற்கிடையில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் நேற்று வியாழக்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது சிம்புவுக்கு எதிராக மைக்கேல் ராயப்பன் பல தகவல்களைக் கூறினார். அவர் கூறியதிலிருந்து...

“தரமான, வெற்றிபெற்ற பல படங்களை எங்கள் கம்பெனியில் தயாரித்திருக்கிறோம். அந்தச் சமயத்தில், ‘இயக்குநர் ஆதிக்கிடம் ஒரு கதை இருக்கு கேளுங்க’ என்று சிம்பு சொல்ல ஆதிக்கிடம் கதை கேட்டோம். அந்தக் கதை கமர்ஷியலாக அருமையாக இருந்தது. அதனால் சிம்புவுக்கு உடனடியாகக் கடந்த 2016 பிப்ரவரி மாதம் அட்வான்ஸ் கொடுத்தோம். அந்த ஆண்டே ஏப்ரல் மாதம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' ஷூட்டிங் தொடங்கியது. படத்தை அந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று நானும் சிம்புவும் முடிவு செய்தோம். 

இதற்கிடையில், ‘சிம்புவையா ஒப்பந்தம் செஞ்சிருக்க. அவர் ஷூட்டிங்குக்கே ஒழுங்கா வரமாட்டாரே. படத்தை கண்டிப்பா உன்னால முடிக்க முடியாது’ என்று நண்பர்கள் பலர் சிம்புவைப் பற்றி பலவாறு சொன்னார்கள். ஆனால் சிம்புவோ, ‘எல்லாம் பொய். நானே எல்லாத்துலயும் முன்ன நின்னு படத்தை முடிச்சுத் தர்றேன்’ என்றார். நானும் அவரின் பேச்சை நம்பினேன். அதேபோல அவரும் படத்தின் வேலைகளைக் கையில் எடுத்துக்கொண்டார். சிம்பு படம் என்றால் ஃபைனான்ஸும் ஒழுங்காகக் கிடைக்காது என்பதும் அப்பொழுதுதான் தெரிந்தது. ஒருவரும் ஃபைனான்ஸ் தர முன்வரவில்லை. பெரும் இன்னல்களுக்கு இடையே ஷூட்டிங் தொடங்கி வேலைகளை ஆரம்பித்தோம். 

படத்துக்கான அட்வான்ஸ் வாங்கிய பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த ஷூட்டிங்கை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தார் சிம்பு. கால்ஷீட் நேரங்களை அவரே முடிவு செய்தார். ஆனாலும் குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வரமாட்டார். எட்டுமணிநேர கால்ஷீட்டில் கடைசி பத்து நிமிடங்கள் மட்டும் வந்து அரைகுறையாகக் காட்சிகளை முடிப்பார். இப்படி திண்டுக்கல்லில் தொடங்கிய முதல் ஷெட்டியூல் ஷூட்டிங் முடியும் முன்பே எனக்கும் இயக்குநர் ஆதிக்குக்கும் பயங்கர கெடுபிடிகள் தந்தார். 

இதற்கிடையில் ஷ்ரேயாவுடன் நடிக்க முடியாது என்றுகூறியவர், அவருடனான பாடல் காட்சியினை படமாக்கவே இல்லை. துபாயில் நடக்கவிருந்த படப்பிடிப்பை, லண்டனுக்கு மாற்றச் சொன்னார். அனைத்து நடிகர்களின் கால்ஷீட்டும் அவர்களது சம்பளமும் விரையமாகக் கூடாது என்ற எண்ணி சிம்புவையே மீண்டும் ஆலோசித்து பின் ஷூட்டிங்கை தாய்லாந்துக்கு மாற்றினோம். அங்கே செட் அமைப்பது முதல் எல்லா வேலைகளையும் தொடங்கி இருபது பேர் கொண்ட குழு சிம்புவுக்காகக் காத்திருந்தது. ஆனால், இவர் வராததால் பத்து நாள்கள்வரை அங்கேயே காத்திருந்தனர். 

இந்த நிலையில் என்னை அழைத்த சிம்பு, ‘எடுத்தவரை போதும். ஷூட்டிங்கை நிறுத்திக் கொள்ளலாம்" என்றார். ‘35 சதவிகிதம் முடிந்திருக்கும் படத்தை வைத்து என்ன செய்வது’ என்று கேட்டேன். ‘இதுவரை எடுத்த படமே நல்லா இருக்கு. இதை இரண்டு பாகங்களா எடுக்கலாம். இரண்டாம் பாகத்தை இலசமா நடிச்சுத் தர்றேன். அதனால எடுத்தவரை உள்ள ஃபுட்டேஜை முதல் பாகமா ரிலீஸ் பண்ணிடுங்க’ என்றார். 

‘இப்படியே ரிலீஸ் செஞ்சா ஆரம்பமும் இல்லாம முடிவும் இல்லாம படம் தோல்வியடையும்’ என்றேன். ‘அதை எப்படி முடிப்பதுனு நான் ஆதிக்கிடம் சொல்கிறேன். இதுவரை என்னை  நம்பித்தான் படம் எடுத்திருக்கீங்க. இதுல என்ன இழப்பு வந்தாலும் நான் பாத்துக்குறேன். நீங்க ரிலீஸ் பண்ணுங்க. இல்லைனா படம் முடிய இன்னும் மூணு வருஷங்கள்கூட ஆகலாம். ‘பட தாமதத்துக்கு நான் காரணம் இல்லை’னு எழுதிக் கொடுங்க. நான் முடித்துத்தர்றேன்’ என்றுகூறி என்னை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளினார்.

அவர் சொன்னதுபடியே படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என முடிவு செய்தோம். பிறகு முதல் பாகத்துக்குத் தேவையான கடைசி பத்து நாள்கள் ஷூட்டிங்கை பிளான் செய்தோம். அதற்கும் அவர் இழுத்தடித்தார். இப்படி 76 நாள்கள் வசனக் காட்சிகளை ஷூட் செய்ய கால்ஷீட் கொடுத்த சிம்பு, வெறும் 25 நாள்களே நடித்தார். இந்தச் சமயத்தில் ஒருநாள் ஷூட்டிங் வருகிறேன் என்றவர் வழக்கம்போல் வரவில்லை. அவரை எப்படியாவது கையோடு கூட்டிவந்துவிடவேண்டும் என்று எங்கள் டீம் மற்றும் பணம் கொடுத்திருந்த விநியோகஸ்தர்களும் சென்று இருந்தோம். மாலை நாலு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை காக்கவைத்தார் சிம்புவின் மேனஜர். பிறகு, ‘அடியாட்களுடன் வந்துள்ளோம்’ என்று போலீஸில் புகார் செய்து எங்களை வீட்டிலிருந்து வேளியேற்றினார் சிம்புவின் தந்தையான டி.ஆர் சார்.        

2016ம் ஆண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ், பிறகு சிம்புவின் பிறந்தநாள் என்று தள்ளிக்கொண்டே போன ரிலீஸ், பிறகு ஒருவழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் ரம்ஜான் அன்று வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால் வர்த்தக ரீதியில் எனக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சிம்பு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. 

பிறகு இந்தப்படத்தால் ஏற்பட்ட கடனின் ஒருபகுதியை அடைக்க என் வீடு, சொத்துகளை விற்றேன். விநியோகஸ்தர்களுக்கு இன்னும் பாக்கியிருக்கிறது. அதைச் சிம்புதான் கொடுக்க வேண்டும். இப்படத்தால் ஏற்பட்ட அனைத்துவிதமான கடன்களிருந்தும் என்னை விடுவிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கமும் - நடிகர் சங்கமும் எனக்கு ஒரு நல்ல பதிலை பெற்றுத்தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.”

பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் நாம் முன்வைத்த கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
“படத்தின் தோல்விக்குப் பிறகு சிம்பு உங்களைச் சந்தித்தாரா?”
“படம் தோல்வியடைந்த மன வேதனையில் நான் மும்பை சென்றுவிட்டேன். அப்போது எனக்கு போன் செய்த சிம்பு, “நான் திருந்திட்டண்ணே. மொட்டை அடிச்சுட்டேன். பாட்டில்களை எல்லாம் உடைச்சிட்டேன். வாங்க பேசலாம். ஹெல்ப் பண்றேன்’ என்று சொன்னார். பிறகு நாங்கள் சந்தித்தோம். ஆனால் சில நாள்கள் போனபிறகு என் ஃபோன் அழைப்புகள் எதையும் அவர் எடுப்பதே இல்லை.”

“இந்தப்படத்துக்காக ஃபைனான்ஸியர் அன்புவிடம் நீங்கள் பணம் வாங்கினீர்களா?”
“அன்புவிடம் நான் ஃபைனான்ஸ் வாங்கவில்லை. இந்தப்படத்தால் ஏற்பட்ட கடன்களால் எனக்கு நெருக்கடி இல்லை. நான் திருப்பித் தந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்களின் வாக்கை காப்பாற்ற நினைக்கிறேன். அவர் இரண்டாம் பாகம் நடித்துத் தந்தால் அதைத் தயாரிக்கவும் நான் ரெடி. இல்லையென்றால் இந்த நஷ்டத்துக்குப் பொறுப்பேற்று அனைத்துப் பாக்கிகளையும் அவர் திருப்பித் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.”

“இப்படிப் பாதிப் படத்தை எடுத்து அதை ஒருபடமாக மாற்றி வெளியிடுவது என்பது ரசிகர்களை ஏமாற்றும் செயல் இல்லையா?”
“உண்மைதான். ஆனால் அவர் வந்தநாள்களில் எடுக்கப்பட்ட 35 சதவிகிதி படத்துக்கான செலவே, முழுப் படத்துக்கும் சொன்ன பட்ஜெட்டை நெருங்கிவிட்டது. ஒரு வேலை அவர் முழு படம் நடித்து இருந்தால் படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கமாக அதிகமாகி இருக்கும். மேலும், ‘எல்லாத்தையும் முடிச்சுத் தர்றேன்’ என்ற சிம்புதான் இந்தப் படத்தை இப்படி ரிலீஸ் செய்யச் சொன்னார். பணம்போட்ட நான் ரசிகர்களை ஏமாற்றவில்லை. சிம்புதான் அவரது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்.”  

“தயாரிப்பாளர்கள் சங்கம், உங்களின் புகாரின் பேரில் வேறு படங்களில் நடிக்க முடியாத அளவுக்குச் சிம்புவுக்கு ரெட்கார்டு போட்டுள்ளதாகக் கூறுகிறார்களே?”
“தயாரிப்பாளர் சங்கமோ, நடிகர் சங்கமோ அப்படி எந்தத் தகவலையும் எனக்குத் தெரியப்படுத்தவில்லை. எனது புகாரின் பேரில் சிம்பு தரப்பை அணுக தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தப் புகார் தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை.”

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரனிடம் பேசினோம். அவர் கூறுகையில், "எனக்கும் சிம்பு அண்ணாவுக்கும் எந்தத் தனிப்பட்ட பிரச்னையும் இல்லை, வேலை என்றால் கொஞ்சம் முன்பின் நடந்துகொள்வார். தயாரிப்பாளருக்கு எந்தப் பாதிப்பும் வந்துடக் கூடாது என்று நானும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். ‘படத்தை நாமளே ஒரு மாதிரி பண்ணி முடிச்சிடலாம் ஆதிக்’னு சிம்பு அண்ணா சொல்லும்போது, ‘ரெண்டாவது படம் கொடுத்தவர்’ என்ற மரியாதையில் அவர் சொல்வதை ஒப்புக்கொண்டு பண்ணி முடித்தேன். தயாரிப்பாளர் போட்ட முதல் வீணாகக் கூடாது என்பதால்தான் எடுத்தவரை ஒரு படமாக்கி அப்படியே ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டேன். இப்போது, என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளருக்கு உறுதுணையாக நிற்க இங்கு வந்துள்ளேன்” என்றார். 

அடுத்த கட்டுரைக்கு