Published:Updated:

கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா? - உண்மை பேசும் தொடர்-1

கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா? - உண்மை பேசும் தொடர்-1
கந்துவட்டி... தமிழ் சினிமாவின் ஹீரோவா... வில்லனா? - உண்மை பேசும் தொடர்-1

'அசோக்குமார் - அன்புச்செழியன்' இந்த இரண்டு பெயர்களுக்குள் சமீபத்திய தமிழ்சினிமாவின் முகம் அடங்கிவிடும். கந்துவட்டிப் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட 'கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ்' நிர்வாகி அசோக்குமாரின் மரணமும், மரணத்திற்குக் காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன்தான் என அவர் எழுதிவைத்த கடிதமும், அசோக்குமாரின் மரணத்திற்குப் பிறகு அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரண்டு நிற்கும் தமிழ்சினிமாவும்... என இந்த விவகாரம், 'தமிழ்சினிமா'வின் வண்ணங்களைக் குழைத்துப் போட்டு, கசடுகளைக் கையில் எடுத்துக் காட்டியிருக்கிறது.

இருவரின் விவகாரத்தில் கேள்விக்குள்ளாகி நிற்பது ‘கந்துவட்டி’ என்கிற ஒற்றை வார்த்தை. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சிறுவியாபாரம் செய்யும் ஒருவர் காலையில் 10,000 ரூபாய் ஒருவரிடம் கடனாகப் பெற்றுக்கொண்டு, அன்றைய இரவே வட்டியாக ஆயிரம் ரூபாய் சேர்த்து 11,000 ரூபாயைத் திருப்பிக்கொடுக்கிறார். சிறு வியாபாரத்திற்கே இப்படியென்றால், அனுதினமும் பல கோடிகளில் புழங்கிக்கொண்டிருக்கும் சினிமாவில் கந்துவட்டி புழங்காமல் இருக்குமா?

“எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அல்ல… அதற்கு முந்தைய காலத்தில்கூட வட்டிக்குப் பணம் வாங்கிப் படமெடுக்கும் சூழல் இருந்தது. இன்றைக்கும் தமிழ்சினிமாவின் முகங்களாக இருக்கும் சில தயாரிப்பு நிறுவனங்கள்கூட கடன் வாங்கிப் படம் எடுத்தவர்கள்தான். கடன் கொடுப்பவர்கள் கார்களில் வந்து ஸ்டுடியோ வாசலில் இருக்கும் சைக்கிளில் பணப் பையை வைத்துவிட்டுப் போவார்கள். பிறகு, அந்த சைக்கிள் ஸ்டுடியோவின் பின்பக்கம் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டு தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கப்படும். ‘பெயரும், புகழும் கொண்ட தயாரிப்பு நிறுவனம், கடன் வாங்கிப் படம் எடுக்கிறார்கள்’ என்ற பேச்சு எழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நடைமுறை” என்கிறார், தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இடத்தில் இருக்கும் நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவர்.

அப்படி மறைமுகமாக இருந்த கடன் வாங்கிப் படம் எடுக்கும் நிலையை, இன்று சாதாரணமான ஒன்றாக மாற்றியிருக்கிறது காலமும், சூழலும். ‘கந்துவட்டி, மீட்டர்வட்டி, வாரவட்டி, மாதவட்டி… இதெல்லாம் வட்டிகளின் வகைகளாக நினைத்துவிடவேண்டாம். சட்டபூர்வமற்ற அதாவது, தண்டனைக்குரிய வட்டிவசூல் முறைகள் என்கிறது அரசு. ஆனால், தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை, இவைதான் அதிகாரம் செய்துகொண்டிக்கிறது. இந்த வகையில் வட்டி கொடுக்கும் பைனான்ஸியர்கள்தான் அதிகாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த அதிகார மையத்தில் இருக்கும் பலரில் ஒருவர்தான், அன்புச்செழியன். ஊர் ராமநாதபுரம். வளர்ந்தது மதுரை. வளர்க்கப்பட்டது அரசியல், சினிமா அதிகார மையத்தில் இருக்கும் சிலரால்! அன்புச்செழியனைக் குறிப்பிட்டு ‘இவர் இல்லையெனில் தமிழ் சினிமா இல்லை’ என்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள், ‘இவரை மட்டுமே நம்பி தமிழ்சினிமா இல்லை’ என்கிறார்கள் சிலர். இருதரப்பின் கருத்தும் நபர் சார்ந்துதான் வேறுபடுகிறதே தவிர, ‘வட்டி’ என்ற வார்த்தையைத் தாண்டி வரவில்லை. ஆக, தமிழ்சினிமாவின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிப்பது ‘வட்டிக்குப் பணம் வாங்காமல், படம் எடுக்க முடியாது’ என்பதுதான். இதுதான் உண்மையா?

வட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தவர்கள் நிலை, வட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுப்பவர்கள் நிலை, வட்டிக்குப் பணம் வாங்குபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், பிரச்னைகளைச் சரிசெய்த முறை, வட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தாலும் அதில் எவ்வித அசைவுகளையும் கொடுக்காமல் சீராக இயங்கும் சிலரின் சாமர்த்தியம், வட்டிக்குப் பணம் வாங்காமல் சொந்தமாகப் படம் எடுக்கும் திறமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையேயான பிரச்னைகள், ஒரு படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து வெளியிடுவதில் இருக்கும் சிக்கல், ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் படங்களுக்குப் பின்னணிக் காரணம் என்ன, நடிகர்களின் சம்பளம், தரைமட்டமாகிக் கிடக்கும் வியாபார கட்டமைப்பு… அனைத்தையும் ஆராய்ந்து உணரவே இந்தத் தொடர்.

‘நேர்த்தியான தயாரிப்பாளரால் எப்போதும் ஜெயிக்கமுடியும்’

‘நல்ல படைப்புகளை நசுக்குவதே தயாரிப்பாளர்கள்தான்!’

‘படைப்பாளிகள்தான் குற்றவாளிகள்’

‘டெக்னாலஜி தெரியாத தயாரிப்பாளர்கள் புலம்பத்தான் செய்வார்கள்’

‘படத்தை தயாரிப்பதைவிட, வெளியிடுவதில் இருக்கும் சிரமங்கள் அதிகம்’

‘திரையரங்குகளே தேவையில்லை’

‘வட்டிக்குப் பணம் வாங்காமல் படம் எடுப்பது சுலபம்’

‘எனக்குத் தயாரிப்பாளரே தேவையில்லை’

‘நடிகர்களின் சம்பளத்தைக் குறைத்தால், வட்டிக்குப் பணம் வாங்கவேண்டிய அவசியம் இல்லை’

‘திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், அறிவோடுதான் செயல்படுதா?’

  • இப்படிப் பலரின் குரல்களை வார்த்தைகளாக வாசிப்போம்.