Published:Updated:

செடிக்குச்சி, கோபுடா, சிலம்பு... எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-27

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
செடிக்குச்சி, கோபுடா, சிலம்பு... எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-27
செடிக்குச்சி, கோபுடா, சிலம்பு... எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-27

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்

’நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் இறைவன் அவதாரம் எடுப்பான்’ என்கிற கருத்து காலங்காலமாக தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடமிருந்து வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் படங்களில் அதைவிட ஒரு படி மேலான மனித நேயத்துடன் தீயவன் அழிக்கப்படாமல் அவனது தீய பண்புகள் மட்டும் அழிக்கப்பட்டு அவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆவான். தீயவன் திருத்தப்படுவான், மனமாற்றம் அடைவான், இந்நோக்கில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது.

வாத்தியார் 

ஆங்கிலேயர் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, வாத்தியார் என்ற சொல் குஸ்தி வாத்தியார், சிலம்பு வாத்தியார் என்று வீர விளையாட்டுகளைக் கற்றுத் தரும் வாத்தியாரையே குறித்தது. இதற்கென்று ஊர்தோறும் திடல்கள் இருந்தன. இங்கு வந்து ஊர் இளைஞர்கள் வீரப் பயிற்சி பெறுவர். எம்.ஜி.ஆரும் இது போன்ற பயிற்சிகளைக் கோவையிலும் சென்னையிலும் பெற்றிருக்கிறார். கோவையில் சாண்டோ சின்னப்பா தேவர் நம்பியார் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் இந்த வீர பயிற்சிகளில் ஈடுபடும்போது பெரும்பாலும் எம்.ஜி.ஆரே முதலிடத்தில் இருப்பார். அங்கு சின்னப்பா தேவர் மாருதி தேகப் பயிற்சி சாலை என்று ஓர் உடற்பயிற்சி கூடம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும் சென்னையில் வட பழனியில் ஓர் இடம் வாங்கி அதில் ஸ்டண்ட் நடிகர்களைப் பயிற்சி பெறும்படி ஊக்கமளித்தார். இன்று அந்த இடம் ஜானகி ராமச்சந்திரா கலாலயம் என்ற பெயரில் ஜே.ஆர்.கே பள்ளிக்கூடமாக உள்ளது.

உளவியல் கருத்து

ஏழை ரசிகர் தன் கொடுமைக்கார முதலாளியை அடித்து உதைக்க வேண்டும் என்ற உள்மன ஆசை எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை காண்பதன் மூலம் நிறைவேறுகிறது. உளவியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் ஒருவர் கனவில் எலி, பூனையைத் துரத்தினால் அவர் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார். அதிலிருந்து விடுபட அவர் உள்மனம் விரும்புகிறது. எனவே, அவர் கனவில் வலிமை குறைந்த எலி, வலிமையான பூனையைத் துரத்துகிறது. இது அவரது ஒடுக்கப்பட்ட ஆசையின் [oppressed wishes] வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற ஆசை இருப்பவர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது மன அமைதி பெறுகிறார். ஒடுக்குதலிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறுகிறார். இதை [vicarious suffering] என்பர். அதாவது படம் பார்ப்பவர் தன் துக்கத்தையும் ஆற்றாமையையும் படத்தில் வரும் நடிகர்களின் இன்ப துன்பங்களோடு இணைத்து பார்த்து இன்பமோ துன்பமோ அடைவதாகும். 

ரசிகர் வகைகள்

சண்டைக் காட்சிகளை ரசிப்பவரில் இரண்டு வகையினர் உண்டு. ஒருவர் நேரடியாக மனதளவில் சண்டைப் போட்டு மகிழ்வார். இன்னொருவர் அவ்வாறு சண்டையிடாமல் முதல் பிரிவினரை வேடிக்கை பார்த்து மகிழ்வார். முதல் பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை தொழிலாளி ஒருவர் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்குள் மனதளவில் கூடு விட்டு கூடு பாய்கிறார். அவரே கெட்டவனை அடித்து உதைக்கும் உணர்வைப் பெற்று அமைதியடைகிறார். இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள், நமக்காகவே எம்.ஜி.ஆர் கெட்டவனை அடித்துத் திருத்துகிறார் என்று நம்பி அமைதி பெறுகின்றனர். இவர்கள் எந்தச் சமூக மாற்றத்துக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது ஒருவர் தானாக வந்து நல்லது செய்ய வேண்டும். அதன் பலனை மட்டும் இவர்கள் அடைய வேண்டும். எம்.ஜி.ஆர் படம் பார்த்துவிட்டு வரும் கூட்டத்தினரில் முதல் வகையினர் வழியில் இருக்கும் தட்டி போர்டுகளை உதைத்து கீழே தட்டிவிட்டு அழிச்சாட்டியம் செய்த படி வருவர். இந்த இரண்டாவது பிரிவினர் அவர்களை ஊக்கப்படுத்தி ரசித்துச் சிரித்தபடி நடந்துவருவர். 

சண்டையின் பாரம்பர்யம்

ராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் என நம் பாரம்பர்ய நூல்கள் அனைத்தும் இறுதியில் பெரிய சண்டையின் மூலமாகவே நீதியை,  நன்மையை நிலைநாட்டுகின்றன. அதன் வழியில் திரைப்படத்திலும் பெண், நிலம், பொருள் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடைசியில் ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் இடையில் சிறு சிறு சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் இது போன்ற சண்டைகள் இடம்பெறுகின்றன. ஆக மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு தன் தேவை அதிகரிக்கும்போது போட்டிகளும் பொறாமையும் பேராசையும் உருவாகி சண்டைகள் வருகின்றன. இது நபர் அளவில் வந்தால் வாய்ச்சண்டை என்றால் தகராறு என்றும் கைகலப்பு ஏற்பட்டால் சண்டை என்றும் நாடு அல்லது சமூகம் என்றளவில் ஏற்படும்போது அதைப் போர் என்றும் அழைக்கிறோம்.

எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சி அமைப்பு

தர்ம யுத்த முறைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் அமைக்கப்படும். 
1.எம்.ஜி.ஆர் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவதோ தன் பலத்தைக் காட்டுவதற்காக யாரையும் முதலில் அடிப்பதோ கிடையாது. 
2. கெட்டவனின் தீய செயலைத் தடுக்கவே அவர் அவனைத்  தாக்குகிறார். 
3. கெட்டவன் தன்னைத் தாக்க வரும்போது தற்காப்புக்காக அவனை அவர் எதிர்க்கிறார். 
4. ஏழை, மூதியவர் பெண்கள் குழந்தைகள் என உடல் பலமற்றவர் , கெட்டவனை எதிர்க்க வலுவற்றவர் அவனின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது அவர்களை அவனிடமிருந்து மீட்க அவனுடன் சண்டைப் போடுகிறார். 

சண்டைப் போடும்போது

எம்.ஜி.ஆர் சண்டையிடும் போது வில்லனை முதுகில் குத்துவதோ அல்லது அவன் ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும்போது தாக்குவதோ கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரின் குத்துவாளை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கிக்கொண்டு சண்டை செய்யும் போது எம்.ஜி.ஆர் அதை நம்பியாரிடமிருந்து தன் நீண்ட வாளால் தட்டிப் பறித்துவிட்டு ‘நீ உன் குத்துவாளை எடுத்துக்கொள் இது என்னுடையது’ என்பார். அதன் பின்பு அச்சண்டை ஒரு பெரிய வாள் ஒரு குத்து வாள் எனச் சம பலத்துடன் தொடரும். படகில் மனோகருடன் எம்.ஜி.ஆர் சண்டையிடும்போது நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை மனோகரின் முதுகில் விடுவார். அப்போது முதுகில் தாக்குகிறாயே நீயெல்லாம் ஓர் ஆண்மகனா என்று நம்பியாரைக் கண்டிப்பார். 

வில்லிகளுடன் சண்டை

எம்.ஜி.ஆர் படங்களில் பெண்கள் வில்லன் கூட்டத்திலிருந்து தொல்லை கொடுத்தாலும் அவர்களுடன் அவர் நேரடியாக மோதுவது இல்லை. மகாபாரதத்தில் சிகண்டி பீஷ்மர் கதையின் சாராம்சமே இதுதானே. பெண்ணை அடிப்பது தவறு என்பதால் நவரத்தினம் படத்தில் குமாரி பத்மினி எம்.ஜி.ஆருடன் மோதும் போது அவர் விலகிக் கொள்வார் குமாரி பத்மினி பொத் பொத்தென்று கீழே விழுந்து அடிபட்டு சோர்வடைவார். பிறகு எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப்போட்டுவிடுவார். அது போல இதயக்கனியில் மெயின் வில்லி ராஜசுலோசனாவிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க பெண் போலீஸ்களைப் பயன்படுத்துவார். எம்.ஜி.ஆர் வில்லியின் அடியாட்களுடன் நேருக்கு நேர் மோத சிதம்பரம் அருகே உள்ள ஒரு மண் திட்டையில் கப்பல் போல செட் அமைத்து சண்டைக் காட்சிகளை எடுத்தார். அந்த மேடு இன்றும் எம்.ஜி.ஆர் மேடு என்று அழைக்கப்படுகிறது.

சண்டைக்குப் பின்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் வில்லன் நடிகருடன் சண்டை முடிந்த பிறகு ஓரிரு படங்கள் தவிர மற்றவற்றில் அவர் அவனைக் கொல்வது கிடையாது. அவனை ஊனப்படுத்துவதும் இல்லை. அவன் செயல்பாட்டை மட்டும் முடக்குவார். பல படங்களில் கட்டிப்போட்டு விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுப்பார் அல்லது அந்த நேரத்தில் போலீஸே வந்துவிடும். புத்திமதி கூறுவதாகவும் வில்லன் திருந்தி மன்னிப்புக் கேட்பதாகவும் சண்டையின் முடிவு அமையும். பல படங்களில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லுக்கேற்ப வில்லன் அவன் செய்த தீய செயல்களுக்கு அவனே பலியாகிவிடுவான்.

வில்லனும் இதர ஸ்டண்ட் நடிகர்களும் 

எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் [88] வில்லனாக நடித்தவர் அசோகன். ஆனால், எம்.ஜி.ஆர் என்றாலே அவரது பரம விரோதி என்று கருதுவது நம்பியாரை மட்டுமே. பி. எஸ் வீரப்பா மஹாதேவி சக்கரவர்த்தி திருமகள் ஆனந்த ஜோதி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இவர்களுடன் துணை வில்லனாக ஆர்.எஸ். மனோகர் நடிப்பதுண்டு. இந்த வில்லன்களின் அடியாட்களாக எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் , ராமகிருஷ்ணன், நடராஜன், காமாட்சி, தர்மலிங்கம் போன்றோர் இடம்பெறுவர். இதயக்கனி, அடிமைப்பெண் போன்ற படங்களில் ஜஸ்டினுடன் தனிச் சண்டையும் இருந்தது. ஆனால், அவர் முக்கிய வில்லன் கிடையாது. புத்தூர் நடராஜன் சியாம் சுந்தர் ஆர்.என்.நம்பியார் சங்கர் போன்றோர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பர்.

வாள் சண்டை

வாள் சண்டையில் எம்.ஜி.ஆர் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அந்த வாள் வித்தையை மேடை நாடகங்களில் கூட நடித்துக்காட்டினார். பி.யு.சின்னப்பாவைப் போல வாள் சுழற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்று அசுரப் பயிற்சி பெற்றார். அவர் நாடக மன்றத்தின் முதல் நாடகமான இடிந்த கோபுரம் நாடக மேடையில் குண்டுக் கருப்பையாவுடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. வாள் மட்டும் அல்லாது குறுவாள் அல்லது குத்துவாள். பிச்சுவா போன்றவற்றையும் வைத்து சண்டைப் போடுவதையும் நாம் வாள் சண்டை என்ற பிரிவிலேயே சேர்த்துவிடுவோம்
எம்.ஜி.ஆருக்குச் சமமாக வாள் சண்டைப் போடுவதில் நம்பியார் கெட்டிக்காரர். அரச கட்டளையில் சரோஜா தேவியின் காதல் பரிசுக்காக இவர்களின் சண்டை சுவாரஸ்யமாக இருக்கும். வசனமும் இடம்பெறும். முதலில் எம்.ஜி.ஆர் சிரித்தபடி சண்டைப் போடுவார். தன் கையில் இருந்த மாலையை நம்பியார் பறித்துவிடவும் அதைத் திரும்பப் பெறுவதற்காக பின்பு கோபமாகச் சண்டை போடுவார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா என்று நம்பியார் கேட்க சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்று எம்.ஜி.ஆர் பதிலளிக்க ஒரு விவாதத்துடன் தொடங்கிய பிரச்னை இறுதியில் வாள் சண்டையில் முடியும். அதன் பின்பு கடற்கரையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் ’’இரு பூங்கொடி சற்று விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்பியாருடன் சரிவுப் பாறையிலும் கடல் தண்ணீரிலும் வாள் சண்டை இடுவது இன்றும் ரசிக்கப்படுகின்றது. அதனால்தான் இன்றும் இப்படம் கோவாவில் நடைபெறும் சர்வதேச விழாவில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் மகாதேவி, அரசக் கட்டளை போன்ற படங்களில் பி.எஸ். வீரப்பாவுடன் போடும் வாள் சண்டைகளும் சிறப்பாக இருக்கும். 

எம்.ஜி.ஆர் இரண்டு கையாலும் வாள் சுழற்றத் தெரிந்தவர். மாயா மச்சீந்திரா படத்தில் இரண்டு கையாலும் வாள் சுழற்றி சண்டைப் போட்டார். மருத நாட்டு இளவரசி முதலான சில படங்களில் எம்.ஜி.ஆர் பத்துப் பேர் வந்து சுற்றி நின்று சண்டைப் போட்டாலும் தன் கை வாளை கொண்டு சுழன்று சுழன்று உட்கார்ந்து எழுந்து குதித்து தாவிச் சண்டைப் போடும் காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். இதைப் போல கம்புச் சண்டையும் பல பேருடன் மோதுவதாக அமையும்

எம்.ஜி.ஆர் மணிமாறன், கரிகாலன் என இரண்டு வேடங்களில் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் வாள் சண்டையில் ஒருவர் வலது கை பயிற்சி உள்ளவர்; அடுத்தவர் இடது கை பயிற்சி உள்ளவர். இருவரும் மோதும் காட்சியில் டூப் போட்டு எடுத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் முகம் தெரியும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்கு ஏற்ப இரண்டு கைகளிலும் வாளை மாற்றி அனாயசமாக சண்டையிடுவார். இதே படத்தில் பிச்சுவா சண்டை ஷூட்டிங் நடக்கும்போது வந்த தர்மேந்திராவும் ஹேமாமாலினியும் இவர் நிஜ பிச்சுவா வைத்து சண்டைப் போடுவதை பார்த்து வியந்தனர். 

ஒரு படத்தில் நம்பியார் வீசிய கத்தி எம்.ஜி.ஆரின் கண் புருவத்தை வெட்டிவிட்டது. அதன் தழும்பு கடைசி வரை மாறவில்லை. புருவம் வரையப்படாத அவர் படங்களில் இந்தத் தழும்பைக் காணலாம். எம்.ஜி.ஆர் வால் வீசிய வேகத்தில் எதிரே சண்டையிட்ட ஸ்டன்ட்  நடிகரின் வாள் நுனி உடைந்து பறந்தது. அதை எம்.ஜி.ஆர் தன் கையால் லாகவமாகப் பிடித்து ‘இந்தா இதை என் நினைவாக வைத்துக்கொள்’ என்றார்.

மீனவநண்பன் படத்தில் வாள் சண்டையில் வெற்றி பெற்றவருக்கே தன் மகள் லதா சொந்தம் என்று வி.ஆர்.ராமசாமி சொன்னதால் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைப் போடுவார்கள். இது காலத்துக்கும் கதைக்கும் பொருந்தவில்லை என்றாலும் சண்டை ரசிக்கும்படியாக இருந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெல்பாட்டம்ஸ் போட்டு நடித்திருப்பார். மற்ற காட்சிகளில் கட்டம் போட்ட சங்கு மார்க் லுங்கி கட்டி வருவார். இந்தப் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கு மூச்சு வாங்குவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதறகாக அவர் ஒரு பக்கமாகப் போய் சில நிமிடங்கள் யாருடனும் பேசாமல் நிற்பார் என்று ஸ்ரீதர் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒரு கையில் பெரிய வாள் மறு கையில் சிறு குத்துவாள் வைத்து சண்டைப் போடுவதாகவும் காட்சிகள் உண்டு. அடிமைப்பெண் படத்தில் அப்பா எம்.ஜி.ஆர் சூரக்காட்டின் தலைவனான அசோகனுடன் வலை கட்டி அதில் சண்டையிடும் காட்சியில் அசோகனுக்கு ஒரு காள் ஊனம் என்பதால் எம்.ஜி.ஆரும் ஒரு காலை மடித்துக்கட்டி அவருடன் மோதுவார். இது ஒரு புதுமையான சண்டைக் காட்சி. எதிரி தனக்குச் சம பலம் உள்ளவனாக இருக்க வேண்டுமே தவிர நம்மை விட குறைந்த பலம் உள்ளவனுடன் மோதுவது ஆண்மை ஆகாது அது வீரம் எனப் போற்றப்பட மாட்டாது என்பதால் சவால் விட்டு ஒற்றைக் காலுடன் மோதினார். இதில் அசோகனுக்கு டூப் போட்டவர் சங்கர். 

எம்.ஜி.ஆர் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் நாள் நெருங்கிவிட்டதால் அவசரம் அவசரமாக மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது. அதில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சியில் நடித்த கடைசி ஆள் இந்த சங்கர். இவர் நம்பியாருக்கு டூப் போட்டு இருந்தார்.

சண்டைக் கருவிகள்

 வாள் சண்டை என்பது அரச குடும்பம் மற்றும் படை வீரர்களுக்கு உரியது. அது தவிர சாமன்ய மக்களுக்குத் தெரிந்த கிராமங்களில் அதிகமாகப் புழங்குகின்ற சிலம்பம், சுருள் வாள், செடிக் குச்சி, மான் கொம்பு போன்ற கருவிகளைக் கொண்டும் சண்டைக் காட்சிகளை எம்.ஜி.ஆர் தன் படங்களில் வைத்தார். 

சிலம்பு

சிலம்பாட்டம் பல படங்களில் இடம்பெற்றாலும் பெரிய இடத்துப் பெண் படத்தில் வரும் சிலம்புச் சண்டை மறக்க முடியாதது. மயக்க மருந்து கலந்த சோடாவைக் குடித்ததால் எம்.ஜி.ஆர் போட்டியில் தோற்றுப் போய் ஊரை விட்டே வெளியேறிவிடுவார். தான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணையும் இப்போட்டியின் தோல்வியால் இழந்துவிடுவார். ஆனால், ரிக்‌ஷாக்காரன் படத்தில் சுற்றி நின்று தன்னைத் தாக்கும் மூன்று பேருடன் ரிக்‌ஷா சீட்டில் உட்கார்ந்தபடியே கையில் சிலம்பு வைத்து எம்.ஜி.ஆர் சண்டைப் போட்டு மஞ்சுளாவைக் காப்பற்றுவார். இக்காட்சியில் சர்க்கஸில் வருவது போல ரிக்‌ஷாவை வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வரும்படி அமைத்திருந்தனர். தாயைக் காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர் கம்பு சுற்றி வெற்றி பெற்றதைப் பாராட்டும் எம்.ஆர்.ராதா தன் கந்த விலாஸ் டீக்கடையில் வந்து ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வார்.

எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டல் பாட்டில் எம்.ஜி.ஆர் சவுக்கை சுழற்றியபடி படிக்கட்டுகளில் ஓடி ஆடிப் பாடும் காட்சிகளில் அவர் சிலம்பு சுற்றுவதில் பின்பற்றும் காலடி வைப்பு முறைகளையே பயன்படுத்தியிருப்பார். 

செடிக்குச்சி

செடிக்குச்சி என்பது சிலம்புக் குச்சியைப் போலவே அளவில் சிறியது. எம்.ஜி.ஆர் ஒருவருக்கே திரையுலகில் இந்தச் செடிக்குச்சி சுற்றத் தெரியும். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆர் சிறிய பைப்புகளை வைத்து செடிக்குச்சி விளையாட்டை நிகழ்த்துவார். திரையரங்கில் இந்தக் காட்சியை நம் ரசிகர்கள் ரசித்தது போல அமெரிக்க மாணவர்களும் ரசித்தனர். 

கோபுடா

கோபுடா என்பது கையில் மாட்டும் ஒரு முள் கவசம் அகும். அரசிளங்குமரி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர கருதிய எம்.ஜி.ஆர் இந்தக் கோபுடா சண்டையை வைத்தார். இதில் கெட்டிக்காரரான சின்னப்பா தேவரை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அரை மணி நேரத்தில் சமாதானமாகி செட்டுக்கு அழைத்து வந்தார். ஆக்ரோஷமான இந்தக் கோபுடா சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மான் கொம்பு

மான் கொம்பு சண்டையை உழைக்கும் கரங்கள் படத்தில் சங்கர் அருமையாக வடிவமைத்திருப்பார். கால் சவடு [ஸ்டெப்] வைத்து எம்.ஜி.ஆர் இந்தச் சண்டையைப் போடும்போது ஒரு நேர்த்தியான கலை வடிவத்தைக் காணலாம். 

மல்யுத்தம் 

எம்.ஜி.ஆர் பளு தூக்கும் போட்டியில் நம்பியார் சின்னப்பா தேவர் தோற்கடித்து விடுவார். மல் யுத்தம் குஸ்தி போன்றவற்றையும் முறைப்படி கற்றிருந்தார். காஞ்சித் தலைவன் படத்தில் அவர் மல்யுத்தத்தில் வல்லவனான மாமல்லன் நரசிம்ம பல்லவன் வேடத்தில் நடித்ததால் ஒரு தனி மல்யுத்தக் காட்சி வைக்க திட்டமிட்டனர். அப்போது ஆந்திராவில் காவல் துறையில் பணியாற்றிய பஜ்ஜையா என்பவர் மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தார். நல்ல உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டிருந்தார். அவரை அழைத்து காட்சியை விளக்கி நடிக்கவைத்தனர். எம்.ஜி.ஆரை அவர் சரியாக மதிப்பிடாததால் சொன்ன படி கேட்காமல் நடித்துவந்தார். மறுநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் அவரை தலைக்கு மேலே தூக்கிக் கீழே போட்டார். பஜ்ஜையா எழுந்து வந்து எம்.ஜி.ஆர் காலைப் பிடித்து அழுதுவிட்டார். இதுவரை யாரும் அவரை அப்படித் தூக்கி எறிந்ததில்லை அது ஒரு மல்யுத்த வீரனுக்குப் பெருத்த அவமானம். எம்.ஜி.ஆருக்கு மல்யுத்தம் தெரியும் என்பதை நம்பாமல் அலட்சியமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டார். 

காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஆர்.எஸ்.மனோகரும் மல்யுத்தம் செய்வர். ஆர்.எஸ்.மனோகர் மல்யுத்தம் கற்றவர். பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும் மல்யுத்தக் காட்சிகள் இடம்பெறும். அன்பே வா  படத்தில் வரும் சிட்டிங் புல் கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது ஃபைட் சீனில் நடிக்க ஆசை. இவர் அன்பே வா படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆருடன் மோதினார். அவரையும் எம்.ஜி.ஆர் அப்படத்தில் தோளுக்கு மேலே தூக்கி வைத்திருந்து கீழே போடுவார்.