Published:Updated:

எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-28

எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-28
எம்.ஜி.ஆரின் இந்தச் சாகசங்களைக் கண்டிருக்கிறீர்களா..! (பாகம்-2) - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-28

எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உதவிய சண்டைக் காட்சிகள் 

எம்.ஜி.ஆர் தன் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக சம வலிமையுள்ள வில்லன், அவனது அடியாட்களாக வரும்  ஸ்டன்ட் பார்ட்டி, சண்டைக் கருவிகள், சண்டையின் தீவிரத்தை அதிகரிக்கும் மழை, பாறை, மின்சாரம், பெண்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் சண்டைக்கு இடையே மாட்டிக்கொள்ளும் கதாநாயகி, குழந்தைகள் போன்ற எமோஷனல் விஷயங்கள் என ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமாக அமைப்பார். இவற்றுடன் புலி சிங்கம் பாம்பு போன்றவையும் இவரது சண்டைக் காட்சிகளில் இடம்பெறுவதுண்டு. 

குலேபகாவலியில் புலியோடு மோதும் சண்டை

1955ம் ஆண்டில் பொங்கல் அன்று கேவா கலரில் வெளிவந்து வெற்றி விழா கொண்டாடிய அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தொடர்ந்து ஜூலை 24இல் வெளிவந்த வெற்றிப் படம் குலேபகாவலி. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஆர்.ஆர் பிக்சர்சின் ராமண்ணா. இவர் டி.ஆர் ராஜகுமாரியின் தம்பி. இப்படத்தில் எம்.ஜி.ஆர் குலேபகாவலி என்ற மலரைத் தேடி வருவார். அந்த மலர்ச்செடிக்கு ஒரு புலி பாதுகாப்பாக இருக்கும். அந்த மலரைப் பெற எம்.ஜி.ஆர் புலியுடன் சண்டை போட்டுக் கொல்ல வேண்டும். அந்தக்காலத்தில் புலிக்குட்டி கோவிந்தன் என்பவர் புலி,பாம்பு,சிறுத்தை இவற்றை வளர்த்து படப்பிடிப்புக்குத் தருவார். அவரே சண்டைக்காட்சியில்  டூப்பாகவும் நடிப்பார். ஆறடி பள்ளம் வெட்டி அதற்குள் கூண்டு அமைத்து புலியை வெளியே வர விடாமல் வைத்து சண்டைக் காட்சியைப் படமெடுக்க திட்டமிட்டனர். 

எம்.ஜி.ஆர் ஷூட்டிங்குக்கு வந்தார். வெளியே கிரேனில் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இருந்தனர். கோவிந்தன், புலியைக் கூண்டை விட்டு வெளியே வா என்று அழைத்ததும் புலி விருட்டென்று வெளியே வந்து ஆறடி பள்ளத்தை தாவி மேலே ஸ்டுடியோவுக்குள் புகுந்து விட்டது. கோவிந்தன் ஐயோ ஐயோ என் புலி புலி என்று ஓடுகிறார். கிரேன் சட்டென்று மேலே போனது. அதனால் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் உயரே இருக்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் எங்கும் ஓடவில்லை, பதற்றப்படவில்லை. தன் கையில் துப்பாக்கியுடன் கேமராவின் ஸ்டாண்ட் அருகே புலியைக் குறி பார்த்தபடி நிற்கிறார். அந்த ராஜ உடைக்குள் எங்கே துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தாரோ?. ஆனால், சமயம் வந்ததும் சட்டென்று துப்பாகியால் குறி பார்த்தபடி அங்கேயே நின்றுவிட்டார். இதுதான் எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தி, துணிச்சல், நிதானம். பிறகு மறுநாள் முதல் ஒரு வாரம் வரை சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் படங்களில் சிங்கம்

வேட்டைக்காரன் படத்தில் சிங்கம் ஒரு கதாபாத்திரமாகவே வரும். ஒரு காட்சியில் சிங்கம் வலியுடன் படுத்திருக்கும். அப்போது எம்.ஜி.ஆர் அதன் காலில் குத்தியிருந்த முள்ளை எடுத்துவிடுவார். அது பிறிதொரு சமயம் நன்றிக்கடனுக்காக எம்.ஜி.ஆரின் மகனை சிறுத்தையிடம் சண்டை போட்டு காப்பாற்றும். Androcles and the Lion  கதை நினைவுக்கு வருகிறதா..! 

ராமாவரம் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட  சிங்கம்

அடிமைப்பெண் படத்தின் சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர் இரண்டு சிங்கங்களை வாங்கிவந்தார். அதில் ராஜா என்ற ஆண் சிங்கத்தை மட்டும் சண்டைக்காகப் பழக்கினார். சிங்கத்தை வைத்துக்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றார். அதற்கு நல்ல சாப்பாடு போட்டார். சிங்கத்தை சர்க்கஸில் பார்த்துக்கொண்டவர், ’சர்க்கஸில் கூட நாங்க இப்படி சாப்பாடு போட்டதில்லை’ என்றார். அவ்வளவு கவனிப்பு.  தினமும் எம்.ஜி.ஆர் சிங்கத்திடம் போய் அதற்கு உணவளிப்பார்.

அடிமைப்பெண் ஷூட்டிங்கில் 

சிங்கத்துக்குச்  சண்டைக் காட்சியில் நடிக்க மயக்க மருந்து கொடுத்த போதும் அது உர் உர் என்று உறுமிக்கொண்டே இருந்தது அதனால செட்டில் இருந்தவர்கள் பயந்தபடியே இருந்தனர். முதல் நாள் சிங்கம் எம்.ஜி.ஆரை சட்டென்று அறைந்துவிட்டது. அங்கிருந்த ஒருவர் ஐயோ அண்ணனை சிங்கம் அடிச்சுடுச்சு என்று கத்தியதும் எம்.ஜி.ஆர் அவரை ஒரு அறைவிட்டார். ஏன் பீதியைக் கிளப்புகிறாய் என்று அதட்டினார். அதன்பின்பு அங்கிருந்த வசனகர்த்தா சொர்ணம் முதற்கொண்டு சண்டைக்காட்சிக்குத் தேவையில்லாதவர்களை வெளியேற்றினார். பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. காலையில் அடி கொடுத்தவருக்கு மாலையில் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு கொடுத்து இனி அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு எங்கேயும் கத்தக் கூடாது என்று அறிவுரை கூறினார். 

அடிமைப்பெண் படத்துக்குத் தொடர்ந்து பத்து நாள்கள் சிங்கத்துடனான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டன. சிங்கம் எம்.ஜி.ஆரின் தோள் மீது முன்னங்கால் இரண்டையும் போட்டு நிற்கும்போது அதன் முழு எடையைத் தாங்கக்கூடிய வலிமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது.  சிங்கத்துடன் உருளும்போது அதன் முழு எடையை எம்ஜி ஆர் தாங்கிகொண்டு உருண்டார். எம்.ஜி.ஆரின் உடல்வலிமையும் மனதுத்துணிவும் அந்தக் சண்டைக் காட்சியை வெற்றி பெறச் செய்தது. அந்தக் காட்சியில் ஜெயலலிதா, பண்டரிபாய் போன்ற பெண்களும் இடம்பெற்றது, படப்பிடிப்பை மிகவும் ரிஸ்க் உடையதாக்கியது.

எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அதே சிங்கம்

அடிமைப்பெண் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தச் சிங்கம் சர்க்கஸுக்குத் திருப்பித் தரப்பட்டது. சிங்கம் அங்கே இறந்ததும் அதன் உடலை  எம்.ஜி.ஆர் பம்பாய்க்கு அனுப்பி பாடம் செய்து வாங்கினார் . இப்போது அது எம்.ஜி.ஆர்  நினைவில்லத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள் கம்பீரமாக நிற்கிறது.. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்தச் சிங்கத்தின் அருகே நின்று படம் எடுத்துக்கொள்கின்றனர்.

கதைக்கு ஏற்ற சண்டைக் காட்சி வடிவமைப்பு

படத்தில் எம்.ஜி.ஆர் என்ன தொழில் செய்கின்றாரோ அதற்கேற்ப சண்டைக் காட்சி அமைக்கப்படுவதும் உண்டு, கதை நடக்கும் இடத்துக்கேற்ப சண்டைக்காட்சிகள் அமைக்கப்படுவதும் உண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.
விவசாயி படத்தில் கடைசிக் காட்சியில் அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்கள் மீது நம்பியார் முகமூடி அணிந்து பூச்சி மருந்து அடித்ததால் எம்.ஜி.ஆர் அவருடன் சண்டையிடுவார். இந்த முகமூடிச் சண்டை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
மாட்டுக்காரவேலன் படத்தில் எம்.ஜி.ஆர் தன் குடிசைக்குள் தோசை சுட்டுக்கொண்டிருப்பார். அப்போது வெளியே அசோகனின் ஆட்கள் வந்து அவரை சண்டைக்கு இழுக்கும்போது எம்.ஜி.ஆர் மாட்டுக்குக் கழுத்தில் அணிவிக்கும் சலங்கை கோத்த கழுத்துப்பட்டியை வைத்து சண்டை போடுவார். அதன் வீச்சால் எதிரிகளின் முகத்தில் விழும் கீறல்கள் ஆங்கில எழுத்துகளைப் போல தோன்றும். இதுவும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து பார்க்கும் காட்சி ஆகும்.

உரிமைக்குரல் படத்தில் நம்பியாரின் ஆட்கள் எம்.ஜி.ஆரின் ரேக்ளா வண்டி வரக் கூடாது என்பதற்காக அவர் வரும் பாலத்துக்கு தீ வைத்து விடுவர். ஆனால், எம்.ஜி.ஆர் சரியாக டைமிங் பார்த்து ரேக்ளாவுடன் அந்தப் பாலத்தை கடந்துவிடுவர். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் டூப் போடாமல் செய்திருப்பார். அவர் படம் முழுக்க ரேக்ளாவில் வருவதால் ரேக்ளாவைச் சண்டைக்காட்சியிலும் சேர்த்திருப்பார்.

ரிக்‌ஷாக்காரன் படத்தில் ரிக்‌ஷாவில் இருந்தபடியே எதிரிகளைக் கம்பு சுற்றி விரட்டியடிப்பார். படகோட்டியில் எம்.ஜி.ஆர் வயதான தாத்தாவாக மாறு வேடத்தில் வந்து தன் படகில் இருந்தபடி அடுத்த படகில் இருந்த அசோகனின் கம்பை அடித்துத் தூக்கி கடலில் எறிவார். கலங்கரை விளக்கம் படம் மாமல்லன் ஒரு கதாபாத்திரமாகவும் அவன் எழுப்பிய மகாபலிபுரமே கதைக்களமாகவும் கொண்டிருந்ததால் அந்த மலைப் பாறைகளில் சண்டைக் காட்சிளை அமைத்திருப்பார். 

கடைசி சண்டையில் இயற்கையோடு போராட்டம்

படத்தின் கடைசி சண்டைக்காட்சி வரும் போது வாழ்வா சாவா போராட்டம் போல தோன்றும். இதில் எம்.ஜி.ஆர் வென்றால் அது நீதியின் வெற்றி வில்லன் வென்றால் அது அநீதியின் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் எம்.ஜி.ஆர் சில இயற்கை சீற்றங்களையும் இரக்க உணர்வுகளையும்  இடம்பெறச் செய்வார். இயற்கை சீற்றம், படம் பார்க்கும் ஆண்களை கவர்வதற்கான உத்திமுறை ஆகும். 

அடுத்ததாக வெள்ளமும் நெருப்பும் சூழ்ந்து ஆபத்தை விளைவிக்கும் சண்டைக் காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளையும்  எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்வார். இரக்க உணர்வை மிகுவிக்கும் இச்சூழ்நிலையில் இயற்கையோடு போராடும் நிலையும் எம்.ஜி.ஆருக்கு ஏற்படும். இது பெண் ரசிகைகளை கவர்வதற்கான உத்திமுறை ஆகும். இவற்றிற்கு இரண்டு மூன்று உதாரணங்களை மட்டும் இங்குக் காண்போம்.

நாடோடி மன்னன் படத்தில் கடைசி காட்சிகளில் கழுகுக்குகை சிதைந்து வெள்ளமாக நீர் வெளியேறும். அந்த வெள்ளத்தில் மன்னன் மார்த்தாண்டனைக் காப்பாற்றும் முயற்சியில் நாடோடி போராடுவதை பார்க்கும் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்திருப்பர். 

என் கடமை படத்தின் கடைசிக் காட்சியில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் சிக்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் மேலே மேலே ஏறி அவர்களை மூழ்கடிக்கும். மேலும் கடைசியில் எம்.ஜி.ஆரின் ஷூவும் மாட்டிக்கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு டென்ஷனை அதிகப்படுத்தும். தண்ணீரின் மட்டம் உயர்வதும் சரோஜாதேவி மயங்கிக் கிடப்பதும் படம் பார்க்கும் ஆண்களையும் பெண்களையும் டென்ஷனோடு படம் பார்க்க வைக்கும்.

அரசகட்டளை படத்தில் சரோஜாதேவியைக் காப்பாற்றும் முயற்சியில் எம்.ஜி.ஆர் மணல் மேடாகிவரும் வெற்றி மண்டபத்தை விட்டு வெளியேற முயல்வார். அப்போது ஒவ்வொரு வாயில் வழியாக வெளியேற முயலும் போது அங்கு பாதியில் மணல் கொட்டி வழியை அடைத்துவிடும். அடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடியும்போது படம் பார்க்கும் பெண்கள் பரிதவித்துப் போவார்கள். நாடோடி மன்னனில் அம்பு பட்டு இறந்து கிடக்கும் மானை காட்டி பானுமதியின் மறைவை குறிப்பாக உணர்த்தியது போல அரச கட்டளையில் நரம்பு அறுந்த வீணையை காட்டி சரோஜாதேவியின் மறைவை உணர்த்துவார்கள் எம்.ஜி.ஆரின் ஜோடி அவரது அத்தை மகள் ஜெயலலிதாதான் என்பதை உணர்த்த அவர் கனவில் பாடிய ஒரு டூயட் பாட்டைக் காட்டுவார்கள். உரிமைக்குரல் படத்திலும் என் அண்ணன் படத்திலும் கடைசி சண்டைக் காட்சிகளில் நெருப்பு முக்கிய இடத்தை பெறும். 

கடைசிக் காட்சியில் விரட்டுதல் [சேசிங்]

ஆங்கிலப் படங்களில் கார் சேஸிங், பைக் சேஸிங் என்பன ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுவன. அது போல தமிழ்ப் படத்தில் வைக்க இயலாவிட்டாலும் தேவையும் இல்லை என்பதாலும் எம்.ஜி.ஆர் தனது படங்களில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் சில சேஸிங் காட்சிகளை வைத்திருப்பார். 

என் அண்ணன் படத்தில் தன் குதிரை வண்டியைக் கொண்டு காரை விரட்டிச் சென்று பிடிப்பார். தாயின் மடியில் படத்தில் இருவரும் சகோதர முறை என்று தெரிந்தவுடன் ஜீப்பில் படு வேகமாக மலை உயர்த்துக்குப் போய் விழுந்து செத்துப்போக எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் முயல்வர். அப்போது சகோதரர்கள் கிடையாது என்பதைச் சொல்ல நாகேஷ் இன்னொரு வண்டியில் படுவேகமாக இவர்களைத் துரத்தி வருவார். மீனவ நண்பன் படத்தில் கடைசியில் மின்சாரப் படகில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு வருவர். இதில் பொம்மை படகுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஸ்டுடியோவுக்குள் வைத்து அதிக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் ஸ்கேட்டிங் செய்தபடியே பலருடன் வாள் சண்டை போடுவார். அடுத்து விஷ ஊசியுடன் ஒருவர் தாக்க வரும்போது அவருடனும் மோதுவார். இந்தக் காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக முதலில் நீச்சல் குளத்திலும் பிறகு தன் வீட்டு மொட்டை மாடியிலும் எம்.ஜி.ஆர் 55ஆவது வயதில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். பறக்கும் பாவை படத்தில் நடிக்கும் போது பார் விளையாட்டு பயின்றார். டூப் இல்லாமல் அவர் டிரபீஸ் விளையாடியிருப்பதை காணலாம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சண்டையும், பாட்டும் மாறி மாறி வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 

இன்றைக்கும் சிறு நகரங்களில் திரையரங்க உரிமையாளர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் படம் போட்டால் போதும் என்கின்றனர். அதுவும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை போட்டால் வசூல் அள்ளி விடலாம் என்று நம்பும் அளவுக்கு இப்படம் இலாபம் தருகிறது.

நடிகைகளின் சண்டைக்காட்சி

எம்.ஜி.ஆர் படத்தில் பெண்களுக்கு முக்கிய ரோல் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருவதுண்டு. அது சரியல்ல. கதைக்கு ஏற்ப அவர் முக்கியப் பங்கை வழங்கியுள்ளார். அதிமுக ஆரம்பித்த பின்பு எம்.ஜி.ஆர் படத்தில் லதாவின் விழிப்புஉணர்வு வசனங்களும் காட்சிகளும் ஏராளமாக இடம்பிடித்தன. அதற்கு முன்பு சாவித்திரி மகாதேவி படத்திலும் பி பானுமதி ராஜா தேசிங்குப் படத்திலும் வாள் சண்டை போட்டு தங்களைக் காத்துக்கொள்ள முனைவார்கள். மருத நாட்டு இளவரசியிலும் அடிமைப்பெண்ணிலும் எம்.ஜி.ஆருக்கே கதாநாயகிகள்தான் சண்டை சொல்லிகொடுப்பர். முகராசி படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குச் சிலம்பு சுற்ற கற்றுக்கொடுப்பார். இதுவும் பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையைக் கற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே எம்.ஜி.ஆர் இக்காட்சியை அமைத்திருப்பார்.

சண்டைக்காட்சிகளில் பாட்டும் ஆட்டமும்

தமிழ் பாரம்பர்யத்தில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு போன்ற வீர விளையாட்டுகளை ஆட்டம் பாட்டம் என்றே அழைக்கின்றனர்.  அவற்றிற்கென்று தனி தாளக்கட்டில் பாடல்களும் உள்ளன. அதனை பின்பற்றி எம்.ஜி.ஆர் தன் படங்களில் சில சண்டை காட்சிகளில்  ஆடல்பாடலையும் புகுத்தியுள்ளார். 

நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று’ என்ற பாடல் காட்சி சிறுவர்கள் சண்டைப் பயிற்சி பெறுவதை காட்டும். இதில் எம்.ஜி.ஆர் கையில் இரண்டு வாள்களை ஏந்திய வீசி அபிநயித்தபடி பாட்டுப் பாடிக்கொண்டு வருவார். அப்போது மிகவும் லாகவமாக இரண்டு பக்கமும் வரிசையாக வந்து எட்டு போடும் சிறுவர்கள் மீது படாமல் ஆடிவருவார்.  ஒரு சிறுவனுடன் மிகவும் மென்மையாக தன் வாளால் அவன் வாளை தட்டிச் சண்டையிடுவார். அவரது வாளின் அசைவில் காணப்படும் மென்மை அவரது நடிப்புக்கு ஓர் உதாரணம் ஆகும்.

அரச கட்டளை படத்தில் சரோஜாதேவியை ஆட விடாமல் தடுப்போரை விரட்டி அடிக்கச் சண்டையிடும் காட்சியில் ‘ஆடி வா ஆடி வா ஆடி வா --ஆடப்பிறந்தவளே ஆடி வா - புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா -- ஆடி வா ஆடி வா ஆடி வா’ என்று பாடவும் செய்வார்.

தெய்வத்தாய் படத்தில் தன்னைச் சிறைப்பிடித்திருக்கும் மூவரை விட்டு தப்பியோடுவதற்கு பார்க்கும் ஒத்திகையாகப் பாட்டோடு கலந்த ஒரு சண்டைக் காட்சி இடம்பெறும் . ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் –அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் --உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்’ என்று பாடியபடி சண்டையிடுவார். பாட்டு முடியும் தருவாயில் வெளியேறிவிடுவார்.

கலைஞரின் எங்கள் தங்கம் படத்தில் திமுகவின் கட்சி நிகழ்வுகளை விளக்கும் ‘நான் செத்து பொழச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா’ என்ற பாடல் காட்சியில் சண்டைக் காட்சியும் இணைந்திருக்கும். பாட்டு முடியும்போது அனைவரையும் அடித்து போட்டிருப்பார்.

சண்டை காட்சியில் நகைச்சுவை 

சண்டை காட்சியில் காமெடி நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் இருந்தால் நகைச்சுவையும் சேர்ந்திருக்கும். இது போன்ற காட்சிகள் கதையின் பிரச்னை தீவிரமடையாத வேளையில் அதாவது படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இதுபோன்ற நகைச்சுவை காட்சி முதல் சண்டைக் காட்சியில் இருக்கும். 

காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் ஓங்கி ஒரு பீரோவை குத்துவார் பீரோ உடைந்துவிடும் உள்ளே போன தன் கை வெளியே வந்ததும் அந்தக் கையில்கட்டியிருக்கும் கை கடிகாரத்தை காதில் வைத்து ஓடுதா என்று பார்ப்பார். சண்டையின் தீவிரத்தில் மூழ்கியிருக்கும் ரசிகர்கள் இந்தக் காட்சியைக் கண்டதும் சிரித்துவிடுவர். எதிரியை மடக்கி துப்பாக்கியைப் பறித்து திரும்பவும் அவரிடமே எறிந்துவிடும் காட்சிகளில் எம்.ஜி.ஆர் துப்பாக்கியின் குண்டுகளை எடுத்துவிட்டு சத்தமில்லாமல் எதிரியின் வீரத்தைச் செல்லா காசாக்கும் போது ரசிகர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.

தொடர்ந்து 24 மணி நேர படப்பிடிப்பு

சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார் என்பதை இதுவரை கண்டோம். இதனை மேலும் வலியுறுத்த ஒரு முத்தாய்ப்பு சான்று. பணத்தோட்டம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. மறுநாள் காலை வரை நடந்தது. இரவும் பகலும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைத்து இந்தக் காட்சியை நடித்து முடித்தார். இந்தக் காட்சியை நீங்கள் படத்தில் பார்த்து அதன் மதிப்பை புரிந்துகொள்ளுங்கள். அவரது பட வெற்றியில் அவர் காட்டும் அக்கறைக்கு இது ஒரு சோறு பதம் ஆகும்.