Published:Updated:

``அரசியலுக்கு வர சினிமாக்காரனுக்கு மட்டும்தான் அதிக தகுதியுண்டு..!’’ - மோகன்ராஜா

அலாவுதின் ஹுசைன்
``அரசியலுக்கு வர சினிமாக்காரனுக்கு மட்டும்தான் அதிக தகுதியுண்டு..!’’ - மோகன்ராஜா
``அரசியலுக்கு வர சினிமாக்காரனுக்கு மட்டும்தான் அதிக தகுதியுண்டு..!’’ - மோகன்ராஜா

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் அனிருத் இசையமைத்துள்ள திரைப்படம் 'வேலைக்காரன்'. இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைப்பெற்றது.  திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், சிவகார்த்திகேயன் ரசிகர்கர்கள் எனப் பலரும் வந்திருந்த இவ்விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் மோகன் ராஜா பேசியதாவது...

"இந்தப் படத்திற்கு வேலைக்காரன் என்று பேர் வைத்தபோதே நான் ஜெயித்துவிட்டேன். இந்தப் படம் நல்லா இருக்குமோனு நினைக்க காரணமும் இது உங்களைப் பற்றிய கதை என்பதால்தான். நாம் சோம்பேறியாக வாழ்ந்துவிடலாம், திருடனாக வாழ்ந்துவிடலாம், பொய் சொல்லி வாழ்ந்துவிடலாம். ஆனால் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் இப்படம் சமர்ப்பணம். நமக்கு யாருடைய துணை, பெரிய சொத்து இல்லை என்றாலும் நமது உழைப்பு நமக்கு துணையாய் இருக்கும். அப்படிப்பட்ட உழைப்புக்குத் தகுந்த கூலி வந்தே ஆகவேண்டும் 

அப்படி வரும் வரையில் நான் விடவே மாட்டேன் என்று கூறுகிற ஒரு வேலைக்காரனை பற்றிய கதை இது. இத்தகைய ஒரு கதைகருவிற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. உழைக்கவும் ஆரம்பித்தோம். எல்லாரிடமும் நான் கதைசொல்லி வேலை வாங்கினேன். எங்கள் உழைப்பிற்கு மரியாதையை தேடித் தரப்போவது உங்கள் முழு உழைப்பில்தான் உள்ளது, அது பெஸ்டாக இருக்க வேண்டும் என்று நான் விண்ணப்பித்த ஒரே ஆள் இசையமைப்பாளர். அதற்கேற்றார் போல் இன்று இசையின் மூலம் ஒரு அடையாளம் தந்திருக்கிறார் அனிருத். பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள். இசைக்குப் பின் நின்று உறுதுணையாய் இருந்த இசை கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

என்னை ஜட்ஜ் செய்யாதீர்கள். நான் உங்களில் ஒருவன். நீங்கள் கேட்க நினைத்த கேள்விகளைத்தான் நான் 'தனி ஒருவன்' என்று எடுத்தேன். அதுக்கு இதுநாள் வரையில் மக்கள் கொடுத்த பாராட்டுகள் அதிகம். நம்மில் யாரேனும் நினைத்தோமா சென்னையில் வெள்ளத்தின்போது மக்கள் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம் என்று. மக்கள் நாம் நினைப்பதை விட அதிக சிந்தனையுடையவர்கள். இன்றைய இளைஞர்களுக்குள் ஒரு எண்ண ஓட்டம் இருக்கிறது. அதை நம்பி எடுத்த படம்தான் 'தனி ஒருவன்'. இதற்கு மக்கள் தந்த ஆதரவுதான் என்னை 'வேலைக்காரன்' எடுக்க வைத்தது.

இரண்டு மணி நேரம் பொழுதுபோக்கிற்கு மட்டும் சினிமா கிடையாது. சினிமாவைப் போல் இங்கு சிறந்த ஊடகம் உலகில் எதுவும் கிடையாது. நமக்காகப் பேசக்கூடிய ஒரு மீடியம் சினிமா மட்டும்தான். யார் சொன்னது சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது, சமூகத்தை பற்றிப் பேசக் கூடாது என்று. சினிமாக்காரனுக்கு மட்டும்தான் அதிக தகுதியுண்டு. இன்று சமூக அக்கறை மிகுந்தவர்கள் போகும் இரண்டே துறை ஒன்று அரசியல் இன்னொன்று சினிமா. 

சினிமாவைத் தள்ளி வைக்க துணிகிறார் என் சக இயக்குநர் கரு.பழனியப்பன். இப்படி எத்தனைபேர் தாங்கள் சார்ந்த துறையைத் தள்ளி வைக்கும் உணர்வாளனாக இருப்பார்கள். அந்த தைரியம் சினிமாக்காரர்களுக்கு மட்டும்தான் உள்ளது. நான் சினிமாக்காரன் என்று சொல்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். இங்கு இருக்கும் ஒவ்வொரு சினிமாக்காரர்களுக்கும் சமூகத்தின் மீது பெரும் அக்கறை இருக்கிறது. அப்படிப்பட்ட  அக்கறையை முழு மூச்சாக எடுத்து 'வேலைக்காரன்'படமாய் செய்திருக்கிறோம். டிசம்பர் 22ஆம் தேதி வரை காத்திருங்கள். நாம் கேட்க வேண்டிய பல கேள்விகளுடன் ஒரு அழுத்தமான பதிவாய் வருகிறது 'வேலைக்காரன்’ ‘’ என்றார்