Published:Updated:

``விஷாலுக்கும் ஜெ.தீபாவுக்கும் ஒரே நிலைமைதான்!”

``விஷாலுக்கும் ஜெ.தீபாவுக்கும் ஒரே நிலைமைதான்!”
``விஷாலுக்கும் ஜெ.தீபாவுக்கும் ஒரே நிலைமைதான்!”

“உண்மைதான். ஆனா, இப்பவும் சொல்றேன். நான் தி.மு.கவைச் சேர்ந்தவன். அதனால், மருதுகணேஷ் வெற்றி பெறணும் என்பதுதான் என் எண்ணம். மரியாதை நிமித்தம். 'ஜெயிச்சா வாழ்த்துகள்'னு சொன்னேன். ஆனால், அவர் வெற்றிபெற முடியாதுனு எல்லாருக்குமே தெரியும். அவர் அண்ணா நகர் பொதுத்தேர்தல்ல நின்னாக்கூட வெகுவாரியான ஓட்டுகள் விழும். ஏன்னா, அங்க அவருக்கு நண்பர்கள் அதிகம். ஆனா, ஆர்.கே.நகர்ல போட்டியிடும் தினகரன், மதுசூதனன் இவங்க எல்லாருமே அந்தத் தொகுதி மக்களுக்குப் பரிச்சயமான வேட்பாளர்கள். தீபாவும் விஷாலும் நாமினேஷன் பண்ணதை நியூஸ்ல பார்த்தேன். இவங்க ரெண்டு பேருக்குமே ஒரே நிலைமைதான்." - “விஷால் வெற்றிபெற வாழ்த்து சொன்னீர்களே” என்று கேட்டதற்குத்தான் இப்படிப் பதில் சொல்கிறார் நடிகரும் தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளருமான ராதாரவி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனுத்தாக்கல்செய்த அன்று ராதாரவியைச் சந்தித்தேன். 

“விஷால் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்த்தீர்களா?”

“அவர் அரசியலுக்கு வருவார்னு எனக்கு எப்பவோ தெரியும். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் ஜெயிச்சார்னு சொல்றாங்க. அந்தச் சின்ன தேர்தல்லயே வெறும் 150 ஓட்டு வித்தியாசத்துலதானே ஜெயிச்சாங்க. அதுக்கே வண்டி இழுக்கமாட்டேங்குது. இது மூணு லட்சம் ஓட்டு. எப்படிங்க ஓட்டுப்போடுவாங்க? தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் தொகுதிக்கு வந்து பேசினால் மக்கள் கேட்பாங்க. விஷால் வந்து பேசினால் மக்கள் பார்ப்பாங்க, அவ்வளவுதான். ரசிகர்கள் நிறைய பேர் இருக்காங்க, புரட்சி பண்ணலாம்னு புரட்சித் தலைவர் மாதிரி நினைச்சார்னா அது ரொம்ப தப்பு. ஒவ்வொரு விஷயத்துலயும் ஆர்வமிகுதியில் முன்னப்போய் நிக்கிறார். தியேட்டர்காரர்களுக்குச் சவால் விடுறதுனு அவருடைய எல்லா நடவடிக்கைகளையுமே பார்த்துட்டுதானே இருக்கோம். 'கல்யாணத்துல மணமக்களை 'வாழ்க'னு சொன்னா வாழ்ந்திருவாங்க; 'ஒழிக'னு சொன்னா ஒழிஞ்சிருவாங்களா?'னு பெரியார் கொள்கையில எங்க ஐயா சொல்வார். அது மாதிரிதான் இதுவும்."

“விஷால் தலைமையிலான நடிகர் சங்கத்தின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?”

"எதை செஞ்சிருக்காங்கனுதான் நான் கேட்பேன். சொன்னதை எதுமே செய்யலை என்பது வேற விஷயம். நாமக்கல்ல இருக்கிற தொழில் நடிகர்கள் அறுபது பேரை தொழில் சாரா நடிகர்களா மாத்தியிருக்கார். ஏன்னா, அவங்க எனக்கு ஆதரவா இருந்ததுனால். பொதுவா, ஒருத்தர் நடிகர் சங்க தேர்தல்ல ஜெயிச்சா, ஒரு பதவியேற்புவிழா நடத்தி முன்னாள் தலைவர், சங்கத்துடைய வரவு செலவு கணக்குகளை இந்தத் தேர்தல்ல ஜெயிச்சவர்கிட்ட ஒப்படைக்கணும். அப்படிதான் தொன்றுதொட்டு வந்துட்டு இருக்கு. ஆனா, இவங்க அதையே பண்ணலையே. எஸ்.எஸ்.ஆர் தலைவரா இருந்தபோது, பணப்பிரச்னை காரணத்தினால்தான் தேர்தலே வந்துச்சு. ‘இந்தப் பணப்பிரச்னையைச் சரி செய்யும்வரை நான் தலைவர் இல்லை’னு சொன்னேன். அவங்க சரி செஞ்சு கொடுத்தாங்க. அப்புறம், நான் தலைவராகிட்டேன். இவங்களும் 'சரத்குமார் - ராதாரவி பீரியட்ல பணப்பிரச்னை இருக்கு. எதுவும் சரியா இல்லை. அதனால், அது சரியாகுறவரை நான் தலைவர் இல்லை'னு சொல்ல வேண்டியதுதானே? ஏன் நைட்டோட நைட்டா நடிகர் சங்க கதவைச் சாத்திக்கணும்? அதெல்லாம் பார்த்ததும்தான், ‘அனேகமா இவர் தேர்தல்ல நிக்கப்போறார், கட்சி ஆரம்பிக்கப்போறார்’னு மனசுல பட்டுச்சு. விஷால் எப்பவும் மேல்புல் மேய்கிறவர். எதையும் முழுசா முடிக்கமாட்டார். அவர் படம் ரிலீஸாகுற நேரத்துல மட்டும் திருட்டு விசிடி பத்தி பேசுவார். அப்புறம் மறந்துடுவார்."

“ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதாகச் சொல்லிவருகிறார்களே?”

"ரஜினி ஒரு நல்ல மனிதர். அவரைத் தொந்தரவு பண்ணக் கூடாது. போர் வருதுனு ரசிகர்களுக்குள்ள சொல்லிருக்கார். அதைக் கேட்டுட்டு வந்து, ‘அவர் அரசியலுக்கு வர்றார்... அரசியலுக்கு வர்றார்’னு சொல்லிட்டு இருக்காங்க. அதெல்லாம் வரமாட்டார். அப்படியே வந்தா அப்புறம் பேசிக்கலாம். கமல் என் பால்ய சிநேகிதர். அவர் கட்சி ஆரம்பிச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். ஏன்னா, அவருக்கும் மக்களோட நிலை என்னனு தெரியணும், படம் நல்லா ஓடி 100 கோடி வசூல்னு சொல்றாங்க. அந்த 100 கோடி எங்கெல்லாம் இருந்து வருதுனு அவர் அரசியலுக்கு வந்து ஊர் ஊரா போய் பார்த்தா அவருக்குத் தெரியும். பில் கேட்ஸ், 'ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் எல்லாம் பயன்படுத்துறவங்க சோம்பேறிகள்'னு சொல்லியிருக்கார். ஆனால் இவர் இப்போதான் ட்விட்டர்ல அரசியல் பேச ஆரம்பிச்சிருக்கார். ஏரி, குளம் எல்லாம் போய் பார்த்துட்டு வந்தார். கடற்கரை ஓரமா கீழ்நிலையில இருக்கும் இடமெல்லாம் இருக்கு. அதுக்கு ஏதாவது செஞ்சு சரி பண்ணித்தரலாம். ஒரு பொது நல ஆர்வலரா இருந்திருக்கலாம். ஒரு நடிகனா கமல் இவர் க்ரேட் ஆர்டிஸ்ட். அவர் அரசியலுக்கு வந்தா வரட்டும். அவர் உள்ள வந்து என்ன பேசுறார்னு பார்ப்போம். அப்படி நியாயங்களைப் பேசுனா அவர் அப்படி நடந்துக்குறாரானு பார்த்துட்டு பேசுவோம்."

பின் செல்ல