Published:Updated:

``ஆர்.கே.நகரில் எத்தனை வார்டுகள் உள்ளன என்பதாவது விஷாலுக்குத் தெரியுமா?” விஷாலுக்கு சேரன் 75 கேள்விகள்

``ஆர்.கே.நகரில் எத்தனை வார்டுகள் உள்ளன என்பதாவது விஷாலுக்குத் தெரியுமா?” விஷாலுக்கு சேரன் 75 கேள்விகள்
``ஆர்.கே.நகரில் எத்தனை வார்டுகள் உள்ளன என்பதாவது விஷாலுக்குத் தெரியுமா?” விஷாலுக்கு சேரன் 75 கேள்விகள்

``ஆர்.கே.நகரில் எத்தனை வார்டுகள் உள்ளன என்பதாவது விஷாலுக்குத் தெரியுமா?” விஷாலுக்கு சேரன் 75 கேள்விகள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களம் நாளுக்குநாள் சூடுபிடித்து வரும் நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சுயேச்சையாகப் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்த அதேவேளையில், ‘தேர்தலில் விஷால் போட்டியிடுவது, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் நலனை பாதிக்கும்’ என்றுகூறி இயக்குநர் சேரன் தலைமையில் பல தயாரிப்பாளர்கள், புரடியூசர் கவுன்சிலில் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

சென்னை அண்ணா சாலையிலுள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, பாபு கணேஷ், ராதாகிருஷ்ணன், ஜான் மேக்ஸ்... உள்பட பலர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது இயக்குநர் சேரன், பத்திரிகையாளர்கள் மத்தியில் சங்கத் தலைவரான விஷாலுக்கு எதிராக ஏகப்பட்ட கேள்விகளை முன்வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 

"தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற விஷால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் தற்போது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நிற்பது சரியா?. இங்கே உங்களை நம்பியுள்ள சங்க உறுப்பினர்களை நினைக்காமல் நீங்கள் எடுத்துள்ள முடிவு சரியா? டிஜிட்டல் சினிமா ப்ரொஜெக்ஷன், சாட்டிலைட், கேபிள் டி.வி என நீங்கள் தீர்ப்பதாக சொன்ன எல்லாப் பிரச்னைகளும் அப்படியே நிலுவையில் உள்ளன. ஏதேனும் ஒரு பிரச்னையைத் தீர்க்க முற்பட, அதற்கு தடைகள் வர, அனுபவமின்மை காரணமாக இப்படிப் பல பிரச்னைகள் கிடப்பில் இருக்கும் நிலையில் இந்த திடீர் அரசியல் முடிவு தேவையா?

விஷாலை அரசியலுக்குப் போக வேண்டாம் எனக் கூறவில்லை. இந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக, அரசாங்கத்தை எதிர்த்து நிற்பதற்கு நாங்கள் பலிகடாய் ஆக முடியாது. மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ அரசாங்கத்தை நம்பியுள்ளது. டிக்கெட் விலை, கேளிக்கை வரி நிர்ணயம், சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம்... இப்படிப் பல வகையில் அரசாங்கத்தை சார்ந்தே இயங்கவேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் விஷால், சிறுபிள்ளைத்தனமாக ஆளுங்கட்சியை எதிர்த்து இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

பல ஆண்டுகள் கழித்து தற்போதுதான் தமிழக அரசு சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 400 படங்களுக்கு இன்னும் மானியம் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக சங்க நிர்வாகிகளோ, தலைவர் விஷாலோ அரசை அணுகவேயில்லை. தற்போது விஷால் சங்கத் தலைவராய் என்ன சாதித்தார்? தயாரிப்பாளர்களுக்கு ஒரு கிரவுண்டு நிலம் தருவதாகக் கூறினார்களே, அது எங்கே? கியூப் நிறுவனத்தை எதிர்த்து குறைந்த விலையில் டிஜிட்டல் சினிமா ப்ரோஜக்ஷன் சிஸ்டம் வரும் எனக் கூறினாரே, அந்த வேலைகள் முடிந்துவிட்டதா? திருட்டு டிவிடி பைரசி, ஆன்லைன் பைரசி என அனைத்தையும் மூன்று மாதங்களில் முடிப்பேன் என்று கூறினாரே, அவை என்னவாயிற்று?

நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன் பல ஊர்கள் சென்று நாடக, திரைக் கலைஞர்களைச் சந்தித்து வந்தீர்களே, வெற்றிபெற்ற பின் அவர்களை  சென்று பார்த்தீர்களா? நடிகர் சங்க வளர்ச்சி நிதிக்கும், கட்டடம் கட்டுவதற்கு நிதியளிக்க விஷால் மற்றும் கார்த்தி நடிப்பதாகச் சொன்ன திரைப்படம் என்னவானது? கட்டடம் கட்ட ஏன் இவ்வளவு காலம் பிடிக்கிறது? வெறும் மூவாயிரம் பேர் கொண்ட ஒரு சங்க தேர்தலை. லைவ் கவரேஜ் செய்யும் அளவுக்குக் கொண்டு சென்றது ஏன்? மீதமுள்ள உங்கள் பதவிக் காலத்தில் என்னென்ன செய்யப்போகிறீர்கள் என்ற ஆக்ஷன் பிளான் உங்களிடம் உள்ளதா?

அரசியல்வாதி விஷால், திடீரென தமிழக மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பதன் காரணம் என்ன? ஆர்.கே நகர் தொகுதியில் எத்தனை வார்டுகள் உள்ளன? அந்தத் தொகுதிக்கு என்னென்ன தேவைகள் என்று அவருக்கு தெரியுமா? முந்தைய தேர்தலில் வென்றவர்கள் ஏன் அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்யவில்லை என்பதாவது தெரியுமா? மக்களுக்கான எத்தனை போராட்டங்களில் அவர் இதுவரை கலந்துகொண்டிருக்கிறார்? 

இப்படி விஷாலுக்கான அடுக்கடுக்கான கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன் வைத்தார் சேரன்.

பிறகு பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து பேசிய சேரன், "இந்தக் கேள்விகளுக்கு விஷால் பதிலளிக்க வேண்டும். மேலும், ஒரு தனி மனிதன் எவ்வளவு வேலைகளைச் செம்மையாக செய்ய முடியும்? அவர் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தனது சொந்தக் கடன்களை அடைக்கும் தயாரிப்பாளர்.... இவ்வளவு வேலைகளைக் கொண்டுள்ளவர் நடிக்கச் செல்வாரா, இல்லை சட்டசபைக்குச் செல்வாரா என்ற பொதுப்படையான கேள்விகளும் உள்ளன. அதனால்தான் இவரைத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்கிறோம், இதற்குமேலும் அவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், பல இன்னல்களால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எங்களைப் போன்ற தயாரிப்பாளர்களின் பிணத்தைத் தாண்டி அவர் செல்லட்டும்” என்றார். 

அடுத்த கட்டுரைக்கு