Published:Updated:

பொதுச் சபையில் டி.ஆர். தன்ஷிகாவை அவமானப்படுத்தியதில் எனக்கு உடன்பாடு இல்லை நடிகர் விதார்த்!

பொதுச் சபையில் டி.ஆர். தன்ஷிகாவை அவமானப்படுத்தியதில் எனக்கு உடன்பாடு இல்லை நடிகர் விதார்த்!
பொதுச் சபையில் டி.ஆர். தன்ஷிகாவை அவமானப்படுத்தியதில் எனக்கு உடன்பாடு இல்லை நடிகர் விதார்த்!

‘எனக்கு ஊர் சுற்றுவது ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் வீட்டுப் பக்கத்தில் இருந்த கார் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது 'இப்போதுதான் கொடைக்கானல் சவாரி போயிட்டு வந்தேன். உடனே, அடுத்த சவாரிக்குக் கூப்பிடுறாங்க. அப்படியே மைசூர், பெங்களூர் வேறு போகவேண்டும்' என்றார். எனக்கு உடனே கார் டிரைவராக ஆக வேண்டுமென்று தோன்றியது. டிப்ளோமா படித்துக் கொண்டிருந்தேன், அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கார் டிரைவராக வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். நான்கு வருடம் கார் டிரைவராக இருந்து, இந்தியா முழுவதும் சுத்தியிருக்கிறேன். ஏன்னா, எனக்கு டிராவல் பிடிக்கும். இது அஜித் சாருக்குத் தெரிஞ்சு, எனக்கான காட்சிகள் இல்லையென்றாலும், 'வீரம்' படத்தின் ஷூட்டிங்கிற்காக சுவிட்சர்லாந்து கூட்டிக்கொண்டு போனார். பயணம் தொடர்பான நிறைய விஷயங்களை என்னிடம் பகிந்துகொண்டார். என்னிடம் பேசுவது அஜித்துக்கு ரொம்பப் பிடிக்கும். அஜித் நல்ல மனிதர்." அஜித்துடன் 'வீரம்' படத்தில் நடித்த அனுபவத்துடன் பேச்சைத் தொடங்குகிறார், நடிகர் விதார்த். 'குற்றமே தண்டனை', 'ஒருகிடாயின் கருணை மனு', 'குரங்கு பொம்மை' எனக் கவனம் பெறும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கும் அவரிடம் பேசினோம்.

''நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. அதனால் ஒரு கதையின் போக்கு எந்த மாதிரி எல்லாம் போகிறது என்பதைப் புரிந்துகொண்டு, கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். தவிர, இத்தாலி இயக்குநர்கள் சிலரிடம் நான் வேலை பார்த்திருக்கிறேன். கதையின் பயணத்தையும், திரைக்கதையின் போக்கையும் என்னால் புரிந்துகொள்ள முடியும். 'மைனா', 'கொள்ளைக்காரன்' படத்துக்குப் பிறகு படத்தின் முழுக்கதையையும் கேட்டுத்தான் படங்களைத் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். நான் நடித்த 'கொள்ளைக்காரன்', 'காடு' போன்ற படங்களும் பிரமாதமான கதைகள்தான். ஆனால், சில காரணங்களால் அது சரியான வரவேற்பைப் பெறவில்லை. 

ஒரு படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை நம்மால் உணரமுடியும். அதை உணர்ந்த பிறகுதான் 'குற்றமே தண்டனை' படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்தேன். 'குற்றமே தண்டனை' படத்தைத் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இந்தப் படத்தை எந்தவொரு காம்பரமைஸும் இல்லாமல் இயக்குநர் என்ன  நினைத்தாரோ அதைப் படமாக உருவாக்கினோம். பார்த்தவர்கள் பலர் அவர்களின் பார்வையில் 'இந்தப் படத்தில் கமர்ஷியலாக சில விஷயங்களைச் செய்து இருக்கலாம். பாடல் வைத்திருக்கலாம்' எனச் சொன்னார்கள். ஒரு படத்தின் கதையை, கதையாக மட்டுமில்லாமல் படமாக ரசிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இன்னைக்கு ஈரானிய சினிமாவைப் பற்றி ரசிகர்கள் விவாதிக்கிறார்கள். எல்லோரும் அந்தமாதிரி படங்கள் பார்த்து இருக்காங்க. நம்ம நாட்டில் அந்தமாதிரி படம் எடுத்தால் எப்படிப் பார்க்காமல் போவார்கள்... நிச்சயம் பார்ப்பார்கள். இனி 'குற்றமே தண்டனை', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்கு பொம்மை' மாதிரியான படங்களைத் தொடர்ந்து பண்ணுவேன்."

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் ஸ்க்ரிப்ட் படிக்கும்போதே ரொம்பப் பிரமாதமாக இருந்தது. என்னுடன் இருந்தவர்கள் சிலர் கேட்டார்கள், ''என்னங்க, நீங்க ஒரு ஹீரோவுக்கான பங்களிப்பை எடுத்துக்கொள்ளமால், படத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரமா நடிக்கிறீங்களே'னு கேட்டாங்க. நான் ஹீரோவாக அந்தக் கதையை அணுகியிருந்தால், கதை சிதைந்து இருக்கும். 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை எல்லோரும் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். நாசர் சார் படம் பார்த்துவிட்டு 'உனக்குதான் முதலில் நன்றி சொல்லணும், பாராட்டணும். ஏன்னா, இந்தமாதிரி கதையை என்னிடம் சொல்லியிருந்தால், நடித்து இருக்கமாட்டேன், தயங்கியிருப்பேன். அப்படிப்பட்ட கதையை நீ எடுத்து நடித்தது பெரிய விஷயம்'னு சொன்னார். எனக்கு நாசர் சார் பாராட்டு பிடித்திருந்தது. ஏன்னா, என்னை மாதிரி கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர் அவர். அவரை நாங்கள் எல்லோரும் குரு மாதிரி பார்ப்போம். அவரிடமிருந்து பாராட்டு கிடைத்தது ரொம்ப சந்தோஷம்.' என்றவர், 'குரங்கு பொம்மை' படத்தின் இயக்குநர் நித்திலன் பற்றிச் சொல்கிறார்.

''ஒரு படத்துக்கான டப்பிங் வேலைக்காக காரில் போகும்போது ஃபேஸ்புக்கில் நித்திலனின் குறும்படம் ஒன்றைப் பார்த்தேன். அன்றைக்கு முழுவதும் அந்தக் குறும்படம் என்னை ரொம்ப தொந்தரவு செய்தது. உணர்பூர்வமாக ரொம்ப பிரமாதமாக இருந்தது. என் தம்பியிடம் அந்தக் குறும்படத்தைக் காட்டி இந்த டைரக்டரை உடனே பிடினு சொன்னேன். தம்பியும் அந்தக் குறும்படம் பார்த்தான். அவனுக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. அப்போது தம்பியிடம் சொன்னேன், 'அவரிடம், ஏதாவது கதை இருந்தால் கேளுடா'னும் சொன்னேன். 'குரங்கு பொம்மை' கதையை தம்பியிடம்தான் முதலில் சொன்னார் நித்திலன். அப்புறம் நானும் கேட்டேன். என் நண்பர்களை வைத்து அந்தப் படத்தைத் தயாரித்தேன். நித்திலன் நல்ல கலைஞர். அவருடைய பல குறும்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த நல்ல கலைஞனை உலகிற்குக் காட்டத்தான் இந்தப் படம் பண்ணினேன். நித்திலன் 'குரங்கு பொம்மை' படத்தில் அப்பா கேரக்டரை பாரதிராஜா சார் பண்ணினால் நல்லாயிருக்கும்'னு ஃபீல் பண்ணினார். அப்போது என் திருமண பத்திரிகையைக் கொடுக்க பாரதிராஜா வீட்டுக்குச் சென்றிருந்தேன். சார் என்னைப் பற்றியும், 'மைனா' படத்தைப் பற்றியும் நிறைய பேசினார். வெளியே வந்தவுடன் அவருடைய பையனிடம் சொன்னேன், ''சாரிடம் ஒரு கதை சொல்லணும். இப்போ சொன்னால் இதற்காக வந்தமாதிரி ஆகிவிடும். டைம் சொல்லுங்க, வந்து சந்திக்கிறேன்'னு சொல்லிட்டு வந்தேன். ஆனா, ஏற்கெனவே நித்திலன் பாரதிராஜவை வேறொரு படத்துகாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். பிறகு, பாரதிராஜா சார் வரச்சொல்லி கதை கேட்டார். ஓகே பண்ணுறேன்'னும் சொல்லிட்டார்.

படத்தில், பாரதிராஜா சாருடன்  நான் இரண்டு காட்சிகளில்தான் வருவேன். ஆனால், படத்தின் ஷீட்டிங்கில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். அதனால், இப்போது அவருடைய இயக்கத்தில் நான் ஒரு படத்தில் நடிக்கிறேன். இன்னும் பெயர் வைக்கவில்லை. 90 சதவீத படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. பாரதிராஜா மாதிரி டைரக்‌ஷனை இப்போது இருக்கின்ற சில இயக்குநர்களாலேயே பண்ணமுடியாது. இன்னைக்கு இருக்கும் அரசியல் சூழலுக்கு ஏற்ற கதைதான், அவர் இயக்கிக்கொண்டிருக்கும் படம்.  அவரைப் 'பழைய இயக்குநர்'னு சாதாரணமாகச் சொல்லிவிடலாம். ஆனால், பாரதிராஜா சார் எந்தளவுக்கு டிரெண்டிங்கில் இருக்கார்னு இந்தப் படம் வந்தபிறகு தெரியும். தவிர, எனக்கு டைரக்டர் பிரபுசாலமன் சாரோட இயக்கமும் ரொம்பப் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் கண்டிப்பாக எதிர்காலத்தில் நடிப்பேன்." என்றவர், இயக்குநர் மணிகண்டன் பற்றிப் பேசத் தொடங்குகிறார்.  

"எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியைக் கொடுக்கும் இயக்குநர், 'காக்கா முட்டை' மணிகண்டன் என்று சொல்வேன். அவர் யாரையும் தொந்தரவு செய்யவே மாட்டார்.  அவர் ஒரு காட்சியை நடிகருக்கு விளக்கி, அதைப் படமாக்குற விஷயம் ரொம்ப அழகாக இருக்கும். பக்குவமான டைரக்டர். பாரதிராஜா சார் இயக்கினால், கல் மண்கூட நடிக்கும். இயக்குநர் மணிகண்டனும் அவரைமாதிரிதான்." என்றவர் 'கொடிவீரன்' பற்றி தொடர்கிறார். 

'' 'கொடிவீரன்' படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர். இதுவரைக்கும் யாரும் என் கேரக்டர் பற்றிச் சொல்லவேயில்லை. டீஸர், டிரெய்லரில்கூட என் முகம் வந்திருக்காது. அந்தளவுக்கு என் கேரக்டரை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். இயக்குநர் முத்தையா 'என் படத்தில் முக்கியமான ரோல் பண்ணமுடியுமா' என்று கேட்டார். 'ரோல் நல்லாயிருந்தா பண்றேன்'னு சொன்னேன். 'கொடிவீரன்' படத்தில் நடிப்பதற்காக முதல் முதலில் என்னைத் தொடர்புகொண்டது, அசோக்குமார் சார்தான். 'சார், நீங்க ஹீரோவாக நடிச்சுக்கிட்டு இருக்கீங்க. உங்களை இந்த கேரக்டர்ல நடிக்கக்கூப்பிடுறதுக்குத் தப்பா நினைச்சுக்காதீங்க. சசிகுமாருக்கும் இதுல உடன்பாடு இல்லை. ஆனா, இயக்குநர் ஆசைப்படுறார்'னு சொன்னார். அவர் கேட்டதிலேயே அவர்களின் கண்ணியம் தெரிந்தது. நான் சொன்னேன், 'எனக்கு சசி சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் நல்ல படங்கள் பண்ணுவார். நல்ல படமாக இருந்தால், கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக இருப்பதில் தப்பில்லை'னு சொன்னேன்.   

முதல்நாள் ஷீட்டிங் போனபோதுதான் அசோக்குமாரைப் பார்த்தேன். தான் உண்டு தன் வேலை உண்டு என உட்கார்ந்து இருந்தார். என்னிடம் நல்லாப் பேசினார். ரொம்ப நல்ல மனுஷன். உற்சாகமாகச் சிரித்துக்கொண்டே இருப்பார். இந்தப் படத்தில் நடித்தபோது எனக்குக் கால்ஷீட் பிரச்னை வந்தது. அப்போது என் அறைக்கு வந்து, பேசினார். 'டேட் தருவதில் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால், இது இன்னொரு தயாரிப்பாளருக்குக் கொடுத்த தேதி. அவரிடம் நீங்களே பேசினால் நன்றாக இருக்கும்'னு சொன்னேன். உடனே, ஞானவேல் ராஜாவுக்கு போனில் பேசி, அந்தத் தேதியை வாங்கினார். அவர் தற்கொலை செய்துகொண்டார். என்பது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. செய்தி கேட்டவுடன், அவருடைய ஃப்ளாட்டுக்குப் போனேன், சமுத்திரக்கனி சாருடன் மூன்று மணி நேரம் இருந்தேன். 'கொடிவீரன்' படத்துக்காக 45 நாள்கள் ஷூட்டிங் போனேன். எல்லா நாளும் அவரைப் பார்த்திருக்கிறேன். மிகவும் சிம்பிளாக இருப்பார். நிறைய நேரம் செருப்புகூட இல்லாமல் ஷீட்டிங் ஸ்பாட்டில் சுற்றிக்கொண்டிருப்பார். அவருடைய இறப்பு என்னை ரொம்பத் தொந்தரவு செய்தது" என்று வேதனைப்பட்டவர், சிறிது இடைவெளிக்குப் பிறகு 'கொடிவீரன்' படத்தைப் பற்றி தொடர்கிறார்.

"என் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நான் இதுவரை பண்ணாத கேரக்டராகவும் இருந்தது. சசிகுமார் நல்ல மனிதர், டைரக்டர். தவிர, 'கொடிவீரன்' யூனிட் நல்ல யூனிட். எப்போதும் நான் ஷோலோவாக நடிப்பதைவிட சில நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதை விரும்புவேன். ஏன்னா, அவர்கள் படத்துக்கு எப்படித் தயார் ஆகிறார்கள் என்பதைப் பார்ப்பேன். அதனால்தான் 'ஜன்னல் ஓரம்', 'வீரம்' உள்ளிட்ட படங்களில் நடித்தேன். சசிகுமார் சாருக்கு 'கொடிவீரன்' கம்பேக் படமாகயிருக்கும். நல்ல வாழ்வியல் உள்ள படம்." என்றவரிடம், " 'மகளிர் மட்டும்' படத்தில் சின்ன ரோல் செய்ததற்கான காரணம் கேட்டால்,

''இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்' படம் பார்த்து சிலிர்த்துவிட்டேன். அவருடன் போனில் பேசினேன். அப்போது பிரம்மா கேட்டார், ''சார், நான் ஒரு படம் பண்றேன். அதில் நீங்கள் கெஸ்ட் ரோல் பண்ணா நல்லா இருக்கும்'னு சொன்னார். அவரை ஷீட்டிங் ஸ்பாட்டில் பார்த்தேன். பிரம்மா, 'போலீஸ் கெட்ட-அப்'னு சொன்னார். ஷேவ் பண்ணி போலீஸ் டிரெஸ் எனக்குப் போட்டுப் பார்த்தார். 'ஓகே-வா'னு கேட்டேன். 'ஓகே தலைவரே'னு சொன்னார். பிரம்மா என்கிற ஒருத்தருக்காகத்தான் 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்தேன்." என்றவரிடம் 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது பற்றிக்  கேட்டால், 

''தன்ஷிகாவுடன் இந்தப் படத்துகாக மூன்றரை வருடம் டிராவல் பண்ணியிருக்கேன். என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். அவரைப் பற்றி எனக்குத் தெரியும். தன்ஷிகாவை நான் அவமானப்படுத்தியதாக ஃபீல் பண்ணியிருந்தால், கண்டிப்பாக என்னைப் பற்றி தன்ஷிகாவே பேசி இருப்பார். அந்த நிகழ்ச்சிக்கு நான் கிளம்பும்போதே என் மனதில் இருந்த விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர். வருகிறார். கண்டிப்பாக ரசிக்கும்படி ஏதாவது பேசுவார். ஏன்னா, 'புலி' படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் டி.ஆர் பேச்சை வெகுவாக ரசித்தவன் நான். 'விழித்திரு' நிகழ்ச்சிக்கு அவர் வந்தவுடன், வெங்கட்பிரபு, கிருஷ்ணா, இயக்குநர் மீராகதிரவன் என எல்லோரையும் கிண்டல் செய்தார். பிறகு மைக் பிடித்து தன்ஷிகா பற்றிப் பேச ஆரம்பித்தார். ஏதோ, ஜாலியாகப் பேசப் போகிறார் என்று காத்திருந்தேன். 'நீ கட்டவில்லை சாரி, கேட்காதே ஸாரி' என்றபோதுகூட, கிண்டலுக்குச் சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். அதற்குப் பிறகு அவர் போக்கு மாறியது. எனக்கு டி.ஆர். பேசியதில் உடன்பாடு இல்லை." என்று சொல்லி முடித்தார் விதார்த்.