Published:Updated:

‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்!" - காத்திருக்கும் பாடலாசிரியர்

‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்!" - காத்திருக்கும் பாடலாசிரியர்
‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்!" - காத்திருக்கும் பாடலாசிரியர்

‘‘ ‘கூப்பிடுறேன்’னு சொன்ன கெளதம்மேனன் சார் கூப்பிடுவார்னு நம்புறேன்!" - காத்திருக்கும் பாடலாசிரியர்

" 'க்கப் போடு போடு ராஜா', 'பார்ட்டி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'பேரன்பு', 'கர்ஜனை', 'வா டீல்', 'பியார் பிரேமா காதல்' ஆகிய படங்கள்ல இப்போ பாட்டு எழுதியிருக்கேன். சினிமாவுக்கு வந்து இத்தனை வருடம் ஆச்சு பாஸ், நாம கேட்குறதை அந்த ஆண்டவன் செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கான். சந்தோஷமா இருக்கு. டிசம்பர்ல 'சக்கப் போடு போடு ராஜா' ரிலீஸ் ஆகப்போகுது. சிம்பு சார்கூட மறுபடியும் சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கேன்" என மகிழ்சியோடு தொடங்குகிறார், பாடலாசிரியர் கருணாகரன்.

"ஒரு துறை மீது ஆர்வம் வர காரணங்கள் இருக்கும். உங்களுக்கு சினிமாவில் ஆர்வம் வந்தது எப்படி?" 

"நான் சிறு வயது முதல் பார்த்து, ரசித்த விஷயம் சினிமா. எப்படியாவது சினிமாவில் நுழையவேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது. ஒரு மாற்றுத் திறனாளியான என்னைச் சிறு வயது முதலே ஊக்கப்படுத்தியது என் அம்மாதான். ஒவ்வொரு வயதிலும் என் உடல் நிலைமை, என் முன்னேற்றத்தைப் பாதித்துவிடக் கூடாதுன்னு என் பெற்றோர்கள் பெரிதும் அக்கறை எடுத்துக்கிட்டாங்க. அதனால்தான் இன்னைக்கு நாம இங்கே பேசிக்கிட்டு இருக்கோம்." 

"சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் உங்களுக்கான வரவேற்பு எப்படி இருந்தது?" 

"புதிதாக வரும் யாரையும் சினிமா வரவேற்பதில்லை. இங்கே எல்லோருக்கும் ஏதோ ஒரு போராட்டம் இருக்கும். அதுவும் பாடலாசிரியர் என்ற பெயர் திரையில் வருவதற்கான இடத்தைப் பிடிப்பது மிகவும் கடினம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் இடம் இது. இங்கே எல்லா இயக்குநர்களும் ஒவ்வொரு டீம் வைத்து இருக்கிறார்கள். அனைத்துப் பாடலையும் ஒரு பாடலாசிரியரே எழுதும் 'சிங்கிள் கார்டு' என சினிமாவில் அழைக்கப்படும் நடைமுறை இருக்கு. நம்மளை ஒரு இடத்துக்குக் கொண்டு வந்து நிறுத்திக்கிறதுக்கு, நிறைய நபர்களை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கு. அந்தச் சந்திப்பு கிடைக்க சில மாதங்கள் ஆகலாம், பல வருடங்கள்கூட ஆகலாம். ஆனா நாம் சோர்ந்து போயிடாம முயற்சி பண்ணனும்."

"அப்படி, சினிமா மீதான உங்கள் ஆர்வத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட சந்திப்பு எது?" 

"நான் சினிமாவுல பாடலாசிரியரா அறிமுகம் ஆனா, சிம்பு படம் அல்லது யுவன் ஷங்கர் ராஜா இசையிலதான்னு முடிவு எடுத்துக்கிட்டேன். இருவரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் எப்படியாவது யுவன் ஷங்கர் ராஜாவைப் பார்த்துடணும்னு அவர் ஆபீஸ் வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தேன். என்னைப் பார்த்து, என்னைப் பற்றி விசாரித்த யுவன் சார் அவருடைய ஸ்டுடியோவுக்கு வரச் சொன்னார். நான் எழுதியதைப் பார்த்து, 'சிம்பு மற்றும் வெங்கட்பிரபுவை போய்ப் பார்'னு சொன்னார். சிம்பு சாரை ஃபாலோ பண்ணி சந்திச்சேன். என் வரிகளைப் படிச்சவர்,  அதைத் தவிர்க்க மனம் இல்லாம, 'வல்லவன்' படத்துல நான் எழுதிய பத்து வரிகளுக்காகவே ஒரு சிச்சுவேஷன் சாங் உருவாக்கினார். என் வாழ்க்கையை மாற்றியது சிம்பு சார் மற்றும் யுவன் சார்தான்."  

"முதல் முழு நீளப் பாடல் வாய்ப்பு எப்பொழுது அமைந்தது?"

"சுராஜ் சார் இயக்கி கார்த்தி சார் நடிச்ச 'அலெக்ஸ்பாண்டியன்' படத்துல இடம்பெற்ற 'பேட் பாய்' பாட்டுதான், நான் எழுதுன முதல் முழுநீளப் பாடல். அந்த பாட்டு எழுதும்போது கார்த்தி சாரை மனசுல வெச்சுக்கிட்டு, நான் ஒரு ரெளடியா இருந்தா எனக்கு என்னென்ன சொல்லணும்னு தோணுமோ, அதையெல்லாம் பாடலுக்கான வரிகளா மாத்துனேன். டி.எஸ்.பி சாரோட இசையில அந்தப் பாட்டு எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. பெரிய அளவுல ரீச் ஆச்சு, எனக்கான வாய்ப்புகளையும் அந்தப் பாட்டு அதிகரிச்சுக் கொடுத்தது." 

'' 'சக்கப் போடு போடு ராஜா' படத்தில் பாடல் எழுதிய அனுபவம்?"

"இந்தப் படத்துக்கு சிம்பு சார்தான் மியூசிக் பண்றார்னு கேள்விப்பட்டு வாய்ப்பு கேட்டேன். அடுத்தநாளே சிம்பு சார் ஆபீஸ்ல இருந்து எனக்குக் கால் வந்தது. சிம்பு சாரைப் பார்த்தேன். சிச்சுவேஷன் சொல்லிட்டு, பாட்டு வேணும்னு சொன்னார். இதுல என்ன ஸ்பெஷல்னா, நான் பாட்டு எழுதி, ரெக்கார்டு பண்ணி முடிச்சாச்சு. ஆனா, சிம்பு சார் அந்தப் பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு அதற்கான கரெக்‌ஷன்ஸ் பண்ணிக்கிட்டே இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி மாணவனைத் திருத்துவாரோ, அதுபோல என்னைத் திருத்தினார் சிம்பு. அவரை என் ஆசிரியர்னு சொல்றதைவிட, எனக்கு அவர் காட்ஃபாதர்னு சொல்லலாம். அவர் என்ன படம் பண்ணாலும் அதை ஃபாலோ பண்ணிட்டு வந்துக்கிட்டு இருக்கேன். அவர் நடிச்ச படத்துக்கு மட்டுமில்ல, முதல் முறையா இசையமைச்ச படத்துக்கும் எனக்கு வாய்ப்பு கிடைச்சது எனக்கு ஒரு கெத்துதான் பாஸ்"  

''ராமின் 'பேரன்பு' படத்தில் பாடல் எழுதிய அனுபவம்?"

"ராம் சாரை அடிக்கடி மரியாதை நிமித்தமா சந்திப்பதுண்டு. அவரது 'தங்கமீன்கள்' படத்தில் வரும் 'ஆனந்த யாழை' பாட்டுக்குப் பெரும் ரசிகன் நான். அவருக்கு ஒரு நாள் ஒரு பாடலை என் ஆர்வத்தில் எழுதிக் காட்டினேன். அவருக்குப் புடிச்சுப் போயிடுச்சு. அதைத் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புதான் 'பேரன்பு'. அமரர் நா.முத்துக்குமார் அவர்கள் எழுத வேண்டிய பாடல் அது. நான் எழுதும்போது ஒரு பயம் தந்தது. பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்." 

"எல்லாப் பாடலும் இப்படி ஒரு பயத்தோடுதான் பிறக்குமா?"

"அப்படியில்லைங்க. சில பாடல்களை நாம எப்படி எழுதி முடிக்கிறோம்னு தெரியாது. அப்படி எழுதிய பாடல் 'சென்னை 28 - 2' படத்துல இருக்கிற 'பாய்ஸ் ஆர் பேக்'. நமக்கு மிகவும் பிடிச்ச கிரிக்கெட் விளையாட்டு, அந்த விளையாட்டுல நாம யூஸ் பண்ற வார்த்தைகள் இதையெல்லாம் தொகுத்து அந்தப் பாட்டு எழுதுனேன். பத்து வருடம் கழிச்சு ஒரு ஹிட் படத்தோட இரண்டாம் பாகம் வரப்போகுது, அதற்கு ஓப்பனிங் சாங் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு ரசிகனா நமக்கே தெரியும். அப்படி எழுதுனதுதான் அந்தப் பாட்டு. தவிர, அரவிந்த் சாமி சார் நடிக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்துக்கு அம்ரீஷ் இசையில ஒரு குத்துப்பாட்டு எழுதியிருக்கேன். அதுவும் இயல்பாக உருவானதுதான்." 

"மற்ற கவிஞர்களின் வரியில் உங்களுக்கு மிகவும் பிடித்தவை?"

"நான், என் மானசீக குருவாய் நினைப்பது கண்ணதாசன் ஐயாவைத்தான். அவர் பாடல்கள்ல இல்லாத கருத்தே இல்லை. அதைத்தான், நாம இந்தக் காலத்துக்குத் தகுந்தமாதிரி மாத்தி எழுதிக்கிட்டு இருக்கோம். இதை மறுக்கிற பாடலாசிரியர்கள் குறைவுதான்னு சொல்வேன்." 

"மாற்றுத்திறனாளி என்பதற்காக, உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வந்துள்ளதா?"

"அந்தக் கரிசனம் என்மேல இருந்திருந்தா, இந்நேரம் ரெண்டாயிரம் பாடல்கள் எழுதியிருப்பேன். அந்தக் கரிசனத்தை நான் எப்பொழுதும் எதிர்பார்த்தது இல்லை. இங்கே திறமைதாங்க எல்லாம். என் திறமைக்கு, என் முயற்சிக்குப் பலன் இங்கே கண்டிப்பா கிடைச்சிருக்கு, கிடைக்கும். இங்கே நாம பார்க்குற வேலையைப் பொறுத்துதான், அடுத்த வேலை கிடைக்கும். 'லேசா லேசா' படத்துல இருந்தே த்ரிஷா மேடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்களுக்குப் பாட்டு எழுதணும்னு பலதடவை நினைப்பேன். இப்போ, 'நாயகி' மூலமா அது சாத்தியம் ஆகியிருக்கு. அவங்க பாடுன முதல் பாட்டை நான்தான் எழுதுனேன்னு சொல்றது இன்னும் சந்தோஷமா இருக்கு. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் வந்த சமயத்துல இருந்து தொடர்ந்து கெளதம் மேனன் சார்கிட்ட வாய்ப்பு கேட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா 'வா டீல்' பாடல் வெளீயீட்டு விழாவுல அவரே என்னைப் பாட்டு எழுத வாய்ப்பு தர்றேன்னு சொல்லியிருக்கார். இப்படித்தான் வாய்ப்புகள் அமையும். 'வா டீல்' படம் ரிலீஸ் ஆகப்போகுது, கெளதம் சார்கிட்ட இருந்து வாய்ப்பு வரும்னு நம்புறேன். ஏன்னா, எனக்குக் கனவுகளோடு மல்லுக் கட்டுவது மிகவும் பிடிக்கும். அதுக்காகத்தான் ஒவ்வொரு ஆபீஸ் வாசலுக்கும் ஏறி இறங்குறேன். ஏத்துக்குறாங்க, வாய்ப்பு தர்றாங்க... இதைத்தாண்டி நானும் ஒரு பாடலாசிரியர்தான்னு சொல்லும்போது மனசுக்குள்ள சந்தோஷம் வருது. அதுதான் தொடந்து இயங்கவும் வைக்குது."

"எந்த இசையமைப்பாளருடன் பணிபுரிய ரொம்ப ஆசை?"

"ஆசைனு சொல்றதைவிட, தவம்னுகூட சொல்லலாம். இளையராஜா சாரோட இசையில ஒரு பாடல் எழுதுற வாய்ப்பு கிடைக்கணும். அவரோட இசைக்குப் பாட்டு எழுதுறது, ஆஸ்கர் விருது வாங்குனதுக்குச் சமம். சிறு வயது முதலேயே படத்துக்குப் படம் வித்தியாசமான பாடல்களைக் கொடுத்து, இசையால் நம்மைத் திணறடித்தவர் இளையராஜா சார். அவருக்குப் பாட்டு எழுதுற வாய்ப்பு கிடைக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்குறேன்."

அடுத்த கட்டுரைக்கு