Published:Updated:

“ஏழு வரி நல்லாயிருந்தா அந்தப் பாட்டு ஹிட்!’’ நா.முத்துக்குமாரின் மேஜிக் டச் சொல்லும் வேல்முருகன்

“ஏழு வரி நல்லாயிருந்தா அந்தப் பாட்டு ஹிட்!’’  நா.முத்துக்குமாரின் மேஜிக் டச் சொல்லும் வேல்முருகன்
“ஏழு வரி நல்லாயிருந்தா அந்தப் பாட்டு ஹிட்!’’ நா.முத்துக்குமாரின் மேஜிக் டச் சொல்லும் வேல்முருகன்

"இப்பவும் `நேரம்' படத்தில் நான் எழுதின, `காதல் என் உள்ளே வந்த நேரம்' பாடலுக்கான வாழ்த்துகளும், பாராட்டுகளும் வந்திட்டிருக்கு. இப்போ `ரிச்சி'வரை அது தொடர்வது சந்தோஷம்" என பேசத்துவங்கிய வேல்முருகனிடம், நிவின் பாலி தமிழ்ல நடிக்கும்போதெல்லாம் பாட்டெழுதணும்னு சபதமா எனக் கேட்டால் சிரித்துக்கொண்டே, "ஐயோ அப்படிலாம் இல்லங்க. முதல்ல `ரிச்சி' படத்தில் நிவின் நடிக்கிறார்னே எனக்குத் தெரியாது. இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்கூட படத்துக்கான பாடல் விஷயமா பேசும்போது, நான் ‘நேரம்’ படத்துப் பாடலை சொன்னேன். `ஓ அப்படியா, நம்ம படத்திலும் நிவின்தான் ஹீரோ'னு சொன்னார். அப்போதான் எனக்கு இதில் நிவின் இருக்கும் விஷயமே தெரியும்" என விவரித்தவர், நான் இயக்குநர் ஆசையோட கிளம்பி வந்தவன், பாடலாசிரியர் ஆனது சுவாரஸ்யமான சம்பவம்" என்றபடி தன் பயணம் பற்றி கூறத் தொடங்கினார்.

"கள்ளக்குறிச்சி பக்கத்தில் தேவபாண்டலம்தான் என்னோட ஊர். உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அடிக்கடி சென்னை வந்து ஆஃபீஸ் ஆஃபீஸா போய் வாய்ப்பு தேடிட்டு மறுபடி ஊருக்குப் போயிடுவேன். அப்போதைக்கு எனக்குத் தெரிஞ்ச வழி அதுதான். அப்படியே மூணு வருஷம் போச்சு. அதுக்குப் பிறகு நா.முத்துக்குமார் அண்ணன் படம் இயக்குவதா, ஆனந்த விகடன்ல செய்திவந்தது. அதைப் பார்த்தேன், அப்போ அவருக்கும் ஒரு உதவியாளர் தேவைனு நண்பர் மூலமா தெரியவந்தது. அவர்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். தொடர்ந்து அவருக்கு இருந்த பாடல் வேலைகளால் அவரால் படம் இயக்க முடியாமப்போயிடுச்சு. அவருடைய பாடல் வேலைகள் எல்லாத்திலும் உதவியா இருந்தேன். அவருக்கான எழுத்து வேலைகள் அதிகமா இருக்கும். எல்லா பாட்டு ரெக்கார்டிங்குக்கும் போக முடியாது. அதனால சரி பாதியா பிரிச்சுக் கொடுத்திடுவாரு. அங்க போறதுக்கு முன்னால, அங்க எப்படி நடந்துக்கணும், என்ன பேசணும்னு அந்த மியூசிக் டைரக்டர பத்தி முழுசா எனக்கு சொல்லிடுவார். அங்க முதல் வேலை, வார்த்தையை சரியா உச்சரிச்சு பாடறாங்களானு பார்க்கறதுதான்." 

"சினிமா மேல் ஆர்வம் எப்படி வந்தது?"

"அதுதான் எனக்குத் தெரியல. அப்போ எனக்குப் பாடல்கள் கேட்கும் பழக்கம் இருந்தது. கூடவே தமிழ் மேல் ஈடுபாடும் இருந்தது. பி.ஏ தமிழ் படிச்சேன். ஆனா, சினிமாவில் சேர்வதற்கான ஆசை எப்போ வந்தது, இயக்குநர் ஆகணும்னு ஏன் முடிவு பண்ணேங்கறது மட்டும் மங்கலா இருக்கு. ஏன்னா, சென்னைல எனக்கு யாருமே தெரியாது, கல்யாணமும் ஆகிடுச்சு, இதை எல்லாம் தாண்டி எந்த தைரியத்தில் கிளம்பினேன்னும் தெரியல. ஏதோ தைரியத்தில் வந்து இப்போ இங்க நிக்கறேன்."

"உங்களுடைய பாடலாசிரியர் பயணம் எப்போ தொடங்கினது?"

"2011ல முத்துகுமார் அண்ணன்கிட்ட இருந்து வந்து ஒரு படத்துக்கு அசிஸ்டென்டா வேலை செஞ்சேன். அங்க இருந்து பார்த்தா மறுபடி சினிமா வாழ்க்கை ஜீரோல இருந்து ஆரம்பிக்க வேண்டியதா இருந்தது. இயக்குநர் ஆசை உள்ள எரிஞ்சிட்டே இருக்கு... ஆனா, அதுக்கான பாதை கண்டுபிடிக்க ரொம்ப சிரமமா இருந்தது. முதலில் ஏதாவது பண்ணி நாம வெளிய தெரியணும்னு நினைச்சேன். அப்போதான் பாடல் எழுத வாய்ப்பு கிடைச்சது. `மதில் மேல் பூனை' படத்தில் ‘இருளைக் கட்டிவை’னு என்னோட முதல் பாடலை எழுதினேன். பாடலாசிரியர் பயணம் இப்படி ஆரம்பிச்ச நேரத்தில் நண்பர் பாபா மூலமா, `நேரம்',  பட இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் அறிமுகம் கிடைச்சது. ஒரு பாட்டு எழுதித் தர்றீங்களானு சொல்லி விஷுவல் காமிச்சாங்க, அப்படி எழுதினதுதான் ‘காதல் என்னுள்ளே வந்த நேரம்’. `நேரம்' மூலமா எனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சதுனு சொல்லலாம். நிறைய பேர் கவனிக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பிறகு `ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் எழுதிய கொலசிந்து பாடலுக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சது. இன்னும் சில படங்கள் வெளியாக வேண்டியிருக்கு. இப்போ `ரிச்சி' படத்துடைய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு." 

"உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் பலர் வந்து ஜொலிக்கும் துறை இது. உங்களை தனித்துக்காட்ட என்ன மாதிரி தயாரானீங்க?"

"அதுக்கான சுதந்திரமும் என்னுடைய இயக்குநர்கள் கொடுக்கறாங்க. மெலடி பாடல்களில் அது ரொம்ப நல்லா காட்ட முடியுது. "என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவைபோல், மனதின் உள்ளே வந்தாடுவதாரோ"னு எழுதினது அல்போன்ஸ் புத்திரனுக்குப் பிடிச்சது, அதேபோல கொலசிந்துனு ஒரு பாடல் வடிவம் இருக்குன்னு சொன்னதும், அதை பயன்படுத்தலாம்னு சுரேஷ் சங்கையா சொன்னார். தொடர்ந்து இதுபோல ஆட்களோட வேலை செய்யறது நமக்கான அடையாளத்தைத் தேடிக்கவும் உதவும். தனித்துவம் வர்றதுக்கு இன்னும் நிறைய தூரம் போகணும். அதைத்தாண்டி ஒருத்தருக்கு பயிற்சி எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும். முத்துக்குமார் அண்ணன் எல்லாம் ட்யூன ரெண்டு முறை கேட்பாங்க. உடனே பல்லவி சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. அதை நான் பிரமிப்பா பார்த்த நாள்கள் நிறைய இருக்கு. அந்தப் பயிற்சியை இப்பவும் நான் செய்திட்டே இருக்கேன். சவுண்டுக்கு ஏற்ற மாதிரி வார்த்தை பிடிக்கறதுதான் பிரதானமா இருக்கும். வாசிப்பதும் இந்தப் பயிற்சியில் முக்கியமானதா இருக்கு, பாடலாசிரியர்ங்கறதுக்கு மட்டும் இல்ல, மனிதனா வாழ்றதுக்கே புத்தகங்கள் தேவை."

" `உலிடவாரு கன்டன்ந்தே' பாடல்கள் `ரிச்சி'க்கான ரெஃபரன்ஸா இருந்ததா?"

" `உலிடவாரு கன்டன்ந்தே' பாடல்ல இருக்கும் வார்த்தைகள் கேட்டா, அது மங்களூர் கன்னடத்தில் இருந்தது. அதனால சூழலை மட்டும் வெச்சுகிட்டு `ரிச்சி'க்கு புதுசா எழுதினோம். ஒரு பாடல் பொண்ணு பின்னால சுற்றும் ஒருத்தனைப் பற்றி நாலு பேர் நாலு விதமா பேசுற மாதிரி கான்செப்ட் வெச்சு எழுதினதுதான், ‘சொல்லதான் நினைக்கிறானே’, அதே மாதிரி அம்மாவ பிரிஞ்சு ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கப் போகும் மகன் பாடும்படியா எழுதினது, ‘தாயைத் தேடி’. அந்தப் பாட்டுக்கு, `நானும் வரும் இந்த நேரம், என்னை நீயும் யாரோ என்றே பார்த்திடாதே அது சாபம்' என்ற வரிகளைக் குறிப்பிட்டு நிறைய பேர் வாழ்த்தியிருந்தாங்க. கண்டிப்பா ரிச்சி என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும்னு நம்புறேன். இதற்கு இயக்குநர் கௌதம் ராமச்சந்திரனுக்கு நன்றி சொல்லிக்கறேன்." 

"நிவினுடைய இரண்டு தமிழ் படங்களிலும் எழுதியிருக்கீங்க. என்ன சொன்னார் நிவின்?"

"அவருக்கு பாடல்கள் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஃபேஸ்புக்ல கூட ஷேர் பண்ணி வாழ்த்தியிருந்தார். நிவினுடைய வளர்ச்சி எனக்கு அவ்வளவு சந்தோஷமான ஒண்ணு. இந்த விஷயத்தை `ரிச்சி'யுடைய இசை வெளியீட்டில் சொல்லியிருந்தேன்.  `நேரம்' படம் ரிலீஸாகி ஹிட்டாகியிருந்த சமயம். அப்போ நானும் நிவினும் டீ சாப்டுகிட்டிருந்தோம். எதிர்ல நிவினுடைய பேனர் ஒண்ணு இருந்தது. அதைப் பார்த்திட்டு, "ஹையோ, அண்ணா எனக்கு சென்னையில இவ்வளோ பெரிய பேனரா"னு ஆச்சர்யப்பட்டார். இதென்னங்க, இதைவிட பெரிய விஷயமெல்லாம் காத்திருக்கு, அதுக்கான வாய்ப்பு பிரகாசமா இருக்குனு சொன்னேன். சொல்லி 3 வருஷம்தான் ஆகியிருக்கு, `ரிச்சி' ஷூட்டிங்குக்காக மணப்பாடு போயிருந்தபோது, எல்லாரும் பிரேமத்தில் நடிச்சவருனு ஓடிவர்றாங்க. அவருக்கான அடையாளத்தை உருவாக்கிட்டாரு." 

" `நேரம்' மாதிரி `பிரேமம்' பைலிங்குவல் வந்திருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சா?"

" `பிரேமம் படத்துக்காக இந்த பாட்டு பண்ணியிருக்கேன்'னு மலரே பாட்டை ராஜேஷ் முருகேசன் காமிச்சார். எனக்கு உடனடியா அந்தப் பாட்டு பிடிச்சுப் போச்சு. ஏன் பைலிங்குவல் பண்ணல, செஞ்சிருந்தா நாம எழுதியிருக்கலாமேனு தோணுச்சு. அதை அல்போன்ஸ் கிட்டயும் கேட்டேன், அவர் பதில் எதும் சொல்லல. இதுக்கும் சேர்த்து அல்போன்ஸின் அடுத்த படத்தில் எழுதணும். ஒரு இயக்குநர், மியூசிக் டைரக்டர்ங்கறதைத் தாண்டி எங்க மூணு பேருக்குள்ள நல்ல நட்பு இருக்கு. அதுக்கும் மேல, `நேரம்' படத்துல என்னை நம்பி பாட்டு கொடுத்ததுக்கும், அதன் மூலமா எனக்குக் கிடைச்ச பாராட்டுகளுக்காகவும் அந்த ரெண்டு பேருக்கும் நன்றி சொல்லிகிட்டே இருக்கணும்."

"நா.முத்துக்குமாருடன் பயணித்த அனுபவம் எப்படியானதா இருந்தது?"

"எதுவாக ஆக ஆசைப்படுகிறாயோ, அதுவாகவே ஆவாய்"னு சொல்வாங்கள்ல, அதுபோல எனக்கு பாடல்கள் மேல தீவிரமான ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம்தான் முத்துக்குமார் அண்ணன்கிட்ட கொண்டுவந்து சேர்த்ததுனு நினைக்கறேன். `சச்சின்' படத்தில் கண்மூடித் திறக்கும்போது கடவுள் வந்து போனது போல பாடலைக் கேட்டுட்டு யார் எழுதினதுனு தேடிப்பார்த்தா, எனக்குப் பிடிச்ச நிறைய பாடல்கள் அவர்தான் எழுதியிருக்கார். கடைசில அவர்கிட்டயே வேலைக்கு சேர்றப்போறேன்னா எனக்கு எவ்வளவு ஆனந்தமா இருந்திருக்கும். அண்ணன்கிட்ட சேர்ந்த புதுசில் அவர் சொந்த ஊரில் இருந்த புத்தகங்கள் எல்லாத்தையும் அலுவலகத்துக்கு கொண்டு வந்தோம். லட்சம் புத்தகங்களுக்கு மேல இருந்தது. அலுவலக வேலைகள் முடிச்ச பின்னால, சும்மா இருப்பேன். அதைப் பார்த்திட்டு "ஏன் சும்மா இருக்கீங்க, புத்தகம் படிக்கலாமே"னு சொன்னார். அப்போ துவங்கினதுதான் என்னுடைய வாசிப்பு.

அவர் அவ்வளவு சீக்கிரமா யாரையும் பாராட்டமாட்டார். அப்படியே பாராட்டினாலும் நேரடியா பாராட்டமாட்டார். `நேரம்' பட பாட்டு டி.வியில் வரும்போது, "ஹேய் இதுதான் வேல்முருகன் எழுதின பாட்டு. நல்லா எழுதியிருக்கான்ல"னு வீட்ல சொல்லியிருக்கார். அதை அக்கா என்கிட்ட சொன்னாங்க, கேட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா, கோபத்தை நேரடியாவே காட்டிடுவார். அவர்கிட்ட ஆச்சர்யப்படும் இன்னொரு விஷயம். அவரை நீங்க புகழ்ந்து பேசறதை விரும்பமாட்டார். ரெக்கார்டிங் முடிச்சிட்டு வந்தா, "என்ன தம்பி, முடிச்சிட்டீங்களா?"னு கேட்பார். "முடிச்சிட்டேன்ணே, பாட்டு நல்லாயிருக்குனு சொல்ல ஆரம்பிக்கும்போதே அங்க இருந்து கிளம்பிடுவார். ஒரு பாடல்ல ஏழு வரிகள் நல்லாயிருந்தா கண்டிப்பா அந்தப் பாடல் ஹிட்டாகும்னு சொல்வார். அதை நான் என் எல்லா வரிகளுக்கும் அப்ளை பண்ணிட்டிருக்கேன்" 

"துவைக்கப்போடும் ஆடைகளிலும் 

மறந்தது போலவே பணத்தை வைப்பாய்

துவைப்பவன் கையை விட்டால், 

துவண்டு போவான் என்பதை 

எங்கணம் கற்றுக் கொண்டாய்?"னு அவருக்காக நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதுவேதான் அவர். ஒரு வெள்ளைப் பேப்பர்ல மனிதன்னு எழுதி வெச்சா, ஓ இந்த மனிதனானு அந்தப் பேப்பருக்கு மேல காசு வெச்சிட்டுப் போற குணம் அவருடையது. எத்தனையோ முறை ஆட்டோகாரங்க, வந்து `சார் பேலன்ஸ் வாங்கிக்காம போயிட்டாருன்'னு வந்து கொடுத்திட்டுப் போவாங்க. இப்படி அவர்கிட்ட இருந்து கத்துக்கறதுகிட்டது ஏராளம். `இன்னோர் வாய்ப்புதான் தந்தால் நானும்தான், வாழ்வேன் நாளும் நல்ல மகனாய் உனக்கு'னு ரிச்சி படத்தில் எழுதியிருப்பேன். அந்த மாதிரி, எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சா, அவருக்கு இன்னும் நல்ல உதவியாளரா இருப்பேன். இப்பவும் அவர் இறந்திட்டதா நான் நினைக்கல, அண்ணன் அடிக்கடி வீடு மாத்திகிட்டே இருப்பார், அந்த மாதிரி வீடு மாத்தியிருக்கார்னுதான் நினைச்சுக்கறேன்."

"வீட்டில் உங்களுடைய முயற்சிகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவா இருக்காங்க?"

"வீட்ல எனக்கு எப்பவும் சப்போர்ட்தான். `இவ்வளோ கஷ்டம்னு தெரிஞ்சிருந்தா உன்ன நான் அனுப்பியிருக்கவே மாட்டேன்'னு இப்போ சொல்றாங்க. ஒருவேளை ஆரம்பத்திலேயே மறுத்திருந்தா நான் வந்திருப்பேனாங்கறது சந்தேகம்தான். குடும்ப பாரத்தை அவங்க சுமந்துகிட்டு, என்னை என் கனவை நோக்கி நகர வெச்சாங்க. ஒரு பெரிய மேடை ஏற்பாடு பண்ணி, என் மனைவி கால்ல விழுந்து கும்பிடணும். என்னோட பாட்டு கேட்டுட்டு `ம்ம்ம்... சரி'ம்பாங்க. ஆனா, ரிங் டோனா என்னோட பாட்டதான் வெச்சிருப்பாங்க. அவங்களாலதான் என்னால் தொடர்ந்து இயங்க முடியுது. வாய்ப்புகள் வந்திட்டிருக்கு, தொடர்ந்து முயற்சி பண்ணிட்டிருக்கேன், கத்துகிட்டிருக்கேன். இந்தப் பயணத்தை எவ்வளவு அழகா மாற்றமுடியுமோ, அதுக்கான உழைப்பைக் கொடுத்திட்டு இருக்கேன்."