Published:Updated:

சிம்புவின் சிக்கலைத் தீர்த்த மணிரத்னம்! ஷூட்டிங்குக்கு ரெடி #VikatanExclusive

எம்.குணா
சிம்புவின் சிக்கலைத் தீர்த்த மணிரத்னம்! ஷூட்டிங்குக்கு ரெடி #VikatanExclusive
சிம்புவின் சிக்கலைத் தீர்த்த மணிரத்னம்! ஷூட்டிங்குக்கு ரெடி #VikatanExclusive

ராசி, நட்சத்திரங்கள் என ஜாதக கட்டங்கள் அனைத்தும் டி.ராஜேந்தருக்கு அத்துபடி. எந்த ஜாதகமாக இருந்தாலும் அதன் எதிர்காலத்தை சரியாகக் கணிப்பார். ஆனால் அவர் கணிக்க முடியாதது சிம்புவின் ஜாதகம் மட்டுமே. மழலை மாறாத சிறுவனாக இருந்தபோதே 'எங்க வீட்டு வேலன்' உள்பட பல படங்களில் அவரை நடிக்கவைத்து வளராத அந்தப் பருவத்திலேயே வருமான வரி கட்டிய சிறுவன் என்ற நற்பெயரை பெற்றுத்தந்த பெருமித அப்பா, இன்று தன் மகன் மீதான மைக்கேல் ராயப்பனின் புகாரால் பெருங்கவலையில் இருக்கிறார். 

‘என் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்துக்குச் சொன்ன நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வரவில்லை. அப்படியே வந்தாலும் அரைமணிநேரத்தில் பேக்கப் சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். ‘படத்தை இருபாகங்களாக்கி, எடுத்தவரை முதல் பாகமாக ரிலீஸ் பண்ணிவிடலாம்’ என்றார். அதற்கும் ஸ்டுடியோவுக்கு வராமல் தனது வீட்டில் இருந்தே டப்பிங் பேசினார். சிம்புவால் எனக்கு 20 கோடிக்கும் மேல் நஷ்டம். அதை அவர் ஈடுசெய்ய வேண்டும்’ என்று மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தர, ‘இதுகுறித்து விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கும் நடிகர் சங்கத்துக்கும் கடிதம் அனுப்பியது. 

நேரில் வந்து விளக்கம் தராமல் நடிகர் சங்கத்துக்கு மட்டும் சிம்பு பதில் கடிதம் அனுப்பியதால் தயாரிப்பாளர் சங்கம் எரிச்சலில் உள்ளது. முன்னதாக சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் விஜய்சேதுபதி, அர்விந்த் சுவாமி, ஜோதிகா, நித்யாமேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிக்கும் படத்தில் கமிட் ஆகி இருந்தார். தற்போது அந்தப் படத்தில் சிம்பு நடிப்பதிலும் சிக்கல் என்று கூறப்பட்டு வந்தது. 

இந்தநிலையில் சிம்பு இசையமைத்து சந்தானம் நடிக்கும் ‘சக்கப்போடு போடுராஜா’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடக்கிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் ஹீரோவாக களமிறங்க, நடிகராக பிஸியாக இருந்த சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாவது சுவையான முரண்தான். இயல்பாக நடிக்கக்கூடிய மிகச்சிறந்த நடிகர்களில் சிம்புவும் ஒருவர் என்று சீனியர் இயக்குநர்களே ஒப்புக்கொள்வார்கள். ‘அவர் ஷூட்டிங் ஸ்பாட் வரமாட்டார். வந்துட்டார்னா முடிச்சுக்கொடுத்துட்டு போயிடுவார்’ என்று பாராட்டுவார் அந்த ஸ்டைலிஷ் இயக்குநர். ஆனால் வரவைப்பதும், அவரை  தொடர்ந்து வேலை செய்யவைப்பதும் சிரமம் என்ற கோரஸ் குரல் எல்லோரிடமும் கேட்கிறது. 

ஆனால் நடிப்பு, டான்ஸ், இசை... என்று அப்பாவைப்போன்றே இவரிடமும் உள்ள பன்முகத் திறனை அவர்மீது குற்றம் சொல்பவர்கள்கூட ஒப்புக்கொள்வார்கள். அதுதான் சிம்புவை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் புகாரிலிருந்தும் காப்பற்றப்படுவாரா என்று கவனித்து வருகிறது திரையுலகம். இந்தச் சமயத்தில்தான் சிம்புவுக்கு ஆபத்பாந்தவனாக வந்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். 

‘இயக்குநர் மணிரத்னம் சிம்புவின் மேல் கடுங்கோபத்தில் இருக்கிறார். ‘முதலில் கவுன்சில் பிரச்னைகளை முடித்துவிட்டு வாருங்கள். என் படத்தில் நடிப்பதுபற்றி யோசிக்கலாம்' என்று சிம்புவிடம் மணிரத்னம் கண்டிப்பு காட்டியதாக ஆரம்பத்தில் செய்தி பரவியது. ஆனால் இப்போது மணிரத்னம் சிம்புவுக்காக இறங்கி வந்திருக்கிறார் என்கிறார்கள். அதுபற்றி தயாரிப்பாளர் கவுன்சிலில் உள்ள நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘முதலில் மணிரத்னம் கோபமாக இருந்தது என்னவோ உண்மை. பிறகு ஒரு சிறந்த நடிகனான சிம்புவின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டார். சினிமாவில் நேரும் பிரச்னைகளை  நினைத்து வருத்தப்படக் கூடாது, எல்லாக்  கவலைகளும் மேகம் மாதிரி கடந்து போய்விடும். கவுன்சில் பிரச்னைகளைப் பார்த்துக் கொள்ளலாம். என் படத்தில் நீங்கள் நடிக்கவிருக்கும் கேரக்டரில் கவனம் செலுத்துங்கள்' என்று சிம்புவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். 

இதையடுத்து மணிரத்னத்தின் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 20-ம்தேதி முதல் தொடங்குகிறது, மேலும் இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத இந்தப் படத்தை 28 கோடி ரூபாய் கொடுத்து லைக்கா நிறுவனம் வாங்கியிருக்கிறது என்பது இன்னொரு தகவல். முந்தைய படம் ஃப்ளாப், அடுத்த படத்துக்குச் சிக்கல் என்று அடுத்தடுத்து அப்செட்டில் இருந்த சிம்புவின் பிரச்னைகளைத் தற்போது மணிரத்னம் தீர்த்துவைத்துள்ளார். சிம்புவும் உடல் எடையைக் குறைத்து புது லுக்கில் மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார். 

டைமிங்கை கீப்அப் பண்ணுங்க சிம்பு.