Published:Updated:

"ஹாலிவுட்ல ஒருநாள் ஷூட்டிங் செலவின் 30 சதவிகிதத்தை அரசாங்கம் கொடுக்கும்!'' கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-3

"ஹாலிவுட்ல ஒருநாள் ஷூட்டிங் செலவின் 30 சதவிகிதத்தை அரசாங்கம் கொடுக்கும்!'' கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-3
"ஹாலிவுட்ல ஒருநாள் ஷூட்டிங் செலவின் 30 சதவிகிதத்தை அரசாங்கம் கொடுக்கும்!'' கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-3

"ஹாலிவுட்ல ஒருநாள் ஷூட்டிங் செலவின் 30 சதவிகிதத்தை அரசாங்கம் கொடுக்கும்!'' கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-3

வாரிசு நடிகர் என்றாலும், தனித்துவ நடிப்பால் தமிழ்சினிமாவில் தனி இடம் பிடித்தவர் அவர். வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இயக்குநர் ஒருவரிடம் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையாக சில கோடிகளைப் பெறுகிறார். இந்த அட்வான்ஸ் தொகையை, கந்துவட்டிக்குப் பணம் பெற்றுக் கொடுத்திருக்கிறார், அந்த இயக்குநர். சில மாதங்கள் கடக்க, 'நான் இந்தப் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, இயக்குநரிடம் பெற்ற தொகையைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார், அந்த நடிகர். இங்கே பிரச்னை எதில் இருக்கிறது என்று கவனமாக யோசித்துப் பாருங்கள்... நடிகரின் வருகைக்குக் காத்திருந்த காலத்தில், அந்த இயக்குநர் அலுவலகம் அமைத்து வாடகை கொடுத்திருப்பார். கடன் வாங்கிக் கொடுத்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி கட்டிக்கொண்டிருப்பார். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து சுற்றிக்கொண்டிருப்பார். ஆனால், 'படத்தில் நடிக்கமுடியாது' என நடிகர் திருப்பிக் கொடுக்கும்போது, இந்த செலவுகள் எல்லாம் கணக்கில் ஏறாது. சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் 'கடனாளி'யாகவே தொடர்ந்துகொண்டிருப்பதன் அடிப்படைக் காரணங்களில் இதுவும் ஒன்று. விஷயத்துக்கு வருவோம்.

இன்றைய சூழலுக்கு சினிமா எடுப்பதைவிட, அதை ரசிகர்களிடம் கொண்டுசேர்ப்பதில்தான் அதிக கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கே 'ரசிகர்கள்' எனப்படுவது, தமிழ் ரசிகர்கள்களை மட்டும்தானா? இந்தக் கேள்விக்கான பதிலை மிகச் சரியாகக் கடந்துவிட்டால், கந்துவட்டிக்குப் பணம் வாங்கிப் படம் எடுத்தாலும், சொந்தப் பணத்தை மொத்தமாக இறக்கிப் படம் எடுத்தாலும் ஜெயிக்கலாம். ஏனெனில், ''சினிமா என்பது பொதுமொழி. அதை உணரக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் முதலீடு என்பது ஒரு பொருட்டே அல்ல'' என்ற வாதத்தை முன் வைக்கிறார், மனோஜ் அண்ணாதுரை என்ற இயக்குநர்.  சென்னைத் தமிழரான இவர், 'கெட் ஹாப்பி' என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்காக 'கோல்டன் ரெமி' விருதும், மன்ஹாட்டன் ஃபிலிம் பெஸ்டிவெலில் 'சிறந்த ரொமான்டிக் காமெடி' படத்திற்கான விருதினையும் பெற்றிருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான சந்தை, அந்தத் திரைப்படத்தை மார்க்கெட்டிங் செய்யும் முறைகள் என ஒரு திரைப்படத்தைச் சுற்றி இருக்கும் '360 டிகிரி'வாய்ப்புகளையும் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்தைச் சொல்கிறார், மனோஜ் அண்ணாதுரை. 

"கூகுள்ல சிறந்த இயக்குநர் பட்டியலைத் தேடினா, இந்தியா சார்பில் சிலருடைய பெயர்கள்தான் இருக்கும். ஏன், அதுக்குப் பிறகு யாரும் நல்ல படம் எடுக்கலையா... எடுத்திருக்காங்க. ஆனா, அது தமிழ் ரசிகர்களைத் தவிர்த்து யாருக்கும் தெரியாதுங்கிறதுதான் உண்மை. அதை மாத்துறதுக்காகத்தான், தமிழ் சினிமாவில் நண்பர்கள் இருந்தாலும், அமெரிக்காவில் ஃபிலிம் கோர்ஸ் படிச்ச அனுபவம் இருந்தாலும், நான் என் முதல் படத்தை அமெரிக்காவில் எடுத்தேன்" என்கிறார், மனோஜ். 

"கந்துவட்டிப் பிரச்னைக்காகவோ, தயாரிப்பாளர் கிடைக்காமலோ நான் ஹாலிவுட்ல படம் எடுக்கலை. தமிழ் சினிமாவைவிட, ஹாலிவுட்டில் படம் எடுக்கிறது சுலபமான வழினு நான் உறுதியா சொல்றேன். ஏன்னா, தமிழ்ப் படம் எடுத்து அது தியேட்டர்ல ரிலீஸ் ஆகலைனா, தயாரிப்பாளர் போட்ட பணத்தைத் திரும்ப எடுக்கமுடியாது. தவிர, இங்கே ஒரு கோடி பட்ஜெட்ல படம் எடுத்து, 2 கோடி ரூபாய்க்கு பப்ளிசிட்டி கொடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கு. ஏன்னா, தியேட்டர் வசூல்தான் தமிழ்சினிமாவுக்கு முக்கியமான வருமான வழி. ஸோ, இது ஒரு காரணம்.  அடுத்து, ஹாலிவுட்ல ஒரு சினிமாவுக்கு இருக்கிற மார்க்கெட் ரொம்ப ரொம்பப் பெருசு. எந்த முயற்சியிலும் தரகர்கள் புகுந்து தடுக்கமாட்டாங்க. கடின உழைப்பு இருந்தா, ஹாலிவுட்டின் மார்க்கெட்டை ஒரு இயக்குநர் எட்டிப்பிடிக்க முடியும். அங்கே, நினைச்சதைப் பண்ணலாம். இப்படி சினிமாவுக்கான களம் அங்கே ரொம்ப சுத்தமா இருக்கு. இங்கெல்லாம் திரைக்கதைகள் நாம எழுதுறோம். அங்கே 'திரைக்கதை சந்தை'யே இருக்கு. நமக்குப் படம் எடுக்கிற ஆர்வம் இருந்தா, பிடிச்ச ஜானர்ல கதை பிடிக்கலாம். ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டுக்கும் கலை ரீதியான தொடர்புகள் இருக்கு. உதாரணத்துக்கு, கனடாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 'கோ-ப்ரொடக்‌ஷன்ஸ்' ஒப்பந்தம் இருக்கு. அங்கே போய்ப் படம் எடுத்தா, அரசாங்கமே நிதி உதவிகள் செய்யும். இதுதவிர, நிறைய நிதி உதவிகள் கிடைக்கிற வழிகள் உலகம் முழுக்க நிறைய இருக்கு. ஆனா, இதெல்லாம் நம்மாளுங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்ங்கிறதுதான் கேள்வி.

முக்கியமான இன்னொரு விஷயம் சொல்றேன். மற்ற நாடுகள்ல படம் எடுக்கும்போது, அங்கே வரிச்சலுகை கிடைக்கும். உதாரணத்துக்கு, ஒரு தமிழ்ப்படத்தை நியூயார்க் சிட்டியில ஷூட் பண்றாங்கனு வைங்க... நடிகர்களின் சம்பளம் தவிர்த்து, ஒருநாள் ஷூட்டிங் செலவு எவ்வளவுனு தெளிவான கணக்கைக் கொடுத்தா, அதில் 30 சதவீத பணத்தை அந்த அரசு நமக்குக் கொடுக்கும். அதாவது, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவு பண்ணியிருந்தா, அதுல 30,000 ரூபாய் நமக்குத் திரும்ப வந்துடும். சலுகையில் வேறுபாடு இருந்தாலும், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜார்ஜியானு உலகின் பெரும்பாலான நாடுகள்ல இது நடைமுறையில இருக்கு" என்பவர், ஒரு அப்படித் திரைப்படமாகும் படைப்புகளுக்கான விற்பனை சந்தையையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

"பெரும்பாலான இன்டிபென்டென்ட் படங்கள் தியேட்டருக்கு வராது. ஆனா, திரைப்பட விழாக்கள்ல கலந்துகிட்டு வரவேற்பைப் பெற்ற படமா இருந்தா, உடனடியாக அந்தப் படத்தை வாங்கிடுவாங்க. படத்தை யாரும் வாங்கலைனா, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் மாதிரியான இணையதளங்களுக்கு விற்கலாம். அல்லது ஏஜென்ஸிகளை அணுகி, நம்ம படத்தை அனைத்து உலக மொழிகளுக்கும் விற்கலாம். அதாவது, ஒரு படத்தை ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, ஜிம்பாப்வே, பிரேசில்னு உலகின் எல்லா மொழிகளுக்கும்கூட 'சப்-டைட்டில்' செய்துகொடுத்து ரிலீஸ் பண்ணலாம். ஒவ்வொரு மொழிக்கும் சில ஆயிரம் டாலர்கள் நமக்குக் கிடைச்சாலும், உலகம் முழுக்க நம்மளோட படத்தை ரீச் பண்ண முடியும், அதுமூலமா நல்ல வருமானத்தையும் பெறமுடியும். தமிழ்சினிமாவுல ஏராளமான படங்கள் இருக்கு. ஆனா, நான் சொல்ற இந்த விஷயத்தையெல்லாம் செயல்படுத்துறதுக்கான வாய்ப்புகள் பூஜ்ஜியத்துலதான் நிற்குது. அதை நடைமுறைப்படுத்தும்போது, 'முத்து' படம் ஜப்பான்ல பெரிய அளவுக்கு ரீச் ஆனமாதிரி, எல்லாத் தமிழ்ப் படங்களும் ரீச் ஆகும். தயாரிப்பாளர்களுக்கும் வருமானம் அதிகமாகும். உலகம் முழுக்க நம்ம படத்தைப் பார்ப்பாங்க. அதனாலதான், 'கெட் ஹாப்பி'யை அங்கே இயக்கினேன்.

தவிர, இங்கே நிறைய திறமையான இயக்குநர்கள் இருக்காங்க. அவங்க படத்தை இங்கே மட்டுமே வெச்சுக்காம, உலகம் முழுக்கக் கொண்டுபோறதுக்கான வழிகளைத் தேர்ந்தெடுக்கணும். ஏ.ஆர்.ரஹ்மான், மனோஜ் நைட் ஷியாமளன் மாதிரியான சில இந்தியர்கள் ஹாலிவுட் அரங்கத்துக்குப் போனதுக்குக் காரணம், அவங்க எடுத்த முயற்சிகள்தான். 'சைன்ஸ்' படத்தை மனோஜ் நைட் ஷியாமளன் மலையாளத்துல எடுத்திருந்தா, இந்த உயரத்துக்குப் போயிருக்க முடியாது. ஆக, ஒரு படத்தை எடுக்குறது, ரிலீஸ் பண்றது, கந்து வட்டிக்குப் பணம் வாங்குறது... இந்தப் பிரச்னைகளிலேயே சுத்திக்கிட்டு இருக்காம, எல்லா வழிகளையும் தெரிஞ்சுக்கணும். வெளிச்சத்தை எல்லோரும் பார்க்கணும்னா, உயரமான இடத்துக்குப் போகணும். குழிக்குள்ள இருந்துக்கிட்டு லைட் அடிக்கிறதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை. தமிழ்சினிமாவுல திருந்தவேண்டிய நபர்களும், திருத்தவேண்டிய விஷயங்களும் நிறைய்ய்ய இருக்கு.  இங்கே சிலர், 'மாஸ் லெவல்ல இருக்கக்கூடிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைச்சுக்கணும்'னு சொல்றதைக் கேட்குறேன். ஏன் அவங்க மாறணும்... 'காக்கா முட்டை', 'விசாரணை' மாதிரியான படங்களை ரசிகர்கள் ஏத்துக்கலையா, இல்லை அதுல பெரிய நடிகர்கள்தான் நடிச்சாங்களா? இங்கே தயாரிப்பாளர்கள்கிட்ட இருந்துதான் பிரச்னையே ஆரம்பிக்குது" என்று முடிக்கிறார், மனோஜ் அண்ணாதுரை.

நல்ல படைப்புகளுக்கு தமிழ்சினிமாவில் வரவேற்பு இருக்கிறது. தமிழ்சினிமாவில் இல்லையெனில், இந்திய சினிமா. இந்திய சினிமாவில் கிடைக்கவில்லையெனில், உலகம் முழுக்க அந்தப் படைப்பைக் கொண்டுபோகவேண்டும். சினிமாவுக்கு மொழி தேவையில்லை எனும்போது, இந்த முயற்சிகளை எடுப்பதில் பிரச்னைகள் ஏதும் இருக்கப்போவதில்லை. உலகம் முழுக்க ஒரு சினிமாவிற்கான வருமான வாய்ப்புகளுக்கான அனைத்து வாசல்களும் திறந்துதான் இருக்கிறது. இனி, அந்த வாசல்களை எட்டியாவது பார்க்கலாம்.  சரி, தமிழ்சினிமாவில் ஒரு சினிமாவிற்கான வருமான வாய்ப்புகள் இப்போதைய சூழலில் எப்படி இருக்கிறது, தயாரிப்பாளர்கள் எப்படி இயங்குகிறார்கள்... எனப் பல விஷயங்களை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு