Published:Updated:

”வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான், இரண்டு மடங்கு மூர்க்கமாவான் சிவா!’’ – ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-2

”வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான், இரண்டு மடங்கு மூர்க்கமாவான் சிவா!’’ – ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-2
”வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான், இரண்டு மடங்கு மூர்க்கமாவான் சிவா!’’ – ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-2

கலக்கப்போவது யாரு சீசன் 3:

மதுரை அமெரிக்கன் காலேஜ்ல நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 3 ஆடிஷனின்தான் நான் முதல்முறையா சிவகார்த்திகேயனைப் பார்த்தேன். அந்த ஆடிஷன்ல சிவா என்ன பெர்ஃபார்மென்ஸ் பண்ணுனான்னு இன்னைக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. சாலமன் பாப்பைய்யா க்ளாஸ் வாத்தியாராகவும் ,அவர்கிட்ட விஜயகாந்த், எஸ்.ஜே.சூர்யா, தனுஷ்னு சில நடிகர்கள் படிக்கிற மாதிரியும் ஒரு கான்செப்ட்ல மிமிக்ரி பண்ணுனான். அதுவரைக்கும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்ஸ் எப்படி பண்ணுனாங்களோ அதிலிருந்து வித்தியாசமா சிவா பண்ணினான். மத்தவங்க எல்லாரும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தோட டயலாக்கை வேற வேற நடிகர்கள் பேசுனா எப்படி இருக்கும்னு ஒரு கான்செப்ட்ல பண்ணுவாங்க. அதில் ஒரு வாய்ஸ் முடிஞ்சதுக்கு அப்பறம்தான் இன்னொரு வாய்ஸ் வரும். ஆனா சிவா பண்ணுன கான்செப்ட்ல ஒரு நடிகர் பேசிட்டு இருக்கும் போதே இடையில வேற நடிகர் பேசுற மாதிரி வரும். அதுக்காக டக்குனு வாய்ஸை மாத்தணும். அதை சிவா சூப்பரா பண்ணுவான். அப்படி மல்டி வாய்ஸ் கான்செப்ட் பண்ணி சிவா கலக்கப்போவது யாரு சீசன் 3க்கு செலக்ட் ஆனான்.

மதுரை, கோவையில ஆடிஷனை முடிச்சதும் ஷோவை ஸ்டார்ட் பண்ணிட்டோம். ஷோவும் டிவியில வர ஆரம்பிச்சிடுச்சு. ஆனா சேனல்ல இருந்து சிவாவுக்கு போன் போகலை. ’என்னடா நம்மளை செலக்ட் பண்ணுனாங்க. ஆனா நாம இல்லாமையே ஷோவை ஸ்டார்ட் பண்ணிட்டாங்களே’னு சிவா பயந்துப்போய் சேனலுக்கு போன் பண்ணுனான். ’கண்டிப்பா உங்களை கூப்பிடுவோம்’னு சொன்னோம்.

அஞ்சு எபிசோட் ஒளிப்பரப்பானதுக்கு அப்பறம்தான் சிவா சீசன் 3க்குள் என்ட்ரி ஆகுறான். போட்டியாளர்கள் எல்லாரையும் தங்க வைக்கிறதுக்கும் ரிகர்ஷல் பாக்குறதுக்கும் கோயம்பேடு விஜய்காந்த் சார் மண்டபத்துக்கு எதிர்ல பாஸ்கர் பார்க் லாட்ஜ்ல ரூம் போட்டு கொடுத்திருந்தாங்க. அங்க நான் எல்லா போட்டியாளர்களுக்கும் ரிகர்ஷல் கொடுத்துட்டு இருந்தேன். அப்போதான் சிவா அங்க வந்து என்னைப் பார்த்தான். ஒரு நோட்ல அவன் என்னப்பண்ணப்போறானோ அதை எழுதி எடுத்துட்டு வந்தான். அதை அப்படியே என் முன்னாடி பண்ணிக்காட்டுனான். ’இதுல எந்த கரெக்‌ஷனும் வேணாம். இதை அப்படியே பண்ணு’னு சொன்னேன். அப்போவே நான் அவன்கிட்ட சொன்னேன்,’ நீ கண்டிப்பா ஃபைனஸ் போவ’னு. அதே மாதிரி ஃபைனல் போனான், டைட்டில் வின் பண்ணுனான். சிவா பெர்ஃபார்ம் பண்ணுன முதல் ஷோ என்னால மறக்க முடியாது. அவன் ஸ்டேஜ்ல ஏறுனதும் நான் கீழ இருந்து டென்ஷனா நின்னுட்டு இருந்தேன். இவன் நல்லா பண்ணுவானே… அது ஆடியன்ஸுக்கு கரெக்ட்டா கனெக்ட் ஆகணுமேனு வேண்டிட்டு இருந்தேன். நான் இப்படி வேண்டிட்டு இருந்தேன்னு சிவாவுக்கு இப்ப வரைக்கும் தெரியுமானு எனக்கு தெரியலை. அவன் ஸ்டார்ட் பண்ணுன ரெண்டு நிமிஷத்துக்குள்ளேயே செம க்ளாப்ஸ். அவன் முடிக்கிற வரைக்கும் யாரும் சிரிக்கிறதையும், க்ளாப் தட்டுறதையும் நிறுத்தலை. அந்த அளவுக்கு என்டர்டெயின் பண்ணுவான்.

சிவா மிமிக்ரியை விட நடிகர்களோட மாடுலேஷனைத்தான் பக்காவா பண்ணுவான். அந்த மாடுலேஷனை பிடிச்சிட்டு ஆடியன்ஸை சிரிக்க வச்சிருவான். பக்காவா மிமிக்ரி பண்றவங்களுக்கு ஸ்கிரிப்ட் வொர்க் சரியா பண்ணவராது. ஆனா சிவா மிமிக்ரியை 50 சதவிகிதம், ஸ்கிரிப்ட்ல 50 சதவிகிதம்னு பக்கா என்டர்டெயினரா இருப்பான். அதுனாலதான் சின்ன பசங்க முதல் பெரியவங்க வரை எல்லாரும் சிவாவை லைக் பண்றாங்க.

நிராகரிக்கப்பட்ட வாய்ப்பு:

சீசன் 3ல சிவா வின் பண்ணுனதும் சீசன் 4க்கு அவனை தொகுப்பாளரா போடலாம்னு முடிவு பண்ணினாங்க. சிவாவும் ரம்யாவும்தான் சீசன் 4ஐ தொகுத்து வழங்க ஆரம்பிச்சாங்க. சிவா ஸ்டேஜ்ல காம்ப்யரிங் பண்ணிட்டு இருக்கான், ஆனா அதுல எதோ மிஸ் ஆகுற மாதிரி இருந்துச்சு. கோட் போட்டுட்டு காம்ப்யரிங் பண்ணிட்டு இருந்த சிவாகிட்ட, ‘இல்ல வேணாம்… எதோ மிஸ் ஆகுது’னு சொன்னதும் அவன் முகம் உடனே வாடிப்போச்சு. கோட்டை கழட்டி தோள்ல போட்டுட்டு எதுவுமே பேசாம போயிட்டான். அங்க, நான் மட்டுமே முடிவு எடுக்க முடியாது. அதுனால என்னால எதுவும் பண்ண முடியலை.

அது இது எது சீசன் 1:

கலக்கப்போவது யாரு சீசன் 4 முடிஞ்சிருச்சு. சீசன் 5 ஸ்டார்ட் பண்றதுக்கு கொஞ்ச இடைவெளி விட்டோம். அந்த இடைவெளியில, அது இது எதுனு ஒரு காமெடி கேம் ஷோ பண்ணலாம்னு விஜய் டிவி முடிவு பண்ணினாங்க. அப்போ எங்க டீம் எல்லாருக்கும் தோணுன ஒரு கேள்வி, ’இந்த ஷோவை யார் தொகுத்து வழங்கப்போறா..?’னுதான். அப்போ எல்லாரோட மைண்டுக்கும் சிவா மறுபடியும் வரான். சீசன் 4 நடந்துட்டு இருந்த நேரத்தில் சிவாவும் பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் 1னு சில ஷோக்களில் கலந்துட்டு இருந்தான். அது இது எது நிகழ்ச்சிக்காக சிவாவை மறுபடியும் காம்ப்யரிங் பண்ண கூப்பிட்டோம்.

அவனும் ஓகே சொல்லிட்டான். ஒரு தடவை வீஜேயிங் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதால அடுத்த டைம் வீஜேயிங் பண்ண வரும் போது செம ஃபார்ம்ல இருந்தான். முதல் ஷோல இருந்து 159வது ஷோ வரைக்கும் அவன்தான் பண்ணுனான். அந்த 159 ஷோவும் சிவாவோட ஷோவாதான் இருந்துச்சு. நீயா நானா ஷோவுக்கு எப்படி கோபி அண்ணாவோ, காஃபி வித் டிடிக்கு எப்படி டிடி சிஸ்டரோ அந்த மாதிரி அது இது எது சிவாவோட ஷோவா இருந்துச்சு. 159 ஷோன்னா கிட்டத்தட்ட மூணு வருஷம். அவனுக்காகத்தான் எல்லாரும் அது இது எது ஷோவைப் பார்த்தாங்க. இதுதான் உண்மை.

அது இது எது ஷோல என்னோட கவனம் எல்லாம் சிரிச்சா போச்சு ரவுண்ட் மேலதான் இருக்கும். சிவா மத்ததையெல்லாம் பார்த்துப்பான். சிரிச்சா போச்சு சில எபிசோடுக்கு கன்டென்ட் கிடைக்கலைனாலும் பெர்ஃபார்ம் பண்ண வர காமெடியன்ஸ்கிட்ட பேசி கலாய்ச்சு வேற லெவலுக்கு கொண்டு போயிருவான். இது மாதிரி கன்டென்ட்  இல்லாம இருந்த நாள்களில் சிவாதான் காப்பாத்துவான். சிவா மாதிரி டைமிங் காமெடி அடிக்க யாராலும் முடியாது. டக்டக்குனு கவுன்ட்டர் கொடுப்பான். இது எல்லாமே கேமராவை ஆன் பண்ணுனாதான். மத்த நேரத்தில் சிவா வேற ஆளாதான் இருப்பான். ஷூட்டுக்கு வந்தா வந்த வேலை மட்டும்தான் பாப்பான். வருவான், மேக்கப் போடுவான், காம்ப்யரிங் பண்ணுவான், வீட்டுக்கு கிளம்பிடுவான். யார்கிட்டையும் அரட்டை அடிக்க மாட்டான். அவன் வெட்டியா யார்கிட்டையும் பேசி நான் பார்த்ததேயில்ல. அவன் எதுக்காக மீடியாக்குள்ள, சினிமாக்குள்ள வந்தானோ அதை இன்னைக்கு வரைக்கும் பண்றான். அதை மிகச்சரியா பண்றான். அதுனாலதான் சிவா இந்த இடத்துக்கு இப்போ வந்திருக்கான். அதே மாதிரி சிவா எல்லாருக்கும் மரியாதை கொடுப்பான். அதுல நடிப்பு இருக்காது. யதார்த்தமா, ஆத்மார்த்தமா இருக்கும். அது இப்போ இருக்கிற பசங்ககிட்ட குறைவாகத்தான் இருக்கு.. டைமிங்கிலும் சிவா கில்லி. ஷூட்டுக்கு சரியான நேரத்தில் வந்திருவான். ஒரு நாளும் அவனால ஷூட் லேட்,கேன்சல் ஆனதில்லை. ஒரு விஷயத்தை கமிட் பண்றதுக்கு ரொம்ப யோசிப்பான். அத நம்மளால சரியான நேரத்தில் பண்ண முடியுமானு ப்ளான் பண்ணிட்டுதான் கமிட் பண்ணுவான். அவன் முக்கியமா யாரைப் பத்தியும் பின்னால பேச மாட்டான். அதான் அவன் வாழ்க்கையில முன்னால போறான்.

சினிமா வாய்ப்பு:

சிவாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சு, அவன் படங்களில் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தபோதும், அது இது எது ஷோல காம்ப்யர் பண்ணிட்டுத்தான் இருந்தான். அவனோட முதல் படம் மெரினா ரிலீஸுக்கு நான் எங்க டீமோட போய்ப் பார்த்தோம். எங்க டீம்ல இருந்து யார் சினிமாவுக்கு போனாலும் அவங்ககிட்ட ஃப்ரீ டிக்கெட் வாங்கிப்போய் படம் பார்க்க மாட்டேன். நானே வரிசையில நின்னு டிக்கெட் வாங்கிதான் படம் பார்ப்பேன். அப்படித்தான் மெரினா படத்தையும் உதயம் தியேட்டர்ல வரிசையில நின்னு டிக்கெட் எடுத்துப் போய் பார்த்தோம். தியேட்டர்ல செம கூட்டம். சிவா மூணு வருஷமா டிவியில ஷோ பண்ணி, யாரெல்லாம் சம்பாரிச்சு வச்சிருந்தான்னு நான் அன்னைக்குத்தான் பார்த்தோம். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், குடும்பத்தோட வந்திருந்த பொண்ணுங்கனு தியேட்டர் ஃபுல்லா கூட்டம். பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

மெரினாவுக்கு பிறகு மனம் கொத்தி பறவை, 3, கேடிபில்லா கில்லாடி ரங்கா படம் முடிச்சிட்டு எதிர்நீச்சல் படத்துக்கு கமிட்டாகும் போதுதான் ஷோ பண்றதை ஸ்டாப் பண்ணுனான். 159வது ஷோல, ’இனிமேல் மா.கா.பா.தான் இந்த ஷோவைப் பண்ணப்போறார்’னு அவனே ஷோ மூலமா ஆடியன்ஸுக்கு சொல்லிட்டு என்கிட்ட வந்தான். வந்து என்னை கட்டிப்பிடிச்சு அழுதுட்டான். அவனுக்கு அந்த ஷோவை விட்டுப்போக மனசே இல்ல.  நீ உண்மையா இருந்த… உழைச்ச… அதுக்கான அங்கீகாரம் உனக்கு கிடைக்கிது. இப்போ நீ சரியான முடிவுதான் எடுத்திருக்க. நல்லபடியா பண்ணு’னு சொல்லி அனுப்பி வச்சேன்.

இன்னைக்கு வரைக்கும் அது இது எது, கலக்கப்போவது யாருனு என்னுடைய எல்லா ஷோவையும் சிவா பார்ப்பான். அதுல அவன் எதை அதிகமா ரசிச்சானோ அதை எனக்கு போன் பண்ணிச் சொல்லுவான். மொக்கையா இருந்தாலும் சொல்லுவான். கலக்கப்போவது யாரு சீசன் 5 ஃபைனல் திருச்சியில நடந்துச்சு. அதுக்கு சிவாவைதான் கெஸ்ட்டா கூப்பிட்டிருந்தோம். அந்த மேடையில் டைட்டில் வின் பண்ணுனது யாருனு சொல்லிட்டு, என்னை மேடைக்கு கூப்பிட்டான். ’என் வாழ்க்கையில முதல்முதலா சப்போர்ட்டா இருந்தது தாம்ஸன் அண்ணாதான்’னு சொன்னான். அவன் என்னை மேடைக்கு கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசுவான்னு எனக்கு தெரியாது. அன்னைக்குதான் பல பேருக்கு நான் தான் கலக்கப்போவது யாரு டைரக்டர்னு தெரிஞ்சிருக்கும். என் பக்கத்து வீட்டுல இருக்கிறவங்களுக்குக்கூட தெரியாது.

சிவா சினிமாவுக்கு போனதுக்கு அப்பறம் நாங்க போன்ல பேசிக்கிறதுதான் அதிகம். நேர்ல மீட் பண்ண நேரமே கிடைக்காது. அவனும் ஷூட்ல பிஸி, நானும் ஷோல பிஸி. கொஞ்ச நாளுக்கு முன்னாடி என் பொண்ணோட முதல் பிறந்தநாள் பங்ஷனுக்கு சிவாவை கூப்பிட்டிருந்தேன். வந்து என் குழந்தைக்கு கிப்ட் கொடுத்துட்டு போனான். இப்படித்தான் நாங்க மீட் பண்ணிக்கிறோம்.

ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டா இருந்து மிகப்பெரிய ஹீரோவா ஆனதுன்னா அது சிவா தான். இனிமேல் எந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஹீரோ ஆனாலும், சிவாதான் ஹிஸ்ட்ரி. அவனோட வளர்ச்சி எனக்கு பிரம்மிப்பா இருக்கு சந்தோஷமா இருக்கு. இன்னும் அவன் மிகப்பெரிய உயரத்துக்கு போகணும்னு ஆசைப்படுறேன்.

God bless you siva…

அடுத்த கட்டுரைக்கு