Published:Updated:

``எங்க வீட்டுல நான் குக்கிங் டீம், நமிதா க்ளீனிங் டீம்..!’’ - நமிதா - வீரா

சனா
``எங்க வீட்டுல நான் குக்கிங் டீம், நமிதா க்ளீனிங் டீம்..!’’ - நமிதா - வீரா
``எங்க வீட்டுல நான் குக்கிங் டீம், நமிதா க்ளீனிங் டீம்..!’’ - நமிதா - வீரா

'எங்கள் அண்ணா' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நமிதா. தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். ' மச்சான்ஸ்' என்று நமிதா பேசும் தமிழ், ரசிகர்களிடம் நல்ல ஃபேமஸாகியது. கலைஞர் டி.வி யில் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் நடுவராக இருந்த போதும் இவர் பேசிய தமிழ் இவரது ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது. இதற்கிடையில் விஜய் டி.வி நடத்திய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை நமிதா. 

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு மாதத்தில் நிகழ்ச்சியிலிருந்து நமிதா எலிமினேட் ஆகியிருந்தாலும், பிக் பாஸ் வீட்டிலிருந்த கழிவறையைச் சுத்தம் செய்து அனைவருக்கும் டெமோ காட்டியதன் மூலமாக ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தார். இந்நிலையில் 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய நமிதா அதன்பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. 'பிக் பாஸ்' பைனலுக்குக் கூட நமிதா வரவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருந்த நமிதா அவ்வப்போது அதில் தனது கவிதைகள் மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை போஸ்ட் செய்துகொண்டிருந்தார். 

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரைஸா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நடிகை நமிதா திருமணம் செய்யப் போவதாக தெரிவித்தார். மேலும், அந்த வீடியோவில் நமிதா மற்றும் அவரது கணவர் வீரா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். அப்போது நமிதா தனது திருமணம் நவம்பர் 24 ஆம் தேதி திருப்பதியில் நடக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார். 

நமிதா திருமண தேதியை அறிவித்ததிலிருந்தே அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், நமிதா கொஞ்சம் பிஸியாக இருந்த காரணத்தால் அவரது காதல் கணவர் வீராவை தொடர்புகொண்டோம். அவர் ’தற்போது திருமண வேலைகள் சென்று கொண்டிருப்பதால் தானும், நமிதாவும் பிஸியாக இருக்கிறோம். அதனால் தற்போது பேச முடியாது’ என்று கூறினார். 

இதற்கிடையில் நமிதா, வீரா திருமணம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள  ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் நவம்பர் 24 ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்தது. சினிமாவைச் சேர்ந்த சில பிரபலங்கள் நமிதா திருமணத்தில் கலந்து கொண்டனர். நமிதா, வீரா திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரிலீஸாகி வைரலானது. திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகளின் இன்டர்வியூக்காக வீராவை தொடர்பு கொண்டோம். ’நமிதாவுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. அதனால் அவர் ஓய்வில் இருக்கிறார். எங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். அதனால் தற்போது பேட்டி கொடுக்க முடியாது’ என்று தெரிவித்தார். 

மீண்டும், அவரை தொடர்பு கொண்டு பேசியபோது, ''நமிதாவுக்கு இன்டர்வியூ கொடுக்க சம்மதம் என்றால் ஓகே, நமிதாவிடம் கேட்டுவிட்டு பதில் சொல்வதாக' கூறினார். சிறிது மணி நேரம் கழித்து வந்த வீராவின் தொலைபேசி அழைப்பை எடுத்தபோது நம்மிடம் நமிதாவே பேசினார், '' ஹாய், இப்போ நான் நல்லாயிருக்கேன். திங்கள் கிழமை ஓகே வா, மதியம் இரண்டு மணிக்கு வருகிறோம்’’ என்ற சொன்னார் நமிதா. தம்பதிகள் இருவரையும் ஜெமினி ஹவுஸுக்கு வரச் சொன்னோம். கரெக்டாக 2.45 மணிக்கு வந்த நமிதா, வீரா தம்பதிகள், ''ஸாரி, வீட்டில் கெஸ்ட் திடீரென்று வந்துட்டாங்க. அதனால், லேட் ஆயிருச்சு. நாங்க ரெடி'' என்று உற்சாகமாகப் பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர். 

''நமிதாவின் எந்தவொரு ஆசைக்கும் நான் இடைஞ்சலாக இருக்க மாட்டேன். அவர் விருப்பப்படி எது செய்தாலும் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்’’ என்று சொன்ன வீராவிடம் கண்களாலே ஐ லவ் யூ சொன்ன நமிதாவிடம், 'திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா’ என்றால், ''கண்டிப்பாக. பட், வழக்கமான அண்ணி, அக்கா ரோல் எல்லாம் செய்ய மாட்டேன். எனக்குப் பிடித்த ரோல் வந்தால் செய்வேன்'' என்று சொன்ன நமிதாவை தொடர்ந்து வீரா, ’எனக்கு நமிதா செய்த ரோலில் பார்த்திபன் உடன் நடித்த 'பச்சக்குதிர' படத்தில் நடித்த கேரக்டர் ரொம்பப் பிடிக்கும். அவங்க நடித்த தெலுங்கு 'பில்லா' பிடிக்கும்'' என்று வீரா சொல்லி முடிக்க,''தமிழ் பில்லா படம் எனக்குப் பிடிக்கும். அந்தப் படத்தின் ஷூட்டிங் போது அஜித் மனைவி ஷாலினி கர்ப்பமாக இருந்தாங்க. அப்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் அஜித் சாக்லேட் கொடுத்தார். அவர் ஒரு நல்ல மனிதர். ஜென்டில் ஃபேமிலி மேன். அதே போல் விஜயுடன் 'அழகிய தமிழ் மகன்' படம் பண்ணினேன் அவர் நல்ல டான்ஸர்'' என்று நமிதா சொல்ல, ’’நானும் விஜய் அளவுக்கு டான்ஸ் ஆட பயிற்சி எடுத்து வருகிறேன். எனக்கு டான்ஸில் ஏதாவது சந்தேகம் வந்தால் நமிதாவிடம்தான் கேட்பேன். அவங்க, எனக்கு டான்ஸ் ஸ்டெப் சொல்லிக் கொடுப்பாங்க. வீட்டை, எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று நமி நினைப்பாங்க. அதனால், நான் கிச்சனில் சமைத்தால் நமிதா வீட்டை க்ளீன் பண்ணுவாங்க. பிக் பாஸ் ஸ்டைலில் சொல்லணும்னா நான் குக்கிங் டீம், நமிதா க்ளீனிங் டீம். எங்களுக்குள்ள நிறைய ஒற்றுமைகள் இருக்கு. நமியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்'' என்று வீரா சொல்ல நமிதாவிடம் சில கேள்விகள் கேட்டோம்.

நமிதாவின் அரசியல் பிரவேசம், பிசினஸ் என எல்லாத்துக்கும் ஓப்பன் டாக்காக நமிதா பதில் சொன்னார். அது எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரும் ஆனந்த விகடனை படியுங்கள்.