Published:Updated:

ஒடிசா முதல் கொல்கத்தா வரை... வெளி மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவிகள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-29

ஒடிசா முதல் கொல்கத்தா வரை... வெளி மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவிகள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-29
ஒடிசா முதல் கொல்கத்தா வரை... வெளி மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவிகள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-29

ஒடிசா முதல் கொல்கத்தா வரை... வெளி மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவிகள்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-29

மதம், மொழி, இன வேறுபாடுகள் அற்றவர் எம்.ஜி.ஆர்

பாரத ரத்னா விருது இந்திய இலங்கையின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டதால்  நம் நாட்டின் தேசியத் தலைவர்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் வடக்கே டில்லி பம்பாய் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் அ.தி.மு.க கட்சி செயல்பட்டதால் எம்.ஜி.ஆர் தேசியக் கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றார். இந்த அந்தஸ்துக்குரிய அஸ்திவாரம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களால் 1953 முதல் அமைக்கப்பட்டது. பாரதப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்த போது அவர் அந்தமான் தீவில் பணத்தோட்டம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை திறந்துவைத்தார். இன்றும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எம்.ஜி.ஆர் பற்றிய  நினைவுகள் பசுமையாக உள்ளன. வெளிநாடுகளில் குறிப்பாக ஃபிரான்ஸ், சிங்கப்பூர் மலேசியா போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வருடந்தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. மகாராஷ்ட்டிராவின் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் இதயக்கனி இதழுக்கு விளம்பரமும் நூற்றாண்டு விழா வாழ்த்தும் அனுப்புகிறார். 

நாடெங்கும் கட்சிஅலுவலகமாக மாறிய ரசிகர் மன்றம்

அவசர நிலையைப் பிரகடனம் செய்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியை விரும்பவில்லை. அவற்றை ஒடுக்கிவிடுவார் என்ற தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர் தனது அண்ணா தி.மு.கவை அனைத்திந்திய அண்ணா தி மு க என்ற பெயரில் தேசியக் கட்சியாக மாற்றினார். இதற்காக மற்ற மாநிலங்களில் கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டன. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சட்டமன்றத்தில் அந்த மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தவை மற்ற மாநிலங்களில் இயங்கி வந்த எம்.ஜி.ஆர்  ரசிகர்மன்றங்கள் ஆகும்.

மற்ற மாநிலங்களுக்குச் செய்த உதவிகள்

எம்.ஜி.ஆர் நடித்து வந்த காலத்திலும் அரசியலுக்கு வந்த பிறகும் பிறருக்கு உதவுவதில் அவர் நம்மவர்,வேற்றவர் என்று வேறுபாடு கண்டதில்லை. எந்த மாநிலமாக இருந்தாலும் எந்த மொழி பேசும் மக்களாக இருந்தாலும் அவர் உதவி செய்யத் தயங்கியதே இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவர் செய்த உதவிகளில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வந்த போது உடனே எம்.ஜி.ஆர் போர் நிதியாக ரூ. 75,000 தருவதாக அறிவித்து முதல் தவணையாக காமராஜரிடம் 25,000க்கான காசோலையை தந்தார். அதற்கு பாரத பிரதமர் நேருஜி அவர்கள் நன்றி தெரிவித்து கடிதமும் அனுப்பினார். 

ஒரிசாவுக்கு நிவாரண நிதி திரட்டும் முயற்சியில் சென்னையில் ஒரு இந்தி படத்தைப் போட்டு அதன் வசூலை அனுப்ப சிலர் முயன்ற போது அதற்கான அழைப்பு எம்.ஜி.ஆருக்கு வந்தது. அந்தப் படத்தின் வசூல் தொகைக்குச் சமமான அளவு தொகையை எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் வழங்கினார்.

ராஜஸ்தானுக்கு அவர் அடிமைப்பெண் படப்பிடிப்புக்குச் சென்றபோது அண்மையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கு ஐம்பதாயிரம் நிதி உதவி அளித்தார். மறுநாள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக இச்செய்தியே இடம்பெற்றது. 

கர்நாடகாவில் ஒரு விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர் சென்றிருந்த போது அங்கு பார்வையற்றோருக்கும் பேசும் திறனற்றோருக்குமாக ஐம்பதாயிரம் ரூபாய் உதவியளித்தார். எம்.ஜி.ஆர் அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று வந்த பிறகு அவருக்குப் பேசும் திறன் குறைந்தபோது அவர் அந்தக் கஷ்டத்தை உணர்ந்து தன் ராமாவரம் தோட்டத்தில் இக்குறைபாடு உடைய சிறுவர்களுக்குப் பள்ளி அமைக்கும்படி தன் உயிலில் எழுதிவைத்திருந்தார் என்று நம்மில் பலர் கருதுகிறார்கள். ஆனால், அவர நன்றாகப் பேசி வந்த காலத்திலேயே அவருக்கு மாற்று திறனாளிகள் மீது அன்பும் அக்கறையும் இருந்தது. அவர், அவர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் அவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நிறைய உதவியிருக்கிறார்.

கொல்கத்தாவுக்குப் பணம் படைத்தவன் படப்பிடிப்புக்குச் சென்றிருந்த போதும் அவர் அங்கு கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அச்சங்கத்தின் வளர்ச்சிக்கு நிதி அளித்தார். பின்பு அவர் முதல்வரான பிறகு அங்கு சென்றிருந்த போது அவரை அங்குள்ள ஆளுநர் மாளிகையில் தங்கச் செய்தனர். ஆனால், அங்கிருந்த கெடுபிடிகளைப் பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வரும் பொது மக்களுக்கு இந்த இடம் வசதிப்படாது என்று சொல்லிவிட்டு ஓர் ஓட்டலில் வந்து தங்கினார். அங்கு எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த தமிழர்களின் கையில் அவர் தனிச்செயலர் ரூபாய் நோட்டுக் கட்டிலிருந்து பிரித்து ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

அமெரிக்காவுக்கு எம்.ஜி.ஆர் போயிருந்தபோது ஒரு பெண் அங்கு வந்து எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டார். எம்.ஜி.ஆர் அவர் கேட்டதுக்கும் அதிகமான டாலர் நோட்டுக்களை அவருக்குக் கொடுத்து உதவினார். 

முதல்வரான பிறகும் வெளி மாநிலங்களுடன் இணக்கமான உறவு

தமிழ்நாடு தன் விவசாயத்தின் தண்ணீர் தேவைக்காக கேரளா மற்றும் கர்நாடகத்தை எதிர்பார்த்து இருப்பதால் எம்.ஜி.ஆர் இம்மாநில முதல்வர்களுடன் இணக்கமாகப் பேசி தன் மாநிலத் தேவையை நிறைவேற்றினார். கோர்ட் வழக்கு என்று தானும் அலையவில்லை பிறரையும் சிரமப்படுத்தவில்லை. குடிநீர் தேவையையும் இவ்வாறு அன்போடு கேட்டு பெற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது கேரளாவில் ஏ.கே அந்தோணி, இ.கே நயினார் மற்றும் கருணாகரன் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். ஒரு முறை எம்.ஜி.ஆர் அங்கு ஒரு கூட்டத்தில் பேசிய போது அவர் தமிழில் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரை மலையாளத்தில் பேசும்படி கூறினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார் அவருக்கு ஓரளவு மலையாளம் பேச தெரிந்திருந்தும் கேரளாவில் இரண்டு வார்த்தை கூட பேச மறுத்துவிட்டார். ’’நான் விவரம் தெரிந்து பேசிய மொழி தமிழ்; படித்த மொழி தமிழ்; என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் நாடு தமிழ்நாடு; எனவே நான் தமிழில்தான் பேசுவேன். விருப்பம் இல்லாதவர்கள் எழுந்துபோய்விடுங்கள்’’ என்றார். அவ்வாறு அவர் மலையாளம் பேச மறுத்தும் அவரால் அம்மாநிலத்துடன் இணக்கமான உறவு வைத்திருக்க முடிந்தது.

கேரளாவில் பிறந்த தன் உறவினர் இருவரும் தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்ததனால் அங்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையார்  பிறந்த ஊரான வைக்கத்தில் இருவரும் சேர்ந்து நிற்பது போல ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. ஜானகி அம்மையாரின் சகோதரன் நாராயணன் என்பவர் இச்சிலையை நிறுவி அன்றைய முதல்வரைக் கொண்டு திறப்பு விழா நடத்தினார்.

எம்.ஜி.ஆர் என்ற எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் ராமகிருஷ்ண ஹெக்டேயும் ஆந்திராவில் என்.டி.ராமாராவும் (புதுச்சேரியில் 1974-ல் ராமசாமி என்பவரும் கூட சிலகாலம் முதல்வராக இருந்தார்) இருந்ததை பத்திரிகைகள் குறிப்பிட்டுக் காட்டி தென்னிந்தியாவில் ‘ராம’ ராஜ்யம் நடப்பதாக எழுதின.  

கர்நாடகாவில் குண்டு ராவ் முதலமைச்சராக இருந்தபோது ஒரு நாள் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்குச் சென்றார். அங்கு காலை உணவு சாப்பிட்டார். தண்ணீர் குடிக்காமல் இருந்தார். குண்டு ராவ் தன் பெயர் எம் குண்டு ராவ் என்பதை சுருக்கி எம்.ஜி.ஆர் என்று தன்னை நண்பர்களிடம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எம்.ஜி.ஆர் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்தார். அவரது தாயார் எம்.ஜி.ஆரிடம் சாப்பிட்ட பிறகு ஏன் தண்ணீர் குடிக்கவில்லை. தண்ணீர் குடிக்க வேண்டாமா? குடியுங்கள் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் என் மக்கள் தண்ணீர் இல்லாமல் அங்கு வாடுகிறார்கள் உங்கள் மகன் எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கிறாரே என்றார். அம்மா தன் மகனைப் பார்த்தார். அவரது கருணைப் பார்வை எம்.ஜி.ஆரின் கோரிக்கையை நிறைவேற்றியது. குண்டுராவ் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அண்டை மாநிலங்களுக்கு இடையே தாய் பிள்ளை போல பேசித்தான் தண்ணீர் பெற வேண்டுமே அல்லாது வம்பு வழக்கு என்று போனால் தீர்ப்பு கிடைக்கலாம் ஆனால் அது தீர்வு ஆகாது என்பதை எம்.ஜி.ஆர் நன்கு உணர்ந்திருந்தார்.

சென்னைக்குத் தெலுங்கு கங்கை திட்டம் 

சென்னையில் மக்கள் தொகை பெருகிய அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க இயலவில்லை. அதனால்தான் இன்று மழை பெய்தவுடன் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. இதற்கு ஒரு தீர்வாக எம்.ஜி.ஆர் தலைநகரை மாநிலத்துக்கு நடுவில் உள்ள திருச்சிக்கு மாற்றலாம் என்றார். அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு வந்தது. 

சென்னை மக்கள் குடிநீரின்றி தவித்தபோது எம்.ஜி.ஆர் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் பேசி தெலுங்கு கங்கை திட்டத்தைக்கொண்டு வந்து தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்து தாகத்தை தணித்தது. இது தென்னிந்தியாவின் முதல் நதி நீர் இணைப்பு திட்டம் எனலாம். திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்காமல் தன்னாலான ஒரு முயற்சியை செய்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.

இந்தியப் போராட்ட வீரர் பால கங்காதர திலகருக்கு ஒரு சிலை எழுப்ப வேண்டும் என்று அவரது பேரன் தெரிந்தவர்களிடம் நிதி திரட்டினார். அப்போது அவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சியைச் சந்தித்தார். ம.பொ.சி அவர்கள் அவரை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அழைத்துவந்தார். எம்.ஜி.ஆர் தன் சொந்தப்பணம் ஐம்பதாயிரத்தை வழங்கினார். அரசாங்கப் பணத்தை தருவதாக இருந்தால் அந்தக் கோப்பு பலரிடம் போய் கையெழுத்து பெற்று வர வேண்டும். அதற்குக் கால தாமதம் ஆகும் அதனால் நல்ல காரியத்துக்கு நானே தருகிறேன் என்றார். 

தென்னிந்தியாவின் முப்பெரும் ஹீரோக்கள் 

தென்னிந்தியத் திரையுலகில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் கர்நாடகத்தில் ராஜ்குமார் மற்றும் ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோர் பிரபலமான ஹீரோக்களாக இருந்தனர். அவர்களுக்குள் நல்ல நட்பும் உறவும் இருந்தது. எம்.ஜி.ஆர் ஆந்திராவின் மக்களால் தேவுடா என்றழைக்கப்பட்ட என்.டி.ராமாராவிடம் மிகுந்த அன்புடன் இருந்தார்.  என். டி. ஆர். அரசியலுக்கு வரும் முடிவை எடுத்ததும் எம்.ஜி.ஆரிடம் வந்து வாழ்த்துப் பெற்றார். தன் கட்சிக்குத் தெலுங்கு ராஜ்யம் என்று பெயர் வைக்கப் போவதாகச் சொன்னதும் எம்.ஜி.ஆர் ராஜ்யம் வேண்டாம் தேசம் என்று வையுங்கள் என திருத்திக் கொடுத்தார். என்.டி.ஆரும் சம்மதித்தார். தெலுங்கு தேசம் உதயமாயிற்று. எம்.ஜி.ஆர் இறந்ததும் என்.டி.ஆர் என் மூத்த அண்ணன் இறந்துவிட்டார் என்று சொல்லி அழுதார். எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் செய்யப்படும்வரை உடன் இருந்தார்.  

கர்நாடகத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ராஜ்குமார் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ராஜ்குமார் படத்தின் பாட்டுக்கள் ஒளிபரப்பாகும்போது அதை எம்.ஜி.ஆர் மிகவும் ரசித்துப் பார்ப்பாராம். அவர் பேச இயலாத நாள்களிலும் கூட ராஜ்குமார் பாட்டு ஒளிபரப்பனால் நம்ம ராஜ்குமார் என்று தன் நெஞ்சைத் தொட்டுக்காட்டி மகிழ்ச்சியடைவாராம். 

எம்.ஜி.ஆரின் மதம் சார்ந்த வெளிப்பாடுகள்

மொழி எல்லைகளைக் கடந்து நின்ற எம்.ஜி.ஆர் மத எல்லைகளையும் கடந்து நின்றார். அவர் திமுகவில் இருந்த வரை இந்துச் சமயப் பழக்க வழக்கங்களை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. அண்ணா அவர்கள் சொன்ன ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம் பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்ற கொள்கையைப் பின்பற்றினார். அதுபோல கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களைத் தன் படங்களில் காட்டினாலும் அவற்றின் கொள்கைகளைப் பெரிதாக ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. 

கிறிஸ்தவ மதமும் மக்களும்

எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம் படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும். ரிக்‌ஷாக்காரன் படத்தில் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப் பிடித்து நிற்கும் காட்சி வரும்.

எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும்  அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு. பரமபிதா என்ற பெயரில் அவரை இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை சவுக்கால் அடித்து அவர் தலையில் முள்கிரீடம் வைத்து அழுத்துவதை ரசிகர்கள் காணப் பொறுக்க மாட்டார்கள். திரையைக் கிழித்து விடுவர் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கைவிடப்பட்டது. போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும் படம் கேரளாவில் பலர் வீடுகளில் மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி கொளுத்துகிறார்களா’ என்று சிரித்தாராம்.

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும்போது அந்த வீட்டில் திருவள்ளுவர் பாரதியார் அறிஞர் அண்ணா ஆகியோர் படங்களோடு இயேசு கிறிஸ்து படத்தையும் மாட்டியிருப்பார். இதனால் கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட் கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அவர் தனிக் கட்சி ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர். 

எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நோவா அவரைப் பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும் சம்மதித்தார். அப்போது நோவா அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர் உடனே செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ஆர் காலத்தில்தான் சிறை கைதிகளின் அறைகளுக்குக் கழிப்பறை வசதி கிடைத்தது. அதுவரை அறையில் வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள் இரவில் சிறுநீர் மலம் கழித்தனர். மறுநாள் அதை கொண்டு போய் கொட்டிவிட்டு சுத்தம் செய்து கொண்டு வந்து வைத்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில் ஒரு மணி வரை உயிரோடு இருந்ததாக சில செய்திகள் வந்த போது கிறிஸ்தவர்கள் பலர் அவர் கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே கருதினர். எம்.ஜி.ஆர் மீதிருந்த நன்மதிப்பு காரணமாக அவர் கிறிஸ்தவர் அதிகமாக வாழும் சாத்தான் குளம் தொகுதியில் நீலமேகம் என்ற இந்துவை நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர். 

இஸ்லாமியர்களைக் கவர்ந்த  எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருக்கு 1953-ல் முதன் முதலாக ரசிகர் மன்றம் அமைத்தவர் ஒரு இஸ்லாமியர் என்பதை அறிகிறோம். அந்தக்காலத்தில் மாதம் 150 ரூபாய் சம்பாதிக்கும் ரசிகர் கூட ரசிகர் மன்ற உறுப்பினர் கட்டணமான ஐந்து ரூபாயைச் செலுத்த தவறுவதில்லை. ஆனால், மற்ற ரசிகர் மன்றத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் வைத்தால் கூட ரசிகர்கள் செலுத்துவதில்லை. எனவே  25 பைசா என்று குறைத்துவைத்தனர்.

மலைக்கள்ளன் படம் தொட்டு சிரித்து வாழ வேண்டும் படம் வரை எம்.ஜி.ஆர் பல படங்களில் நல்ல இஸ்லாமியர் வேடம் ஏற்று நடித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் அலிபாபாவாகவும் பாக்தாத் திருடன் படத்தில் ஆபுவாகவும் ராஜா தேசிங்கில் தேசிங்கின் தந்தைக்கு முதல்மனைவிக்குப் பிறந்த இஸ்லாமிய சகோதரனாகவும் நடித்திருந்தார்.

மலைக்கள்ளன் படத்தில் மலைக்கள்ளன் போடும் மாறு வேடமாக அப்துல் ரகீம் என்ற முஸ்லிம் வேடத்தில் வந்து பல நல்ல செயல்களைச் செய்வார். சிரித்து வாழவேண்டும் அப்துல்ரகுமான் என்ற எம்.ஜி.ஆர் ஒரு சூதாட்ட கிளப் நடத்தி வருவார். பின் இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ஆர் அதை அழித்ததும் ஆட்டோ ஓட்டுவார். இருவரும் நண்பராகிவிடுவர். கதாநாயகி லதாவுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளிப்பார். இது ஒரு தை கதாபாத்திரம்.

ராஜா தேசிங்கு படத்தில் அண்ணனாக வரும் எம்.ஜி.ஆரை தம்பி எம்.ஜி.ஆர் கொன்றுவிடுவார். என் வாளால் உன் ரத்தம் சிந்தக் கூடாது என்று முஸ்லிம் எம்.ஜி.ஆர் சொல்லி போரை தடுக்க நினைப்பார். ஆனால் தேசிங்கு எம்.ஜி.ஆர் தன் சொந்த அண்ணன் என்பது தெரியாததால் என் வாளால் நீ சாக வேண்டும் என்று கூறி குத்திவிடுவார். இதிலும் இஸ்லாமிய சகோதரர் கதாபாத்திரம் மிகவும் நல்லவராகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. 

குலேபகாவலியில் ஹாசனாக வரும் எம்.ஜி.ஆர் படத்தின் தொடக்கத்தில் அல்லாவை தொழும் காட்சி இடம்பெறும். அப்போது ஒரு பாடலும் ஒலிக்கும். அது போல ராஜா தேசிங்கில் ஆதி கடவுள் ஒன்றேதான் அதை மாற்ற முடியாது எனத் தொடங்கும் பாட்டை பாடியபடி முஸ்லிம் எம்.ஜி.ஆர் அறிமுகமாவார். உடனே அது எப்படி எல்லாக் கடவுளும் ஒன்றாகும் எனக் கேட்டு அவருடன் இருந்த  இளைஞர்கள் எம்.ஜி.ஆருடன் சண்டை போடுவதாக அக்காட்சி தொடரும்.

எம்.ஜி.ஆர் இஸ்லாமிய கடவுளை தொழும் காட்சிகளில் நடித்ததால் அவருக்கு இஸ்லாமியர் ஆதரவும் கிடைத்தது. ஒளிவிளக்கு படத்தில் தீக்காயம் பட்டு உயிருக்குப் போராடும் எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி அனைத்து மதத்தினரும் கடவுளை வணங்கும் காட்சியில் இஸ்லாமிய வழிபாடு அதிகமாகக் காட்டப்பட்டு பாங்கு சொல்லும் சத்தமும் சேர்க்கப்பட்டிருக்கும். மற்ற மதத்தினர் நடத்திய வழிபாடுகளின் சத்தம் கேட்காதபடி பின்னணி இசை வந்துவிடும்.

எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியைத் தொடங்கிய பிறகு எடுக்கப்பட்ட படங்களில் பொதுமக்களைக் காட்டும் காட்சிகளில் இந்துவுக்குக் குடுமி ஐயரும் கிறிஸ்தவத்துக்கு பாதிரியாரும் இஸ்லாமுக்குத் தொப்பி அணிந்த முஸ்லிமும் காட்டப்பட்டனர். மூவரும் வந்து கைகோத்து ஆதரவு அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. உரிமைக்குரல், இதயக்கனி போன்ற படங்களில் பாட்டுக்களிலும் இஸ்லாமியருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் மீது இஸ்லாமியர் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரை முழுமையாக நம்பினர். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். இஸ்லாமியர் அதிகம் வாழும் வாணியம்பாடி என்ற தொகுதியில் இஸ்லாமியரையே நிறுத்த வேண்டும் என்ற கருத்தை உடைத்து எம்.ஜி.ஆர் இஸ்லாமியர் அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்றார். அவருக்கிருந்த இஸ்லாமியரின் ஆதரவு அந்தத் தேர்தலில் அவர் இஸ்லாமியர் அல்லாத ஒருவரை நிறுத்திய போதும் வெற்றியைப் பெற்று தந்தது.

அடுத்த கட்டுரைக்கு