Published:Updated:

"பேருதான் வெயில்... ஷூட்டிங் எல்லாம் மழையிலதான்..!" - பசுபதி... #11YearsOfVeyil #VikatanExclusive

"பேருதான் வெயில்... ஷூட்டிங் எல்லாம் மழையிலதான்..!" - பசுபதி... #11YearsOfVeyil #VikatanExclusive
"பேருதான் வெயில்... ஷூட்டிங் எல்லாம் மழையிலதான்..!" - பசுபதி... #11YearsOfVeyil #VikatanExclusive

வெக்கை மிகுந்த விருதுநகர் கிராமங்களின் புழுதி பறக்கும் நிலப்பரப்பையும்; வறுமையும் துன்பங்களும் நிறைந்த அம்மக்களின் யதார்த்த வாழ்க்கையையும் அவ்வளவு நேர்த்தியாக சொன்ன படம் 'வெயில்'. விருதுநகர் மக்களின் கிராமிய வாழ்வியலை ஒரு படமாக இல்லாமல் ஒரு பதிவாய் தமிழ்த்திரையுலகில் அழுத்தமாகப் பதித்தார் இயக்குநர் வசந்தபாலன். ஏதோவொரு சூழ்நிலையில் சொந்த ஊரைவிட்டு வெளியூர் சென்றவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து பழைய கிராமத்து நினைவுகளுக்குள் மூழ்கி கரைந்து போனார்கள். அப்படித் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் வெயில் திரைப்படம் வெளியாகி இன்றோடு பதினொரு வருடங்கள் ஆகின்றன. இதுகுறித்து யாரிடம் பேசலாம் என்று யோசித்தபோது முதலில் நினைவுக்கு வந்தவர் முருகேசன்தான். ஆம்.. நடிகர் பசுபதியிடம் வெயில் பட அனுபவங்கள் குறித்துப் பேசினேன். 

வெயில் திரைப்பட வாய்ப்பு எப்படி அமைந்தது?

''அந்தச் சமயங்களில் நான் நிறைய படம் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் வசந்தபாலன் ஒருநாள் என்னைக் கூப்பிட்டாரு. நானும் போனேன். கதை சொல்வாருனு நினைச்சிட்டு இருக்கும் போது ரெண்டு பாட்டு போட்டு காமிச்சாரு. அது என்ன பாட்டுன்னா வெயிலோடு விளையாடியும் உருகுதே மருகுதேவும்தான். அந்தப் பாட்டு எனக்கு என்னன்னே தெரியலை. கேட்டவுடனே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதற்கப்புறம்தான் கதையைச் சொன்னாரு. கதையும் பிரமாதமாக இருந்துச்சு. கதை சொல்லி முடித்தவுடன் வசந்தபாலன், "முருகேசன் கேரக்டர் நீங்க பண்ணா நல்லா இருக்கும்"னு சொன்னாரு. கதை கேட்கும் போது இந்தப் படம் நாம பண்றோம்னு முடிவு பண்ணிட்டதால உடனே, ஒத்துக்கிட்டேன். இப்படிதான் வெயிலுக்குள்ள நுழைஞ்சேன்.'' 

வசந்தபாலனுடன் பணியாற்றிய அனுபவங்கள்?

''வெயில் படத்தில எனக்கும் வசந்தபாலனுக்கும் அப்படி ஒரு புரிதல் இருந்துச்சு. அது எப்படின்னா ஒரு நடிகன், இயக்குநர் உறவையெல்லாம் தாண்டி எங்களுக்குள்ள அப்படி ஒரு நட்பு இருந்துச்சு. அது இன்னைக்கு வரைக்கும் தொடர்ந்துட்டுதான் இருக்கு. நான் நாடகத்திலிருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். வெயில் படத்துல என் இஷ்டப்படி நடிக்க எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாரு. ஷூட்டிங் அப்போ அவர் எதிர்பார்க்கிற நடிப்பு வரலைன்னா எத்தனை டேக் வேணும்னாலும் போவாரு. அவர் எதிர்பார்க்கிற நடிப்பை கொடுத்தா மட்டும்தான் அடுத்த காட்சிக்கே போவாரு. எல்லாக் காட்சியையும் அவர் அப்படிதான் எடுத்தார். நல்லவேளைங்க நான் சம்பந்தப்பட்ட காட்சியெல்லாம் ரெண்டு டேக்குக்கு மேல போகாது. ஏன்னா, நான் வீட்டுலயே நல்லா ஹோம்ஒர்க் பண்ணிட்டுதான் ஷூட்டிங்கே போவேன்.''

வெயில் ஷூட்டிங்ல முருகேசன் கதாபாத்திரத்திற்காக எவ்வளவு மெனக்கெட்டிங்க?

''படத்திற்கு பேருதாங்க வெயில். ஆனால், என் போர்ஷன் சம்பந்தப்பட்ட பாதிக் காட்சிகள் மழையிலதான் எடுத்தாங்க. அந்த மாதிரி  தண்ணீர் காட்சிகள் எல்லாம் டிசம்பர்ல ஷூட் பண்ணோம். நல்ல குளிர்காலம் வேற. பதினைந்து நாள் ஷூட்டிங் எடுத்தோம். தினமும் சாயங்காலம் ஆறு மணிக்குத் தண்ணியில இறங்குன்னா அடுத்த நாள் காலையில ஆறு மணி வரைக்கும் தண்ணியிலதான் இருப்பேன். என் காலெல்லாம் ஊறிப்போயிடும். தொட்டா சதை பிஞ்சிகிட்டு வெளியே வரும். இந்த மாதிரி நான் மட்டும் இல்ல, எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால், அந்த கஷ்டம் எல்லாம் வெயில் வெற்றியைப் பார்த்ததும் சந்தோஷத்துல பறந்து போயிடுச்சு.'' 

வெயில் படம் வந்தபோது உங்களுக்கு வந்த பாராட்டுகளில் மறக்க முடியாத பாராட்டு?

''ஒண்ணா.. ரெண்டா.. பார்த்திபன், தனுஷ், சிம்பு, கமல் சார்னு நிறைய பேரு பாராட்டுனாங்க.. அத்தனையும் மறக்க முடியாத பாராட்டுதான். ஆனால், எனக்கு அதையெல்லாம் தாண்டி மிகவும் நெருக்கமான பாராட்டுன்னா என் ஃப்ரெண்டோட அப்பா என்னைப் பாராட்டுனதுதான். அவர் எனக்கும் அப்பா மாதிரிதான். சின்ன வயசுலிருந்து இன்னைக்கு வரைக்கும் எனக்கு ரொம்ப ஆதரவாக இருப்பாரு. படம் பார்த்து முடிக்கிறப்போ   'ஓ'னு கதறி அழுதாரு. க்ளைமாக்ஸ் அப்போ அழுதுகிட்டே, என்கிட்ட, "நீ.. ஏன்.. அங்கெல்லாம் போற.. என் வீட்டுலயே இருந்துக்க" னு சொன்னாரு. அந்தப் படம் அவ்வளவும் உண்மைங்கற மாதிரி நினைச்சிக்கிட்டாரு. அதுதான் எனக்கு மிகப்பெரிய பாராட்டுங்க.'' 

வெயில் படத்தில் உங்கள் ரொமான்ஸ் போர்ஷன் அவ்வளவு இயல்பா இருந்துச்சே?

''அதெல்லாம் உங்களுக்கு தான்ங்க ரொமான்ஸ். எங்களுக்குலாம் அது அவஸ்தை. நான் மட்டும் இல்ல எந்த நடிகரைக் கேட்டாலும் இதாங்க சொல்வாங்க (சிரிக்கிறார்). அந்த வெயிலையும் மழையிலையும் உடம்பு முழுவதும் வியர்வையில ஹீரோயினை கட்டிப்பிடிச்சிட்டு நடிக்கிறதுலாம் ரொம்ப கஷ்டம்ங்க. ஒரு பொண்ணா பிரியங்காவுக்கும் அது ரொம்ப கஷ்டம்ங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் அது ஒரு வேலை. அந்த வேலையை நானும் சரி பிரியங்காவும் சரி ரொம்ப நல்லா பண்ணோம். அவ்வளவுதாங்க.'' 

வெயில் ஷூட்டிங்கில் நடந்த மறக்க முடியாத நிகழ்வு?

''வெயில் படத்தோட  ரெண்டாவது நாள் ஷூட்டிங்ல ’உருகுதே மருகுதே’ பாட்டு எடுத்தோம். அந்தப் பாட்டு ஷூட்காக தியேட்டர் மேல நானும் பிரியங்காவும் ஆடிட்டு இருந்தோம். அப்படி ஆடிட்டு இருக்கும் போது நானும் பிரியங்காவும் தடுமாறி ஒரு பதினைந்து அடிக்கு உருண்டுக்கிட்டே வந்து விழுந்தோம். பிரியங்காதான் முதல்ல விழுந்தாங்க. அதற்கடுத்துதான் நான் விழுந்தேன். எனக்குக் கூட லேசான காயம்தான். பிரியங்காவுக்குப் பலமான அடி. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உடனே, அடுத்த ஷாட்டுக்கு ரெடி ஆனாங்க. ஷூட்டிங்கோட ரெண்டாவது நாளே இப்படி ஆகிடுச்சு.'' 

’வெயில்' க்ளைமாக்ஸ் ' பற்றி?

''அந்தக் காட்சி விருதுநகர்ல எடுத்தோம். வசந்தபாலனோட சொந்த ஊர்ங்கறதால பொதுமக்கள் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. நைட்ல ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும் போது கிராமத்திலிருந்து ஷூட்டிங் பார்க்க வந்தவங்க, "நீங்க என்ன.. இப்படி கஷ்டப்படுறீங்களே" னு சொல்லிட்டு சுடுதண்ணிலாம் வச்சி கொடுப்பாங்க. இந்தமாதிரி நிறைய உதவிகள் பண்ணாங்க. க்ளைமாக்ஸ்ல, கல்லு எடுத்து ரவிமரியாவை அடிச்சிட்டு நான் சாகுற வரைக்கும் அந்தக் காட்சியை ஒரே ஷாட்லயே எடுத்தோம். அந்தக் காட்சியை வசந்தபாலன் ரொம்ப ஆச்சர்யப்பட்டு பாராட்டுனாரு.''

வெயில் படத்தோட தாக்கம் இன்னைக்கும் இருக்கா?

''நிச்சயமாங்க. இன்னைக்கும் நான் வெளியே போனா 'உருகுதே மருகுதே' பாட்டை சொல்லித்தான் நிறைய பேர் பேசுவாங்க. எனக்குப் பேர்  சொல்ற முக்கியமான படங்கள்ல வெயிலும் ஒண்ணு. இப்பவும் அந்தப் படத்தோட பாடல்கள்லாம் கேட்குறப்போ பழைய ஞாபகங்கள் வரும். நான் நடிச்சி எனக்கு ரொம்ப நெருக்கமா இருக்கிற படங்கள்ல வெயிலும் ஒண்ணு.''

பதினொரு வருடங்கள் கழித்து 'வெயில்' படத்தை எப்படிப் பார்க்குறீங்க?

''வெயில் படம் ஒரு கவிதை மாதிரி. இன்னைக்கு ஊரையெல்லாம் விட்டுட்டு வெளியூருக்குப் பிழைப்பை தேடி போறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அந்த மாதிரி போறவங்கள்ல எத்தனை பேர் வாழ்க்கையில ஜெயிச்சாங்கனு நமக்குத் தெரியாது. தோத்துப்போறவங்கதான் நிறைய பேர் இருக்காங்க. ஜெயிச்சவங்களைப் பத்தி நிறைய படங்கள்ல பார்த்துட்டோம். வெயில்ல வர்ற முருகேசனால கடைசி வரைக்கும் வாழ்க்கையில ஜெயிக்க முடியலை. சாவைதான் அவன் ஜெயிக்கிறான். தமிழ் சினிமாவில முதல்முறையாக ஒரு தோத்துபோனவனோட வாழ்க்கையைச் சொல்லி சினிமாவில ஜெயிச்ச படம் வெயில்தாங்க. பதினொரு வருஷம் கழிச்சும் இந்தப் படம் மக்கள் மனசைவிட்டு போகலை. அப்படியேதான் இருக்கு.''