Published:Updated:

இயக்குநர் முத்தையா... சினிமாவை இதற்குப் பயன்படுத்தாதீர்கள்... ப்ளீஸ்! கொடிவீரன் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
இயக்குநர் முத்தையா... சினிமாவை இதற்குப் பயன்படுத்தாதீர்கள்... ப்ளீஸ்! கொடிவீரன் விமர்சனம்
இயக்குநர் முத்தையா... சினிமாவை இதற்குப் பயன்படுத்தாதீர்கள்... ப்ளீஸ்! கொடிவீரன் விமர்சனம்

"நல்லதையே நினைக்கும் ஹீரோ சசிகுமாருக்குத் தன் தங்கை சனுஷா மீது பாசம் அதிகம். கெட்டதையே நினைக்கும் வில்லன் பசுபதிக்கு தன் தங்கை பூர்ணா மீது பாசம் அதிகம். நல்லவன் பாசம்... கெட்டவன் பாசம் இரண்டில் எது வென்றது என்பதை வன்முறை, பகை, பாசம் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

'குட்டிப்புலி'யில் அம்மா, 'கொம்பன்' படத்தில் மாமனார், 'மருது'வில் அப்பத்தா, இதில் தங்கச்சி. இயக்குநர் முத்தையா படம் எடுக்க இன்னும் பல உறவுமுறைகள் தமிழ் கூறும் நல்லுலகில் இருக்கிறது. உறவுகளின் உன்னதத்தை அழகாகச் சொன்ன சினிமாக்கள் தமிழ்சினிமாவில் அதிகம். ஆனால், அந்த உணர்வுகளை சினிமா என்ற காட்சி ஊடகத்தில் வெறியேற்ற மட்டுமே முத்தையா பயன்படுத்துவது ஏனோ!?  

தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ளும் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை விழும் முதல் காட்சியில் 'ஹீரோ என்ட்ரியோ?' என நினைக்கவைத்துவிட்டு, 'இல்லை இல்லை' என முதல் பல்பு கொடுக்கும் இயக்குநர், நாம் எதிர்பார்க்கவே முடியாத பன்ச் வசனங்கள், தத்துவங்கள், சண்டைக் காட்சிகள் எனப் பதறவைக்கிறார். சமீபத்தில் வன்முறையை இந்தளவுக்குத் தூக்கிப்பிடித்த சினிமாக்கள் வந்ததில்லை. மிக மோசமான வன்முறைக் காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள்கூட காட்டுமிராண்டிகளைப் போலத்தான் படம் நெடுக வருகிறார்கள். படத்தில் காமெடிக்கான ஸ்கோப் அத்தனை இடத்தில் இருக்கிறது. ஆனால், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும், பன்ச் வசனங்களுக்கும் மெனக்கெட்டதில் கொஞ்சம் கூட காமெடிக்கு வழங்கப்படவில்லை. 

படத்தில் எல்லோரும் பன்ச் வசனங்கள் பேசுவதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். கறி-வெறி, சிவன்-எமன்... எனக் கபீம்குபாம் ரக ரைமிங் கேட்கமுடியவில்லை. 'சுப்ரமணியபுரம்' கொடுத்த இயக்குநர் சசிகுமார், 'மதயானைக்கூட்டம்' கொடுத்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இருவரையும் 'கொடிவீரனி'ல் காதுகுத்தி, கிடா வெட்டியிருக்கிறார் முத்தையா. இருவரும் ரியலி... பாவம். 'நாலு பாட்டு, அஞ்சு ஃபைட்டு, கொஞ்சம் சென்டிமென்ட்' என்ற ஃபார்முலாவில் இருந்தும், தன் அனைத்துப் படங்களிலும் சாதிப்பெருமையைப் புகுத்தி ரசிக்கும் மனநிலையில் இருந்தும் எப்போது மீண்டு வருவீர்கள் முத்தையா?

எல்லாக் காட்சிகளிலும் சுமாராக நடித்திருக்கிறார் சசிகுமார். வழக்கமான குறும்புத்தனம் இல்லாமல் ரொமான்ஸ் காட்சிகளில்கூட டல் மூடில் வந்து போகிறார். அத்தனை பெரிய மீசை, வேட்டி - ஜிப்பா என சாமியாடி கெட்டப்பில் கல்லூரிப் பெண்களுடன் அவர் டூயட் பாடுவதெல்லாம் கடி காமெடி! வில்லன் பசுபதி அவரைவிடப் பாவம். வெறும் வசனங்களாலேயே வில்லத்தனங்களைச் செய்து, சசிகுமாரை விட்டுவிட்டு நம்மை வெறியேற்றுகிறார். சுகர் பாடி... எப்படித்தான் இத்தனை பன்ச் டயலாக்குகளைத் தாங்கினாரோ! 
சனுஷா அழகாக இருக்கிறார், அழகாக நடித்திருக்கிறார். ஆனால், அண்ணன் - தங்கை பாசத்தை வெறும் பில்ட்-அப் வசனங்களாக மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பதால், சசிகுமார் - சனுஷா காம்பினேஷனை மட்டுமல்ல, பசுபதி - பூர்ணாவின் அண்ணன் - தங்கை பாசத்தையும் உணர்வுபூர்வமாக உள்வாங்க முடியவில்லை. 'எங்கண்ணன் ஆடி பார்த்திருப்பே... அடிச்சுப் பார்த்ததில்லையே', 'தப்பு பண்ணா தடுக்க கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்' எனப் படம் முழுக்க ஏகத்துக்கும் ஜாங்கிரி பூங்கிரி வசனங்கள், முடியல பாஸ்!

படத்திலேயே கொஞ்சமே கொஞ்சம் அசரடிப்பவர் பூர்ணா மட்டுமே. கண்களாலேயே மிரட்டல் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதிலும் தாலியைக் கழட்டி நீட்டும் காட்சியில் அதி ஆக்ரோஷம். ஆனால், இந்தப் படத்திற்கும், அதில் இடம்பெற்ற உப்புச்சப்பில்லாத காட்சிக்குமா ஒரிஜினலாகவே மொட்டை போட்டீர்கள் பூர்ணா? என்றும் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது.  
விதார்த், நல்ல அரசு அதிகாரியாக வந்துபோகிறார். ஆனால், கடைசிக் காட்சியில் ஹீரோ இருபது பேரை வெட்டிச் சாய்க்கிறார், மொத்தப் பிரச்னைகளுக்கும் காரணமாக இருந்தவனும், விதார்த்தின் நண்பரைக் கொலை செய்தவருமான வில்லனை மன்னித்து அனுப்புகிறார் ஹீரோ. 'நல்ல அரசு அதிகாரி'யான விதார்த், சுமாராக 20 கொலை செய்த சசிக்குமாரை மட்டும் விட்டு வைப்பது என்ன லாஜிக் சாமியோவ்?! 

படத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் (திருமணம் முதல் சாவு வரை) முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. பெருமை பேசி அதை வன்முறை கலந்து என்ன சொல்ல முயற்சி செய்கிறீர்கள் முத்தையா?! 

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் 'களவாணி உன்னை எண்ணி' பாடல் ஓகே ரகம். மூச்சை இழுத்துப் பிடிக்கும் திரைக்கதையை கதிரின் கேமரா ஆக்சிஜன் கொடுத்து சமாளித்திருக்கிறது. தற்கொலைக் காட்சியில் தொடங்கி, க்ளைமாக்ஸ் வரை... கதிர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். 

கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவிலான கவனத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் தமிழ்சினிமாவைப் பின்னோக்கி இழுத்துப் பிடிக்கிறார் முத்தையா. 'தான் கடந்துவந்த வாழ்க்கையைத்தான் படமாக்குகிறேன்' என அவர் காரணம் சொன்னால், ’ஸாரி முத்தையா... அதற்கு சினிமாவைப் பயன்படுத்தாதீர்கள்’!

பி.குறிப்பு: முத்தையாவின் முந்தைய படமான ’மருது’விலேயே இது போன்ற பல விஷயங்களைச் சுட்டிக் காட்டியிருந்தோம். அது மீண்டும் இங்கே நினைவூட்டலுக்காக....