Published:Updated:

’அண்ணாமலை’ சீரியலில் நடித்தவர் ‘அருவி’ எடுத்த கதை!

’அண்ணாமலை’ சீரியலில் நடித்தவர் ‘அருவி’ எடுத்த கதை!
’அண்ணாமலை’ சீரியலில் நடித்தவர் ‘அருவி’ எடுத்த கதை!

சமீபமாக  தமிழ் சினிமாவில்  சமூகம், அரசியல் சார்ந்த படங்களும், சினிமாவை  சேர்ந்தவர்கள் சமூகஅரசியல் பேசுவதும் மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. சாமானிய மக்களின்  உணர்வுகளை பிரதிப்பலிப்பதாலேயே இத்தகைய  படைப்புகளும், படைப்பாளிகளும் கொண்டாடப்படுகிறார்கள். இந்தவரிசையில் உலகளாவிய மக்களை கவர்ந்து இழுத்திருக்கும் படம்  'அருவி'. 'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை தொடர்ந்து 'ட்ரீம் வாரியார்  பிக்சர்ஸ்'  நிறுவனம் தயாரித்துள்ள 'அருவி', பல்வேறு திரைப்பட விழாக்களை தொடர்ந்து டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.முன்னதாக வெளிவந்த இப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் நல்ல விமர்சனங்களையும், பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

படத்தை பற்றியும், அவருடைய சினிமா பயணம்  பற்றியும் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் பேசினோம்.

உங்களுடைய சினிமா பயணம் எப்படி ஆரம்பித்தது ?

’’எனது சினிமா குருநாதர் பாலு மகேந்திரா சார். அவரிடம்தான் சினிமா கற்றுக்கொண்டேன். அதைத்  தொடர்ந்து கே.எஸ். ரவிக்குமார் சாரிடம் அசிஸ்டென்ட்டாக  வேலை செய்தேன். அதுமட்டும்  இல்லாமல் 'அண்ணாமலை' சீரியலில் நடித்திருந்தேன். அங்கு இருந்துதான் சினமா பயணம் தொடங்கியது. பின் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்துவிட்டு சினிமாவிற்குள் நுழைந்தேன்.’’

'அருவி' திரைப்படம்  எப்படி உருவானது  ? 

’’ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் சார் சொல்லித்தான் நான் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு சாரை சந்தித்தேன். கதை சொன்னவுடன் அவருக்கு பிடித்து போனது. மறுநாளே ஆரம்பிக்கப்பட்டதுதான் 'அருவி' திரைப்படம். இந்தப்படத்தின்  கதைக்களத்திற்கு தேவைப்பட்ட நடிகர்கள் கிடைக்க மிகவும் மெனக்கெட்டோம். ப்ரீ- ப்ரொடக்ஷன் காலம் கொஞ்சம் கூடுதலாக எடுக்கப்பட வேண்டி இருந்தது.               

ஒரு சிலரைத் தவிர, இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும்  புதுமுகங்கள். இந்த நடிகர்கள் நிஜ வாழ்வில் என்ன செய்கிறார்களோ கிட்டத்தட்ட அந்த கதாபாத்திரங்களைத்தான்  படத்தில் நடித்திருக்கிறார்கள். நானும் புது இயக்குநர் என்பதால் இவர்களிடம் வேலை வாங்குவது எனக்கு சுலபமாகவே இருந்தது.’’

'அருவி' எனப் பெயரிடக் காரணம் என்ன?

’’ 'அருவி' என்பது இந்தக் கதையில் வரும் கதாநாயகியின் பெயர். இயற்கையில் ஒரு  அருவி என்பது  நல்லவன், கெட்டவன், ஆண் , பெண் என்ற பேதம் பாராமல் மேலிருந்து  கீழே பாய்ந்து அனைவரையும் தன் குளுமையால் நனைத்து, போகும் இடமெங்கும் செழுமையை படரச் செய்யும். அதுபோல் இப்படத்தின் நாயகி 'அருவி' அவள் போகும் இடமெல்லாம் தன்னிடம் உள்ள அன்பை விதைத்து செல்வாள். அருவி ஒரு சைகாலஜி ஸ்டுடென்ட், நம் அக்கம்பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்கள் போல சாதாரணமானவள். தனக்கு உகந்ததாக இல்லையென்றால் இயல்பாக கோபம் கொள்ளக்கூடியப் பெண். அவள் வாழ்வில் நடக்கும் ஒரு சில விபத்துகளைத் தொடர்ந்து சில விளைவுகளை சந்திக்கிறாள். இதுதான் படத்தில் அவளது பயணம்.’’

 ''அருவி' படத்தின் இசைப் பற்றி ?

’’வேதாந்த்  பரத்வாஜ்  - பிந்து மாலினி ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். இவர்களது இண்டிபென்டண்ட் இசை  ஆல்பம்  ஒன்றை கேட்டு , அவர்களது இசை இக்கதைக்கு பொருத்தமாய் இருக்குமென்று எண்ணினோம். அவர்களை இப்படத்தின் ஆரம்பிக்க கட்டம் முதலே இணைத்து கொண்டோம். இப்படத்தில் பாடல்கள் , பின்னணி இசை என எதையும் பிரித்து பார்க்கவில்லை. இசையின் வழியே எப்படி கதை சொல்லலாம் என வேலை செய்து. அதற்கேற்றாற்போல் காட்சிகளும் அமைக்கப்பட்டது. படத்தின் ஒரு கதாபாத்திரமாக இசை இருக்கும். அதேபோலத்தான் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம் ஆகியவையும் கதைக்கு ஒன்றியதாய் இருக்கும். படம் பார்த்தால் உங்களால் உணர முடியும்.’’

'அருவி ' ஒரு திரைப்படமாய் ரசிகர்களிடையே எதை முன்னிறுத்தும்? 

’’அன்பு, மனிதம் ஆகியவற்றை பற்றி இப்படம் பேசும். இளைஞர்களின் கோணத்தில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆங்காங்கே வரும்  சமூக அரசியல்  வசனங்கள் நாம் அன்றாடம் பார்க்கும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். யதார்த்தம் நிறைந்த ஒரு படமாய் இருக்கும். நாம் பார்த்து கேள்விப்பட்ட விஷயங்களின் பிரதிபலிப்பாக இருக்கும்.’’

அதிதி  பாலனை இந்தக் கதாபாத்திரத்திற்கு  எப்படி தேர்வு செய்தீர்கள்?

’’இந்த படத்திற்காக  இரண்டு முன்னணி கதாநாயகிகளை அணுகினோம்.  அவர்கள் இருவருக்குமே கதை பிடித்தபோனது , ’அருவி  கதாபாத்திரம் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. எங்களால் 100% கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை’ என்றனர். அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட பெண் நடிகர்களின் நடிப்பை  பார்த்து தேர்வு செய்யப்பட்டவர்தான் அதிதி பாலன். அவர்களிடம் சமூகத்தை, சக மனிதனின் பால் ஒரு அக்கறை இருந்தது, கோபம் இருந்தது. இந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களில் ஒன்றாகவே  தேவைப்பட்டது. ஆடிஷன், ஸ்கிரீன் டெஸ்ட் தேர்வாகி இருந்தாலும். இரண்டு மூன்று மாதங்கள் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார்  அதிதி. இவ்வளவு ஸ்ட்ராங் கதாபாத்திரத்தை அவரை போன்ற புதுமுகம் செய்யும்பொழுது படத்திற்கு புது கண்ணோட்டத்தை அளிக்கும்.’’  

இப்படத்தை பல்வேறு  சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு நாட்டவர்கள் பார்த்து என்னச் சொன்னார்கள்.?’’ ‘அருவி’ முதன் முதலில் சீனாவில் நடைபெற்ற  ஷாங்காய் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்தான் திரையிடப்பட்டது. இந்தியா போன்று அங்கும் குடும்ப உறவுகள், சமூகம், அரசியல் சார்ந்த பிரச்னைகள் இருப்பதால், இப்படத்தில் வரும் அனைத்து விதமான  உணர்வு நிலைகளுடனும்  தங்களை கனெக்ட்  செய்துகொண்டனர்.  இதுவரை  நடந்த திரையிடல்களில் அனைவருக்கும் படம் பிடித்திருந்தது. பெரும்பாலான நண்பர்கள்  'நாங்க இந்த படத்தை  போல வாய்விட்டு  சிரித்தது இல்லை", "எனக்கு  அழுகைதான் வந்தது" என தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். கண்டிப்பாக  இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி  வெளியானால் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார் புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.   

பின் செல்ல