Published:Updated:

“விவேக் ரொம்ப அமைதி... அமைதி... அமைதியோ அமைதி..!” - பாடலாசிரியர் விவேக் – ஷாரதா

பா.ஜான்ஸன்
“விவேக் ரொம்ப அமைதி... அமைதி... அமைதியோ அமைதி..!” - பாடலாசிரியர் விவேக் – ஷாரதா
“விவேக் ரொம்ப அமைதி... அமைதி... அமைதியோ அமைதி..!” - பாடலாசிரியர் விவேக் – ஷாரதா

“நானும் லாயர், அவரும் லாயர். அதனால இப்ப வரை நாங்க அரேஞ்சிடு மேரேஜ்னு சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க. சும்மா சொல்லாதீங்க லவ் பண்ணிதானே கல்யாணம் பண்ணீங்கனு கேட்பாங்க" எனப் பாடலாசிரியர் விவேக்கின் மனைவி ஷாரதா ஆரம்பிக்க, "எங்களோடது பக்கா அரேஞ்சிடு மேரேஜ்தான். மேட்ரிமோனியல் மூலமா அமைஞ்ச கல்யாணம். ஆனா, காதல் கல்யாணத்துக்கான அன்பு கொஞ்சமும் குறையாம அழகா நகருது வாழ்க்கை" என சிலிர்த்தார் விவேக். அடியே அழகே, ஏய் சொழலி, நீதானே என காதல் பாடல்களில் சுலபமாக சிக்ஸர் வெளுக்கும் பாடலாசிரியர் விவேக், தன் ஷாரதா பற்றி பேசப் பேச முகம் முழுக்க பரவசம். அந்த இருவருடனான சந்திப்பிலிருந்து...

“இந்தப் பொண்ணுங்க எல்லாம் பார்த்திருக்காங்கனு என் தங்கை ஒருத்தருக்கு போட்டோஸ் அனுப்பிவெச்சேன். `அண்ணா அந்த ரெண்டாவதா அனுப்பின போட்டோல இருக்கும் பொண்ணு எனக்கு நல்லா தெரியும். காலேஜ்ல என்னுடைய சீனியர்ணா'னு சொன்னாங்க, அவங்கதான் ஷாரதா. பிறகு அவங்களை முதல் முறை சந்திச்சேன். நான் இப்போ லாயரா இருக்கேன். ஆனா, பாடல் எழுதும் முயற்சிகள்ல இருக்கேன். என்னோட சம்பளம் இதுன்னு தொடங்கி எனக்கு முடி கொட்ட ஆரம்பிச்சிருக்குன்ற எல்லாத்தையும் சொல்லிட்டேன்" என விவேக் சொல்லிக்கொண்டிருக்க, "பட், அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனாலயே முதல் சந்திப்பிலயிருந்து ரெண்டு பேருக்குள்ள புரிதல் ஏற்பட ஆரம்பிச்சிருச்சு" என்றபடி சிரிக்கிறார் ஷாரதா.

கணவரின் கவிதை, பாடல்கள் பற்றி என ஷாரதாவிடம் கேட்டால், "அதைப் பற்றி நான் சொல்றேன்" என வந்தார் விவேக். "நாங்க கோவில்ல சந்திச்சப்போ என்னுடைய கவிதை ஒரு பத்திரிகைல வந்திருந்தது. அது ரொம்ப நல்லாயிருந்ததுன்னு சொன்னாங்க. உங்களைப் பார்த்தா கவிதை வாசிக்கற டைப் மாதிரி தெரியலையே, புரிஞ்சதா?"னு கேட்டேன். சுத்தமா புரியலைங்கனு சொன்னாங்க. ஆனா, இப்போ என்னுடைய எந்தப் பாடல்களையும் அவங்களுடைய கவனத்துக் கொண்டு போகாம நான் அனுப்பறதே இல்ல. சில வரிகள்லாம் இவங்களுடைய ஐடியால இருந்து எடுத்திருக்கேன். என்னுடைய முதல் பாடல் பூ அவிழும் பொழுதில்ல கூட "ஓர் கனவின் வழியே அதே நிலா"னு ஒரு வரி வரும் அது இவங்க என்கிட்ட ஒரு கதை சொல்லிட்டிருந்த போது வந்த ஐடியாதான்.

இவங்களுடைய குழந்தைத் தனம் ரொம்பப் பிடிக்கும். எங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்ததுன்னா, திரும்பி வந்து `என்ன சேத்துப்பியா?'னு கேப்பாங்க, அது செம்ம க்யூட்டா இருக்கும். அதைதான் உசுரு நரம்புல பாட்டில் "உன் நினைப்பில் மனசு சிதறிக் கிடக்கு என்ன கொஞ்சம் சேர்த்துக்க"னு எழுதியிருந்தேன். அந்த அளவுக்கு ஆர்வமா உள்ள வந்திருக்காங்க" எனக் காதலுடன் மனைவி கை பற்றிக் கொள்கிறார்.

"எனக்காக ஷாரதா நிறைய மாற்றிக்கிட்டாங்க. அதில் முக்கியமான ஒண்ணு டைமிங் ஃபாலோ பண்றது. முதல்ல எல்லாம் கிளம்பறதுக்கே லேட் பண்ணுவாங்க" எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போது "என்னோட கல்யாணத்துக்கே லேட்டாதான் வந்தேன்" என மெல்லிசாகக் கூறி சிரிக்கிறார் ஷாரதா. "ஆமா, காலைல 5.30 - 7.30 முகூர்த்தம். எனக்கு இப்ப வரை அந்த டையத்துக்குள்ள எப்படி கல்யாணம் நடந்ததுங்கறது ஆச்சர்யம்தான். ஆனா, இப்போ வெளிய போற நிகழ்ச்சிகள், விழாக்கள், இந்த மாதிரி பேட்டினு எல்லாத்துக்கும் டைம் கீப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க" என்ற விவேக்கைத் தொடர்ந்த ஷாரதா, "ஆனா, இன்னும் ஒண்ணு மட்டும் மாத்திக்கல. விவேக் ஏதாவது எழுதிட்டிருக்கும் போது, குறுக்க குறுக்கப் போயிட்டே இருப்பேன். அவரு பொறுமையா, எனக்குக் கொஞ்சம் டைம் கொடு இந்த வேலைய முடிச்சிட்டு வந்துர்றேன்னு சொல்வார். "அதுக்குப் பிறகு அமைதியா இருக்கணும்ல, விவேஏஏஏக்....னு மறுபடி வருவாங்க" என்று விவேக் சொல்ல ஷாரதா தொடர்கிறார். "விவேக் பற்றி சொல்லணும்னா, அமைதி... அமைதி... அமைதியோ அமைதி..." என அவர் ஆரம்பிக்கும் போதே விவேக் இடையில் வந்து "அதெல்லாம் இல்லங்க. நானும் சண்டை எல்லாம் போடுவேன், கோவமெல்லாம் படுவேன். என் மேல தப்புன்னா நானே ஸாரி சொல்லிடுவேன். இவங்க பண்ணாலும் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா, தொடர்ச்சியா அந்தத் தப்ப பண்ணாதான் கோவமே வரும்" என்ற விவேக்கைப் பார்த்துவிட்டு "கோபம் வந்தா என்கூட பேசவே மாட்டார். சில சமயம் நான் பண்ண எந்தத் தப்புக்காகக் கோபப்படுறார்னே தெரியாது. எனக்கு அதைத் தெரிஞ்சுக்கலைனா செம டென்ஷன் ஆகிடும்னு கேட்டுக்கிட்டே இருப்பேன். அப்புறம் அவருக்கா தோணும் போது சொல்லுவார்" என ஷாரதா முடிக்க. "அதேபோல அவங்க என் மேல கோபப்படும் ஒரே விஷயம் ஹெல்த்த சரியா கவனிக்கறதில்லை, சரியான நேரத்துக்குத் தூங்கறதில்லைங்கறது. அதை இனி பார்த்துக்கணும்" என ரெஷல்யூஷன் எடுக்கிறார் விவேக்.

கணவர் எழுதியதில் பிடித்த பாடல் பற்றிக் கேட்டால், "என்னோட கணவர் எழுதினதுன்றதால மட்டும் இதைச் சொல்லல, நிஜமாவே அவருடைய வரிகள் எல்லாமே அவ்வளவு அழகா இருக்கும். எனக்கு அதில் ரொம்பப் பிடிச்ச பாட்டு `இறைவி' படத்தின் மனிதி பாட்டு. நான் அப்பப்போ சில கல்லூரிகளுக்கு கெஸ்ட் லெக்சர்ராகவும் போயிருந்தேன். அப்போ நிறைய ஸ்டூடென்ட் மேடம் உங்க ஹஸ்பண்ட் எழுதின பாட்டெல்லாம் ரொம்பப் பிடிக்கும், மெர்சல்ல அசத்திட்டாருன்னுலாம் சொல்வாங்க. அதை பெருமையா கேட்டுட்டு வந்து இவர்கிட்ட சொல்வேன். இவரு சிம்பிளா சிரிச்சிட்டு `அப்படியா சூப்பர்ல'னு சொல்லுவார்'' எனச் சொல்லி முடிக்க விவேக் ஆரம்பித்தார்.

"கோர்ட்ல இவங்க ஆர்க்யூ பண்றதைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டிருக்கேன். `ஐ' படத்துக்கான பிரச்னை வந்த போது நானும், இவங்களும்தான் ஆஜர் ஆனோம். இவங்க யோசிக்கும் விதம், பிரச்னைக்கான சொல்யூஷன் எல்லாம் என்னை ஆச்சர்யப்படுத்தும்" ’’ஆச்சர்யம்னு சொன்னதும் ஞாபகம் வருது’’ என்றபடி வந்தார் ஷாரதா. "நான் ஒருமுறை, ஒரு கூண்டுக்குள்ள நிறைய பந்துகளைப் போட்டு அதில் குழந்தைங்க விளையாடுவாங்கல்ல. அதில் நான் விளையாடினது மறக்கவே முடியாது. எனக்கு ரொம்பப் பிடிச்சதுனு சொன்னேன். உடனே எங்க வீட்ல ஒரு ரூம் முழுக்க பந்துகளைப் போட்டு அதே, செட்டப்ல வெச்சார். என்னோட பிறந்தநாளுக்கு அதை கிஃப்ட்டா கொடுத்து ஸ்வீட் சர்ப்ரைஸ் ஒண்ணு கொடுத்தார். இப்போ வரை எங்க வீட்ல அந்த ரூம் அப்படியே இருக்கு. இந்த மாதிரி ஏதாவது ஆச்சர்யப்படுத்திட்டே இருப்பார்’’ என மனைவி முடிக்க, "என்னைப் பொறுத்தவரை ஷாரதான்னா ப்யூரிட்டி, ரொம்ப பரிசுத்தமான அன்பு அவங்கட்ட இருக்கும்" சட்டென விவேக்கைப் பார்த்து "அந்த மாதிரி விவேக்னா அன்பு, எதையும் எதிர்பார்க்காம மற்றவங்களுக்காகவும் யோசிக்கும் அன்பு அவருடையது" என்று இருவரும் பேசி முடிக்க, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டிருக்கும் அவர்களின் அன்பு நம்மை நெகிழச் செய்கிறது.