Published:Updated:

’அருவி’ முதல் ‘கிடா விருந்து’ வரை... ஒரே வாரத்தில் ஒன்பது படங்கள் ரிலீஸ்..!

’அருவி’ முதல் ‘கிடா விருந்து’ வரை... ஒரே வாரத்தில் ஒன்பது படங்கள் ரிலீஸ்..!
’அருவி’ முதல் ‘கிடா விருந்து’ வரை... ஒரே வாரத்தில் ஒன்பது படங்கள் ரிலீஸ்..!

தமிழ் சினிமா நலிந்து வருகிறது உதவுங்கள் என அரசுக்குக் கோரிக்கை மேல் கோரிக்கைகளாக தமிழ் சினிமா பிரமுகர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் நசுக்கப்படுகின்றனர் எனப் பல முன்னணி தயாரிப்பாளர்களே பேசி வருகின்றனர். இந்த நிலையில் கிட்டத்தட்ட 9 படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

வழக்கம்போல காலையில் சினிமா செய்தி பக்கம் திரும்பினால் அருவி, மாயவன், வீரா, பஞ்சுமிட்டாய், பிரம்மா டாட் காம், சென்னை டூ சிங்கப்பூர் ,பள்ளிப்பருவத்தில், கிடா விருந்து, இமை ஆகிய 9 படங்கள்  டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகின்றன என விளம்பரங்கள் காணப்பட்டன. சமூக வலைதளங்களில் சிலர் இதை டிஸ்லைக் செய்து வரும் நிலையும் இருக்கிறது. இப்படிக் கூட்டம் கூட்டமாக ரிலீசாகும் படங்கள் சின்ன பட்ஜெட் படங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வாரம் வந்த படங்களின்  விமர்சனங்களைப் பார்த்துவிட்டு இப்போதான் எந்தப் படத்தை பார்க்கிறது, எது காசுக்கு வொர்த்து என்ற முடிவிற்கு நாம் வந்திருப்போம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வரும் வெள்ளிக் கிழமை 9 படம் ரிலீசாகிறது. இந்தப் படங்கள் எப்படியிருக்கும் என்ற கவலையை விட வரும் அனைத்துப் படங்களையும் எப்படிப் பார்ப்பது என்ற கேள்வியே தலைசுற்ற வைக்கிறது.

இங்கே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட படங்களில் எத்தனை படங்களின் ட்ரெய்லர்களை நாம் பார்த்திருப்போம். எத்தனை படங்களின் போஸ்டர்களை நாம் பார்த்திருப்போம் என்று  தெரியவில்லை. அப்படங்களின் சில குறிப்புகள் இதோ...

புதுமுக நாயகி அதிதி பாலன் நடிக்க  அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க புது முகங்களைக் கொண்டு பல வெற்றிப்  படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீரா:

கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜாராமன் இயக்கியுள்ளார், லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். வட சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் இளைஞனை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஒரு திரைப்படம் ’வீரா'.

மாயவன் 

முன்னணி இயக்குநர்கள் பலரை உருவாக்கிய தயாரிப்பாளர் சி.வி.குமார், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'மாயவன்'. சந்தீப் கிஷன் ,லாவண்யா திரிபாதி, ஜாக்கி  ஷெராஃப் ஆகியோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பல நியூ ஏஜ் படங்களைத் தயாரித்த சி.வி குமார் இயக்கும் முதல் படம் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாயவன் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது   

சென்னை டூ சிங்கப்பூர் 

முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரித்துள்ள இப்படத்தில் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன் ஆகியோர் அறிமுகமாகிறார்கள். அப்பாஸ் அக்பர் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டே தரை வழியாக சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை படக் குழுவினர் பயணித்தனர்.     

பிரம்மா டாட் காம் 

நகுல், சித்தார்த் விபின், ஆஷ்னா ஜவெரி, நீது சந்திரா நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்..ஃபேஸ்புக்  வழியே மனிதன் கடவுளிடம் பேசுகிறான் என்ற ஃபேன்டஸி அட்வென்சர் திரைப்படமாக உருவாகியுள்ளது இத்திரைப்படம்.

பஞ்சுமிட்டாய்

மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல், சென்ட்ராயன் ஆகியோர் இணைந்து நடிக்கும் நகைச்சுவை  திரைப்படம் பஞ்சுமிட்டாய். இமான் இசையமைப்பில் எஸ்.பி மோகன் இயக்கியுள்ளார்.  'மை வைஃப் ரொம்ப பியூட்டி ஃபுல்’ என்ற பாடல் அனைவரையும் கவர்ந்திருந்தது. தனக்கு காமெடி கதாபாத்திரங்கள் மிகவும் கை கொடுக்கின்றன என அறிந்து மா.கா.பா.ஆனந்த் இப்படத்தில் நடித்துள்ளார்.

பள்ளிப் பருவத்திலே...

வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இந்தப் படத்தில் நந்தன் ராம் (பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன்) நாயகனாக அறிமுகம் ஆகிறார், வெண்பா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். இப்படம் கிராமத்துப் பள்ளி கலாசாரத்தையும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.

இமை 

சரிஷ், அட்சய பிரியா ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாக, அறிமுக இயக்குநர் விஜய் கே.மோகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மிக்கு காவில் மற்றும் ஆதிஃப்  இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  ஓர் உண்மையான ரவுடியின் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இமை.

கிடா விருந்து 

அறிமுக நாயகன் பிரகாஷ், கஞ்சா கருப்பு, புதுமுகம் ஷாலினி, ஜி.எம்.குமார் ஆகியோர் நடித்துள்ள படம் 'கிடா விருந்து'. தமிழ் மணி இப்படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.  

படத்தை தயாரிப்பதைவிட அதை மக்களிடம் கொண்டுசெல்வது மிகவும் கடினம் எனச் சகிதம் புலம்பும் தயாரிப்பாளர்கள், இப்படி அனைத்துப் படங்களையும் ஒரே வாரத்தில் ரிலீஸ் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.

இதில் நல்ல படங்கள் என்று விமர்சனம் பெற்று எந்தெந்த படங்கள் அடுத்த வாரம் தியேட்டர்களிலிருக்கும் என்றும் தெரியவில்லை. இப்படி ஒரே நேரத்தில் அதிகப்படம் வருவதில் நமக்கு இருக்கும் ஒரே லாபம் எந்தப் படம் நமக்குப் பிடிக்கிறதோ அதை தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஆனால் இதே சாய்ஸ், அந்த திரையரங்க நிர்வாகத்திற்கும் இருக்கிறது.  நாம் செல்ல நினைக்கும் தியேட்டரில் அந்தப் படம் இருக்குமா? இருக்கும் ஷோவில் அந்தப் படம் ஓடுமா? என்பது விடை தெரியா கேள்வியே. இப்படங்களின் குழுவினர் அனைவருக்கும் பெஸ்ட் ஆஃப் லக்...!

பின் செல்ல