Published:Updated:

“மிஸ் பண்ணவே முடியாது... நான் கண்டிப்பா முதல்வர்தான்..!” - சரத்குமாரின் ஆஸ்க் ஆப் ஆரூடம்

அலாவுதின் ஹுசைன்
“மிஸ் பண்ணவே முடியாது... நான் கண்டிப்பா முதல்வர்தான்..!” - சரத்குமாரின் ஆஸ்க் ஆப் ஆரூடம்
“மிஸ் பண்ணவே முடியாது... நான் கண்டிப்பா முதல்வர்தான்..!” - சரத்குமாரின் ஆஸ்க் ஆப் ஆரூடம்

திரைப்பட நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது ‘ஆஸ்க்’ (ASK) எனப் பெயரிடப்பட்ட மொபைல் செயலியை நேற்று (திங்கள்கிழமை) மாலை வெளியிட்டார். அன்றாட சமூகப் பிரச்னைகளைப் பேசி, பகிர்ந்து, மேலும் குறை தீர்த்துக்கொள்ள சரத்குமாருக்கும் மக்களுக்கும் ஓர் இடை-ஊடகமாக இந்த மொபைல் செயலி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மொபைல் செயலி ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் உபயோகிக்கக்கூடிய வசதியுடையதாய் அமைக்கபட்டிருக்கிறது. 

பிரதமரின் நிதி ஆலோசகராக இருந்து ஓய்வுபெற்ற நாராயணன், டாக்டர் அசோக் பாலசுப்பிரமணியன், ராதிகா சரத்குமார், டாக்டர் வசுதா பிரகாஷ் ஆகியோரது முன்னிலையில் சரத்குமார் இந்தச் செயலியை வெளியிட்டார்.     

இந்தச் செயலியை வெளியிட்டு தொடர்ந்து சரத்குமார் பேசியதாவது, "மக்களுக்குப் பணி செய்ய இன்று வேகமாய் வளர்ந்து வரும்  டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணினேன், அதன் விளைவே இந்தச் செயலி. இந்தச் செயலிக்கான வேலையை 2012-ம் ஆண்டே ஆரம்பித்துவிட்டேன். யாரோ ஒருவர் 'ஆப்' ஆரம்பித்தவுடன் சரத்குமாரும் அவசரத்தில் ஆரம்பித்துவிட்டான் என எண்ண வேண்டாம்.  'நாடென செய்தது உனக்கு என்ற கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு' இவ்வரிகளிலேயே இந்தச் செயலி ஆரம்பித்ததற்கான பதில்கள் இருக்கு. அரசாங்கம், ஆட்சியாளர்கள், மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நல்ல சமூகம் உண்டாகும். அப்படி ஓர் ஒருங்கிணைப்புக்கே இந்தச் செயலி.

பள்ளிப் பருவத்திலேயே நான் உதவும் மனப்பான்மை உடையவன். ஒரு சக மாணவன் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டான். அவனை அதே பேருந்தில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அங்கு சிகிச்சையளிக்கும் வசதி இல்லை என்று அதே பேருந்தில் சென்ட்ரல் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்று அவன் உயிரைக் காப்பாற்றினேன். பின்னர் அவன் பெற்றோருக்குத் தெரியப்படுத்தினேன். இப்போது இதுபோல் உதவிகளை மறைமுகமாகச் செய்வதற்கே இந்தச் செயலி.''  

பின் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த சரத்குமார் கூறியதாவது:  

கமல்ஹாசன் கொண்டு வரப்போகும் செயலியிலிருந்து இந்த ஆப் எப்படி வித்தியாசமானது ? 

''கமல் என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. இந்தச் செயலி  'இண்டராக்டிவ்' எனச் சொல்லப்படும் ஊடலாடல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.  அரசியலில் ஈடுபட்ட பிறகு மக்களைச் சந்திக்கும்போது பல குறைகளை மக்கள் மனுவாகக் கொடுப்பார்கள். அந்த மனுக்கள் படிக்கப் பட்டதா என யாருக்கும் தெரியாது. அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யச்சொல்லி சிலரைப் பணிக்கிறோம். அவர்கள் அதை செய்தார்களா, அந்தக் குறைத் தீர்க்கப்பட்டதா எனக் கண்காணிக்க இந்தச் செயலி உதவியாக இருக்கும். எழுதப் படிக்க தெரியாதவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் வாய்ஸ் மற்றும் வீடியோ பதிவு முறையும் இந்தச் செயலியில் உள்ளது. நம்மில் நிறையபேருக்குக் குறைகளை எடுத்துக் கூற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதை நேராகக் கூற தைரியம் இருக்காது. அவர்கள் தங்கள் குறைகளை, கருத்துகளைப் பகிர்வதற்குதான் இந்த ஆப்.’’

இதில் கூறப்படுகிற குறைகள் எவ்வளவு கால அவகாசத்தில் தீர்க்கப்படும்?

“அது முன்வைக்கப்படும் குறையின் தன்மை பொறுத்தது. இதை யாரிடம் முறையிட வேண்டும் என அறிந்து தக்க நபரிடம் கொண்டு  சேர்க்கப்படும். குறைந்த பட்சம் 24 மணி நேரத்திற்குள் 'ஆஸ்க்' குழு, சம்பந்தப்பட்ட ஆட்சியாளரையோ, அதிகாரியையோ அணுகி விடுவார்கள்.’’

அதிகாரிகளின் மெத்தனப் போக்கு, லஞ்சம் கேட்பது போன்ற புகார்களைத் தெரிவிக்கலாமா?

“கண்டிப்பாக, புகாரளிக்கலாம். வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ஊழல் அற்ற சமூகம் மலர மக்கள்தான் உறுதுணையாக இருக்க வேண்டும். புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்க உதவும்.’’     

விஷால் ஆர்.கே நகர் மக்களுக்கு மட்டும் 'ஆப்' அந்த வகையில் இந்த 'ஆப்' தமிழகத்திற்கு மட்டுமா?

“இது தமிழகத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளி நாட்டில் வாழும் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் இந்த 'ஆப்'. ஹிந்தி மற்றும் 14 இந்திய மொழிகளில் இந்தச் செயலியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.’’

விஷால் தயாரிப்பாளர்கள் சங்க ஊழல் குறித்து பொதுக் குழுவில் பேசவில்லை? பொன்வண்ணன் நடிகர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்தது குறித்து?

“நடிகர் சங்க பதவியிலிருந்து பாதியில் விலகுவது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தும். தூரத்திலிருந்து பார்க்கும்போது அங்கு ஒற்றுமை குறைந்திருப்பதாகத் தெரிய வருகிறது. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தயாரிப்பாளர்கள் சங்கக் கணக்குகள் பற்றி எனக்குத் தெரியாது. இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஊழலை பத்திரிகைகளில் பேசாமல் நேரில் வந்து கேட்க விஷாலும் சொல்கிறார். இதைதான் நடிகர் சங்க தேர்தலின்போது கூறினோம் எனச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.’’

நீங்க  நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது தேர்தலில் எம்.எல்.ஏ வாக போட்டியிட்டீர்கள். விஷாலை மட்டும் ஏன் எதிர்கிறார்கள்?

“தயாரிப்பாளர்கள் சங்க விதிமுறைகள் எனக்குத் தெரியாது. சங்க பதவியில் இருக்கும்போது தேர்தலில் விஷால் ஏன் போட்டியிடக் கூடாது என்பதை தாண்டி, ஒழுங்காக மனுத்தாக்கல் செய்தால் வேட்பு மனு நிராகரிக்க பட வாய்ப்பில்லை.”

விஷால் அரசாங்கத்தை எதிர்த்தால் அரசு மானியம் ரத்தாகும் எனத் தயாரிப்பாளர்கள் சிலர் எண்ணுகிறார்களே?

“யாரையும் சாரா அமைப்பாக இருந்தால் நன்மை கிடைக்கும் என்ற குறைந்தபட்ச பயம்தான். எனினும் எதிர்த்துக் குரல் கொடுத்தால் அரசு திட்டங்கள் வராது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று.’’             

நடிகர் சங்கம் எந்த வகையில் செயல்பட்டுகொண்டு வருகிறது?

“நான் ஒரு டிஸ்மிஸ் செய்யப்பட்ட நடிகர். உள்ளே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. மக்கள் மனசில்தான் நான் இருக்கிறேன். என்றேனும் ஒரு நாள் சரத்குமாரின் உதவி தேவைப்பட்டால் அப்பொழுது நான் நடிகர் சங்கத்திற்குச் செல்வேன். அது ஒரு நிகழ்வு அதை மறந்து செயல் பட வேண்டும். இன்று திரையுலகம் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. இங்கு அனைவரும் ஒன்றுப்பட்டு ஒற்றுமையாய் இருந்தால்தான், இந்த சினிமாத் துறையைக் காப்பாற்ற முடியும்" எனக் கூறினார்.

இதற்கு முன்னதாக சரத்குமார் பேசுகையில், "இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். மக்களில் ஒருவனாய் கடந்த 21 ஆண்டுகளாக நான் பொதுப்பணியில் இருக்கிறேன். இன்று அரசியலில் ஒரு வெற்றிடம் இருக்கு என்கிறார்கள், நான் அதை  உபயோகப் படுத்திக்கொள்ள இதை ஆரம்பிக்கவில்லை. உங்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அரசியல் புகட்டி முதல்வர் அரியணையில் உட்கார வைக்கும் நோக்கமாகவே இந்த 'ஆப்' உருவாக்கப்பட்டது. ஏற்ற சுழலும், வசதியும் வந்தபிறகு, நான் கண்டிப்பாக முதல்வர் ஆவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்