Published:Updated:

‘ ‘விவேகம்’ நஷ்டத்திற்காக ‘விசுவாசத்தி’ல் நடிக்கும் அஜித்... பிற நடிகர்களின் கவனத்துக்கு..!’ - அத்தியாயம்-5

‘ ‘விவேகம்’ நஷ்டத்திற்காக ‘விசுவாசத்தி’ல் நடிக்கும் அஜித்... பிற நடிகர்களின் கவனத்துக்கு..!’  - அத்தியாயம்-5
‘ ‘விவேகம்’ நஷ்டத்திற்காக ‘விசுவாசத்தி’ல் நடிக்கும் அஜித்... பிற நடிகர்களின் கவனத்துக்கு..!’ - அத்தியாயம்-5

கந்துவட்டிதான் சினிமாவை இயக்குகிறது. ஒரு சினிமாவுக்கு 'கந்துவட்டிப் பிரச்னை' என்பது பொருட்டே கிடையாது. ஃபைனான்ஸ் பெற்று படம் எடுத்து, கச்சிதமான தயாரிப்பு முறைகளைத் தெரிந்துகொண்டு சினிமா வியாபாரத்தை அணுகும்போது ஒரு திரைப்படம் வெற்றிப் படமாகும். பெரிய லாபம் இல்லையென்றாலும், நஷ்டமில்லாத அளவுக்குப் பணத்தைத் திரும்பப் பெறுவார் தயாரிப்பாளர். கடன் கொடுத்தவருக்குக் கச்சிதமாக வட்டியும் முதலும் திரும்பப் போகும். ஆனால், இதெல்லாம் மிக மிகச் சரியான திட்டமிடலோடு ஒரு திரைப்படம் தயாராகும்போதுதான் சாத்தியம். இதில் ஏதேனும் ஓரிடத்தில் தொய்வு ஏற்பட்டாலும், சீட்டுக்கட்டாகச் சரிந்து வீழ்ச்சியைச் சந்திப்பது தயாரிப்பாளர் மட்டுமே!” - பல வருடமாக சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து, விரைவில் இயக்குநராகத் தடம் பதிக்கவிருக்கும் ஒருவரின் கருத்து இது. 

அசோக்குமார் - அன்புச்செழியன் விவகாரத்திற்குப் பிறகுதான், கந்துவட்டிப் பிரச்னையைத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ‘அன்புச்செழியனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியல் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அனைவரையும் கந்துவட்டிப் பிரச்னையிலிருந்து மீட்போம். தமிழ்சினிமாவைக் கந்துவட்டிப் பிரச்னையிலிருந்து காப்பாற்றுவோம்' என்றார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கிளம்பிய எதிர்ப்புகள் இப்போது சைலைன்ட் மோடில் இருக்கிறது. இந்தப் பிரச்னையின் வீரியம் தெரிந்த பலர், தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் தகவல்களைச் சொல்கிறார்கள்... கந்துவட்டிப் பிரச்னைக்குத் தீர்வு தேடுவதில் இப்படியும் சில பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வழியும் கரடுமுரடான காட்டுப்பாதையாக இல்லை. எளிமையான ஒருவழிப் பாதையாகவும், அனைவருக்கும் பொதுவான ஒன்றாகவும் இருக்கிறது. கொஞ்சம் பயணித்துப் பார்ப்போம்...

‘அன்புச்செழியன் உத்தமர்' என்றார், இயக்குநர் சீனுராமசாமி. ‘அன்புச்செழியனை மிகைப்படுத்திச் சித்திரிக்கிறார்கள்' என்றார், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. 'அன்புச்செழியன் பணத்தை வசூலிக்கும் முறைதான் கீழ்த்தரமாக இருக்கிறது' எனப் பலரும் சொல்கிறார்கள். ஆக, இங்கே அன்புச்செழியன் கந்துவட்டிக்குப் பணம் கொடுப்பதில் பிரச்னை இல்லை. பிறகு, எங்கேதான் பிரச்னை தொடங்குகிறது? எனக் கேட்டால், 'ஒரு படத்தின் தோல்விக்குக் காரணம் இயக்குநரும், நடிகரும்தான்!' என்ற கருத்தை முன்வைக்கிறார், ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான ஒருவர்.

“ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு படம் தயாரிக்கிறோம் என்றால், அந்தப் படத்தை ஒரு கோடி ரூபாயையும் செலவு செய்து தீர்க்கவேண்டும் என்பது அர்த்தமல்ல... ஆனால், பெரும்பாலான இயக்குநர்கள் அதைத்தான் செய்கிறார்கள். படத்தின் பட்ஜெட் அதிகரித்தால், தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்கு வட்டி அதிகரிக்கும் என்பதை இயக்குநர்கள் உணர்வதில்லை. ஒரு படத்தின் தயாரிப்பு திட்டமிடல் என்பது, படபூஜையில் தொடங்கி, ரிலீஸ்தேதி வரை என்பதையும் உணர்வதில்லை. படப்பிடிப்பு மட்டும் முடிந்த அல்லது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகளை எட்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் படங்களை இயக்குநர்களோ, நடிகர்களோ எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். 'அது தயாரிப்பாளர் பிரச்னை. அவரிடம்தான் கேட்கவேண்டும்' என நழுவிக்கொள்ளும் இயக்குநர்கள்தான் இங்கே அதிகம்.

இருக்கும் பணத்தில் இயக்குநர், நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான சம்பளம் கொடுத்துவிட்டு, ஷூட்டிங் நடத்துவதற்காக ஃபைனான்ஸியர்கள் தயவை எதிர்பார்த்து நிற்கும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கைதான் இங்கே அதிகம். இந்த நடைமுறை மாறவேண்டும். எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரித்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அந்தப் படம் தியேட்டரில் வசூலித்த தொகை 20 லட்சம் ரூபாய்தான். 'எஃப்.எம்.எஸ்' மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் மூலமாகக் கிடைத்த பணம் 40 லட்சம் ரூபாய். தயாரிப்பாளர்கள் நல்ல படம் எடுக்க நினைத்தாலும், அதனுடைய வியாபார தளம் இங்கே இவ்வளவுதான். தவிர, எஃப்.எம்.எஸ் ரைட்ஸ் என்பது, தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் விற்கப்படும் ஒளிபரப்பு உரிமை. இதுவும் சிறுபட்ஜெட் படங்களுக்கு ஒருவிதமாகவும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒருவிதமான தொகையும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், ரசனை என்பது ஒன்றுதானே?" என்கிறார், அவர்.

கந்துவட்டிப் பிரச்னைகள் குறித்த விவகாரத்தில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத மற்றோர் இயக்குநர், நடிகர்களின் சம்பளம் குறித்த முக்கியமான பிரச்னை ஒன்றை முன்வைக்கிறார். 'அவர் கதை நல்லா இருக்குனு சொல்லிட்டார், படம் நிச்சயம் ஹிட் ஆகும்' என தமிழ்சினிமாத் துறையில் பரவலாகப் பேசப்படும் ஒரு நடிகர். அவர் நடிப்பதாக ஒப்புக்கொள்ளும் படத்திற்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்பவர். 'நல்ல நடிகர், அவர் இருந்தால் படத்திற்குப் பலம்' என நினைக்கும் தயாரிப்பாளர்கள், அவர் கேட்ட பணத்தில் கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ கொடுக்கிறார்கள். ஆனால், அந்த நடிகரின் கொள்கை என்ன தெரியுமா... '25 நாள் படப்பிடிப்புக்கு வருவேன். அதற்குள் அனைத்துக் காட்சிகளையும் எடுத்துகொள்ளவேண்டும்' என்பது. 'சரி'யென அதற்கும் ஒப்புக்கொள்ளும் சூழல் இருக்கிறதுதான். ஆனால், அவரை வைத்து 10 நாள்கள் ஷூட்டிங் எடுத்தாலும், அவர் சொன்ன சம்பளத்தைத்தான் கொடுக்கவேண்டும் என்ற நிர்பந்தம் வரும்போதுதான், தயாரிப்பாளருக்குப் பிரச்னை வருகிறது. இது, தனிநபர் பிரச்னை என்று ஒதுக்கிவிடமுடியுமா?

நிச்சயம் முடியாது. ஏனெனில், பெப்சி தொழிலாளர்கள் கூடுதலாக சில நூறு ரூபாய் சம்பளம் கேட்கும்போது, 'தயாரிப்பாளர்கள் நிலை என்னாவது?' எனக் கவலைப்படும் மற்ற சங்கங்கள், 'நடிகர்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்?' எனக் கேட்கவேமாட்டார்கள், கேட்கவும்கூடாது.. என்பதுதான் தமிழ்சினிமாவின் நிலை. ஏனெனில், ''இங்கே நடிகர்களை வைத்துதான் வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது" என்கிறார்கள். பெரிய நடிகர் நடிக்கும் ஒரு படத்தை எளிதாக வியாபாரம் செய்யமுடியும். சேட்டிலைட் ரைட்ஸ் உடனடியாக விற்பனையாகும். ஃபாரீன் ரைட்ஸ் வாங்க போட்டி போடுவார்கள். தியேட்டரிலும் வசூல் ரீதியான வரவேற்பு கிடைக்கும். ஆனால், இங்கேயும் பிரச்னை இருக்கிறது.

"பெரிய நடிகர் ஒருவரின் திரைப்படம் தியேட்டரில் நல்ல வசூலைப் பெறவில்லையெனில், அது தயாரிப்பாளருக்கு மோசமான விளைவுகளைக் கொடுக்கும். அதனால்தான், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் அவர்கள் நடித்த ஒரு படம் தோல்வியடைந்தால், அந்தத் தயாரிப்பாளருக்கே அடுத்த படத்திற்கான கால்ஷீட் கொடுத்து, தயாரிப்பாளரின் நஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்வார்கள். எனக்குத் தெரிந்த அளவுக்கு, 'விவேகம்' கூட்டணி மீண்டும் 'விசுவாசம்' படத்தில் இணைந்திருப்பது தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சமாளிப்பதற்காகவே இருக்கும். அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்த்து, ஒரு தயாரிப்பாளருக்கு அஜித் 'விசுவாசமாக' இருப்பது பெரிய விஷயம்!” என அஜித்தைப் பாராட்டுகிறார், பொங்கல் ரேஸில் தன் படத்தோடு காத்திருக்கும் இயக்குநர் ஒருவர்.