Published:Updated:

அமளி துமளி நெளியும் வேலி, நாணி கோனி, ஜிங்குனா மணி... வார்த்தைகள் பிடித்த கதை சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா!

அமளி துமளி நெளியும் வேலி, நாணி கோனி, ஜிங்குனா மணி... வார்த்தைகள் பிடித்த கதை சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா!
அமளி துமளி நெளியும் வேலி, நாணி கோனி, ஜிங்குனா மணி... வார்த்தைகள் பிடித்த கதை சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா!

கடந்த 18 வருடங்களாக சினிமாவில் 1,500 பாடல்களுக்கு மேல் எழுதி புகழ் பெற்றவர் விவேகா. காதல், நட்பு, கிராமியம், குத்து என பல்வேறு விதமான பாடல்களின் மூலம் வெளுத்து வாங்கிவருபவர். இவர் எழுதிய பல பாடல்கள் இன்னும் மோஸ்ட் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அவரை சந்தித்து பேச அவரது வீட்டுக்குச் சென்றபோது, வீடெங்கும் அவர் குழந்தைகளின் அழகிய கிறுக்கல்களும் அவர் படித்த புத்தகங்களும் நம்மை இன்முகத்துடன் வரவேற்றன. அவரிடம் ஒரு சில கேள்விகளை முன் வைத்தோம். 

சினிமாவுக்கு பாடல்கள் எழுதணும்னு எப்படி ஐடியா வந்துச்சு? அதற்கான வாய்ப்பு எப்படி கிடைச்சது? 

"சின்ன வயசில இருந்தே கவிதைகள், கட்டுரைகள் எழுதுறதுல ஆர்வம் அதிகம். நான் திருவண்ணாமலையில இளங்கலை கணிதம் படிச்சேன். அப்போ, எங்க கல்லூரி சார்பா என்னை கல்லூரி நாவலரா தேர்ந்தெடுத்தாங்க. நிறைய மேடைகள்ல பேசிருக்கேன். அப்போ, என் நண்பர்கள் எல்லாரும்தான் என்னை, 'நீ ஏன் சினிமாவுக்கு போகக்கூடாது?'னு என்னை ஊக்கப்படுத்திட்டே இருந்தாங்க. அப்படிதான் சினிமா பாடல்கள் மேல ஆர்வம் அதிகமாகி கல்லூரி முடிச்ச உடனே பாடல் எழுத வந்துட்டேன். ஒரு ஸ்டுடியோல நண்பருடன் வேலை பார்த்துட்டு இருந்தேன். அவர் ட்யூன் போட நான் பாடல் எழுதுவேன். அப்போ சம்பத் குமார்னு ஒரு நண்பர் வருவார் (புதிய மலர்கள் படத்துல வில்லனாக நடித்தவர்). அவர்தான், ’நான் வாய்ப்புத் தேடி சூப்பர் குட் ஆபிஸுக்கு போறேன். நீங்க வர்றீங்களா’னு கேட்டார். சரினு நானும் அவருக்கு துணையா போனேன். அப்போதான், ராஜகுமாரன் சார் தனியா படம் பண்ண டிஸ்கஷன் போய்ட்டு இருந்துச்சு. சம்பத் உள்ளே பேசப்போயிட்டார். கொஞ்ச நேரம் கழிச்சு, ராஜகுமாரன் சார் வெளிய வந்து 'நீங்க எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?'னு கேட்டதுக்கு, 'நான் சினிமால பாடல் எழுத முயற்சி பண்ணிட்டு இருக்கேன்'னு சொன்னேன். அப்படியானு சொல்லி என்கிட்ட ஒரு சாம்பில் கேட்டார். ’ஆகாயம் பூக்கள்...’னு ஒரு சில வரியை சொன்னேன். அதுல இம்ப்ரஸ் ஆகி ஒரு சில நாட்கள் கழிச்சு, நான் இருக்க இடத்துக்கே ஆள் அனுப்பி எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார். அப்போ ஆரம்பிச்சு, வரிசையா சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு நிறைய பாடல்கள் எழுதிட்டு இருந்தேன். "

ட்யூன் போட்ட பிறகு பாடல் எழுதுறது வசதியா? இல்லை, ட்யூன் போடும் முன்னால் பாடல் எழுதுறது வசதியா? 

"எனக்கு ரெண்டுமே வசதியா இருந்திருக்கு. ரெண்டையுமே சமமாகத்தான் பார்க்குறேன். 'மின்சாரம் என்மீது பாய்கின்றதே' பாடலுக்கு பல்லவி நான் முதல்ல எழுதி கொடுத்துட்டேன். சரணம் ட்யூனுக்கு தகுந்தமாதிரி எழுதிக்கொடுத்தேன். இது மாதிரி நிறைய பாடல்கள் அமைஞ்சிருக்கு. ஆக, நான் இப்படி பண்ணா வசதி, இது சிரமம்னு எல்லாம் பார்க்குறதில்லை."

ஒரு பாடல் எழுத உங்களை எப்படி தயார்ப்படுத்திப்பீங்க? எந்த மாதிரியான பாடல் எழுத அதிக நேரம் தேவைப்படும்? 

"வாசிப்பு பழக்கம்தான் நமக்கான வார்த்தைகளை கொடுக்கும். ஒரு சூழலுக்கு பாடல்கள் எழுதுறோம்னா, அந்த சூழலை நம்ம வாழ்க்கையில எப்படி அணுகியிருக்கோம். கடந்து வந்த வாழ்வியல் அனுபவங்கள் தானா நமக்கு தோண ஆரம்பிக்கும். ஒரு பாடல் எழுதப்போறோம்னு புத்தகங்களை புரட்டி பார்த்து எழுதறது செயற்கையா இருக்கும். எதார்த்தமா நமக்கு உதிக்கும் வரிகளை வெச்சு எழுதினாதான் இயற்கையா இருக்கும். பாடலும் வெற்றி பெறும். காதல் பாடல்கள் எழுத, நம்ம வாழ்க்கை நடந்த விசயங்களை வெச்சு எழுதலாம். தத்துவ பாடல்கள் படிச்சதை வெச்சு எழுதலாம். ஆனா, குத்து பாடல்களை அப்படி எழுதிட முடியாது. அதுக்கு தான் நிறைய நேரம் எடுக்கும். ஏன்னா, ஒவ்வொரு வரியிலும் ரசிகனை ஈர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கு. உதாரணத்துக்கு, 'இடுப்பு கொண்டை ஊசி.. சிரிப்பு விண்டோ ஏசி...' இந்த மாதிரி. மெல்லிசை பாடல்கள்ல உணர்ச்சிகளை தூவி, கேக்குறவங்களை மயக்க நிலைக்கோ கற்பனை நிலைக்கோ கொண்டு போயிடலாம். எப்பவும் நைட் 11 மணிக்கு மேல தான் பாடல் எழுதவே உட்காருவேன். ஆனா, ஒரு சில பாடல்கள் ட்யூன் சொல்லச்சொல்ல தானாவே வந்திடும். அந்தமாதிரி வந்ததுதான், 'என் பேரு மீனாகுமாரி', 'ஒரு சின்ன தாமரை' பாடல்கள் எல்லாம்."
 

'அமளி துமளி நெளியும் வேலி ', 'நாணி கோனி', 'ஜிங்குனா மணி' மாதிரியான வார்த்தைகளை எங்கிருந்து எடுக்குறீங்க?   

"எனக்கு அன்பே, உயிரேனு வழக்கத்துல இருக்க வார்த்தைகளைத் தாண்டி புதுசா எதாவது கொடுக்கணும்னு யோசிக்கும்போது தான் இந்த மாதிரி வரும். 'நாணி கோனி' வார்த்தைக்கு முதல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம் டைரக்டர் கிட்ட பேசி அதுவே, பாடலா வந்திருச்சு. 'அமளி துமளி நெளியும் வேலி' பாடலுக்கு 'அமளி துமளி குலுமணாலி'னு தான் முதலில் எழுதியிருந்தேன். கே.வி.ஆனந்த் சார் தான் 'குலுமணாலினு போட்டா அங்கதான் எடுத்தோம்னு நினைச்சுக்குவாங்க. நீங்க அதுக்கு பதிலா, நெளியும் வேலி' னு வெச்சுக்கோங்க'னு சொன்னார். அப்புறம், 'ஜிங்குனா மணி'ங்கிற பேர் மலேசியாவுல பெண்களுக்கு வெக்குற பேர். அதை ஏற்கனவே, ஒரு பாடல்ல பயன்படுத்தி இருக்கேன். 'ஜில்லா' படத்துல பயன்படுத்தினதுனால ஃபேமஸ் ஆகிடுச்சு."

நிறைய இசையமைப்பாளர்கள் கூட வேலை பார்த்திருக்கீங்க. அந்த அனுபவங்கள் பத்தி சொல்லுங்க...

"இளையராஜா சார்ல இருந்து அனிருத் வரை எல்லாருடைய படங்களுக்கும் பாடல்கள் எழுதியாச்சு. ராஜா சாருக்கு பாடல் எழுதும்போது, நான் ஒரு ஸ்டூடண்டா இருந்து கத்துக்கிட்டேன். நிறைய பேர் கூட வேலை பார்த்திருந்தாலும் தேவி ஶ்ரீ பிரசாத்துடைய எல்லா படங்களையும் பாடல் எழுதியிருக்கேன். 'மன்மதன் அம்பு' படத்துல எல்லா பாடலும் கமல் சார் எழுதினாலும் எனக்குனு ஒரு பாடல் எழுதக் கொடுத்தார். அவர்க்கூட என்னுடைய பயணம் அதிகமாவே இருந்துச்சு, சுவாரசியமாகவும் இருந்துச்சு. தமன், யுவன் எல்லாரும் எனக்கு நல்ல நண்பர்கள். விஜய் ஆண்டனி புதுமையா ஒரு விசயத்தைப் பார்த்தால், அதை எப்படி உள்ள கொண்டுவரலாம்னு பார்ப்பார். இது மாதிரி ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கு. அதோட நம்ம பாடல்களும் சேரும்போது புதுமையா ஒரு விசயம் கிடைக்குது.’’

உங்களுக்குப் பிடிச்சு பாடல் எழுதி அதை டைரக்டர் வேண்டாம்னு சொன்ன அனுபவங்கள் இருக்கா? 

"நிறையவே இருக்கு. ரொம்ப ரசிச்சு உருகி ஒரு பாட்டு எழுதுனா, சில நேரங்கள்ல டைரக்டர் வேண்டாம்னு சொல்லிடுவாங்க. அப்போ, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வேற வரிகளை போட்டு எழுதி தருவேன். டைரக்டர் ஹரி கூட இதுக்காக சண்டையெல்லாம் போட்டுயிருக்கேன். அப்புறம்தான், அது எவ்ளோ தப்புனு தோணுச்சு. ஏன்னா, கதையை உருவாக்குறதே டைரக்டர்தான். நம்ம படத்துல ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் வந்துட்டு போவோம். நமக்காக, கதைக்கூடவே இருக்கவங்க மனநிலையை மாத்தணும்னு நினைக்குறது தப்பு தானே? அந்த விவாதத்துக்கு பிறகு, டைரக்டர் என்ன எதிர்பார்க்குறாங்களோ அதை எழுதி கொடுத்துடுவேன். சில சமயங்கள்ல நம்ம எழுதியதை நம்மளே வேண்டாம்னு வெச்சிருப்போம். அதை சூப்பரா இருக்குனு டைரக்டர் படத்துல வெச்ச பாடல்களும் நிறைய இருக்கு."

உங்களுடைய சமகால பாடலாசிரியர்களில் உங்களுக்கு பிடிச்ச பாடலாசிரியர் யார்? 

"கண்டிப்பா முத்துக்குமார்தான். வாடா போடானு பேசுற அளவுக்கு நெருக்கம். என்னை விட எங்க அப்பா முத்துக்குமாரோட தீவிர ரசிகர். இன்னைக்கு வரை தேசிய விருது வாங்கின பாடல்களிலேயே எனக்கு பிடிச்சது, 'ஆனந்த யாழை' பாட்டுதான். நவீன இலக்கியங்கள் மேல எனக்கு ஆர்வம் வரக்காரணமே முத்துக்குமார்தான். அவர் பாடல்களில் ஒரு செறிவு இருக்கும். அதுதான் எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்சது."

'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் பெரிய அளவுல ஹிட்டாகும்னு எதிர்பார்த்தீங்களா..!? 

"சென்னையின்  பூர்வீக குடிகளை பத்தின பாடல். 'ஊருக்கெல்லாம் சொந்தக்காரன்...ஊரைவிட்டு வெளிய இருக்கான்'னு உண்மையான ஒரு விசயத்தைதான் சொல்லிருக்கேன். கிராமத்துல புதுசா ஒரு ஆள் நுழைஞ்சா அது கிராமத்துல இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சுடும். ஆனா, சென்னையில அப்படி இல்லைல்ல. அதனால்தான்,

'உதவினு கேட்டாக்கா அப்பார்ட்மென்ட் ஆளு...
நைசா அப்பீட் ஆவாரு...
போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வாரு...
எவனுமே அழைக்காம குப்பம் கோபாலு...
வந்து கூட நிப்பாரு...'னு எழுதியிப்பேன்.

இன்னைக்கும் அந்த அன்னியோன்யம் அந்த மக்கள்கிட்ட இருக்கு. நகர சூழலுக்குள்ள தங்களை மாத்திக்காத மக்களாக சென்னையின் பூர்வக்குடிகள் இருக்காங்கனு அவங்களைப் பத்தி எழுத ஒரு வாய்ப்பு கிடைச்சுது. ரொம்ப விருப்பப்பட்டு எழுதினேன். இந்தப் பாட்டைக்கேட்டுட்டு, சிவகார்த்திகேயன் போன் பண்ணி பாராட்டினார். 'சர் புர் காரு இங்கே ஓடுது பாரு... இந்தச் சாலையெல்லாம் கண் முழிச்சி போட்டது யாரு?'ங்கிற வரி அவருக்கு ரொம்ப பிடிச்சது. எத்தனையோ முறை கார்ல வேகமா சொகுசாப் போறோம். ஆனா, அந்தச் சாலையைப் போட எவ்ளோ உழைப்பு போட்டிருப்பாங்க?னு யோசிக்க வைக்குது சார்'னு சொன்னவுடனே எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. எல்லாத்துலையுமே உழைப்பு இருக்கு. அந்த உழைப்பை உத்து கவனிக்கணும்ங்கிறது தான் இந்த பாட்டோட அடி நாதமே. இந்தளவு பாடல் ஹிட் ஆகிடுச்சு. நான் சொல்ல வந்த கருத்தை மனபூர்வமா சொல்லிட்டேன்னு ரொம்ப சந்தோசமா இருக்கு."